Home » Cover Story » '' ஷார்ப்பான '' சாதனைகள்

 
'' ஷார்ப்பான '' சாதனைகள்


இராமசாமி K.K
Author:

நினைவில் நிற்பவை

தொடர் – 5

சார்ப் டூல்ஸ் – தொடர்க்கமும் வளர்ச்சியும்

ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த முதல்படி ஒரு தீவிர ஆர்வம். அதை நடைமுறைப்படுத்த கீழ்க்காணும் படிகளை முடிவு செய்ய வேண்டும்.

1. பெயர் :- அதை எழுதும் முறை

2. தொழில் செய்ய விரும்பும் இடம்

3. தேவைப்படும் கட்டிடம்

4. என்ன பொருள் உற்பத்தி செய்வது

5. உற்பத்தி செய்யத் தேவைப்படும் இயந்திரங்கள்

6. மின்வசதி

7. வேலை தெரிந்த தொழிலாளர்

8. லெட்டர் ஹெட்

9. அறிமுக அட்டை ( Visiting Card )

10. வங்கிக் கணக்கு தொடங்குதல்

11. தேவைப்படும் பணத்தை சேகரித்தல்

12. உரிமையாளர் அல்லது கூட்டாளிகள்

13. விற்பனை வரி அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றில் பதிவு செய்து கொள்வது.

14. பொருள்களை உற்பத்தி செய்தல்

15. உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்தல்

16. உற்பத்தி செய்த பொருளின் உற்பத்திச் செலவு, விற்பனை விலை, இலாபம் ஆகியவைகளைக் கணக்கிடுவது

17. உற்பத்திப் பொருளுக்கான மூலப் பொருள்களை தெரிவு செய்தல்.

18. உற்பத்தி செய்த பொருள்களின் தரத்தை கண்டறிந்து மேம்படுத்துதல்

19. நாம் உற்பத்தி செய்த பொருள்களை உபயோகிப்போரின் கருத்துக்களைத் கண்டறிதல்

20. ISI போன்ற தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறுதல்

21. விற்பனைக்குப் பின் சேவை

22. பொருள்கள் பற்றிய விபரங்களை அச்சிட்டு வெளியிடுவது ( Leaflets )

23. செய்த பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான அட்டைப் பெட்டிகளை வடிவமைத்து வாங்குவது

24. செய்த பொருட்களை அனுப்பி வைக்கத் தேவையான விளம்பரங்கள் செய்தல், பொருட்காட்சிகளில் பங்கு பெறுதல் முதலியன.

25. நம் போட்டியாளரின் நிலை பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளுதல்.

மேலே கண்ட பல படிகளிலும் மிக முக்கயமானது. என்ன பொருள் உற்பத்தி கேட்கும்போது, மக்களுக்குத் தேவையுள்ள லாபம் ஈட்டிக்கூடிய ஒரு பொருளைச் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். கேட்பது எளிது. ஆனால் பதில் சொல்வது சிரமம். ஒரு பொருளைத் தெரிந்தெடுக்க கீழ்க காணும் வழி முறைகளை முயற்சி செய்யலாம்.

1. மூலப் பொருளை அடிப்படையாகக் கொண்ட தொழில் :

கோவையில் ஒரு காலத்தில் பருத்தி பெரும் அளவில் விளைந்தது. ஆகவே பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பருத்தி அறவை ஆலைகளும், நூற்பு ஆலைகளும் தொடங்கப்பட்டன. கரும்பு விளையும் இடங்களில் சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் பகுதியில் முட்டை உற்பத்தி அதிகமாக இருப்பதால் முட்டையை மூலப் பொருளாக வைத்து முட்டை தூள் செய்து ஏற்றுமதி செய்கின்ற ஒரு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. பழங்கள் உற்பத்தியாகும் இடங்களில் பழ ரசம், ஜாம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யலாம். கடற்கரைப் பகுதிகளில் மீன் பதப்படுத்தும் தொழில்கள் தொடங்கலாம். உதகையில் காபி, டீ, போன்றவற்றையும், சேலத்தில் மரவள்ளிக் கிழங்கையும் வைத்துத் தொழில் தொடங்கலாம்.

2. உப தொழில்கள் :

ஒவ்வொரு ஊரிலும் பல பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவை தங்களுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் தாங்களே உற்பத்தி செய்வதில்லை. பலவற்றை சிறுதொழிற்சாலைகளிடமிருந்து வாங்குவது இலாபகரமாக இருக்கும். மாதிரிக்கு நூற்பாலைகளுக்கு வேண்டிய அட்டை கோன்கள். பிளாஸ்டிக்பாபின்கள், பேக்கிங் செய்யத் தேவையான அட்டைப் பெட்டிகள், மரப்பெட்டிகள், இரும்பு வளர்ப்படப்பொருள் முதலியவற்றை சிறுதொழில்கள் உற்பத்தி செய்யலாம் மற்றும் கம்யூட்டர் உதவியுடன் கடையும் இயந்திரங்கள் மூலம் சில உதிரி பாகங்களைச் செய்து கொடுக்கலாம். திருச்சியில் உள்ள BHEL நிறுவனம், பெங்களூரில் உள்ள HMT போன்ற நிறுவனங்கள், தங்களுக்கு வேண்டிய உப பொருட்களைச் செய்து தரிவதற்கென்றே தனிப்பட்ட தொழிற் பேட்டைகளை உருவாக்கியுள்ளன.

சென்னை போன்ற நகரங்களில் கார் லாரி, இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவை டயர், பேட்டரி, இருக்கைகள் போன்ற பலவற்றை சிறு தொழிற்சாலைகளிடமிருந்து செய்து வாங்குகின்றன. ஆகவே பெரிய தொழில்கள் அதிகம் உள்ள நகரங்களில் உபதொழிலை அடிப்படையாக வைத்து தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

3. தொழில் நுட்ப அடிப்படை

பொறியாளர்கள், தொழிலாளர்கள் கிடைப்பாரகள். அதன் அடிப்படையில் தொழிற்சாலைகளைத் தொடங்கலாம். இவற்றிற்கு சிறந்த மாதிரி சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசுத் தொழில், திருப்பூரில் வளர்ந்து வரும் உள்ளாடைத் தொழில், திண்டுக்கல்லில் வளரும் பூட்டு உற்பத்தித் தொழில், கோவையில் வளர்ந்து வரும் மாவு அரைக்கும் இயந்திர உற்பத்தி, பர்னிச்சர் உற்பத்தி, மோட்டார் பம்பு உற்பத்தி, சிறு நூற்பாலைகள் போன்றவை. வாணியம்பாடி போன்ற ஊர்களில் தோல் பதனிடும் தொழில்கள் முதலியன தொழில் நுட்பத்தை வைத்துத் தொடங்கப்படும் தொழில்கள் ஆகும்.

4. ஆராய்ச்சி நிலையங்களின் கண்டுபிடிப்புகள்

நம் மைய அரசு பல இடங்களில் ஆராய்ச்சி நிலையங்களை நிறுவியுள்ளது. CSIR – (Council of Scientific & Industrial Research ) நிறுவனங்கள், மைசூரில் உள்ள உணவு பற்றிய ஆராய்ச்சி நிலையம். காரைக்குடியில் உள்ள மின் ரசாயன ஆராய்ச்சி நிலையம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் ஆராய்ச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி போன்றவை ஆண்டு தோறும் பல புதுப் புதுப் பொருட்களைக் கண்டு பிடிக்கின்றன. அவைகளில் பலவற்றை வியாபார ரீதியாக உற்பத்தி செய்து விற்று இலாபம் பெறலாம். இதை நோக்கமாக வைத்துப் பல தொழில் தொடங்கலாம்.

5. இறக்குமதிக்கு மாற்றுப் பொருள்கள் :

நம் நாட்டில் பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், இன்னும் சில பொருட்கள் இறக்கு மதி செய்யப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கே உற்பத்தி செய்யமுடியும். சுங்கவரி கட்டிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று பார்க்கும் போது சில பொருட்கள் நம் கவனத்தைக் கவரும்.

உதாரணமாக பலவகைமிக்சிகள், அரிசி சாதம் சமைக்கும் சாதனம், பொழுது போக்கு சாதனங்கள். விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இங்கே உற்பத்தி செய்யலாம். வெளிநாட்டுப் பொருட்களைப் பார்த்தும் சில பொருட்களைத் தெரிவு செய்யலாம். என் நண்பர் ஒருவர் டெல்லியில் நடந்த ஒரு பொருட்காட்சியைப் பார்க்கச் சென்ற போது அங்கே செக்காஸ்லோவிய நாட்டில் உற்பத்தியான ஒரு இயந்திரத்தைப் பார்த்தார். அதில் தரமான பெயர் பொறிக்கும் தகடுகளை ( Name Plates ) உற்பத்தி செய்ய முடியும் என்பதைப் பார்த்து, அதை வங்கிக் கடன் உதவியுடன் வாங்கி விட்டார். அது அவர் வியாபாரத்தைப் பல மடங்கு பெருக்கி நிறைய இலாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

எனது இன்னொரு அனுபவம். ஒருமுறை லட்சுமி மெசின் தொழிலகத்திலிருந்து ஒரு சிறிய இயந்திரம் பழுது பார்ப்பதற்காக எங்களிடம் அனுப்பப்பட்டது. இது ஜெர்மன் நாட்டில் செய்யப்பட்டது. அதைப் பழுது பார்த்தபின் அதை அடிப்படையாக வைத்து அந்த இயந்திரத்தை உற்பத்தி செய்து வருகிறோம். அதேபோல் BHEL என்ற தொழிலகம் ‘ V ‘ நாட்ச் மெசின் ஒன்றை இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்தது, பல இந்திய தொழிற்சாலைகளுக்குத் தேவைப்பட்டது. ஆகவே அதையும் நாங்கள் தற்போது உற்பத்தி செய்து வருகிறோம்.

நாம் தொழில் தொடங்கும்போது செய்யப் போகிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதைச் செய்து, மாதிரி விற்பனை ( Trail Marketting ) செய்து திருப்தி அடைந்தபின், பெரிய அளவில் உற்பத்திக்குத் திட்டமிட வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment