Home » Articles » குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்

 
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல.செ.கந்தசாமி

நாம் அடைய விரும்பும் குறிக்கோளைப்பாகுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையில் அடைய வேண்டியவை இவை இவை என்பவை எல்லை வகுத்துக்கொள்ளப்பட்டது என்றாலும் அதை அடைவதில் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். அண்மையில் செய்ய வேண்டியதைக் குறுகிய காலக்குறிக்கோள் என்றும் ஆண்டுக்கணக்கில் செய்து முடிக்க வேண்டியதை நீண்ட கால்குறிக்கோள் என்றும் பாகுபடுத்திக் கொள்ளலாம்.  செயல்படுத்துவதற்கு ஏற்ப நமது குறிக்கோளை நாள், வாரம், மாதம், ஆண்டு, ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

தலைவிதி என்பதுதான் முன்னேற்றத்தின் முதல் தடை

உடனே சிலர், இப்படித் திட்டமிட்டபடியா எல்லாம் நடக்கிறது?  இதெல்லாம் வீண்வேலை என்பார்கள். இன்னும் சிலர், எல்லாம் அவரவர் தலைவிதி என்பார்கள். இப்படித் தங்கள்மீது நம்பிக்கை இல்லாதவர்களும் மூடநம்பிக்கையில் அழுத்தமான பற்றுக் கொண்டவர்களும் முன்னேற்றம் பற்றிக் கருத வேண்டியது இல்லை.  முன்னேறத் துடிப்பவர்கள் இவர்களின் அறிவுரையைக் கேட்காமல் இருப்பதுதான் நல்லது.

நன்றாகப் படித்து இருக்கிறோம். நூறு மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுகிறோம். ஆனால் எழுபதும் எண்பதும்தான் மதிப்பெண்கள் கிடைக்கின்றன.  இதற்குத் தலைவிதியா காரணம்?  குறிப்பிட்ட நேரத்தில் படித்ததை நினைவுக்கு கொணரும்  ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. இப்படி ஆராய்ந்தால் உண்மையான காரணம் விளங்கும். அதனால் முன்னேறத் துடிக்கின்ற இதயங்களுக்குத் தலைவிதி என்ற பேச்சுதான் முதல் எதிரி. பெரும்பகை.

காரணம் இது என்று அறிய முடியாதவைகளுக்கு நாம் வைத்த பெயர்தான் தலைவிதி.  இன்று அறிவியல் பல்வேறு தலைவிதிகளை உடைத்தெறிந்து இருக்கிறது.  இன்னும் காரணம் காணமுடியாதவைகளும் இருக்கின்றன. அதற்கேற்ப இன்னும் அறிவியல் வளர வேண்டும் என்பதுதான் உண்மையான காரணமே தவிர, தலைவிதி என்று ஒன்று இல்லை என்பதைத் தெளிந்து உணர வேண்டும். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெற்று வேதாந்தம் பேசுபவர்களை பற்றிக் கவலைப்பட்டு பயனில்லை.

நாள், வாரம், மாதம்

அதனால் அவரவர் தங்கள் குறிக்கோளைக் கட்டங் கட்டமாகப் பிரித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.  நமது தலைமையான குறிக்கோள்(Chief aim) என்பது நமது உயிர் மூச்சுப்போல, ஒவ்வொரு செயலிலும் அது இழையோடிக் கொண்டிருக்க வேண்டும்.  ஒவ்வொரு செயலும் தலைமைக் குறிக்கோளை அடைய படிகளாக அமைய வேண்டும். அன்றாடக் கடமைகளைச் சரியாக செய்கின்ற ஒருவர், தன் தலைமைக் குறிக்கோளைக் குறிப்பிட்ட காலத்தில் உறுதியாக அடைந்தே தீருவார். அதேபோல் இந்த ஏழு நாட்களில் இதைச் செய்து முடிப்பது, இந்த மாதத்தில் இவ்விவற்றை முடிப்பது என்று வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு திட்டம் வகுத்துக் கொள்ளாதவர்கள் விரைந்து வெற்றிபெற முடியாது.

ஆண்டு

இந்த ஆண்டில், நமது தொழிலில் இவ்வளவு வருவாய் பெற வேண்டும், தோட்டத்தில் இன்னின்ன மராமத்துக்களைச் செய்ய வேண்டும். கிணறுவெட்டி நீர்வளத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் பெண்ணுக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும். புதிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று அவரவர் ஆண்டுத் தொடக்கத்தில் திட்டமிட்டுப் பாகுபடுத்திக்கொள்ள வேண்டும். ஓரிரு மாதங்கள் முடிந்த பிறகு, நமது திட்டங்களைப் புரட்டினால், நாம் செய்த செயல்களில் வேகம் போதும், போதாது என்ற தெளிவு கிடைக்கும். இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன.  அதற்குள் இவற்றை முடித்துவிட வேண்டும் என்ற கூடுதல்வேகம் உண்டாகும். சிலரைப் பாருங்கள்.  எப்போதும் பார்த்ததலம் வேகமாக நடந்து கொண்டே இருப்பார்கள். தாங்கள் எடுத்த வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பேசினால்கூட அளவாகப் பேசிவிட்டுக் காரியத்தைக் கவனிப்பார்கள்.  நாம்?

ஐந்தாண்டு, பத்தாண்டு

ஐந்தாண்டு, பத்தாண்டு இருப்பதாண்டு என்பவை மனித வாழ்வில் மிகப் பெரிய காலகட்டம்.  25ல்தனது குறிக்கோளை மேற்கொண்டவர் தனது 50 வது வயதில் சிலசாதனைகளைச் செய்திருக்க வேண்டாமா?  ஓய்வு பெறுவதற்கு முன் தன் குழந்தைகட்கு திருமணத்தை முடித்துவிட வேண்டாமா?  ஓய்வுபெறும் வயதில், என் கடைசிப் பெண்ணுக்கு இப்போதான் ஏழு வயதாகிறது என்றால் எப்படி? 55 வயதிற்குப் பிறகாவது அடிப்படைத் தேவைகளுக்காக அலையாத ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டாமா? அதற்கும் 25 வயதிலிருந்தே திட்டமிட்டுச் செயல்பட்டால்தானே முடியும்?

அறுபதுக்குப் பின்

வயதானவர்களை இளந்தலைமுறையினர் பெரும்பாலும் பாரமாகக் கருதுகின்றனர். அதனால் ஒவ்வொரு தந்தையும் தாயும் அறுபதுக்குப்பின் தன் மக்களின் கையை எதிர்பார்க்காமல் தன் வாழ்க்கையில் ஈட்டிய செல்வத்திலிருந்துவரும் வருவாயைக் கொண்டு இறுதிக்காலம் வரை வாழும் வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாவிடின், அவர்களின் வாழ்க்கை தோல்வியாகவே முடியும் என்பதை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். பலருடைய வாழ்க்கை நமக்குக் காட்டிவரும் உண்மைகளைப் பிடிப்பினைகளாகக் கொள்ளவேண்டும்.  பெற்றோர்களைக் கவனிப்பது பிள்ளைகளின் தலையாய கடமைதான் என்றாலும், முதுமைக் காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கிறார்கள் என்ற சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது. இது இன்றைய இளைஞர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகும்.

பொருளாதாரம்

புகழ் பூத்த வாழ்க்கையாகட்டும், தொண்டு நிறைந்த தியாக வாழ்க்கையாகட்டும், அறிவார்ந்த சான்றாண்மை வாழ்க்கையாகட்டும் எல்லாம் இருந்தும் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படைத் தேவைகளையாவது நிறைவு செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரம் இல்லை எனில் அந்த வாழ்க்கையில் பயனே இல்லை. எந்த ஒருவர் வாழ்க்கையும் பிறர் பார்த்துப் பாவம் என்று அனுதாபப்படும் நிலையில் அமைந்து விடக்கூடாது. பிறரிடம் கையேந்தி நிற்பதோ, பிறரை எதிர்பார்த்து வாழ்வதோ சிறந்த வாழ்க்கையாகாது.  பொருளுக்கு அடிமையாகாமல், பொருளை ஆளும் நிலைதான் வெற்றியான வாழ்க்கையாகும்.

கவனத்திற்கொள்ள வேண்டிய சில கருத்துக்கள்

1. ஒருவர் தமது வாழ்க்கை முழுவதையும் இப்படிக் கட்டங்கட்டமாகப் பிரித்துச் செயல் திட்டம் வகுத்துக்கொண்டால் 5 ஆண்டுகளில் முடித்தாலும் பரவாயில்லை.  அடுத்த ஐந்தாண்டுப் பணியை மூன்று ஆண்டுகளில் முடித்து விடவும் கூடும்.  நீண்டகால நோக்கில், திட்டங்கள் எல்லாம் வெற்றியடைந்தே தீரும்.  திட்டங்கள் வெற்றி பெறாமல் தோல்வியே நேர்ந்தாலும் கவலையுற வேண்டுவதில்லை. அவைகள் எல்லாம் நமக்கு அனுபவங்கள். படிப்பினைகள், அடுத்த கட்டம் வெற்றியாக விளங்குவதற்குப்பயிற்சி என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

2. கால வரையறை செய்யப்பட்ட திட்டங்களை அவ்வப்போது, முடிந்தது எவ்வளவு?  முடிக்க வேண்டியது எவ்வளவு என்பதை நமக்கு நாமே கணித்துப் (Self Review) பார்த்துக் கொள்ளவேண்டும். உரிய காலத்தில் முடியாமைக்குரிய காரணங்களைக் கண்டு அந்தக் குறைகளைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

குறிக்கோளை நோக்கிச் செல்கின்றவர்கள், தங்களை, தங்கள் குடும்பத்தை, தங்கள் பணிச்சார்ந்தவைகளை, ஒரு மனிதன் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய இன்றியமையாக் கடமைகளைச் செய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வேண்டாதவற்றில் எல்லாம் தலையிட்டுத் தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடக்கூடாது.

நூறாண்டு வாழ்க்கைத் திட்டம் ( Master Plan)

உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை வரையறை செய்யுங்கள். 100 ஆண்டு வாழ்வதாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.  உடல் வளத்திற்கு 80க்குப் பிறகு முழுழ ஓய்வு என்று கொள்ளுங்கள்.  இப்போது உங்கள் வயது? நீங்கள் இன்னும் குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்?  உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள்?  உங்கள் தோட்டத்தில் தொழிற்சாலையில், அலுவலகத்தில் நீங்கள் ஆற்ற வேண்டியபணிகள், அடைய வேண்டிய வெற்றிகள், பெறவேண்டிய பேறுகள், செய்ய வேண்டிய சாதனைகள் ஆகியவற்றிக்குக் கால வரையறை கொடுத்து உங்கள் செயலை சிறுக அடைவதில், அடையும்போது ஏற்படும் இன்ப துன்பங்களில்தான் வாழ்க்கையின் சுகமே அடங்கி இருக்கின்றது.  இவற்றை எல்லாம் ஒரு சுமையாகக் கருதாமல், சவாலாக (Challenge) சுவையாக (Pleasure) எதுவந்தாலும் எளிதாக (take it easy) ஏற்றுக் கொள்ளுங்கள்.  இதைவிட வெற்றியான வாழ்க்கை எந்தச் சொர்க்கத்திலும் இல்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்