Home » Articles » தயக்கம் வருவது எதனால்?

 
தயக்கம் வருவது எதனால்?


இராமநாதன் கோ
Author:

டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி..,

ஐம்பது வயதாகிய கல்லூரி பேராசிரியருக்கு வகுப்பறையில் பாடம் சொல்லும்போது அறிவு மழை கொட்டும், வகுப்பறையை விட்டு வெளியே, நான்கு மனிதர்கள் முன்னிலையில் கூட நேருக்கு நேர் பேசமாட்டார். இதனால் உறவினர்களை, நண்பர்களை ஒதுக்கியே வாழ்கிறார்.

மளிகைக்கடை வியபாரி ஒருவரிடம், வாடிக்கையாளர் குடிபோதையில் அடிக்கடி சத்தமிடுவார். அவரும் தம்முடைய பொருளை பறிகொடுத்து விட்டு ‘ பணம் தராவிட்டாலும் சரி; நம்மிடம் கை நீட்டாமலிருந்தால் போதும்’ என்ற பயத்துடனே வியாபாரம் செய்கிறார்.

நன்றாக படிக்கும் மாணவர், வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் ” சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், எல்லோரும் நகைப்பார்களே ” என்ற தயக்கத்தில் ‘ பதில் தெரியவில்லை ‘ என்று சொல்லிவிட்டு ஒதுங்குகிறார். அரை குறையாக பதில் தெரிந்தவர்கள் கூட சரளமாக பேசுவதால், பதிலைச் சொல்லி நற்பெயரை தட்டி செல்கிறார்கள்.

விருந்துக்கு சென்ற இளைஞரை பலரும் வரவேற்கிறார்கள். நூற்றுக் கணக்கானோர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விருந்தினர் நடுவே செல்லும் போது எல்லோரும் அவரை பார்ப்பது போன்ற எண்ணம். நாணத்தின் உச்சியில், சாப்பிட்ட உணவின் சுவையை உணராமலே சாப்பிட்டு எழுகிறார்.

இது போன்ற தயக்கம் கொண்டவர்கள் பலரை ஆங்காங்கே பார்க்கிறோம்.

இன்னும் சிலர் பிறரிடம் தம்முடைய சிரமங்களை வெளிப்படுத்தினால் தவறாக நினைப்பார்களோ !

மற்றவர் கேட்கும்போது ‘ தெரியவில்லை ‘ என்ற சொன்னால், அவமானமாகுமே!

மற்றவர்கள் வற்புறுத்தும் போது அதை ஏற்காவிட்டால் பாவம் வருமே!

புதியதாக ஒரு செயலை செய்தால் பிறர் ஆமோதிக்க மாட்டார்களே!

எல்லோருக்கும் புரிந்த ஒரு விஷயத்தை ‘ எனக்கு புரியவில்லை’ என்று சொன்னால் அறிவு குறைந்தவன் என நினைப்பார்களே!
என்று எண்ணுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த தயக்க மனப்பான்மை உள்ளது. இவர்கள், அடிப்படையில் அளவற்ற ஆசைகள், குறிக்கோள்களைக் கொண்டவர்கள், தம்முடைய கூச்ச சுபாவத்தினால் அத்தனையையும் கட்டிப் போடுகிறார்கள்.

வெளித்தோற்றத்தில் அமைதியான சாதுவாக காட்சியளிக்கும் இவர்கள் மனத்திற்குள் போராடுகிறார்கள். பிறர் முன்னிலையில் பதட்டமடைகிறார்கள். பொதுவிடங்களில் செயல்படும்போது தடுமாறுகிறார்கள். பேச நினைத்ததை பேச முடியாமல் நாக்குழறுகிறார்கள்.

இதனால் பெரும்பாலும் தனித்து வாழ்வதை விரும்புகிறார்கள், சிறு விஷயங்களையும் சாமளிக்க முடியாமல் பதட்டமடைகிறார்கள். திறமைகளிலிருந்தும் ‘ தோல்வியாளன் ‘ என பெயரெடுக்கிறார்கள்.

தயக்க உணர்வு எப்படி உண்டாகிறது?

பிறவியில் யாருக்கும் தயக்கம் உண்டாவதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலையைப் பொருத்தே இந்த மனோபாவம் உருவாகிறது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதை உருவாக்குகிறார்கள். இதை இரண்டு விதமாக செயல்படுத்துகிறார்கள்.

1. ” வாயைத் திறக்காமல் சமர்த்தான பிள்ளையாக இரு ! நீ தான் நாளைக்கு நல்ல பிள்ளையாக வருவாய் ” என்ற ஒரு சர்டிபிகேட்டை பெற்றோர்கள் கொடுக்கும்போது ‘ எதுவும் பேசாமல் இருப்பதே உத்தமம் போலிருக்கிறது ‘ என்ற எண்ணம், மனதில் வலுக்கிறது. பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் உண்டாகி விடுகிறது.

2. ” ஏதாவது சத்தமிட்டால், ஏதோவது தப்ப செய்தால் தொலைச் சுடுவேன் ” என்ற மிரட்டல் பெற்றோர்களிடமிருந்து ஆசிரியர்களிடமிருந்தும் வரும்போது பயத்தால் தயக்கம் வளர்கிறது.

முதல் வகையில் தட்டிக் கொடுத்து தயக்கத்தை வளர்க்கிறார்கள்.

இரண்டாம் வகையில் மிரட்டலின் மூலம் தயக்கத்தை உருவாக்குகிறார்கள்.

மேலும் பிறர் குறைய சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருக்கிக் கொண்டே வந்து செயலற்றவராக்குகிறது. இறுதியில் தாழ்வு மனப்பான்மை பெருகி விடுகிறது.

தயக்கத்தைப் போக்கும் வழிகள்.

1. எந்தெந்த சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராயவேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வரும் போது எப்படி தயக்கமின்றி செயல்படுவது என் பதைத்திட்டமிட்டு ஒத்திகை செய்து கொள்ள வேண்டும்.

2. தயக்கமுண்டாக்கும் சூழ்நிலைகள் தவிர்க்காமல் அதை அடிக்கடி அணுகினால் தயக்கம் குறையும். உதாரணத்திற்கு, உயர் அதிகாரி ஒருவரை பார்க்கப்போவதில் தயக்கம் இருந்தால், அவரை பார்க்க வாய்ப்புகிட்டும் போதெல்லாம் சந்தித்து விடவேண்டும். பயத்தினால் பார்ப்பதை தவிர்க்கக்கூடாது.

3. புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளில் நாமாக சென்று ஒரிரு – நிமிடங்கள் உரையாடுதல் தயக்கத்தை குறைக்கும்.

4. பிறருடன் உரையாடும்போது, புன்னகைத்தல், கைகுழுக்குதல், கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுதல், தலையசைத்து ஆமோதிப்பு காட்டுதல் போன்ற பழக்கங்களை வளர்க்க வேண்டும்.

5. பிறர் பேசும்போது ஆவலுடன் கவனிப்பதே தயக்கத்தை போக்கும் சிறந்த வழியாகும்.

6. வேலை செய்யுமிடத்தில், கூட்டமைப்புகளில் மற்றும் சமுதாய சங்க அமைப்புகளில் சேர்ந்து பங்கேற்றால் தயக்கம் குறையும்.

7. மற்றவர்களிடம் உரையாடுதலுக்கு பொருளே இல்லாவிட்டாலும் தொழில், குடும்பம் மற்றும் சுற்றுப் பயணங்கள் பற்றிய பொதுமான அம்சங்களில் நம்மை பற்றியும் பிறரைப் பற்றியும் பேசுதல் சிறந்த உரையாடலாகும்.

8. சிலருக்கு, பள்ளியில், குடும்ப சூழ்நிலையில், வேலை செய்யுமிடத்தில் அதிகப் படியான தயக்கத்தை உண்டு பண்ணும் மனிதர்கள் இருப்பார்கள். அது போன்றவர்கள், வாய்ப்பு ஏற்படும்போது வேலையை, தொழிலை, இருப்பிடத்தை மாற்றலாம்.

9. தயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், செயல்பட முடியாத அளவிற்கு மனச்சோர் வடைபவர்கள் , செயல்பட முடியாத அளவிற்கு மனச்சோர் வடையபவர்கள் சிகிச்சை செய்தல் அவசியம்.

10. இறுதியாக, பயிற்சி செய்தலே சிறந்த வழியாகும். சிறந்த பாடகர் ஆயிரக்கணக்கான முறை பாடிய பிறகே, எவ்வளவு கூட்டமான மேடையிலும் தயங்காமல் பாடுகிறார்கள். பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கான முறை முன்ஒத்திகை பார்த்துவிட்டுத் தான் மேடையில் தெளிவாக பேசுகிறார்கள்.

எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்த செயல் பலமுறை முன் ஒத்திகை பார்த்தால் தயக்கம் ஓடி விடும். திரும்ப திரும்ப செய்யும் பயிற்சி ஒன்று தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும்.

எந்த மனிதனுக்கும் தயக்கவுண்ர்வு நீங்கினால்தான் அவனுடைய உண்மையான ஆற்றல்கள் வெளிப்படும்.

அடிப்படை உரிமைகள் :

அளவிற்கதிகமான தயக்கமடைபவர்கள் சில அடிப்படை உரிமைகளை உணர வேண்டும். அதை செயல்படுத்தும் போது சம்பந்தப்பட்டவர்களுடன் சுமூக உறவை வளர்க்க வேண்டும். அவை :

தயக்கம் உள்ளவர்கள் உணர வேண்டிய உண்மைகள் என்னென்ன?

1. உங்களுடைய மனதை – எண்ணங்களை எப்போது வேண்டுமாயினும் மாற்ற உரிமை உண்டு.

2. நீங்கள் செய்யும் செயலில் தவறுகள் ஏற்படலாம். அது பெருங்குற்றம் அல்ல. தவறை ஒப்புக் கொள்வதில் தவறில்லை.

3. உங்களுக்கு ஏதாவது தெரியாத போது ‘ எனக்கு தெரியாது ‘ என்று வெளிப்படையாக வேண்டும்.

4. மற்றவர்கள் உங்களை கட்டாயப்படுத்தும் போது அதை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.

5. உங்களுடைய செயலை மாற்றியமைக்கும்போது அதற்காக மற்றவர்களிடம் காரணத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

6. உங்கள் சம்பந்தப்பட்ட பிறருடைய நன்மை தீமைகளை பற்றி ஆய்ந்து அதைப்பற்றிய முடிவு எடுக்க உங்களுக்கு உரிமை உண்டு.

7. பிறர் சொல்லும் போது, ” எனக்கு புரியவில்லை” என்று வெளிப்படையாக சொல்லாம்.

8. உங்களுடைய உடன்பாடில்லாமல் மற்றவர்கள் உங்களை ஆட்விக்க முயலும்போது அவர்களை மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.

9. உங்களுடைய சிந்தனை, உணர்வுகள் மற்றும் செயல்கள் பற்றி நீங்களே முடிவு செய்ய வேண்டும். பிறர் என்ன சொல்வார்களோ என்ற யோசனை தேவையில்லை.

10. பிறரிடம் மறுப்பு சொல்லிவிட்டு தவறு செய்து விட்டோமா? என்ற குற்றவுணர்வு தேவையில்லை.


Share
 

5 Comments

 1. S Kameshwaran says:

  It is a very good write on inferiority complex. Thanks, After reading this, got something.

 2. S BOOPATHY says:

  Dear sir,
  Very very very super points.It will so much use to me.
  reg-S.Boopathy,Erode

 3. M.S.M.MAFAZ says:

  மிகவும் நல்ல பயனுள்ள பதிவுப் பகிர்வு மிக்க நன்றி !!!

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?