Home » Articles » மனித சக்தி மனித சக்தி

 
மனித சக்தி மனித சக்தி


ஜக்கி வாசுதேவ்
Author:

மனித மனம் என்கிற விலை மதிப்புமிக்க வைரத்தில் படிகிற, துயரம் எனும் தூசியினைத் துடைப்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம்.

மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது.

பலபேர் இயல்பாக இருப்பதென்றால், சோம்பலோடு இருப்பது என்று தவறாகப் பொருள் கொள்கிறார்கள். பல்வேறு துறைகளில் பல விதமான முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் கூட அந்த முயற்சியின் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்கு பெயர்தான் இயல்பாக வாழ்வது.

உதாரணத்திற்கு பலபேரை ஒரே நேரத்தில் கொன்று வீழ்த்துகிற வலிமை உள்ள ஒரு மனிதன் அன்பு நெறி பற்றிப் பேசினால் அதிலே அர்த்தம் இருக்கிறது. யாரையும் எதிர்கொள்ள முடியாத கோழை வாழ்வில் எதையும் சாதிக்கமுடியாத நிலையில் அமைதி நெறியையும் அன்பையும் பற்றிப் பேசினால் அது கேலிக்கு இடமாகும். அதுபோல இயல்பாக வாழ்வது என்பது சோம்பேறிகளால் சொல்லப்படுகிற போது, அது கேலிக்கு இடமாகிறது. ஆனால் சாதனையாளர்கள் இயல்பாக வாழ்வதன் மூலம், தங்கள் இலட்சிங்களை மிக எளிதாக அடையமுடியும்.

எல்லாத் திறனும் வாய்க்கப்பெற்ற ஒரு மனிதன், “இது என் முயற்சியை மீறி நடந்தது.” என்று சொல்கிறபோது அதன் அர்த்தம் மேலும் அடர்த்தியாகிறது. அந்த முயற்சியை சுமை மிகுந்ததாக கருதுவார்களேயானால், அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. “செய்வதை எல்லாம் என்னிடம் அர்ப்பணித்து விடு” என்று கீதையில் கண்ணன் சொல்வது இதைத்தான்.

நாம் உறங்குவது என்றாலும் சரி, உண்பதென்றாலும் சரி, பணி புரிவதென்றாலும் சரி, அதை நம்மிலும் மேலான சக்திக்கு அர்ப்பணிக்கிறபோது நம்மால் இயல்பாக இருக்க முடியும்.

பக்தி மார்க்கம் என்பதே இந்த பக்குவத்தை வழங்குவதற்காகத்தான் உருவானது. “எல்லாம் சிவன் செயல்” என்று சிலபேர் சொல்லிக் கொண்டு செயல்படுவார்கள். அவர்களால் தனக்குள் இருக்கிற ஆற்றலை அந்த நேரங்களில் மிக எளிதாக உணர முடியும். செயல்படவும் இயலும். இன்று மக்கள் அனைத்தையும் காரண அறிவு கொண்டு, ஆராய்கிற நிலைக்கு வந்த பிறகு, கடவுள் செயலென்று சொல்லாமல் மனித சக்தி என்கிறோம்.

உணர்வுப் பூர்வமாக ஒரு மனிதன் சிந்திக்கிறபோது, இறைத்தன்மை வெளியே இருக்கிறது. அவனுக்கு பலன் கொடுத்து. காரண அறிவோடு சிந்திக்கிறபோது சக்தி மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று சொல்வது, மனிதர் தன்னுடைய மேலான இயல்பை உணர்ந்து வாழ்க்கையை மிக இயல்பாக நடத்திச்செல்ல வழிசெய்கிறது.

இயல்பாக வாழ்தல் என்று சொன்னால் முயற்சியற்ற நிலை அல்ல. முயற்சி கடந்த நிலை. யாரொருவர் இடையறாத முயற்சியில் இயங்குகிறாரோ, அவரால்தான் முயற்சி கடந்த நிலையை எட்ட முடியும்.

ஒருவர் எப்பொழுதும் ஓய்விலேயே இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரால் ஓய்வின் தன்மையை உணர முடியாது. உழைப்பின் சிகரத்தைத்தொட்ட மனிதருக்குத்தான் ஓய்வின் அருமை புரியும்.

ஒரு முறை இது நிகழ்ந்தது. ரஷ்யாவில் “பாலே” நடனக்கலைஞர் விங்கின்ஸ்கீ என்று ஒருவர் இருந்தார். பாலே நடனத்தில் மிகவும் புகழ்பெற்ற கலைஞராக, தன் வாழ்கையையே அந்தக் கலைக்கு அர்பணித்தவராக அவர் விளங்கினார் அவரது நடன நகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறபோது, சில உச்சகடமான நேரங்களில், அவர் துள்ளிக்குதிப்பார். அவர் குதிக்கிற உரம், அறிவியல் நிர்ணயித்திருகிற எல்லையை கடந்ததாக ஒரு மனிதனின் அதிகபட்ச சாத்தியத்தையும் தாண்டியதகாக இருக்கும்.

எல்லா மனிதனும் புவியீர்ப்புக்கு உட்பட்டவன்தான். ஆனால் அதனையும் தாண்டிய அசாதாரண உயரத்திற்கு லிங்கின்ஸ்கீ தாவிக் குதிப்பதை பல பேர் பார்த்திருக்கிறார்கள். இது எப்போதும் நிகழ்வதல்ல, எப்போதாவது நிகழ்வது. லிங்கன்ஸ்கீயிடம் கேட்ட போது, அவர் சொன்னார் “எப்போதெல்லாம் ஒரு சக்தியோடு, செயல்படுகிறேனோ அப்போதெல்லாம் இது நிகழ்கிறது” என்றார்.

ஒரு குறிப்பிட்ட துறைக்காக ஒருவர் முழுமையாக தன்னை அற்பணிக்கிறார் என்றால், அவரது 100% முயற்சியின் விளைவாக, அவரையும் மீறிய ஓர் ஆற்றல் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். அந்த ஆற்றலுக்காக, அவர் அதிக சிரமம் எடுத்துக்கொண்டார் என்று சொல்ல இயலாது. அது தானாகவே நிகழும். அது மிக இயல்பாக ஒரு பூ மாதிரி தானாகவே மலரும். எனவே உங்கள் முயற்சியை உச்சகட்டத்தில் கொண்டு செல்லுங்கள். இயல்பாக வெற்றி என்பது சாத்தியமாகும்.

“ஜென்” என்கிற மார்க்கம் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜென் என்றால் ஒன்றும் செய்யாமல் இருப்பது, இந்து சமய சொல்லாட்சியில் சொல்வதென்றால் சும்மா இருத்தல்.

“சும்மா இருத்தல்” அல்லது “ஜென்” என்றால், செயல்களற்ற நிலை என்று நினைக்கிறார்கள். இது செயல்களை கடந்த நிலை. அதற்கு தீவிரமான முயற்சி அவசியம். இடையறாத தொடர் செயல்களின் உச்சியில்தான் இந்த செயலற்ற தன்மை பூக்கிறது. இந்தச்செயல் தானாகவே நிகழ்வதை நீங்களும் பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்க்க இயலும்.

உங்கள் மூலம் நடைபெறுகிற செயலை உங்களாலேயே பார்க்கிற முடிகிறதென்றால் அந்தச் செயல் உங்கள் மேல் ஒரு சுமையாக அழுந்தவில்ல என்று அர்த்தம். வாழ்க்கை தானாக, இயல்பாக நடைபெறுவதை நீங்களும் காண்பீர்கள்.

தியானம் இதை நோக்கிய அற்புதமான பயணம். பலபே தியானம் புரிவதென்றால் ஒன்றும் செய்யாமல் இருப்பது, என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மதியானம்” என்பது உங்களை தீவிரப்படுத்துகிற வழி. உங்களுக்குள் எவ்வளவு பெரிய ஆற்றல் ஒளிந்திருக்கிறது என்பதை அனுபவ ரீதியாய் அறிந்துகொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. தியானம் என்பது சும்மா இருப்பதுதான். ஆனால் செயல்களைத் தொடங்குவதற்கு முன்பு நேருகிற அமைதி அல்ல அது. செயல்களின் உச்சத்தில் நிகழ்கிற ஒரு அமைதி.

முயற்சி இன்மைக்கும், முயற்சி கடந்தி நிலைக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. தேங்கிப் போகிற குட்டை அமைதியாய் இருக்கிறது அசைவன்றியும் இருக்கிறது. நதிகள் வந்து சங்கமித்திருக்கிற கடல் பகுதியும் அமைதியாய் இருக்கிறது. தேங்கிய நிலையில் குட்டை, கிருமிகளை ஏற்படுத்தும். ஆனால் சமுத்திரம் அசைவுகளைக் கடந்த நிலையில் இயல்பாக இருக்கிறது.

“தியானம் என்பது மனிதனை இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டுச் செல்வதற்கான முயற்சி”. இயல்பான வாழ்க்கை அமைய தியானம் ஒரு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment