Home » Articles » முழு வாழ்க்கை என்பது….

 
முழு வாழ்க்கை என்பது….


செந்தில் நடேசன்
Author:

– N. செந்தில் குமார், B.E.,

நடைமுறை வாழ்க்கையைப் பார்க்கும்பொழுது நம்மில் பலரும் வாழ்க்கையைப் பற்றி தெளிவான கருத்து கொண்டிருக்கவில்லை என்பதை அறியலாம். பலருக்கு பணம் ஒன்றுதான் வாழ்க்கை. ஓய்வின்றி உழைத்து பணத்தை தேடுவர். பின் தேடிய பணத்தைக் கொண்டு பிறரை அதிகாரம் செய்து பணத்தை சுரண்டுவர். பணத்தை பாதுகாக்கவே அரசியல் – ஆன்மீகம் எல்லாமும் அதற்காகவே நடத்தப்படும்.

எல்லாம் என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும். நான் சொல்லியதை நீ செய்ய வேண்டும். என்ன நடந்தாலும் நான் யாருக்கும் அடிணிய மாட்டேன். எல்லோரும் எனக்குத்தான் அடிமை என்று தன் சுய கௌரவத்தை மட்டும் கணக்கில் கொண்டார் பலர்.

உலக வாழ்க்கை துன்பமானது. மாயை… பவத்தைப்போக்கவே இங்கு வந்துள்ளோம். முன்வினை அவன் துன்பம் அடைந்துள்ளான் என்று நாள் முழுவதும் தியானம் யோகம் செய்து வாழும் மிகச் சிலர், வெளியில் சந்நியாசி உள்ளுக்குள் குடும்ப வாழ்வு நடத்தும் வேடதாரிகள் பலர்.

வாழ்க்கை என்பது இதுதானா? இந்த வாழ்க்கையைக் கொண்ட மானிட பிறவியையா ஔவையார்போற்றினார். நாம் இப்படி துன்புறவா யேசு உயிர்துறந்தார். காந்தி தம் வாழ்வை அர்ப்பணித்தார். புத்தர் தம் அரசு வாழ்வை துறந்து கடுந்தவமியற்றி ஞானம் அடைந்து தம் கருத்துக்களைப் பரப்பினார். முன்னோர் சொன்னதை மறந்தோம் சிலை வைத்து கும்பிட்டோம். மாலையிட்டோம் அத்தோடு சரி காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ஆகவேதான் ஒவ்வொரு இளைஞனையும் உடல் உழைப்பு செய்யாமல் பிழைக்கும் வழியைப் படிக்க கல்லூரி வரை கிராமத்து தந்தை அனுப்பி வைக்கிறார். படித்த இளைஞர் எவரும் உற்பத்ததி செய்யும் வேலைக்குச் செல்ல தயங்கி வட்டிக்கு விடுதல், பீடி, தீப்பெட்டி – பெட்டி கடை வைத்தல், பெரிய கம்பெனிகளில் மனதுக்கும் உடலுக்கும் சலிப்பு தரும் வேலைகளில் சேர்தல், போன்ற காரியங்களைச் செய்கின்றனர். வேலையில் ஆக்கப்பூர்வமான உழைப்பு இல்லை. ஏனெனில் கல்வி தாய்மொழியில் தொழில் சார்ந்து தரப்படவில்லை. செக்குமாட்டு வாழ்க்கையை நாம ்விரும்பி ஏற்றுள்ளோம். S.S.L.C. படித்த மாணவன் தனது சொந்த கிராமத்தில் வயலில் உழைக்க வெட்கப்படுகிறான். நகர்புறம் சென்று பிழைக்க வாய்ப்பை தேடி அலைகிறான். கிராமத்தில் அவன் வேலை செய்தாலும் சமூகம் அவனை மதிக்காது. இந்த நிலைமையை நம் கல்விதான் உருவாக்கியுள்ளது என்பதை எப்போது உணரப் போகிறோம்.

உடல் உழைப்பு சேர்ந்த தாய் மொழி வழி – தொழில் சார்ந்த கல்வி என்பது நமது கனவாகவே இருக்கப்போகிறதா? கிராமங்கள் அழிந்து நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்து நாம் என்ன இன்பம் அடையப் போகிறோம்? கட்டாயக் கல்வி பற்றி அரசு பேசிக்கொண்டிருக்கிறது. படித்தவன் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நிலைமை உருவாக்கிவிட்டால் கிராமத்து தாய் தந்தை, உணவு உண்ணாது பள்ளி அனுப்பி தம் குழந்தைகளை கல்வியறிவு பெற்றிட செய்யமாட்டார்களா? எதற்கு இந்தச் சட்டம்? சட்டத்தால் யாருக்கு என்ன லாபம்? லஞ்சம் பெருகிவிட்டது. வரதட்சனைக் கொடுமை L.K.G க்கூட 2000/- கட்டணம். எந்த File ம் பணம் கொடுக்காமல் அடுத்த மேசைக்கு செல்லாது. (தாலுகா நகராட்சி போன்ற அலுவலகங்கள்). இலஞ்சம் வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்ற சட்டத்தால் என்ன பயன்?

இளைஞனே எளிய வாழ்வு வாழ்ந்து பார் எவ்வளவு உயர்வானது என்று அது புரியும். என்று கல்லூரி வரை படித்த ஒரு மாணவனுக்கு ஆசிரியர் சொல்லியிருப்பாரா? காந்தியடிகள் எழுதிய கிராம சுயராஜ்யம் போன்ற பொருளாதார நூல்களை பொருளாதாரத்தில் M.A படித்த வரும் கற்றிருப்பாரா? கல்வி திட்டத்தை மாற்ற வேண்டும் என எல்லா அரசியல் ஞானிகளும் இன்று பேசுகின்றனர். செய்வது யார்? எப்போது? கிராமங்கள் மறைந்து எல்லா நகரங்களிலும் கூவம் நதி ஓடும்போதுதானா? அடிப்படையில் மனதை மாற்றாமல், – மனதை மாற்ற தரமான கல்வியைத் தராமல் சட்டத்தில் திருத்தங்கள் – புதிய புதிய சட்டங்கள் வந்து கொண்டே இருந்தாலும் வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக இருக்காது. இதை எப்போது உணர்ந்து செயல்படப் போகிறோம்.

முழு வாழ்க்கை என்பது பணம் அல்ல. பணம் தன் தேவையை நிறைவேற்ற மட்டுமே அன்றி பணமே வாழ்வல்ல.

தனது சுய கௌரவம் எப்படி பெரிதோ அது போலவே அடுத்தவரின் சுய கௌரவமும் பெரிது.

வாழ்க்கை என்பது மாயை அல்ல. பாவத்தை போக்க வந்த இடம் அல்ல இந்த உலகம்.

இல்லறத்தைவிட்ட துறவறமும் உயர்ந்தது அல்ல. வாழ்க்கையில் பல துன்பங்கள் நம்மாலும், நம் முன்னோராலும் உருவாக்கப்பட்டவைதான். நாம் விரும்பினால் பெரும்பான்மையான துன்பங்களைப் போக்கிவிட முடியும். நமது நோக்கம் இயற்கையை வெல்வது அல்ல. இயற்கையில் கரைந்து தோய்ந்து பேரானந்தம் அடைவது. சில அறிவாளிகளால் மட்டும் இந்த உலகம் மேன்மை அடைய முடியாது. என்பதை உணர வேண்டும். இந்த உலகில் வாழும் கடைக்கோடி மனிதனும் வாழ்க்கையை புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையின் தன்மை உயரும். நமது மனதை செம்மைப்படுத்துவது கல்வியின் முதல் வேலை. நாம் செயலின் நன்மை தீமை உணர்ந்து நன்மை பெருக்கெடுத்தோடச் செய்ய நமக்கு அறிவு தருவது கல்வியின் அடுத்த கட்டம். அறிவு பெற்று துணிவு நம்பிக்கை கொடுத்து செயல்படுத்துவது அடுத்த கட்டம். இத்தகைய கல்வியை தாய்மொழியில் கொண்டுவர வேண்டியது அரசு இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டியது நாம். ஆக பிரச்சினைக்கு காரணம் நாமே.

வாழ்க்கை என்பது உணவு, உடை, இருப்பிடம் இவற்றோடு முடிந்து போவதல்ல. அதற்குபின் தான் அது ஆரம்பம் ஆகிறது.

தனக்குள் இருக்கும் ஏதோ ஒரு திறமையை கண்டு கொண்டு அதை இந்த உலக மக்களுக்கு காணிக்கையாக்கி அதிலேயே கரைந்து – தன்னை வெளிப்படுத்தி தன்னை இழத்தல், தான் என்பதையே விட்டுவிடல் இந்த எல்லையையும் நாம் தொட்டுவிட வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் பணம் என்றோ புகழ் என்றோ எதிர்கால தலைமுறைக்கு வேண்டிய சொத்து பற்றியோ கவலைப்பட்டு கடும் முயற்சி செய்து வெற்றியடைந்து அல்லது தோல்வி அடைந்து போவதல்ல வாழ்க்கை.

வாழ்கை ஒரு திருவிழா, அது ஓர் கொண்டாட்டம். பிறப்பதற்கு முந்தியோ இறந்த பின்னோ கவலைப்பட தேவையில்லை. இயற்கையில் கரைந்து இயற்கையில் வியந்து வாழ்க்கையை கொண்டாடுவோம். நமக்குள் இருக்கும் எல்லா திறமைகளையும் வெளிக் கொண்டு வந்து இயற்கையை அழகுப்படுத்துவோம். புதியவற்றை படைத்து, படைப்பாற்றல் பொருந்திய பணிகளில் ஈடுபட்டு இயற்கையோடு கலந்து கிடப்போம். தரிசு நிலத்தை பழத்தோட்டம் ஆக்கும்போது, ஒருவன் தனது உயிரில் கலந்து பாடும்போது தன்னை மறந்து ஆடும் போதும் தன்னை வெளிப்படுத்துகிறான். தன்னை இழக்கிறான். தன்னை இழப்பதால் தான் முழுமையானவன் என்பதை அறிந்து அமைதியடைகிறான்.

வாழ்க்கையைப் பற்றி தெளிவான கண்ணோட்டம் வேண்டுமென்றால் தன்னைப் பற்றிய அறிவு – தெளிவு வேண்டும். ஒரு நாளில் சிறிது நேரமாவது மனம் அற்று இருக்கும் கலையை கடைபிடிக்க வேண்டும். வானத்தில் மேகங்கள் வருவதைப் போல மனதில் எண்ணங்கள் வந்து மாறுவதை உற்று நோக்க வேண்டும். மனமே நான் அல்ல என்றும் உடல் மனதைப் தாண்டியும் ஏதோ ஒன்றாக ஒரு அமைதித் தன்மையாக நான் இருக்கிறதை உணர முடியும்.

ஒரு பூ மலர்வதைப்போல நாம் அன்பில் மலர வேண்டும். நம் அனைத்து செயல்களும் அன்பின் மலர்ச்சியாக இருக்க வேண்டும். முழுவதும் மலர்ந்த பூ பின் உதிர்வதுபோல் அன்பில் தன்னை மலர்த்திய மனிதன் இறந்து போகிறான். இறக்கும் போதும் அவனது இதயம் இன்ப சிலிர்ப்பில் இனிய ராகம் இசைக்கும். அவனைப் பொருத்த வரையில் இறப்பும் ஓர் புதுமையான இனிய அனுபவம்தான்.

இதில் வரும் சில அடிப்படை கருத்துக்களுக்காக ஓஷோக்கு நாம் நன்றி சொல்கிறோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment