Home » Articles » கல்விமீது கண் வைப்போம்

 
கல்விமீது கண் வைப்போம்


செந்தில் குமார் N
Author:

திருப்பூர் ந. செந்தில்குமார், பி.இ.,

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பொன்விழா கொண்டாடி வருகிறோம். இந்தச் சமயத்தில் இந்திய மக்களின் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாகத் தெரிகின்ற கல்வித்துறைமமீது நாம் கவனம் வைத்தல் நல்லது.

இன்று இந்தியாவில் இருக்கின்ற வேலையில்லாத திண்டாட்டம், வறுமை, நோய் மக்கள் தொகை பெருக்கம். அரசியல் சீர்கேடுகள். தவறான மூடநம்பிக்கைகளின் செயல்பாடுகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கும் கல்வித்துறையை 50 ஆண்டுகளாக கண்டுகொள்ள நேரமில்லை. இனியாவது கல்வியை நமக்கு ஏற்றம் நாம் திட்டமிட்டு மாற்றியமைப்போம்.

கற்பின் சிறந்தவள் மாதவியா? கண்ணகியா? இராமர் வாலியைக் கொன்றது சரிதானா? அழகிப் போட்டி நடத்துவது முறைதானா? போன்ற பட்டிமன்றங்களை ஐந்து வருடங்களுக்கு தள்ளி வைப்போம். எல்லா கருத்தரங்குகளிலும் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தே பேசுவோம். சிந்திப்போம்.

நூறுகோடி மக்களுள் நாற்பது கோடி பேர் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற முடியாத நிலை. இந்தியா கிரிக்கெட்டில் தோற்றதற்காக வருந்தும் நண்பர் நாம் செய்ய வேண்டியது என்ன? என்று யோசித்துப்பார்.

இந்திய நாடு வறுமையானதுதான். திரையரங்குகளின் முன்னால் நிற்கும் இளைஞர் கூட்டம் இந்தியாவில் வறுமையே இல்லை என்றல்வா நினைக்கத் தூண்டுகிறது.

இன்று நாடு தரும் கல்வி விவேகானந்தர் விரும்பிய வீர இளைஞர்களை உருவாக்குகிறா?

முன்று வயது முடிந்ததும் எல்.கே.ஜி.யில் சேர்க்கப்பட்டு கைதியாக்கப்பட்ட ஒரு சிறு மலர் இருபது இருபத்து மூன்று வயதில் இளைஞனாக வெளிவரும் போது கண்களில் ஒளி இல்லை. தோள்களில் கம்பீரம் இல்லை. வாழவும் வழி தெரியாது. வேலை இல்லாதோர் கூட்டத்தில் சேர்ந்து பெருமை கொள்கிறான். படித்தது வேறு நடைமுறையில் பார்க்கின்ற உலகம் வேறு.

அவனது கவனத்தை திசை திருப்ப இங்கு எண்ணற்ற விசயங்கள், சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, அரசியல் இப்படி பல.

எதிர்கால வாழ்க்கைக்கு இங்கு ஆயத்தம் செய்கிறோம் என்ற உணர்வு நம் ஆசிரியருள் பெரும் பாலோருக்கு இல்லை. எல்லாம் வயிற்று பிரச்சினை.

கல்வியில் பெரும் மாற்றங்கள் கொண்டு வந்தாக வேண்டும், டாக்டர் என்.மகாலிங்கம், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, ஜே.சி.குமரப்பா, அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி, விணேபா போன்றோர் கல்வியில் மாற்றம் குறித்து பேசியும் எழுதியும் உள்ளார்கள்.

நாம் தரும் கல்வி வெறும் விஷங்களை மூளையில் சுமத்தாது சிந்திக்கும் ஆற்றலைத் தருவதாக அமைய வேண்டும். அறியாமை பொருந்திய பாலானாக சென்றவன்; பண்புடைய அன்பு நிறைந்த மாறுபட்ட கருத்து கொண்டோரையும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு முழு மனிதனாக வெளிவர வேண்டும்.

படித்து முடித்ததும் வேலைத்தேடி அலையத் தேவையில்லாத சிறுசிறு கைத்தொழில்களை அவன் கற்று தேர்ந்து கொள்ள வழிவகை இருத்தல் வேண்டும்.

நான் யார் ? இந்த உலகம் எத்தகையது ? அதற்கும் எனக்கும் என்ன உறவு ? வாழ்வின் நோக்கம் என்ன?

வறுமை ஏன்? நோய் ஏன்? இதைப் போக்க என்ன வழி? போன்ற கேள்விகளுக்கு பதில் ஞானிகளுக்கு மட்டும் தெரிந்தால் போதாது. படிப்பாளிக்கு தெரிந்து விழிப்புடன் செயல்பட்டால்தானே நிலைமை மாறும.

நமது நாடு விவசாய நாடு. 60 சதவீத மக்கள் விவசாயம் செய்கின்றனர். ஆனால் மாணவர்கள் பள்ளியில் படிப்பதோ வேறு பல விசயங்கள். விவசாயப் படிப்புக்கு வைத்து சாதாரண மாணவனுக்கு எட்டாக் கனியாக்கி விட்டோம். அவரும் படித்து முடித்து பேங்க் வேலை, ஆராய்ச்சி வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆக, விவசாயம் படிப்பில்லாத ஒரு கூட்டத்தால் செய்யப்படுகிறது. போதாக்குறைக்கு விவசாயம் ஆங்கில மொழியில் சொல்லித் தருகிறோம். இதே போன்று கால்நடை மருத்துவமும்.

நா.ம. காலிங்கம் சொல்கிறார் ‘ இப்போது இருக்கும் எல்லா எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளையும்’ முடிவிட்டால் பாதகம் இல்லை. இவை பெரும்பாலும் பணம் திரட்டும் தொழிலாக விரைவாக பரவி வருகிறது.

காந்தியடிகளின் ஆதாரக் கல்வியை நாம் புதைத்து விட்டோம்.

நமது ஆசிரியர்கள் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு படித்ததையே நாமும் படிக்கிறோம். அன்மைக்கால முன்னேற்றங்கள் நமது ஆசிரியருக்கு தெரிந்தால் தானே நமக்குத் தெரியும். அமெரிக்காவில் ஒரு அசிரியர் முன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அசிரியர் தேர்வில் வெற்றிபெற வேண்டுமாம்.

நிறைய அறிஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். திறமைமிக்க பேராசிரியர்கள் ஏராளம் உண்டு. நாம் செய்ய வேண்டுவது எல்லோரையும் சேர்த்து விவாதம் செய்து நமக்குரிய கல்வித் திட்டத்தை உருவாக்குவது. அது நடை முறைக்கு கொண்டுவர பாமர மக்களிடையே அதன் பயனை பறைசாற்றுவது. இந்த முயற்சியில் இறங்குவோம்.

நமது பிரச்சினையை நாம் தான் ஆராய வேண்டும். நாம் தான் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். நாம்தான் செயல்படவும் வேண்டும். பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதட்டும். படித்தவர்கள், பாமரர்கள், ஓர் கூட்டமாய் நின்று விஞ்ஞானிகள் ஆன்மீக ஞானிகள் ஒன்று சேர்ந்து, வரும் தலை முறைக்கு சரியான ஒரு சுகமான பாதையை உருவாக்குவோம். நமது வெற்றி மனிதகுல வெற்றி யாகட்டும்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்