Home » Articles » (ச)மையல்

 
(ச)மையல்


சாந்தாசிவம்
Author:

நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை சொல்லத் தவறுவதில்லை. அது “சமையல்”. சமையல் ஆயிடுச்சா? சமைச்சிட்டேன் சாப்பிடவாங்க” என்ற வார்த்தைகள் ஒரு கவர்ச்சியான மையல் கொள்ளும் வார்த்தைதான்.

நான் சுமாரா சமைப்பவள் என்றாலும் சமையல் ரெசிபி யெல்லாம் தந்து உங்களை சோதிக்க மாட்டேன். படிக்காமல் பக்கங்களையெல்லாம் புரட்டிவிடாதீர்கள்.

உணவில் கலப்பது காரம், புளி, கடுகு மட்டுமா? நம் உள்ளுணர்வுகள் கூடத்தான். சமைப்பவர்களின் மன நிலை, உணவில் தெரியும்.

சமைக்கும்போது மனதுக்கினிய சங்கீதம், நல இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டோ, இனிமையான அனுபவங்களை நினைத்துக்கொண்டோ சமைத்தால் சமையல் அசத்தலாக இருக்கும்.

இதையே கோபத்தோடும், துக்கம் துயரத்தோடும் சோர்வான மனநிலையில் சமைத்தால் அந்த உணவு உள்ளே போகும்போதே வெறும் சக்கைதான்.

ரசனை உள்ளத்தோடு சமைக்கும் பொருட்கள், அந்த நேரம், பாத்திம், என இவற்றின் மேல் ஒரு மையலாக சமையுங்கள். அதில் ஒன்றிரண்டு கூட்டியோ, குறைவாகவே சேர்மானங்கள் இருந்தாலும் சாப்பிடுபவர்கள் மனதை பாதிக்காது. சமையலில் மணம், குணம், நிறம் மட்டுமே முக்கியமல்ல. தரமான பொருட்கள், பச்சைப்பசேலென்று காய்கறிகள் மட்டுமே முக்கியமல்ல. தேர்ந்த சமையல்காரர் /அருமையாக சமைக்கும் அம்மா, அத்தை என யாராக இருந்தாலும் அவர்களின் மனநிலை சமைக்கும்போது எப்படியிருக்கிறது? எந்த மனநிலையில் சமைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

எந்த மனநிலையில் சமைக்கிறோமோ அந்த மனநிலைதான் சாப்பிடுபவரையும் தொத்திக்கொள்ளும். சமையலறையில் சமைத்துத் தொலைக்க வேண்டும் என்ற சலிப்போடு நுழைந்து தொடங்கும் சமையல், வயிற்றை கெடுத்து பல கோளாறுகளில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

ஒரு ஆப்பக்கடை ஆயாவோ தெருவோரம் இட்லி, சுப்பம்மாவோ சுகாதாரமில்லாது நல்லமன நிலையில் சமைத்தாலும் நம் உடலுக்குக் கேடு விளைவதில்லை. பலரும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே செல்வோம்.

“என்ன தண்ணியோ, எப்படி சமைத்தார்களோ ரோட்டுப் புழுதி வேறு எப்படி இதையெல்லாம் சாப்பிடுகிறார்கள்” என வினா எழுப்பிய வண்ணம் நடமாடும் பல ஹோட்டல்களையும் (தள்ளுவண்டி) தினம் பார்க்கிறோம். ஆனால் அதைச் சாப்பிடும் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக உடல் பாதிப்படைவதில்லை.

பசியோட அன்றாடம் வரும் வாடிக்கையாளர்களின் முகங்களை மனதில் கொண்டு ஒரு பிரியமான அந்தக் குறைந்த வருமான சமையலைச் செய்து விற்கிறார்கள். விற்காது போனால் அந்த குறைந்த முதலீட்டு சமையல்காரருக்கு பெருத்த நஷ்டம்.

வாடிகையாளர்களைத் தன்வீட்டு நபர்களாக எண்ணி இந்த ரோட்டோரக் கடைகள் செயல்படுகின்றன. அக்கறையோடு செய்யப்படும் சமையல் பல அன்றாடங் காய்ச்சிகள், கூலித்தொழிலாளிகள் இதைச் சாப்பிட்டு தினப்படி தன் வேலைக்குச் செல்லத்தான் செய்கிறார்கள்

இதே ஒரு நடுத்தர ஹோட்டலில் சரியான சம்பளம், இருப்பிடம் போதிய வசதியில்லாது சமைக்கும் ஒரு சமையல்காரரின் மனம் பாதித்த சமையலை சாப்பிட்டு வெளியே வந்ததும் நம் வயிறு ஒரே கடாபுடா சத்தம் எழுப்பி ஒரு வழி பண்ணும்.

சமையலில் ஜீரணம் ஆகக்கூடிய பொருள்களை சேர்க்காதது மட்டுமே காரணம் அல்ல. சமையல்காரரின் மனநிலை உற்சாகமில்லாததும் ஒரு காரணம். பாவம் அந்தச் சமையல்காரருக்கு என்ன கவலையோ? சோகமாக இருக்கிறார். பரிமாறுபவருக்கும் அதே முகபாவம். அவர்களின் வெளிப்பாடுகள், உணர்வுகள் உங்களையும் தொற்றி, மனம் எதையோ நினைக்க வாய் மிஷினாக உணவை அரைக்கும்.

ஒரு ஆடம்பர ஸ்டார் ஹோட்டலில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. வசதி மிக்க ஓட்டலில் நவீன சமையலோ, கருவிளோ காரணம் இல்லை. உயர்ரக உணவுப் பொருட்கள் தரமான பாத்திரம், காய்கறிகள் என்று மட்டுமல்லாது. சகல வசதிகளும், பல வருடங்கள் முறையாக பயின்ற சமையலை ஒரு விருப்பமாக சமைப்பதுதான் முக்கிய காரணம்.

நல்ல சம்பளத்துடன் பல சலுகைகள், மரியாதையுடன் கூடிய மிடுக்கான தோற்றத்திற்கு சுத்தமான உடை, போன் வசதி என பலவும் கிடைக்கும்போது சமைப்பவரின் மனம் குதூகலமாகிறது. பல விஐபிக்கள் நாம் சமைத்த உணவை விரும்பி உண்கிறார்கள் என்ற சுகமான சந்தோஷ உணர்வு அவரை சூழ்ந்து சமையலை மையலோடு சமைக்க வைக்கும்.

என் அன்றாட வேலைகளை முடித்து விட்டு மதியம் அரைமணி கண்ணயர்ந்து விட்டு பின் மற்ற பணிகளைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்துடனே நான் தினமும் சமைப்பதால், என் வீட்டிலிருப்போருக்கும் அது (விருந்திற்கு வரும் உறவினர்களுக்கும்) பெரும்பாலும் தொற்றிக் கொண்டு ஒரு 10 நிமிட குட்டித்தூக்கம் போட வைக்கிறது.

என் உறவினர் ஒருவர் மதியத்தூக்கத்திற்கு அடிமையாகாதவர். அவர் ஒரு முறை என் சமையைலச் சாப்பிட்டார். சாப்பட்டு ஒரு பத்து நிமிடத்தில் தொழிலாளிகளிடம் வேலை வாங்கிக்கொண்டிருக்கும்போதே தூக்கம் கண்களை சுழற்றியதாம். “சமையலில் தூக்க மாத்திரை போட்டீர்களா? நான் தூங்கி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தூக்கம் தூக்கமா வருகிறது என்றார்.

எனக்குப் புரிந்துவிட்டது. நான் சமைக்கும் போது ஓயாமல் உழைப்பவர்கள் நன்கு திருப்தியாக மனநிறைவாக சாப்பிட்டு சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டு சமைப்பதால் அந்த உணர்வுகள் அவர்களைத் தாக்கி ஓய்வெடுக்கத் தூண்டுகிறது. இதற்கு வாழ்வில் பல உதாரணங்கள் இருக்கிறது. அது பல பக்கங்களுக்கு நீண்டுவிடும். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

இன்னொரு உண்மை கதையும் கூறி (ச)மையல் சீக்கிரமே முடிக்கிறேன். ஒரு மிகப்பெரிய வசதிபடைத்த பணக்கார வீட்டு கைதேர்ந்த சமையல்காரரின் சமையல் பலராலும் பாராட்டப்பட்ட ஒரு சிறப்பான விஷயம். சில நாட்களாக என்னவோ தெரியவில்லை வீட்டில் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்கள், ஒரு சோர்வு, இனம் புரியாத மன இறுக்கம், உற்சாகமின்மை என குழப்பமான சூழல். வீட்டில் ஒவ்வொருவருக்குமே இந்த விஷயத்தில் ஏன் சமீப நாட்களாக இப்படி என வியப்பு கலந்த சந்தேகம் ஆட்கொண்டது.

உடலில் எந்தக் கோளாறும் இல்லை. இது மனம் சம்பந்தப்பட்டது என உணர்ந்த அந்த குடும்பத் தலைவர் தன் சைக்யாட்ரிஸ்ட் நண்பரைச் சந்திக்க சென்றார். அவருடன் எல்லாவறையும் பகிர்ந்து கொண்டார். அவர் சமையல்காரரைப் பற்றி விசாரித்தார்.

அவருக்கு ஒரு மகன், மகள். மனைவி இறந்துவிட்டார். 15 வருடகால சமையல்காரர். அவருக்கு மகனுடன் தொடர்பில்லை. மகளுக்கு நாங்கள்தான் திருமணம் செய்து வைத்தோம். 3,4 வருடமாகிறது. அவர் எப்படியிருக்கிறார் என்றால்….”தெரியாது” என்ற பதில் இவரிடம். சமையல்காரரை அழைத்து தனியே விசாரித்தில் நிறைய பிரச்சனைகள்.

மருமகனுக்கு வியாபாரத்தில் பல பிரச்சனைகள் மகளுக்கு உடல்நிலை சரியில்லாதது, சின்னக்குழந்தை, வேறு யாரும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லாதநிலை. இதெல்லாம் சமையல்காரரை ஒரு மாதகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக தாக்கி ஒரு சுமையோடு சமையலில் ஈடுபடச் செய்திருக்கிறது.

சோர்வும் மன இறுக்கமுமாக சமைத்ததினால் சாப்பிடுபவர்களையும் தொடர்ந்து அதே உணர்வுகள் தாக்கியதும் புரிந்தது. சமையல்காரரின் மகளின் குறைகளை நிவர்த்தி செய்ததும் பழையபடி குடும்பமும் உற்சாகமாகச் செயல்பட்டது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மாதிரி அடுப்படியின் சமையல் எப்படியிருந்தாலும் சமைக்கும் நபர்களின் அகம் சரியாக இருக்க வேண்டும்.

அதனால் மனைவிகளே! கணவர்களே! சமைக்கும்போது நல்ல உற்சாகமான, கவனமான மனநிலை கொண்டு சமையலறைக்குள் நுழைந்து சமையலை ஒரு காதலாக மையல் கொண்டு சமையுங்கள். பாசமாக நேசமுடன் சமையுங்கள். அப்பொழுது தான் உங்கள் சமையலில் மற்றவரை மையல் கொள்ள வைக்கலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!