Home » Articles » இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்

 
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர். இல.செ.கந்தசாமி

அவர் கடையில் மட்டும் வியாபாரம் ஆகிறதே என்ன காரணம்?

அங்கே பாருங்கள் ! அருகருகே இரண்டுபேர் இளநீர் வியாபாரம் செய்கிறார்கள். தெருவோரக் கடைகள்தாம். ஒருவர் கடையில் நீங்கள் இளநீர் குடிக்கிறார்கள், அந்தக் கடையைத் தேர்ந்து எடுத்ததற்கு என்ன காரண்ம ?

பொருள்கள் பேசவேண்டும்

பார்த்தவுடன் கண்ணுக்குப் படும் படி பசுமையான, குளிரிச்சியான பெரிய பெரிய இளநீர்களாகப் பார்த்து அடுக்கி வைத்துள்ளார். அதுதான் முதல் கவர்ச்சி. இரண்டாவது, அவரது கடைக்கு முன்னால் நின்று குடிப்பதற்கு ஏற்ற வகையில் நிற்கும் இடம் சுத்தமாக இருக்கிறது. மூன்றாவது, இளநீர் வெட்டிக் கொடுக்கின்ற ஆளும் சுத்தமாக, தாடி வளர்த்துக் கொண்டு சோம்பலாக இல்லாமல், எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் இருக்கிறார். நான்காவது, வழிந்த மட்டைகளை உடனே பொறுக்கிச் சேர்த்து அடுக்கி, கடையையும் சீராக ஒழுங்குபடுத்தி, சில பச்சைத் தென்னை மட்டை இளநீர் கடை என்பதைத் தூரத்திலிருந்து வரும்போதே காட்டிவிடும். சைக்கிள் டயரை கடையின் முன்னால் மாட்டி வைத்தால் அது சைக்கிள் கடை என்பதை தூரத்திலிருந்து வரும் போதே தெரிவித்து விடுவதைப்போல. ஐந்தாவது, விரைவாக வெட்டி ஒரு ஸ்ட்ரா போட்டுக் கொடுக்கிறார். இளநீரைக் குடித்ததும் தேங்காயை நம்மையே தோண்டி எடுத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்லாமல், அவரே கை படாமல் தோண்டித் தருகிறார். பார்த்ததும் நம்மைக் கவருவது இந்த அமைப்புகள்தாம். அதனால்தான் முன்பின் அறியாத அந்த ஒரு கடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பார்வையில் படுகின்ற காட்சிதான் முதற்காரணம். அதனால் உங்கள் கடையை, கூடையிலுள்ள பொருள்களைப் பார்த்தும் வாங்குவோர் வருகின்ற மாதிரி அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடையும், கடையிலுள்ள பொருள்களும் தான் பேச வேண்டுமே ஒழிய பேச வேண்டியது நீங்கள் அல்ல.

இரண்டாவது, ஒருமுறை வந்தவர் தொடர்ந்து வர என்ன வழி ?

1. பொருள்களின் தரம்தான் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து வரவழைக்கச் சிறந்த வழியாகும். கடை எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வருவார்கள்.

2. பொருள்களை விரைவாகக் கொடுப்பதும் அவசியமாகும். அதனால் அவசரப்பட்டு வாடிக்கையாளர்களின் முன்னால், கடையில் வேலை செய்யும் ஆட்களைத் திட்டுதல் பெருந்தீங்கு விளைவிக்கும். கடையில் பணியாற்றுகின்றவர்களின் குறையை வாடிக்கையாளர்கள் இல்லாதபோது தனியாகத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். பல கடைகளில் முதலாளி என்ற தோரணையில் வாடிக்கையாளர்கள் அதை விரும்பாமல் அடுத்த கடையை நாடுவதும் உண்டு. பணியாளர்களின் பொறுமையாகவும், அன்பாகவும் பேசுவது வாடிக்கையாளர்களை மகிழச் செய்யும்.

3. பொருளின் உரிமையாளர் வாடிக்கையாளர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவர்கள் வரும்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகள் நேரடித் தொடர்புடன் ( Per – sonal Touch) பேசுவதும் ஒரு சிறந்த முறையாகும். அதிகமாகப் பேசுவது நமது தொடர்பைக் குறைக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

4. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான, நம் விற்பனைப் பொருளோடு தொடர்புடைய பிற பொருள்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பேச வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவர்களின் தேவை உணர்ந்து நாம் பேச வேண்டும். எல்லாம் ஓரிரு வார்த்தைகளுள் முடிந்துவிட வேண்டும். மேடைப் பிரசங்கம் ஆக்கி விடக்கூடாது.

இரண்டு ரொட்டிக் கடைகள்

ஒரு தெருவில் இரண்டு ரொட்டிக் கடைகள் இருக்கின்றன. ஒன்று பழம்பெருமை வாய்ந்தது. மற்றொன்று புதிதாக வந்தது. புதிதாகக் கடை வைத்தவர் மக்களைக் கவர்வதற்கு என்ன வழி பார்த்தார். அன்றன்று புதிது புதிதாகக் கொடுத்தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள என்ற உண்மையைக் கண்டு பிடித்தார். மாலை 3 மணியிலிருந்து இரவு கடை அடைக்கும்வரை மிக மெதுவான, மிகவும் புதிதான ரொட்டியை விற்பனை செய்யத் தொடங்கினார். வியப்பான செய்தி மக்கள் வரிசையில் நின்று (Queue) வாங்கிப் போகின்ற காட்சியை இன்று பார்க்க முடிகின்றது.

ஒருவரைக் கேட்டேன், ஏன் நீங்கள் அந்தக் கடையை விட்டு இந்தக் கடையில் வாங்கத் தொடங்கினீர்கள் என்று.

1. இரண்டு முறை பழைய ரொட்டியாகப் போய் விட்டது. பழைய ரொட்டியைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். நெடுநாள் வாடிக்கையாளராகிய நம்மிடமே இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற வருத்தம்.

2. இவர்கள் யாரும் கடைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை. வேலைகாரர்கள் தாம் இருக்கிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களின் தகுதி அறிந்து நடப்பதில்லை.

3. சில சமயங்களில் நம்முடைய நேரத்தின் அருமை தெரியாமல் வேண்டாதவகைளைச் செய்துகொண்டு நம்மை நிறுத்தி வைத்து விடுகிறார்கள் என்றார்.

இங்கு முதலாளியின் பழக்கம், நல்ல வரவேற்பு, விரைவாகப் பொருள்களைக் கொடுப்பது, தரமான பொருள் இதைவிட நமக்கு என்ன வேண்டும் என்றார். நான் இங்கு வாங்க வந்த காரணத்தையும் எண்ணிப் பார்த்தேன். அவர் சொன்னது சரியாகவே பட்டது.

இது வியாபாரத்திற்குத்தான் பொருந்தும் என்பதில்லை. ஒரு மருத்துவருக்குப் பொருந்தும். ஒரு பொறியியல் வல்லுநருக்குப் பொருந்தும. ஒரு விவசாயிக்குப் பொருந்தும், என் அனைவருக்கும் பொருந்தும்.

நாம் செய்கின்ற எந்தத் தொழிலாக இருப்பினும் இத்தகைய கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து நமக்கு ஏற்ற ஒரு முறையை வெற்றிக்கு வழிவகுக்கும் முறையை நாம் தேர்ந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு மனிதனும் இளநீர்க்கடைக் காரரையும் ரொட்டிக் கடைக்காரரையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் படித்தவர்கள் அல்ல. தம் தொழிலில் வெற்றி பெற ஒரு வழியைத் தேர்ந்து கொண்டார்கள்.

ஒரு மாணவன் தன் படிப்பையும், ஒரு இளம் மனைவி தன் குடும்பத்தையும் வெற்றிகரமான வழியில் செலுத்த தெளிவும் துணிவும் விரைவும் இன்றியமையாதவையாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment