Home » Articles » மனித சக்தி மகத்தான சக்தி

 
மனித சக்தி மகத்தான சக்தி


ஜக்கி வாசுதேவ்
Author:

மனித மனம் லாவகமா கையாளப்பட வேண்டிய ஒரு கருவி. சரியான எண்ணங்களை நாம் அதில் புகுத்தினால் தவிர, அதனை தேவையான முறையில் இயக்க இயலாது.

இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியே திரும்பத் திரும்ப சிந்தித்து ஒரு பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என்னென்ன வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்ற எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.

வாழ்கைக்கு தேவையான எண்ணங்களைப் புகுத்தத் தொடங்கினாலேயே தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும். சில வேண்டாத விஷயங்களைப்பற்றி, திரும்பத் திரும்ப சிந்தித்தால், அவை வாழ்க்கையில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். எனவே மனம் என்கிற கருவியை மிகச் சரியாகக் கையாள வேண்டும்.

நம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போலவே தேவைப்பட்டால் இயக்குவதும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்திற்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.

எதிர்காலம் பற்றிய கனவுகள் குறித்து இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே நாம் பார்த்தோம்.

கனவுகள் நல்லவை. உந்து சக்தி தருபவை. ஆனால், கனவு நிலைக்கு அடுத்த கட்டமாகிய செயலுக்கு வந்தால் தான் வாழ்க்கை நகரும்.

கனவுகள் என்பவை ஒரு திரைப்படம் பார்ப்பது போல! இரண்டு மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு விளக்கு எரிந்ததும் எழுந்து வெளியே வந்து விடவேண்டும். விளக்குகள் எரியாமல் திரைப்படம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் பார்ப்பவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். கனவுகளும் அது போலத்தான், கனவுகள் நிற்காமல தொடர்ந்து கொண்டேயிருந்தால் மனிதன் பைத்தியமாகி விடுகிறான்

இன்று நிறையபேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்க அஞ்சுகிறார்கள். நம்மைக் கனவு நிலையிலேயே வைத்திருக்ககூடியவற்றில் ஒன்றுதான் ஜோதிடம்.

இன்று நிறைய இளைஞர்கள் கூட கண்களில் அச்சத்தோடும் கைகளில் ஜாதகக்குறிப்போடும் நாளை என்ன நடக்கும் என்கிற கேள்வியோடும் நடமாடுவதைப் பார்த்தால் வருத்தமாக இருகிறது. இன்னும் வாழ்க்கக்குள்ளேயே அந்த வாலிபர்கள் வரவில்லை.

இன்று அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் தான் நாளை என்ன நடக்கும் என்று சொல்லமுடியும். ஆனால், அவர்கள் அதை ஜோதிடம் வழியாக அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

ஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் என்ன வழிப்போகிறது என்று எதிர்ப்பார்ப்பது போல நம் வாழக்கையை நாமே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு, கிரகங்கள் அதிலே என்ன போடப்போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

நமது வாழ்க்கையை நாமேதான் வடிவமைக்க வேண்டும். நம்முடைய வாழ்வை நாம் வடிவமைக்கிற முறையில் தான் நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கியிருக்கிறது.

ஒரு தனி மனிதனின் வாழக்கை உலகத்தை எப்படி மாற்றி அமைக்கும் என்கிற கேள்வி எழலாம். உலகம் என்பதே மனித மனத்தின் பெரிது படுத்தப்பட்ட பிம்பம்தான். இன்று இந்த மண்ணில் நடக்கின்ற ஒவ்வொன்றும் மனித மனத்தில் நடபெற்றதுதான்.

மனிதன் தன்னிடம் என்ன இல்லை என்பதை எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்காமல், இருப்பதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை நோக்கி நடைபோட வேண்டும்.

உங்களிடம் வாகனம் சரியாக இருக்கிறது. நீங்கள் அதை நன்கு ஓட்டுபவராக இருந்தால் மட்டும் போதாது. உங்களிடம் இருக்கிற ஆற்றலை மிக நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலமே வெல்ல முடியும். அதிர்ஷ்டங்களை நம்பி வாழத் தொடங்கினால் பதற்றம்தான் எஞ்சும். ஒன்றை மிக வேகமாக அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறபோது உங்கள் தகுதிகளை நீங்கள் மதிப்பிடவில்லை என்றுதான் அர்த்தம்.

வாள் வித்தையில் தலை சிறந்து விளங்கிய ஒரு மனிதன் இருந்தார். அவரிடம் ஒரு இளைஞன் போய், “உலகின் மிக சிறந்த வாள் வீச்சுக்காரனாக நான் வர விரும்புகிறேன். அதற்கு எத்தனை காலம் உங்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும்? என்று கேட்டான்.

“பத்து ஆண்டுகள் போதும்” என்றார் அவர். “அவ்வளவு காலம் நான் காத்திருக்க முடியாது. இரவும் பகலும் இடையறாமல் பயிற்சி எடுத்துக் கொண்டால் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்றான். அதற்கு அந்த வாள் வீச்சு வல்லுநர் “நாற்பது வருடங்கள் ஆகும்” என்றார்.

இளைஞருக்கு அதிர்ச்சி. அவர் சொன்னார், “ஏதாவது ஒன்றை உடனே அடைய வேண்டும் என்று பதட்டத்தோடு இடையறாமல் செய்து கொண்டேயிருந்தால் உன்னுடைய ஆற்றல் குறையும். செயல்திறன் மங்கும். ஆகவே அதிக நாட்கள் ஆகும் என்று சொன்னார்.

இந்தப் பதட்டத்தின் இன்னொரு அம்சம்தான் நம்முடைய வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள ஜாதகத்தை நம்பிப்போவது. தன்னை அறிந்து கொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அவை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கிவிடுவீர்கள். அதற்குப் பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணித்த்தையோ பார்த்துக் கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.

ஒரு மனிதன் தன் வீட்டை விட்டு வெளியே வரக்கூட ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்படுகிறான். இதற்குக் காரணம், அவர் தன்னுடைய சக்தியை, ஆற்றலை, செயல் திறனை அறிந்து கொள்ளாததுதான்.

தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதனுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் சில அற்புதங்களை எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். ஒன்றை தங்கமாக்குவது, ஒன்றை வேறொன்றாக மாற்றித்தருவது போன்றவையெல்லாம் நமது ஆசையை, அச்சத்தை அதிகப்படுத்துபவை இவற்றை அற்புதங்கள் என்று பேசுவதே தவறு.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையோடு நாம் விளையாடுவது, ஆனால் வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(தொடரும்)


Share
 

2 Comments

  1. M.jayakumar says:

    nice

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்