Home » Articles » உயர்வுக்கு உரிய வழி

 
உயர்வுக்கு உரிய வழி


admin
Author:

மரியாதை – இன்சொல்

– டாக்டர் பெரு. மதியழகன்

பிறரை மதிப்பதும், பிறருக்கு மரியாதை கொடுப்பதும், இன்சொல் பேசுவதும் உயர்ந்தவர்களுக்கு உரிய பண்புகள். வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த உன்னதப் பண்பை கடைபிடிக்க வேண்டும். ஈ.வே. இராமசாமி என்கிற சமூகசீர்த்திருத்தவாதியை, சிந்தனையாளரை, மனிதநேயப் பண்பாளரை எல்லோரும் பெரியார் என்றார்களே ஏன்? அவருடைய எதிரிகள் கூட அவரைப் பெரியார் என்றே அழைத்தார்கள்! சிறுவன் ஒருவன் பெரியாரைச் சந்திக்கச் சென்றால் கூட எழுந்து நின்று வரவேற்பாராம். இப்படி எல்லோரையும் மதிப்பதிலும், மற்ற செயல்களிலும் எல்லோரையும் விட அவர் பெரியாராக இருந்ததால்தான்.

மற்றவர்கள் எப்படி உங்களை மதிக்க வேண்டும். மரியாதை குன்றாமல் அழைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றீர்களோ அப்படியே மற்றவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். குறிப்பாக இன்சொல்லால் அழைக்க வேண்டும். இன்னாத சொற்களை, கடுஞ்சொற்களை, பேசுவது நம் வளர்ச்சிக்கு தடையாகும். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று” என்றார் திருவள்ளுவர்.

குறிப்பாக நமக்குக் கீழ் பணியாற்றுகிறவர்களை மரியாதையாக அழைப்பது பல நேரங்களில் விரைவாக பணிகளை முடிக்க உதவும். இனிய சொல் வேலையை முடித்து வைக்கும் சக்தி வாய்ந்தது. இந்த இன்சொற்கள் அலுவலகத்தில் பயன்பட்டால் அலுவலகப்பணிகள் விரைவாக முடியும். சிறந்த நிர்வாகி என்ற பெயர் பெற உதவிபுரியும். இல்லறத்தில் இன்சொல் அமைதியையும், பாசத்தையும் நிலைநிறுத்தி எப்போதும் மகிழ்ச்சி ததும்பச் செய்யும்.

ஒரு சில குடும்பங்களில் சிறு குழந்தைகளைக் கூட வாங்க போங்க என்று மரியாதையுடன் அழைப்பதையும், குழந்தைகளும் பெரியவர்களை மரியாதை குறையாமல் விளிப்பதையும் காணலாம். ஆனால் சில குடும்பங்களில் சிறுவர்கள்கூட வயதில் மூத்த அக்காவை வாடி போடி என்று அழைப்பதையும், அம்மாவை வா போ என்று ஒருமையில் பேசுவதையும் காண்கிறோம். இது எதைக் காட்டுகிறது என்றால் அந்தக் குடும்பத்தின் தரத்தையும் இங்கு இன்னும் பண்பாடு செழிக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது.

இனிய சொற்களைப் பேசுவதால் மனித உறவுகள் வலிவடையும். நம்மைப்பற்றிமற்றவர்கள் உயர்வாக மதிப்பீடு செய்வர். மன இடைவெளி குறைந்துநெருக்கம் அதிகரிக்கும். இறுக்கும் குறையும். எண்ணிய காரியம் நிறைவேறும். நண்பர்கள் சுற்றம் விரிவடையும். எதிரிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, ஏய், யோ, டேய், வாடா, போடா என்று மரியாதை குறைவான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள். தம்பி, அண்ணா, ஐயா, வாங்க, போங்க, ஏங்க போன்ற மரியாதை கலந்த சொற்களைப் பயன்படுத்தினால் நல்லது அல்லது அவர்களின் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்.

நான் தரும்புரி மாவட்டம், மெனசி கிராமத்துப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சென்னை வைணவக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தேன். (அப்போது + 2 இல்லை). பள்ளியில் தமிழ் பயிற்று மொழி ஆதலால் கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஆங்கிலத்தில் படிப்பதும், புரிந்து கொள்வதும் சிரம்மாக இருந்தது. அந்தக் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக இருந்த சி.ஜே. இராமகிருஷ்ணன் அவர்கள் தனி வகுப்பு நடத்துகிறான் என்று அறிந்து அவரது இல்லம் சென்றேன். சென்னை ஜார்ஜ் டவுனில் அவரது வீடு இருந்தது. அவர் நடத்தும் தனி வகுப்பில் என்னைச் சேர்த்துக் கொள்ளவேண்டினேன். ஒரு வாரம் கழித்து வந்து பார்க்கச்சொன்னார். அப்போது அவரிடம் மூன்று மாணவர்கள் படித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் மூவரும் சென்னைச் சேர்ந்தவர்கள். கான்வெண்ட் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர்களுக்கு தனிவகுப்பு தொடங்கி விட்டதால் என்னை இடையில் சேர்த்துக்கொள்ள தயங்கினார்.

ஒருவாரம் கழித்து பேராசிரியரைச் சந்திக்கச் சென்றேன். என்னையும் சேர்த்துக்கொண்டார். ஆசிரியருக்கு உரிய அத்தனை பண்புகளும் அவரிடம் உண்டு. புதுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். பேராசிரியரின் தந்தை (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி) இயற்கை எய்தியது அறிந்து அவரது இல்லம் சென்றேன். அப்போதுதான் சொன்னார். “அப்பா சொன்னதால் தான் உன்னை தனிவகுப்பில் சேர்த்துக்கொண்டேன்” என்றார். நீ முதன்முதலில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது இரண்டு கைகளையும் கூப்பி மரியாதையுடன் வணக்கம் சொன்னது அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மதியழகன் கிராமத்துப் பையன், இராமகிருஷணா அவனை சேர்த்துக்கொள் என்றார். இல்லை என்றால் தனிவகுப்பில் உன்னை சேர்த்திருக்கமாட்டேன் என்றார்.

அவரிடம் தனிவகுப்பு படித்த நால்வரின் நான் ஒருவன்தான் பின்னாளில் தொழிற்கல்லூரியில் சேரும் அளவுக்கு மதிப்பெண் பெற்றேன். அது அவருக்கும் பெருமை. இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இருகரம் கூப்பி வணக்கம் என்று மரியாதை செலுத்திய பாங்கு என் உயர்வுக்கு உரிய வழியாக இருந்தது என்றால் மிகையன்று. சொல்லில் உண்மை கலந்து இனிமையும், செயலில் மரியாதையும் இருந்தால் அது உயர்வுக்கு உதவியாக எப்போதும் துணையிருக்கும்.


Share
 

1 Comment

  1. S. Narayanan says:

    1999ல் இந்த பதிவை சமர்ப்பித்துள்ளீர்கள். இதுவரை யாரும் கருத்து தெரிவிக்காதது வியப்பாக உள்ளது.

    “அப்பா சொன்னதால் தான் உன்னை தனிவகுப்பில் சேர்த்துக்கொண்டேன்” என்றார். நீ முதன்முதலில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது இரண்டு கைகளையும் கூப்பி மரியாதையுடன் வணக்கம் சொன்னது அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

    மேற்படி பதிவு தங்கள் ஆசிரியரின் அப்பாவை மட்டுல்ல. என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது. என்னை மேருகேற்றகொள்வதற்கான அருமையான பதிவு.

    நன்றி.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்