Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

நீங்க ரெடியா

வெற்றி பெற எல்லோருக்கும் ஆசை உண்டு. வெற்றி வேண்டாம் என்று சொல்பவர் யாருமில்லை. ஆனால் வெற்றிக்கு தயார்படுத்திக் கொள்பவர்கள் வெகு சிலரே.

ஒரு நடு வயது மனிதர் தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து நாள்தோறும் வழியில் போவோரை அழைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.

“என்ன பண்றீங்க?” வந்தவர்.

“வியாபாரம் பண்ணினேன்”

“இப்போ என்ன பண்றீங்க?”

“உப்புவிக்க போலாம்னு தயார் பண்ணினேன்; மழை வருமோன்னு பயமா இருக்கு”

“சரி தவிடு விக்கலாமே!”

“ஐயோ! காத்தடிச்சு வீணாயிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு”

“சரி என்னதான் பண்றதா உத்தேசம்?”

“ரொம்ப ஜாக்கிரதையா, இருக்கிறதை காப்பாத்திட்டிருக்கறேன். எதுவும் பண்ணல. எதுக்கு வீண் ரிஸ்க்?”

இதிலிருந்து ஒரு உண்மையை உணர வேண்டும்.

எதையும் செய்யாமல் இருப்பவருக்குத்தான் ரிஸ்க் இல்லை. அவர்தான் எந்தத் தவறையும் செய்யமாட்டார்.

வெற்றி என்பது திட்டமிட்டு, சிக்கலை எதிர்கொள்ளும் போதுதான் நமக்கு வந்து சேரும்.

இப்படிச் சொல்வது சரியாக திட்டமிடாமல் பிறகு எனக்கு “அது சரியில்லை” “இது சரியில்லை” என்று சமாதானப் படுத்தும் செயல்ல.

ஆனால் நாம் வெற்றிக்கான “ரிஸ்க்”குகளை எதிர்கொள்ளாமல் பலவித சாக்கு போக்குகளை சொல்லிக்கொள்கிறோம்.

அதற்கு யானையையும், குரங்கையும் பிடிக்கும் சம்பவங்களைப் பார்ப்போம்.

யானையை எப்படி பழக்கப்படுத்துகிறார்கள் தெரியுமா? ஆயிரக்கணக்கான கிலோ எடைகளை எளிதில் தூக்கி வீசும் ஆற்றல் கொண்ட யானை எப்படி ஒரு சிறிய சங்கிலியால் கட்டப்பட்டு அடங்கிவிடுகிறது?

யானை பிறந்ததும் அதை பெரிய உறுதியான சங்கிலியின் மூலம் மிகப்பெரிய மரத்தில் கட்டிவிடுவார்கள். அந்த இளம் யானையைப் பொறுத்தவரை “மரமும் சங்கிலியும் மிக பலம் வாய்ந்தவை; யானைக் குட்டியோ பலம் குறைந்தவை” என்ற நிலை. அப்படியும் இப்படியுமாகப் போராடிப் பார்க்கும். சங்கிலியை இழுத்து இழுத்து அறுத்துவிட முயற்சி செய்யும் ஆனால் இயலாமற் போகும்.

பல நாட்களுக்கும் பிறகு இந்தப் போராட்டமோ அல்லது சங்கிலியை இழுப்பதோ எந்த பயனும் கொடுக்காது என்று அனுமானித்து விடும். அதனால் போராட்டத்தை விட்டுவிடும்.

அதன் பிறகு மெல்ல கயிரோ அல்லது சங்கிலியோ போட்டுக் கட்டினால் போதும் அந்த யானை பெரியதான பிறகும், ஒரே நொடியில் அறுத்து விடக்கூடிய ஆற்றலிருந்தாலும், அதைச் செய்யவே நினைக்காது. கட்டாமல் விட்டாலும் அதற்கு சுதந்திரமாக ஓடிவிட ஆசை இராது.

அடுத்து குரங்கு.

குரங்கைப் பிடிக்கும் கலை இன்னும் எளியது. ஒரு பெட்டியில் பழத்தை வைத்து விடுவார்கள். அதில் குரங்கின் கையை மடக்காமல் நுழைக்குமளவிற்கு மட்டுமே சிறிய துவாரம் இருக்கும். குரங்கு அந்தப் பழத்தை எடுக்க கையை உள்ளே விட்டு, பழத்தை இறுகப் பற்றிக்கொள்ளும். பழத்தை பிடித்த பிறகு மூடிய நிலையில் கைகளை அந்த பெட்டியின் சிறிய துவாரத்தின் வெளியே எடுக்க முடியாது.

எவ்வளவு நேரமானாலும் அதையே பிடித்து கொண்டிருக்குமே தவிர அதை விட்டு தப்பிக்க முயற்சி செய்யாது. இதனால் அகப்பட்டு விடும்.

நாமும் யானையின் பழக்கத்தைப்போல பெரும்பாலும் பலம் இருப்பதை மறந்தவர்களாகத்தான் செயல்படுகிறோம். அது ஏன்?

நாம் படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் திரைப்படங்கள், பழகும் நண்பர்கள் மற்றும் நமது வாழ்க்கை அனுபவங்கள் போன்ற ஒவ்வொன்றின் மூலமும் நமக்குள் நம்மைப் பற்றிய குறைவான மதிப்பீடுகளை செய்துவிடுகிறோம்.

அல்லது குரங்கின் மன நிலையைப் பெற்று விடுகிறோம். “இந்தத் தொழிலை விட்டால் வேறு கதியே இல்லை”, “இந்த ஊரை விட்டால் வேறு புகலிடம் எனக்கில்லை”, “இந்த மனிதரை விட்டால் வேறு யார் எனக்கு நாதி?”, “இந்தச் சொத்து, சொந்த பந்தங்களை விட்டு வெறன்ன செய்வது?”;”இந்தப் படிப்பை படிச்சிட்டு வேறு எதுல போய் வேலை செய்யறது?”

இது போன்ற எண்ணற்ற காரணங்களால், குரங்கு கொட்டையைப்பிடித்துக் கொண்டு வெளிவர மனமில்லாமல் அதிலேயே மாட்டிக் கொள்வதைப்போல “இதுதான் என் விதி” என முடிவு செய்து நம்மையே அமுக்கிவிடுகிறோம்.

யானை போலவும் குரங்கு உள்ள நிலையிலிருந்து நம்மை வெளியே கொண்டுவருவதுதான் வெற்றிக்குத் தயாராகும் முதல் நிலை. அதற்கு சில கேள்விகளை நம்மையே நாம் கேட்போம்.

எனக்குத் தெளிவான குறிக்ளோள் உள்ளதா?(Aim)

அந்த குறிக்கோளை அடையும் செயல்திட்டங்கள் உள்ளனவா? (Plan)

அந்தச் செயல்திட்டதிற்கு எவ்வளவு நேரம் உழைப்பைக் கொடுப்பேன்?

அதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? அதற்கு என்ன வழி?

அந்தக் குறிக்கோளை அடையும் வரை உள்ள கால இடைவெளியை தாக்குப் பிடிக்கும் பொறுமை உள்ளதா?

அந்தக் குறிக்கோளை அடைய சிறப்பான செயல்பாடு / திறமை ஏதேனும் உள்ளதா?

உறுதியான நெறிமுறைகளைக் கடை பிடிக்கிறேனா?

நான் செய்யும் செயலில் பெருமையடையும் அம்சங்கள் உள்ளதா?

“என்னால் முடியும்” என்ற முழு நம்பிக்கை உள்ளதா?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதிலைச் சொல்லமுடியுமானால் நாம் வெற்றிக்கு தயாராகி விட்டோம் எனலாம்.

பொதுவாக சரியான திட்டமும், அதற்கான பயிற்சியும், அனுபவமும் எந்த வெற்றிக்கும் அடிப்படைத் தகுதியாகும். மேலும் சுயக்கட்டுப்பாடு, தற்காலிக தோல்விகளை தாங்கும் மனநிலை, தோல்விகளிலிருந்து சரியான வழிகளை அறிதல், தடைகளையும் மீறிய விடாமுயற்சி, பொறுமை போன்ற தகுதிகளே நம்மை வெற்றிக்கு தயாரக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment