Home » Cover Story » நம்பிக்கையும் நானும்..

 
நம்பிக்கையும் நானும்..


பாலகுமாரன்
Author:

இந்த இதழில் எழுத்தாளர் பாலகுமாரன் பேசுகிறார்.

எழுத்துலகில், தனித்தன்மை மூலம் மட்டுமே தனியிடத்தைப் பிடிக்க இயலும் என்பதை நிரூபித்திருக்கிறர் திரு. பாலகுமாரன் அவர்கள். வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன என்பதைத் தானே முடிவு செய்யும் ஆளுமை மிக்கவர். சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக் கொண்டிருக்கின்றனர். தன் ஆரம்பகால வாழ்க்கை பற்றி ஒளிவு மறைவின்றி பிரகடனம் செய்துகொண்ட தன்னம்பிக்கை குறிப்பிடத்தக்கது. தோல்விகளை உரமாக்கிக்கொண்டு உயர வளர்ந்திருக்கும் இந்த நட்சத்திர எழுத்தாளரை, தன்னம்பிக்கை இதழுக்காக பேட்டி கண்டோம்.

இளைமைக்காலத் தவறுகள், தோல்விகள், அவமானங்கள் பற்றியெல்லாம் முன்கதைச் சுருக்கம் – என்கிற உங்கள் சுயசரிதையிலும், சில நாவல்களிலும் மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். அவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் சமுதாயத்திற்கு நீங்கள் உணர்த்த விரும்புவது என்ன?

இந்த உலகத்தில் உதைபடாதவன் என்று எவனுமில்லை. தோல்விகள், காயங்கள், அவமானங்கள் எல்லாம், எல்லோருக்கும் வரும். எனக்கும், அந்தத் தோல்விகள் அவமானங்களால் பெரிய பெரிய காயங்கள் எல்லாம் ஏற்பட்டன. எத்தனை பெரிய பெரிய காயங்கள் எல்லாம் ஏற்பட்டன. எத்தனை பெரிய காயமென்றாலும், அதனைக் காலம் ஆற்றும், “ஆஹா” என்று முதல் தோன்றுகிற பிரச்னை, இரண்டு நாட்களில் சாதாரணமாகிவிடுகிறது. எனக்குப் பின்னால் இத்தனை தோல்விகள் இருக்கின்றன என்று வெளிப்படப்பேசுதுத என் வாசகனுக்கு உரமூட்டுகிறது. வாழ்க்கையை எதிர்கொள்ள அவனுக்கு வலிமை தருகிறது.

எனது நேற்யை சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். போனவாரத்துத் துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த வலியும் வேதனையும் புதன்கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்தப் புரிதல் வந்துவிட்டால் சோர்ந்து போகாமல் தனது கடமையைத் தொடர்ந்து கொண்டிருப்பான். என் கடந்த காலப் பதிவுகள் மூலம் நான் தர விரும்புகிற நம்பிக்கை இதுதான்.

உங்கள் காயங்கள் மற்றும் அவமானங்களிலிருந்தெல்லாம் நீங்கள் எவ்வாறு மீண்டு வந்தீர்கள்?

முதலில், என் செயல்கள் பற்றியெல்லாம் நான் மற்றவர்களிடம் அபிப்ராயம் கேட்டதில்லை. என் செயல்களுக்கு நான் பொறுப்பு. அவற்றின் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்றவர்களின் அபிப்ராயங்களும் ஆலோசனைகளும் என்னை உயர்த்திவிடாது. தாழ்த்தியும் விடாது.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் த்ததம்
கருமமே கட்டளைக் கல்”

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

அதுமட்டுமில்லாமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று என் உள்ளுணர்வு எதைச்சொல்லுகிறதோ அதையே செய்திருக்கிறேன். அது பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கிறது.

உள்ளுணர்வு உணர்த்துகிற விசயம் சரியாக இருக்கும் என்கிறீர்கள். உள்ளுணர்வை வளர்த்துக்கொள்வதற்கென்று ஏதேனும் வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?

உள்ளுணர்வு என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய விஷயமல்ல. அமைதியாக இருத்தல். தியானம், போன்ற சில நல்ல இயல்புகள் அதற்குத் தேவை அதிலும் சரியான வழிகாட்டுதல், ஆன்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிற சத்சங்கம் போன்றவை யெல்லாம் அமைந்துள்ளதால்தான் அது சாத்தியம். ஆன்மீகத்தேடல் உள்ளவனுக்கு இவையெல்லாம் கிட்டும்.

ஆன்மீகத் தேடல் தேவை என்கிறீர்கள். தன்னை வேறொரு சக்தியிடம் ஒப்படத்துவிட்டால், அது பார்த்துக்கொள்ளும் என்கிற உணர்வு வந்துவிட்டால் உழைப்பு குறையும் என்றும் சிலர் கருதுகிறார்கள். தன்னம்பிக்க வளர ஆன்மீகம் துணை செய்யுமா? இடையூறு செய்யுமா?

நம்மை யாரோ பார்த்துக் கொள்ளுவார்கள் என்கிற உணர்வு ஏற்படுவதென்பது கவிழ்ந்து படுத்துக்கொள்வதற்காக அல்ல. சொல்லப்போனால், அந்த உணர்வு உற்சாகம் கொடுக்கும். சுறுசுறுப்பாய் இருக்கத் துணை புரியும். வாழ்க்கையை வளமாக்கும். தன்னை, தன்னினும் பெரிய சக்தியிடம் ஒப்படைப்பதற்குப் பெயர் அச்சமல்ல. அதற்குப் பெரிய துணிச்சல் வேண்டும்.

சமூக நாவல்களையே அதிகம் எழுதி வந்த நீங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஆன்மீக விசயங்கள் குறித்து எழுத்த் தொடங்கினீர்கள். அதுவும், பொழுது போக்கிற்கு என்று கருதப்படும் மாத நாவல்களில் மிகவும் கனமான விசயங்களை எழுதி வெற்றியும் பெற்றுள்ளீர்கள். அதை இந்த அளவு வெற்றி பெறும் என்று தெரிந்து எழுதினீர்களா? அல்லது பரிசோதனையாக மேற்கொண்டீர்களா?

நீண்ட காலமாக எழுதி வருகிறவன் என்கிற முறையில் நான் செய்வதெல்லாம் இதுதான். என் வாசகனுக்கு என்ன தேவை இருக்கிறது. எது சொல்லப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறேன். அதை எழுதும்போது மிக உண்மையாக எழுதுகிறேன். சமூகம் சார்ந்த நாவல்கள் எழுதும்போதும அப்படித்தான். எந்த ஒரு செயலையும் உண்மையாக செய்கிறபோது அது உரியமிராயதையைப் பெறுகிறது. இந்தத் தலைமுறைக்கு உண்மையான ஆன்மீகம் பற்றிய வழிகாட்டுதல் தேவை என்பதை உணர்கிறேன். மிகுந்த சிரத்தையோடு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை, வாழ்க்கை பற்றிய தெளிவு ஏற்படுவதற்காக எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் சிலருக்கு, அந்த எழுத்துக்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று அறிகிற ஆர்வம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறதல்லவா?

எனது நாவல்களே எல்லாமே வாழ்க்கையிலிருந்து வருபவைதான் – வாழ்க்கை என்றால், என்னைப் பற்றியும், என்னைச் சுற்றியுள்ள மனதர்களைப் பற்றியும் எழுதுவதுதான் சாத்தியம். மனிதர்கள்தானே வாழ்க்கை. குரங்கை வைத்தாத கதை எழுத முடியும்? எழுத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதை விட்டு விட்டு அவை யாரைச் சொல்கின்றன என்பது நோக்கி எந்த வாசகராவது நகர்வார் என்றால் அவருக்குப் பக்குவம் போதவில்லை என்பது அர்த்தம். மனிதர்களின் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாமே, தவிர, அவர்கள் யார் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடுவதுத அர்த்தமில்லாத வேலை.

இன்று இளைஞர்கள் அறிவு ரீதியக பலமாக இருக்கிறார்கள. மனரீதியில்மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். நட்பு முறிவு,, காதல்தோல்வி போன்றவற்றில் உடைந்துபோய் விடுகிறார்கள். இவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதுபோன்ற தோல்விகள் நிறைய ஏற்பட வேண்டும் என்கிறேன். பலமாக அடிபட வேண்டும். காதல பிரிந்து போவாள். நண்பர்கள் புறம் பேசுவார்கள். எதிரிகள் உருவாகி அவர்களால் அவமானப்பட நேரிடும். இயலாமை தரும் தோல்விகள் நொறுங்கிப் போக வைக்கும். இப்படி வரிசையாக அடிவிழுந்து கொண்டே இருக்கிறபோது ஏதாவது ஒரு இடத்தில் உட்காருவோம். உட்கார்ந்து யோசிப்போம். ஏன் இப்படி நிகழ்கறது என்று யோசிக்க யோசிக்க, தெளிவு பிறக்கும். தெளிவு, நமது செய்கைகளைத் தீர்மானிக்கும். இனிமேல் விழாதபடிக்கு எழமுடியும். நம்மை நாம் இனம் காணுவதற்கு நம் தோல்விகள் நமக்கு உதவியாக இருக்கின்றன. எனவே தோல்விகள், துரோகங்கள் வரட்டும், அவை நம்மை வலுப்படுத்தும்.

இன்று தன்னம்பிக்கை தருகிற நிறைய நூல்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து மொழிபெயர்க்கப்படுவதால், தன்னம்பிக்ககூட இறக்குமதிச் சரக்காகிறது என்கிற முணுமுணுப்பு இருக்கிறது… இதுபற்றி…

தன்னம்பிக்கை என்பதே ஒரு நல்ல விஷயம். அது எங்கிருந்து வந்தால் என்ன? நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளலாம். சிலருக்கு இராமகிருஷண பரமஹம்சர் சொல்வது பிடிக்கும். சிலருக்கு காப்மேயர் சொன்னால் பிடிக்கும். சொல்லப்படுகிற விஷயம்தான் முக்கியம்.

காந்தியடிகள் ‘My life is my message” என்று தனது வாழ்க்கையையே செய்தியாகத்த தந்தார். அப்படி நீங்களும் சொல்ல இயலும் என்று கருதுகிறீர்களா?

கண்டிப்பாக சொல்லமுடியும். வாழ்க்கையில் ரொம்பக் கீழேயிருந்து நான் மேலே வந்தவன். அப்படியானால் என் வாழ்க்கையிலிருந்து செய்தி எடுத்துக் கொள்ள முடியும். என் வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்களும் உண்டு. கெட்ட சம்பவங்களும் உண்டு. இரண்டிலிருந்து அடுத்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இயலும்.

******

தம்பி…. என் அடுத்த தலைமுறையே! நான் தவறு செய்தேனடா, கபடம் செய்தேன். வேதனைப்பட்டேன். என் தவறு என்னைக் கொல்ல, மெல்ல மெல்ல மீண்டேன். ஒரு வேலை நீ தவறு செய்திருப்பின் தற்கொலைக்குப் போகாதே. வா.. வெளியே வா. மனசு உரம்கொள். இன்று என் வாழ்க்கை செம்மையாயிற்று. உன்னுடையதும் ஆகும். மீண்டும் நிலைக்கு வா. நான் வர முடிந்தது. உன்னாலும் முடியும்.

– ‘முன் கதைச் சுருக்கம்’ நூலில் பாலகுமாரன்

அற்பமான தோல்விகளால் வீரன் துவண்டு விடுவதில்லை. அறிந்துகொள்ளத் தோல்விகளே துணை செய்கின்றன. தோல்வியை ஏற்றுக்கொள். அவமானம் அருந்து, துக்கம் விழுங்கி ஜீரணம் செய்.

– ‘இனிது இனிது காதல் இனது” நூலில் பாலகுமாரன்

புயல் வந்தபோது புயலோடு வாழுங்கள், புயலற்றபோது அமைதியை அனுபவியுங்கள். புயலோடு உண்டான போராட்டமே வாழ்க்கை என்றோ, அமைதியே உலகமென்றோ கனவு காணாதீர்கள்.

– ‘இரும்புக் குதிரைகள்’ நாவலில் பாலகுமாரன்

 

1 Comment

  1. sridhar says:

    Very useful

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்