Home » Articles » வணக்கம் தலைவரே!

 
வணக்கம் தலைவரே!


முத்தையா ம
Author:

விடுமுறை நாளொன்றில், வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த மனிதர், புழுதி பறக்க வந்து நின்ற ஐந்தாறு மோட்டார் பைக்குகளைப் பார்த்துப் பதறிப்போனார். “என்னமோ ஏதோ” என்று அவர் திகைத்து நிற்கும்போதே, வந்த இளைஞர்கள் பவ்யமாய் வினவினார்கள் “தலைவர் இருக்காருங்களா?”

“அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல…” என்று இவர் ஆரம்பிப்பதற்குள் வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த அவரது கடைசி மகன், “என்ன போலாமா?” என்ற படியே வந்த மோட்டார் பைக்குகளில் ஒன்றில் தொற்றிக்கொள்ள, மறுபடி புழுதி கிளம்பிப் பறந்தது படை.

பெரியவரிடம் முதலில் விசாரித்த இளைஞன் அவரை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே போனான். “வீட்டுக்குள் இருக்கிற தலைவரையே தெரியலை… நீயெல்லாம்….” என்பதுபோல் இருந்தது அந்தப பார்வை. இவரோ “இந்த உதவாக்கரையா தலைவர்?” என்று குழம்பினார்.

இப்படித்தான் நிறைய தலைவர்கள் அவரவர் குடும்பத்துக்கே இன்னும் அறிமுகமாகாமல் இருக்கிறார்கள். படிப்பில் மோசம், சுமாரான வேலை போன்ற தகுதிக் குறைகள் தலைமைப் பண்போடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவை.

ஒரு கம்பெனியில் பியூன் வேலை பார்ப்பவரை மேனேஜர், “என்ன தலைவரே! ரெண்டு நாளாக் காணலை” என்று விசாரிக்ககூடும்.

மேலதிகாரியின் கார்டிரைவரிடம் ஹெட்கிளார்க் “தலைவரே! நம் விஷயம் ஐயாகிட்டே சொல்லீட்டீங்களா?” என்று குழைய வேண்டிவரும்.

இவர் யார்? என்னவாக இருக்கிறார்? என்கிற கேள்விகளுக்கு இதில் இடமே கிடையாது. தலைமைப் பண்பின் முதல் விதி.

“தலைவர்கள் எங்கேயும் இருக்கலாம். என்னவாகவும் இருக்கலாம்!”

முதலாம் வகுப்பு படிக்கிற வாண்டுகள் நடுவே கூட “குரூப்லீடர்”, “கிளாஸ் லீடர்” என்று குட்டித் தலைவர்கள் உண்டு. “விலையும் பயிர் முளையில் தெரியும்”. விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே ‘எதிர்காலத்தில் யார் தலைவர், யார் தொண்டர், யார் எடுபிடி என்றெல்லாம் சரியாக கணித்துவிட முடியும்.

“மரபு வழித் தலைவர்கள் மக்கள் வழித்தலைவர்கள்” என்று இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். முதலாளிக்கு மகனாகப் பிறந்தாலேயே முதலாளியாக ஆக்கப்படுகிறவர் இருக்கலாம். அவருக்கு, தலைமை பண்பு கொஞ்சம் கம்மி என்றாலும் அவர் அங்கே டம்மிதான். அவன் ஆபீஸ் பியூன் கூட அவனை ஆட்டிவைக்கிற உண்மை தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடும்.

“மக்கள் தலைவர்கள் என்பதற்கு இராமன், ஒரு நல்ல உதாரணம். தசரதன் அரசன் இருந்தபோதே, சின்னப்பிள்ளையாய் விளையாடிவிட்டு வருகிற இராமன், எதிரே வருகிறவர்களையெல்லாம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள், சிரம்மில்லாமல் வாழ்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் நலமா?” என்று விசாரிப்பதுண்டாம்.

” எது வினை? இடரிலை? இனிது நம் மனையும்?

மதிதரும் குமரரும் வலியர் கொல் என்றெல்லாம் கேட்கக் கேட்க, அயோத்தி மக்கள்! “வருங்கால அரசரே!” என்று போஸ்டர் ஒட்டாத குறைதான்.

திடீரென்று, அவருக்கு ராஜ்ஜியம் இல்லை என்றாகி, , அவர் காட்டுக்குப் புறப்பட்டதும், அயோத்தியில் உள்ள எல்லோருமே புறப்பட்டு விட்டார்கள். ஊர் எல்லையில் எல்லோரையும் உறங்கவைத்துவிட்டு நைஸாக நழுவ வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

அதற்குப் பிறகும், அரியாசனத்தில், பதினான்கு வருடங்களுக்கு அவர் பாதுகை ஆட்சி புரிந்ததே தவிர, பரதன் ஆட்சி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. பரதனை மக்கள் ஒத்துக்கொள்ளவும் இல்லை. அப்படியென்றால்….

குடும்பத்தில் சமூகத்தில், தலைமைப் பண்பு நோக்கி நாம் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, தலைமைக்குப் போவதை இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் சரி, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டாவது விதி!

“தலைவர்கள் அறிமுகமாவதில்லை! அடையாளம் காணப்படுகிறார்கள்!”

நமக்கு அடுத்த வீட்டிலேயே இருந்து அமைதியாக வந்து போய்க்கொண்டிருக்கிற ஒருவர் ஒரு இயக்கத்தின் தலைவர் என்பதையோ, செல்வாக்குள்ள மனிதர் என்பதையோ செய்தித்தாள் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் தங்கள் தலைமைக் குணத்தைத் தலைவர்கள் வெளிபடுத்துவது கிடையாது.

“நான் தலைவர்” “நான் தலைவர்” என்று மார் தட்டினால் மக்களுக்கு சந்தேகம் வரும். மாறாக, அமைதியாகவே இருந்து, சரியான நேரத்தில் தலைமைக் குணம் வெளிப்படும்போது, அவர் மீதான மரியாதை பல மடங்கு பெருகும். “சே! என்னமோ நினைச்சேன் சார் உங்களை! இவ்வளவு பெரிய ஆளா நீங்க!” என்று பக்கத்து வீட்டுக்காரர் முதல் தொண்டராக மாறி விடுகிற சூழ்நிலை ஏற்படும்.

எங்கோ திடீரென்று தீப்பிடிக்கிறது. எல்லோரும் பக்கெட்டில் தண்ணீர் எடுக்கப் போகும்போது, ஒருவர் மட்டும் தொலைபேசிக்கு ஓடுவார். தீயணைப்புப் படையைக் கூப்பிடுவார். முதல் உதவிப்பெட்டியைத் தயாராக வைத்திருப்பார். பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீர் வரும் முன் ஏணியை எடுத்துக் கொண்டு நிற்பார்.

வீட்டிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை வெளியே கொண்டுவர வீட்டுக்காரர் ஓடும்போது, “இன்ஷ்யூரன்ஸ் பேப்பர் பத்திரமா இருக்கா?” என்று ஞாபகப்படுத்துவார். மூன்றாவது விதி.

“பதட்டமான நேரத்தில் பதறாமல் செயல்படுபவர்களே தலைவர்கள்!”

எனவே, உங்கள் மகனை “தலைவரே” என்று சிலர் அழைக்கத் தொடங்கிவிட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். “முதல்ல படிக்கிற வேலையைப் பாருப்பா” என்று பலர் முன்னிலையில் திட்டாதீர்கள். தலைமைப் பண்புள்ளவன் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம். எனவே, ஊரார் வேலையை எல்லாம் பார்த்துவிட்டு உங்கள் மகன் தாமதமாக வந்து கதவைத் திறந்துவிட்டு, சிநேகத்தோடு சொல்லுங்கள்.

“வணக்கம் தலைவரே”

-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்