Home » Cover Story » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


பாலு ஐயப்பன்
Author:

பாலு ஜூவல்லர்ஸ் திரு.பாலு ஐயப்பன் பேசுகிறார்…

பாலு ஜூவல்லர்ஸ். மறு பிறப்பு கண்டிருக்கும் நகை நிறுவனம். இதன் எதிர்காலம் என்ன என்கிற கேள்விக்குறி, இப்போது ஆச்சரியக் குறியாகியிருக்கிறது. வாடிகையாளர்களில், பெரும்பான்மையானவர்கள் ஆதரவோடு மறுபிறவி கண்டிருக்கும் பாலு ஜூவலர்ஸ், தன் சிக்கல்களிலிருந்து எப்படி, எப்போது, முழுமையாக மீளப்போகிறது? நம் கேள்விகளுக்கு நம்பிக்கையோடு பதிலளிக்கிறார் திரு. பாலு ஐயப்பன்.

நீங்கள் விழுந்ததும், எழுந்ததும் எப்படி?

எங்களுக்கு முன்பின் அனுபவம் இல்லாத துறையில், முதலீடு செய்யப்போய்தான், இந்த எதிர்பாராத வீழ்ச்சி, ஏற்பட்டது.

நாங்கள் நகைத் துறையிலேயே இருந்திருக்க வேண்டும். அதுதான் எங்கள் தாய்த்தொழில். ஆனால் புதிதாக செய்த தவறுதான். கூட இருந்தவர்கள் கொடுத்த நம்பிக்கையில் ஒரு வருடத்தில் இலாபம் பார்க்க முடியும் என்கிற உறுதியை நம்பி, இறங்கினோம். குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என்று பின்னர்தான் தெரிந்தது.

பாலு ஜூவலர்ஸ் தந்த வருமானத்திற்கு நிகராக, இந்தத் துறையும் இருக்கும் என்று கருதினோம். அது நடைபெறவில்லை. எனவே இப்போது பழைய தொழிலுக்கே திரும்பியிருக்கிறோம். ஒரு 14 கோடியில் வாடிக்கையாளர்கள் பணம் முக்கியபங்கு வகித்தது. இதுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.

இதில் நாங்கள் அகப்பட்டபோதே எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் ஏமாற்றும் நோக்கில் செய்யவில்லை ஏமாந்து செய்துவிட்டோம். என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார்கள். 1991 முதல் டெபாசிட் வாங்குகிறோம். செப்டம்பர் 98ல் மூட நேர்ந்தது. இதில் வாடிக்கையாளர்கள் ஏறக்குறைய 5,6 ஆண்டுகள் எங்களோடு இருந்து வட்டி வாங்கியவர்கள். எனவே எங்கள் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து இப்பொழுது மீண்டு வருவதற்கு வழி செய்திருக்கிறார்கள்.

இந்தக் கடையை மறுபடி திறந்ததே ஒரு சாதனைதானே?

நிச்சயமாக இது ஒரு சாதனைதான்.

இந்தியாவில் மொத்தம் 170 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த 170-ல் திறக்கப்பட்டிருக்கிற ஒரே கடை இந்திய அளவில் பாலு ஜுவல்லர்ஸ் தான்.

இது எப்படித் திறந்தோம் என்றால் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை அழைத்துப் பேசினோம். இரண்டு விதங்களில் நான் உங்கள் பணத்தைத் திருப்பித்தர முடியும். ஒன்று மறுபடியும் தொழில் செய்வதன் மூலம். இரண்டு இந்தக் கடையை விற்று விடுவதன் மூலம் எப்படி பணம் வேண்டும் என்று கேட்டேன்.

பெரும்பான்மையானவர்கள் “கடையை நடத்தியே கொடுங்கள். கடையை விற்க வேண்டாம். நீங்கள் நன்கு வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். இதை ஒரு சகோதரனின் வீழ்ச்சியாகப் பார்த்து, கை தூக்கிவிட வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

அதன் விளைவாக உயர்நீதி மன்றத்துக்கு நாங்கள் அப்பீல் செய்தோம். சோதனை முறையில் அவர்கள் அனுமதி தந்திருக்கிறார்கள். அதன்படி கடையைத் திறந்திருக்கிறோம். இயன்றளவு விரைவில் வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இதில் உங்களுக்கு உதவியர்கள் பற்றி சொல்லுங்கள்?

நான் மறுபடியும் இந்தக் கடையைத் திறப்பதற்கு முக்கிய காரணமாக, பின்பலமாக இருந்து உதவிய திரு. சுல்தான் அப்துல்காதர் என்கிற சகோதரர். இவர், என் அனைத்து முயறசிகளுக்கும் ஈடு கொடுத்திருக்கிறார்.

திரு பெர்னாண்டோ என்கிற இன்னொரு நண்பர் மூலம் அறிமுகமான இவர் “இவர் ஏமாற்ற நினைக்கவில்லை. எனவே இவனுக்கு உதவலாம் என்று உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அடுத்து எனக்கு ரூ. 7 கோடி பெறுமானமுள்ள நகைகளை மொத்த விலைக்கு வட்டியில்லாமல் ஒரு நண்பர் வழங்கியிருக்கிறார். விற்று அவருக்கு பணம் செலுத்துவதாக இருக்கிறேன். மற்றும் எங்கள் முதலீட்டாளர்களுடைய சங்கமும் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.

நீங்கள் மீண்டும் கடையைத் திறக்க அனைத்து முதலீட்டாளர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா?

இல்லை. 90%க்கும் மேற்பட்டவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.

இப்பொழுது முதலீட்டாளர்கள் சங்கத்தோடு கூட்டுக் கணக்கில் எங்கள் கடை இயங்குகிறது. விற்பனையில் நகைக்கான தொகையும், செலவும் போக, மீதம் வருகிற இலாபம் முதலீட்டாளர்களின் சங்கத்தின் கணக்கில் வைக்கப்படும். அதன்படி 6 மாதத்திற்கு அல்லது, வருடத்திற்கு ஒரு முறை, சமமாக முதலீட்டாளர்களுக்குப் பிரித்துக் தரப்படும்.

இதில் நீங்கள் இலாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தருகிறீர்கள் என்பதற்கு அவர்களுக்கென்ன உத்திரவாதம்?

முதலீட்டாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து சுழற்சி முறையில் 2 பேர் தினமும் வந்து எங்களோடு கல்லாவில் அமர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கோபத்தோடு வருகிற ஒரு சில முதலீட்டாளர்களுக்கும், அவர்களே சமாதானங்கள் சொல்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்குகிறது. எனவே தற்போது நிர்வாகத்தில் அவர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்னும் எத்தனை ஆண்டுகளில் பணத்தை திருப்பிச் செலுத்துவதாக இருக்கிறீர்கள்?

நீதிமன்றம் எங்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்கிறது. ஆனால், நான் இரண்டு மூன்று ஆண்டுக்குள்ளாகவே, அதைத் திரும்பிச் செலுத்திவிட திட்டமிட்டிருக்கிறேன்.

சினிமாத்துறையில் உங்களுக்கு இருக்கும் நண்பர்களுக்கு அதிகம் செலவழித்ததால்தான் பின்னடைவு ஏற்பட்டது என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறதே?

சினிமாத்துறையில் நண்பர்களுக்கு நாங்கள் செலவு செய்ததால் பின்னடைவு ஏற்பட்டதாக சொல்லிவிட முடியாது. அது எங்கள் தனிப்பட்ட இலாபத்திலிருந்து விளம்பரத்திற்காக செய்ததுதான். கலை ஆர்வமும் அதற்கு இன்னொரு காரணம்.

ஆனால், இன்று இந்தச் சிக்கல் எனக்கு வந்த பிறகு, சினித்துறையத் திரும்பிப்பார்த்தால் அன்றும் இன்றும் உண்மையான ஒரே நண்பராக கவிஞர் வைரமுத்துதான் உள்ளார். அவர் ஒருவர்தான் “நீ நிச்சயம் கடை திறப்பாய்” என்று நம்பிக்கை கொடுத்ததோடு, நிறைய உதவிகளையும் உடனிருந்து செய்தார். அதனால்தான் மறுபடியும் திறந்தபோது சினிமாவிலிருந்து அவரை மட்டுமே அந்த விழாவிற்கு அழைத்திருந்தேன்.

பணம் கேட்டு வரும் வாடிகையாளர்களை எப்படிச் சமாளிப்பீர்கள்?

வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் எங்கள் திட்டத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சங்கத்தில் சேராத ஒரு 10% பேர் பதற்றத்தோடு வருகிறார்கள், பொறுமையாக பதில் சொல்லி அனுப்புகிறோம்.

சங்கத்தில் சேராதவர்கள், சேர்ந்தவர்கள் அனைவருக்குமே, சமமாக பணம் பிரித்துத்தரப்படும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். அதனால் நடந்த தவறை மறந்து நாங்கள் அவர்கள் பணத்தை திருப்பித்தர ஒத்துழைக்க வேண்டுமென்று வருகிறவர்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் மீண்டும் கடையைத்திறக்க வேண்டும் என்பதற்கு அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது?

நாங்கள் அணுகுவதற்கு முன்பே சட்டத்துறையில் இதற்காக ஒரு முன்வரைவு இருந்திருக்கிறது. உள்ளபடியே பணத்தை திருப்பித்தர விரும்புகிற மூடப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருவது பற்றி அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள். எனவே எங்கள் கோரிக்கையும், நீதி மன்றத்தினுடைய அனுமதியும் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்காக சிறையில் இருந்திருக்கிறீர்கள் அல்லவா?

ஆமாம். இரண்டு வருடம் சிறையில் இருந்ததைவிட சிறையில் சும்மா இருந்ததே ஒரு பெரிய வேதனை.

கடையில் நூறு பேரை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஏற்பட்ட அந்த தனிமை முதலில் வருத்தம் தந்தது. பிறகு அங்கேயே ஒரு தன்னம்பிக்கையும் வந்தது. என் அப்பா அடிமட்டத்திலிருந்து உழைந்து முன்னேறியவர். அவர் மறைவுக்குப் பிறகு எதிர்பாராமல் இந்த சம்பவம் நேர்ந்தபோது என் உறுவினர்கள் “பாலு ஐயப்பன் முடிந்தான் ” என்று கருதினர்.

ஆனால் அப்போதும், நான் எழுந்து நிற்பேன். இந்தச் சோதனையை கடந்து வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இருந்தது. இப்போதுகூட வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து இது என்னுடைய கடை என்று என்றைக்கு அமர்கிறேனோ அன்றைக்குத்தான் நிம்மதியாக உறங்க முடியும்.

சிறைவாசம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு போதி மரம் போல, நான் கூட நண்பர்களிடம் சொன்னேன். “ஒரு சின்ன தவறாவது செய்துவிட்டு சிறை எப்படியிருக்கிறது என்ற பார்த்து வரவேண்டும்” என்று அப்பொழுதுதான் வாழ்கையில் இன்னும் தெளிவு வரும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

29 வயதிற்குள் நான் பெற்றிருக்கிற அனுபவங்கள், என்னைப் பெரிதும் பக்குவப்படுத்தியுள்ளன. அதற்கு இந்த சிறைவாசமும் விதி-விலக்கு அல்ல.

இதே மாதிரியான அனமதியில், மூடப்பட்ட மற்ற நிதி நிறுவனங்களால், மீண்டும் செயல்படமுடியுமா?

நிதித்துறையிலேயே தொடர்ந்து இயங்குகிற நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. வேறு வகை முதலீடுகளுக்கு வேண்டுமானால், பொருந்தக்கூடும்.

இப்போது வணிகம் எப்படியிருக்கிறது?

கடை திறந்துகொள்ளும் நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள்ளேயே நல்ல நம்பிக்கையூட்டுகிற விற்பனைச்சூழல் அமைந்திருக்கிறது.

குறிப்பாக பழைய வாடிக்கையாளர்கள், எங்கள் முதலீட்டாளர்கள் இன்னும் புதிய வாடிக்கையாளர்களை நிறைய அழைத்து வருகிறார்கள். இந்தச் சிக்கல்களிலிருந்து நாங்கள் மீள அவர்களால் முடிந்த உதவியாக இதைச் செய்கிறார்கள்.

கடவுள் அருளாலும், நல்ல நண்பர்கள் உறுதுணையாலும் முதலீட்டாளர்கள் தருகிற ஒத்துழைப்பாலும், இந்த சிக்கல்களிலிருந்து நிச்சயமாக மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கை என் நெஞ்சம் நிறைய இருக்கிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்