Home » Articles » நினைவில் நிற்பவை

 
நினைவில் நிற்பவை


இராமசாமி K.K
Author:

ஷார்ப்பான சாதனைகள்

– K.K. இராமசாமி

நன்மதிப்பின் சக்தி

(Power of Goodwill)

1964ம் ஆண்டு மே மாதம் மாலை நேரம் காளப்பட்டி கிராமத்திற்குள் கப்பல் போன்ற ஒரு பிளைமௌவுத் கார் வருகிறது. கிராம மக்கள் ஆச்சரியத்துடன் அந்தக் காரைப் பார்க்கிறார்கள்.  அந்தக் கார் நேராக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.எல். நாராயணசாமி நாயுடு அவர்கள் வீட்டிற்கு செல்கிறது.  அதிலிருந்து இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் இறங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் வெளியே வந்து நான் வசித்து வந்த “கோமுட்டி தோட்டத்திற்கு” வந்தனர்.  அவர்கள் திருப்பூரிலிருந்து என்னை மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.  எங்களிடம் முன்பாக அறிவிக்கவில்லை, நான் அப்போது தான் PSG யில் வேலை முடித்து வீடு திரும்பியிருந்தேன்.  என்னிடமும் எங்கள் குடும்பத்துடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, திரும்ப திரு. நாராயணசாமி நாயுடுவிடம் சென்று எங்கள் குடும்பத்தை பற்றி மேலும் விபரங்கள் தெரிந்துகொண்டு சென்றுவிட்டனர். வந்தவர்கள் என் எதிர்கால மனைவியின் மாமா, அத்தை முதலியோர். பெண்ணின் தந்தை திரு. S.R. சுப்ரமணியம் அவர்கள் அப்போது திருப்பூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்லின் மானேஜிங் ஏஜெண்ட், அவருக்கு ஒரு பெண். ஒரு பிள்ளை.  எங்கள் குடும்பத்துடன் ஒப்பிடும்போது மிக வசதியான குடும்பம்.  அவர்கள் திருப்பூர் சென்று என் வருங்கால மாமனார், மாமியாரிடம் விபரம் கூறியுள்ளனர்.  போக்குவரத்து வசதி இல்லாத கிராம்ம்,கழிபறை இல்லாத பழைய வீடு, கூட்டுக் குடும்பம், ஏழ்மையான பொருளாதார நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த இடம் வேண்டாம் என்று தங்கள் கருத்தைக் கூறிவிட்டனர்.  அப்படிச் சொல்லும்போது என்னைப்பற்றி திரு. நாராயணசாமி நாயுடு அவர்கள்  கூறிய ஒரு செய்தியையும் கூறினார்களாம்.  “உங்களுக்கு இதைவிடப் பெரிய இடங்களில் சம்பந்தம் கிடைக்கலாம். ஆனால், இதுபோன்ற மாப்பிள்ளை பையன் கிடைக்கமாட்டான்!”.  மற்ற எல்லா தடைகளையும்,  எனக்கு பெண்  கொடுக்க அவர்கள் முடிவு செய்த்தற்கு திரு. நாயாரணசாமி நாயுடு அவர்கள் என்னைப்பற்றி கூறிய ஒரு கருத்து தான் என்று பின்னால் என் மாமனார் கூறினார்.  நான்பெற்றிருந்த நன் மதிப்பு எனக்கு ஒரு நல்ல மனைவியைக் கொடுத்தது.  சென்னையிலிருந்து இயந்திரம் விற்கும் ஒருவர் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். இயந்திரத்தின் விலைபேசி முடிந்த பின் பணம் கொடுக்கும்முறை (Payment Terms) என்ன என்று கேட்டேன். “அதை உங்கள் முடிவிற்கே  விட்டு விடுகிறேன்” என்றார்.  எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டேன்.  இதுவரை கோவையில் உள்ள தொழிற்சாலைகளுகு இயந்திரம் விற்ற வாராக் கடன் ஏதும் இல்லை. ஒருவர்கூட என்னை ஏமாற்றவில்லை.  ஆகவே தான் நான் மேற்கண்டவாறு கூறினேன்ம என்றார். கோவை தொழிலதிபர்கள் பெற்றுள்ள நன்மதிப்பு நம் பலருக்கும் பெருமை தருகிறது.

மும்பையில் A to Z என்ற இரும்புக்கம்பிகள் விற்கும் நிறுவனம் ஒன்று உளது. அவர்கள் அலாய்(Alloy Steels) இரும்புக்கம்பிகளும் விற்கிறார்கள்.  அதில் குறிப்பிட்ட கிரேடு ஆர்டர் செய்யும்போது, மாறாமல் அதே கிரேடு அனுப்ப வேண்டும். பல வியாபாரிகள் நாம் ஆர்டர் கொடுக்கும் கிரேடுக்கு பணம் வாங்கிக்கொடு விலை குறைவான கிரேடை அனுப்பி விடுவார்கள். அனுபவத்தின் பேரில் A to Z உடன் தொடர்ந்து வியாபாரம் செய்து வந்தோம். அவர்கள் கம்பிகளை எங்களுக்கு கடனில் அனுப்பி வைத்தார்கள்.  நாங்களும் குறிப்பிட்ட காலத்தில் பணம் அனுப்பி வந்தோம்.  ஒரு கட்டத்தில் அவர்கள் தாமாக வந்து அவர்களுடைய பிரதிநிதியாக (Stockist) கோவையில் எங்களை நிமித்தார்கள்.  அவர்களுடைய இந்த முடிவிற்கு முக்கிய காரணம் நாங்கள் தேடிக்கொண்ட நன்மதிப்பாகும்.

கோவையில் பம்பு, மோட்டார், ஸ்டீல் பர்னிச்சர், வெட்கிரைண்டர், நூற்பாலை, இயந்திரங்கள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன.  விற்பனையில் பாதிக்கு மேல் கடனுக்கு விற்று வசூல் செய்யும் முறை பின்பற்றப்படுகிறது. இன்னும் சிலர் பொருட்களை அனுப்பி விட்டு, பில்லையும், வாகன ரசீதையும் வங்கிகள் மூலம் அனுப்பி பணம் பெருகின்றனர். நன்மதிப்புப் பெற்றுள்ள லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஷார்ப் போன்ற கம்பெனிகள் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு பொருள்களை அனுப்பி வைக்கின்றன.

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் வளர்ச்சி, நன் மதிப்பின் சக்திக்கு ஒரு நல்ல உதாரணம்.  சென்னையில் நல்ல பெயர் வாங்கிக்கொண்ட அப்பல்லோ மருத்துவமனை, அடுத்து ஹதாராபாத்திலும், டெல்லியிலும் மருத்துவமனைகள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.  தற்போது துபாய் நாட்டிலும் ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.

தமிழ்நாட்டில் நன்மதிப்பால் வளர்ந்த பல நிறுவனங்களில் முதலில் நம் கவனத்தக் கவர்வது TVS என்றால் அவர்கள் அந்தக் காலத்திலிருந்து TVS என்றால் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு நல்ல மதிப்பு வளர்ந்துள்ளது. அவர்கள் ஓட்டும் பேருந்துகள் குறித்த காலத்தில் ஓடும், வழியில் பழுதடைந்து நிற்காது. பயணம் செய்பவர்களை விபத்துக்கள் இன்றி பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்துள்ளது.  இன்றும் பொருள்களை அனுப்பவர்கள் பெரும்பாலும் TVS லாரிகள் மூலமாகவே அனுப்புகின்றனர்.  அவர்கள் வாங்கும் வாடகை சற்று கூடுதல். இருப்பினும் அவர்கள் மூலம் அனுப்பினால் பொருட்கள் சேதமடையாது.  திருட்டுப் போகாது.  குறித்த காலத்தில் போய் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பலர் TVS லாரிகளையே தேர்வு செய்கின்றனர்.

நன்மதிப்பால் வளர்ந்த வியாபாரங்கள் என்ற வரிசையில் கோவை அன்னபூர்ணா உணவகங்கள்.  பெங்களூர் நீலகிரி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், பெங்களூர் நீலகிரி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், பெங்களூர் காமெட் உணவகங்கள், உட்லன்ஸ் குரூப் ஓட்டல்கள், பெங்களூரில் உள்ள MTR உணவகம், தமிழ் நாட்டிலுள்ள நெல்லா லாலா இனிப்புகள், கோவை கிருஷ்ணா இனிப்புகள், மதுரை முணியாண்டி விலாஸ் அசைவ உணவகங்கள், செட்டிநாடு உணவகங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை கோவையில் ரேமாண்ட்ஸ் துணிக்கடைக்கு துணியெடுக்கச் சென்றிருந்தேன்.  அப்போது எங்கள் தொழிற்சாலையில் பணிசெய்யும் தொழிலாளர் ஒருவர் தன் நண்பர்களுடன் அந்தக் கடையில் துணியெடுத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் குற்ற உணர்வுடன் வந்து சார், அடுத்த மாதம் எனக்குத் திருமணம் நிச்சமாகியுள்ளது. மாப்பிள்ளைக்குத் தேவையான உடைகளை ரேமாண்ட்ஸ் கடையில் வாங்கிக்கொள் என்று பெண்வீட்டார் கூறிவிட்டார்கள்.  அதற்காக வந்துள்ளோம் என்று  கூறினார்.  இன்று திருமண உடை என்றால், ரேமாண்ட்ஸ்தான் என்று முடிவாகியுள்ளது.  இது அவர்கள் பெற்றுள்ள நன்மதிப்பு, உலக அளவில் எலக்ரானிக் பொருட்கள் என்றால் சோனி, நேஷனல் பிலிப்ஸ் கம்பெனிகளும், கார் என்றால் மெர்சிடஸ் பென்ஸ், போர்டு, ஹோண்டா, டொயாட்டோ போன்ற கம்பெனிகளும் நன்மதிப்புடன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் டாடா கம்பெனியும், L&T கம்பெனியும் நல்ல நன்மதிப்புடன் வளர்ந்து வரும் கம்பெனிகள் ஆகும்.  நாமும் நம் தொழிலில், வியாபாரத்தில் வளர நன் மதிப்பைச் சம்பாதிப்பது அவசியம்.

தரமான பொருள் உற்பத்தி, நேர்மையான வியாபாரமும் சமுதாய வளர்ச்சிக்கு துணைநிற்பது, நல்ல பணிகளுக்கு பொருள் உதவி செய்வது அன்புடன் பழகுவது, மற்றவர்கள் திறமையை மதிப்பது, குடும்ப விழாக்களில் பங்கேற்பது போன்ற நன்மதிப்பை வளர்க்கும் சில வழிகளாகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !