Home » Articles » நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?

 
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர் இல.செ. கந்தசாமி

அலைகள் ஓய்ந்தபிறகுதான் கடலில் குளிப்பதென்பது முடியாது.  நீந்தத் தெரிந்த பிறகே நீரில் இறங்குவது என்பதும் இயலாது.  வாழ்க்கையும் அப்படித்தான்.  எல்லாம் அமைந்த பிறகே வாழ்வது என்பதோ, அமைதியான சூழ்நிலை ஏற்பட்ட பிறகே வாழ்க்கையைத் தொடங்குவது என்பதோ பெருமாலும் நடைபெறாத ஒன்று.

எந்தச் சூழ்நிலையும் நமக்கு ஏற்ற வகையில் மாற்றிக் அமைத்துக் கொள்வதோ, அல்லது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக்கொள்வதோதான் வெற்றிக்கு வழி.  நாமும் சூழ்நிலையும் இரண்டும் ஒன்றிப்போக வேண்டும்.

ஒரு அறையில் மூவர் தங்கி இருக்கிறோம்.  இருவருக்கு சிறிதாவது வெளிச்சம் இருந்தால்தான் உறக்கம் வரும். ஒருவருக்கு வெளிச்சம் இருந்தால் உறக்கமே வராது. இதற்கு என்ன வழி? வெளிச்சம் இல்லாமல் உங்களால் தூங்க முடியுமா?  என்று மற்ற இருவரையும் கேட்டுப் பாருங்கள்.  முடியாது என்பார்களானால், நீங்கள் வெளிச்சத்தில் தூங்கக் கற்றுக்கொள்ளுங்கள். இவைகள் எல்லாம் பழக்கத்தால் வருபவை.  இந்தச் சிறிய செயலைப் பெரிது படுத்திக் கொண்டிருந்தால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

ஒரு குடும்பத்தில் அம்மா,, அப்பா, தம்பி, தங்கை,, அண்ணன், அண்ணன் மனைவி என்று இருக்கிறார்கள்.  அணனுக்குப் புதிதாகத் திரும்ம் ஆகியுள்ளது.  புதிதாக வந்த பெண் புகுந்த குடும்பத்துப் பழகத்துக்கு வரச் சற்று நாளாகலாம். அதுவரை இவர்கள் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்.  கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லிப் பழக்க வேண்டும்.  மாறாக எங்கள் வீட்டில் நீ இப்படித்தான் செய்ய வேண்டும் என்று மாமியார் அதிகாரம் செய்ய, எங்கள் வீட்டில் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று மருமகள் சொல்ல, ஆரம்பமே சண்டையில் தொடங்கினால் – அங்கு உள்ளவர்கள் வீட்டைவிட்டா ஓடி விட முடியும்?  சூழ்நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது தான். கணவன் தன் மனைவிக்கு நீ வாய்பேசாமல் பொறுமையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அறிவுரை கூறவேண்டியதுதான். அம்மாவிடம் நீதான் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவேண்டியதுதான்.  அடிப்படை உரிமைகளை விட்டுவிடாமல் அவரவர்கள் குணத்திற்கு ஏற்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.  அடிபடையிலேயே யாரும் கெட்டவர்கள் அல்ல.  என்ற எணம் முதலில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் யாராயினும் ஒருவர் சொல்லும் வார்த்தைக்கு வார்த்தை மற்றவர் பதில் சொல்லத் தொடங்கினால் குடும்பம் குடும்பமாக இருக்காது;  குடும்பம் போர்க்களம் ஆகிவிடும். குடும்பத்தில் அமைதி வேண்டுமானால் முதலில் பொறுமை மிகவும் அவசியம். இரண்டாவது வீண் வார்த்தைகள் பேசாமல் இருப்பது பல தொல்லைகளைக் குறைக்கும் அதுதான் முதல் மருந்து.

அண்ணன் தம்பி பாகப்பிரிவினை, யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துத்தான் போகவேண்டும்.  விட்டுக்கொடுப்பது கோழைத்தனம் என்று யாராவது நினைத்தார்களானால் அதுதான் பெருந்தவறு.  உண்மையான தைரியம் உள்ளவர்களால்தான் விட்டுக்கொடுக்கமுடியும். அது  பெரிய வீரம் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

சிலர் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.  ஆனால் மற்றவர்கள் தன்னைக் கேவலமாகவோ, கையாலாகதவர் என்றோ சொல்வார்கள் என்பதற்காக விடாப் பிடியாக இருப்பார்கள். இவர்கள் எல்லாம் தங்களுக்கா வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள்.  இவர்கள் மனதில் ஒருபோதும் அமைதியோ, மன நிறைவோ தோன்றாது.  எந்தச் சூழ்நிலையும் இவர்கட்குக் குறையுடையதாகவே தோன்றும்.  அதனால் விட்டுக்கொடுத்து வாழ்வது என்பது பெருந்தன்மையான செயல் – அது பெருவெற்றி நல்கும்.

விட்டுக் கொடுப்பது என்றவுடன் அடிப்படை கொள்கைகளை அல்ல. நேர்மையை அல்ல.  செய்யாத தவறுகளை ஒத்துக் கொள்வது அல்ல. நமக்கு நேரும் பொருள்மற்றும் இழப்புகளால் ஒரு நன்மை விளையுமானால் நாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கலாம்.  பண்பாட்டுச் சிதைவு நேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அலுவலகத்தில் பல்வேறு தகுதிகளில் பணியாற்றுகின்றவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  இவர்களில் யார் பெரியவர், இவர் சொல்லி நாம் கேட்பதா?  இவருக்காகநாம் எழுந்து நிற்பதா இவருக்கு ஏன் நாம் வணக்கம் சொல்ல வேண்டும் – இப்படிப் பல்வேறு மனக் குழப்பங்கள் – அதனால் அமைதியின்மை. வேலை செய்ய முடியாத சூழ்நிலை – அருகில் உள்ளவர்களை எதிரிகளாக எண்ணுவது, நெற்றிக்க் இருந்தால் ஒருவரை ஒருவர் எரித்தே கொள்வார்கள் – ஏன் இப்படி?

இவர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.  நம் அருகிலும், எதிரிலும் இருப்பவர்களைப் பகைத்துக்கொண்டால் – பார்க்கும்போதெல்லாம் இரத்தம் சூடேறும். நம் உடல்நலம்தான் கெடும். முடிந்தால் திருத்துவோம்.  இல்லாவிடின் நாம் நமது கடமைகளைச் செய்வோம் என்று செயல்பட்டால், இந்த அலுவலகத்தில் நம் தகுதி என்ன, நமது பணி என்ன என்று வரையறுத்துக் கொண்டால், சிக்கல்கள் எழாது.  அவர் செய்யவில்லை.  நாமும் செய்யாமல் இருந்தால் என்ன என்று ஒவ்வொருவரோடும் வேண்டாத செயல்களுக்குத் துணை தேடி ஒப்பிட்டுப் பார்த்தால் நம் வாழ்க்கையே – நம் சூழ்நிலையே கெட்டுவிடும்.  நாம் வெற்றிக்குரியவர்களாக ஆக மாட்டோம். அதனால் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.  பிறர் குறைகளை, தவறுகளை மன்னிக்க, மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகையதோர் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் வாழவே முடியாது.  வேறு இடத்தில் அமைதி யாக வாழலாம் என்று சிலருக்கு வாய்ப்பும் சூழ்நிலையும் அமையுமானால் அங்கு செல்வதில் தவறில்லை.  ஆனால் எங்கு சென்றாலும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற நிலைதான் சிலருக்கு இருக்கும்.  துன்பங்களும், தொல்லைகளும் எங்கும் வரவே செய்யும்.  நாம்தான் குறைத்துக்கொள்ள வேண்டும்.  நம் வாழ்க்கை நம் கையில் இருந்தால் துன்பங்கள் குறைந்துவிடும்.

உங்கள் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள்.  நீங்கள் செய்து கொள்ளும் சிறுசிறு மாற்றங்களால் இருக்கின்ற சூழ்நிலையையே நல்ல சூழ்நிலையாக மாற்றிக்கொள்ள முடியும்.  நல்ல சூழ்நிலையில்தான் புதிய சிந்தனைகள் நல்ல எண்ணங்கள் உருவாகும்.  மனம் சூழ்நிலைகளில் அழுந்திவிடாமல் சூழ்நிலைகள் பருவங்களாக மாறி மனதில் எண்ணங்கள் தோன்ற உறுதுணையாக இருக்கும். பருவகாலத்தில்தான் பயிர் வளரும்.  கோடையில் வளர்ந்ததும் காய்ந்துவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !