Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

ஒரு சம்பவம்

லண்டன் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு பெண், ஒருமுறை பிரதமர் சர்ச்சிலைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினால்

“நான் மட்டும் உமது மனைவியாக இருந்தால் என் கையாலேயே உமக்கு விஷம் கொடுப்பேன்” என்றாள்.

ஆத்திரமில்லாமல் சர்ச்சில் பதில் சொன்னார்.

“அம்மணி உங்களைப் போன்ற மனைவி எனக்குக் கிடைத்தால் விஷத்தை சந்தோஷமாகக் குடிப்பேன்.”

நடைமுறை வாழ்க்கையில் பல கணவன் – மனைவியர் தங்கள் கருத்து ஏற்பாடுகளை இப்படி பகிரங்கமாகப் பேசுகிறார்கள். அது சரியா? தங்களுடைய குழந்தைகளின் முன்னிலையில் பேசுவதால் என்ன பாதிப்பு அந்தச் சிறு உள்ளங்களில் உண்டாகும்?

ஒரு நகைச்சுவை:

தன் மகளை டாக்டரிடம் அழைத்துச்சென்ற தாய் சொன்னாள். “டாக்டர், அடிக்கடி எம்பொண்ணு பேய் மாதிரி அலர்றா, அது ஏன்? நிச்சயமாக அந்த குணம் எங்கிட்டேயிருந்து அவளுக்குப் போயிருக்காது”.

உடனே தந்தை சொன்னார், “அவ சொல்றது சரிதான் டாக்டர், அவகிட்டே இன்னும் அப்படித்தான் இருக்குது.”

பல பெற்றோர்கள் தங்களுடைய அதிருப்தியை பிள்ளைகள் முன்பு வெளிப்படுத்துவது சரியா?

மேலும் தாயைப்பற்றி அல்லது தந்தையை பற்றி மற்றவருக்குத் தெரியாமல், பிள்ளைகளிடம் குறை சொல்ல்லாமா? இக்கேள்விகளுக்கு பதிலாக ஒரு விவாதத்தையும் ஒரு கதையையும் பார்ப்போம்.

ஒரு விவாதம்:

அறிஞர் அண்ணா முதல்வரானதும் பேருந்துகளில் திருக்குறளை எழுதச் செய்தார்.

சட்டமன்ற எதிர்கட்சி உறுப்பினர் வினாயகம் அண்ணாவைப் பார்த்து “யாகாவராயனும் நாகாக்க” என்று பேருந்துகளில் திருக்குறள் எழுதியிருக்கிறீர்களே யாருக்காக அந்தக் குறள் எழுதப்பட்டது. டிரைவருக்காகவா? – கண்டக்டருக்காகவா என்று கேட்டார்.

உடனே அண்ணா “யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம்” என்றார்.

இந்த பதில் எல்லாப் பெற்றோருக்கும் குறிப்பாக குழந்தைகள் முன்னால் பேசுபவருக்கு பொருத்தமாக இருக்கும்.

ஒரு கதை:

இளவரசனுக்கு அந்த முனிவர் மூன்று பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்தார்.

“இவை எனக்கெதற்கு?” – இளவரசர்.

“எதிர்காலத்தில் நாட்டை ஆளுவதற்கு பயன்படும்” – முனிவர்.

“அதெப்படி”

“ஒவ்வொரு பொம்மையையும் கவனமாக பார். அதன் காதில் ஒரு ஓட்டை இருக்கும்.”

“அது எதற்கு?”

“அதிலே ஒரு கம்பியை விடு”

ஆர்வத்துடன், இளவரசன் ஒரு பொம்மையின் காதில் விட்டான். அந்தக் கம்பி அடுத்த காதில் வந்தது.

“இது ஒரு வகை மனிதன் குணம். நீ எதைச் சொன்னாலும் அடுத்த காதில் வெளியேறிவிடும். எதுவும் தங்காது.”

இளவரசன் அடுத்த பொம்மையின் காதில் கம்பியை விட்டான். வாய் வழியாக அந்தக் கம்பி வெளியே வந்தது.

“இது இரண்டாவது வகை மனிதன் குணம். நீ எதைச் சொன்னாலும் அதை மற்றவர்களிடம் சொல்லும்”.

அடுத்ததாக மூன்றாவது பொம்மையை எடுத்து அதன் காதில் கம்பியை விட்டான் இப்போது கம்பி எந்தப் பக்கமும் வெளியில் வரவில்லை.

“இது மூன்றாவது மனித குணம். நீ எதைச் சொன்னாலும் உள்ளே போய்விடும். வெளியில் எதுவும் வராது.”

“அது சரி, இவற்றில் எது நல்ல குணம்?” என்றான் இளவரசன். முனிவர், நான்காவதாக ஒரு பொம்மையைக் கொடுத்தார்.

அதில் கம்பியை விட்டவுடன் அடுத்த காதில் வந்தது. “மீண்டும் ஒரு முறை கம்பியை காதில் விடு” – முனிவர்.

இப்போது கம்பி வாய் வழியாக வந்தது. அடுத்து ஒரு முறை கம்பியை காதில் விட்டான்.

“இந்த நான்காவது பொம்மையைப் போன்ற குணமுள்ளவர்கள் தான் சிறந்தவர்கள். ஒருவனை திறமையானவன் எனச்சொல்ல வேண்டுமானால் அவனுக்கு எதை வெளியில் பேசவேண்டும்? எதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்? எதை கவனிக்க வேண்டும்? எதை கவனிக்கக்கூடாது? என்ற அறிவு நுட்பம் வேண்டும்” என்றார்.

இதைத்தான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தரவேண்டும். அதற்குமுன் அவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்