Home » Articles » உடல் சோர்வடைகிறீர்களா?

 
உடல் சோர்வடைகிறீர்களா?


இராமநாதன் கோ
Author:

மருத்துவம் மகத்துவம்

“எனக்கு ரொம்ப அசதியா இருக்குது” இப்படி ஒருவர் ஏதாவது ஒருமுறை சொன்னால் அது பெரிய விஷயமில்லைதான்.

ஏனெனில் ஓரிரவு தூங்காவிட்டால் கூட உடம்பு அசதியாகிவிடும். கடுமையான உழைப்பிற்குப் பின் அசதியாக இருக்கும். ஏதாவது சங்கடமான சம்பவங்கள் நடந்தாலும் உடலில் அசதி ஏற்படும்.

ஆனால், ஒருவருக்கு தொடர்ந்து, நீடித்த, கடுமையான உடற்சோர்வு ஏற்பட்டால் நிச்சயமாக அதில் ஏதாவது ஒரு சிக்கல் உள்ளது என்பதே பொருள். உடற்சோர்வின் சில முக்கிய காரணங்களைப் பற்றி பார்ப்போம்.

மனச்சோர்வு:

பெரும்பாலோரின் உடற்சோர்வுக்கு முக்கிய காரணமே அவர்களுடைய மனச்சோர்வுதான். (Mental depression) இந்த மனச்சோர்வுள்ளவர்கள் உடலை பரிசோதித்தால் எந்தப் பிரச்சனையும் இராது.

ஆனால், மனதில் எல்லையில்லாத சோகம், எந்த செயலிலும் ஈடுபாடில்லாத விரக்தி, பிறரைப் பற்றிய ஆர்வமின்மை, சிந்திக்கும் ஆற்றல் குறைதல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாமல் குழப்பமடைதல், எல்லா ஆற்றலும் இழந்துவிட்ட உணர்வு, பிறருடன் பழகாமல் தனிமையையே நாடுதல், சிரிப்பான சம்பவங்களுக்குக்கூட சிரிக்க இயலாமை, தயக்கம், தடுமாற்றம், குற்ற உணர்வு, சந்தேகம், கவலை, மகிழ்ச்சியின்மை, தூக்கமின்மை போன்ற மனச்சோர்வின் அடையாளங்கள் வெளிப்படும். பலருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடித்தோன்றும்.

இரத்தசோகை:

இந்தியாவில் பெரும்பாலோருக்கு உடற்சோர்வின் முக்கியக் காரணம் இனீமியா எனப்படும் இரத்தசோக நோய்தான். அதிலும் குறிப்பாக பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய் இதுதான்.

இரத்தசோகை இருந்தால் வேலை செய்யும் போதும், நடக்கும் போதும், மூச்சிறைத்தல் உண்டாகும். மேலும் நெஞ்சு படபடப்பு, தலைவலி, தலைசுற்றல், கண் பார்வை மங்குதல், தூக்கமின்மை, கை கால்களில் உணர்வு குறைதல், போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இவர்களுடைய தோல் வெளிறிக்காணப்படும். மேலும் கண்கள், நாக்கு, கைகள் வெளிறிய தன்மை நன்றாக அறியலாம். சிலருக்கு கை-கால் விரல்களிலும் நகங்கள் தட்டையாகவும், குழிவிழுந்தும் காணப்படும். இன்னும் சிலருக்கு கால் பாகங்களில் ஆரம்பித்து படிப்படியாக வயிறு, முகம், கைகள் போன்ற எல்லா உறுப்புகளிலும் வீக்கம் உண்டாகிவிடும்.

தைராய்டு குறைவு:
(Hypothyroidism)

கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பதாலும் உண்டாகும் தைராய்டு பற்றாக்குறையினால் உடற்சோர்வு ஏற்படும். இவர்கள் அதிகமாக தூங்குவார்கள். இதனால் நாளுக்கு நாள் உடல் பருமனாகிவிடும் . அவர்களால் குளிரைத்தாங்க முடியாது. இவர்களுடைய குரல் நாளுக்கு நாள் கட்டையாகிவிடும். இவர்களுடைய பேச்சு, செயல்பாடு, எல்லாமே மெதுவாகிவிடும். இவர்களுக்கு மலச்சிக்கல், தோல் வறண்டுவிடுதல், முடி உதிருதல், உதடு தடித்துவிடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

ஆண்களுக்கு ஆண்மை குறைதல், பெண்களுக்கு மலட்டுத் தன்மை, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுதல் போன்ற குறைபாடுகளும் ஏற்படும்.

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவு சிறுநீர் வெளியாதல், அதிலும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, அதிகமாக சாப்பிடுதல் கைகால்களில் மறமறப்பு, உடலில் புண் ஆறாமை, இன உறுப்புகளில் புண் உண்டாதல், உடல் எடை குறைதல், பார்வை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சிலருக்கு உடலின் வெவ்வேறு உறுப்புகளில் கிருமிகளின் (Infections)தொல்லைகள் அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் ஆண்களுக்கு ஆண்மையின்மை, பெண்களுக்கு, குறைப்பிரசவம் ஏற்படுதல் போன்ற சிக்கல்களும் ஏற்படும். இரத்தித்தில் அளவிற்கதிமாக சர்க்கரை உயரும்போது கோமா என்ற கீட்டோஸிஸ் ஏற்படும்.

இவை தவிர, நீடித்த சர்க்கரை நோயினால் இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

டிபி அல்லது காசநோய்:

இது இந்தியர்களுக்கு உடற்சோர்வைக் கொடுக்கும் முக்கிய நோய் எனலாம். இது நுரையீரலைப் பாதித்தால் இருமல், கோழை, மாலைநேர காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். ஆனால், உடலில் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை உடைய இந்நோய், நுரையீரல் அல்லாத உறுப்புகளைப் பாதிக்கும் போது உடற்சோர்வு, எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் மட்டுமே வெளிப்படும்.

மதுப்பழக்கம்:

தொடர்ந்து மது சாப்பிடுவோருக்கு உடலில் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு குடலில் பல நோய்கள் உண்டாகிவிடும்.

மதுப்பழக்கம் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதித்துவிடும். குறிப்பாக கல்லீரலை சுருங்கச் செய்யும்.

மூளை மற்றும் நரம்புகளைப் பாதித்து நரம்பு நோய்கள் ஏற்படும்.

பலர், உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வினால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாதவர்களாகி விடுவார்கள்.

வைரஸ் நோய்:

பெரும்பாலும் வைரஸ் நோய்கள் ஒரு சில நாட்களில் தாமாக சரியாகிவிடும்.

இன்பெக்ஸியஸ் மானோ நியூசிலயோஸிஸ் எனப்படும் நோயில் காய்ச்சல், தொண்டையில் டான்ஸில் வீக்கம், தோலில் தடிப்பு, நெறிகட்டுதல், மண்ணீரல் வீங்குதல் மற்றும் கடுமையான உடற்சோர்வு ஏற்படும்.

எய்ட்ஸ் நோய் HIV என்ற வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இதிலும் உடற்சோர்வு முக்கிய அறிகுறியாகும்.

புற்றுநோய்:

பல சமயங்களில் புற்று நோய் ஆங்காங்கே கட்டிகளாக உருவாகி உடலில் பல்வேறு அறிகுறிகளை உண்டாக்கும்.
சில சமயங்களில் உடலில் வேறெந்த அறிகுறிகளும் இல்லாமல் உடற்சோர்வு மட்டுமே வெளிப்படும்.

மேலும், சாப்பிட இயலாமை, உடல் எடை குறைதல், உணவை விழுங்குவதில் தடை ஏற்படுதல், இருமலில் இரத்தம் வெளியாதல், மலச்சிக்கலும், வயிற்றுப் போக்கும் மாறிமாறி உண்டாதல், சிறுநீரில் இரத்தம் வெளியாதல், அளவிற்கதிகமான உதிரப்போக்கு, காரணமில்லாமல் காய்ச்சல் ஏற்படுதல்,, அதிகப்படியான தாகம், போன்ற அறிகுறிகள் அந்தந்த உறுப்புப் பகுதிகளின் பாதிப்புகளுக்கேற்ப ஏற்படும்.

மருந்துகள்:

பல மருந்துகளுக்கு குறிப்பாக இரத்தக்கொதிப்பு நோயின் சிகிச்சைக்கு சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவுகளாக (Side effects) உடற்சோர்வு வெளிப்படலாம். தூக்க மாத்திரைகள் சாப்பிடுவோருக்கும் உடற்சோர்வு ஏற்படும்.

உடற்சோர்வை தவிர்க்கும் வழிகள்:

அன்றாட பிரச்சனைகளினால் மனச்சோர்வு இல்லாமல் செயல்படுவதற்கும், உடலில் பல நோய்களைத் தடுப்பதற்கும் சரியான உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

நம்மில் பலரும் வாகனங்களை வைத்துள்ளோம். உயிரற்ற இயந்திரத்தை ஒரு குறிப்பட்ட கால இடைவெளியில் பரிசோதித்து சர்வீஸ் செய்கிறோம்.

அதே அடிப்படையில் வருடத்திற்கு ஒருமுறை நம்முடைலையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அதன்மூலம் மேற்கூறிய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம்.

மேலும், அன்றாடம் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை சுமார் அரை மணி நேரமும், மனதிற்கு தேவையான யோக பயற்சிகள் மற்றும் தியானத்தை சுமார் அரை மணி நேரமும் செய்துவிட்டு நம்முடைய கடமைகளைச் செய்தால் உடற்சோர்வு ஏற்படாது.

சரியான உணவு மற்றும் உறக்க முறைகளும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

எக்காரணமும் இல்லாமல் உடற்சோர்வுள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!