Home » Articles » முன்னேற்றப் பாதை

 
முன்னேற்றப் பாதை


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன் எம்.டி.


“உறுதியும் தெளிவும்”

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு உயர் அதிகாரி பரமசிவம் (பெயரை மட்டும் மாற்றியுள்ளேன்). அவர் தம் வேதனைகளைக் கூறுகிறார்.

“என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரே குழப்பம். தனிமையில் அமர்ந்து அழலாம் போலிருக்கும். சில நேரங்களில் அழுகிறேன். எதை எதிர்பார்த்துச் சென்றாலும் ஏமாற்றம்தான்; நண்பர்களைப் பார்த்தால் துரோகிகளாக தெரிகிறார்கள். புதிய மனிதர்களைப் பார்த்தால் மனம் படபடக்கிறது; என்ன கேட்ட செய்தி சொல்லுவார்களோ என்ற அச்சம் உண்டாகிறது. படுத்தால் தூக்கமில்லை; தூக்கத்தில், யாரோ என்னை விரட்டுவது போல கொலை செய்வது போல, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிடுதல் போல எண்ணற்ற கெட்ட கனவுகள் வருகின்றன. காலையில் கண்விழித்ததும், ‘ஏன் தான் பொழுது விடிந்ததோ’ என்ற தடுமாற்றம்; எங்கேயாவது ஒரு சத்தம் கேட்டால் மனதிற்குள் பயம் உண்டாகி தொண்டை அடைக்கிறது; திடீரென உயிர் போய்விடுமோ என்ற பயம் அடிக்கடி வருகிறது. தலைபாரம், தலைவலி, தலைச்சுற்றல் அடிக்கடி உண்டாகின்றன; உடல் வியர்த்தல், கைகால்கள் நடுங்குதல், தளர்ந்து விடுதல் ஏற்படுகின்றன. சுவையான உணவு தட்டிலிருந்துதாலும் சாப்பிட முடிவதில்லை. சாப்பிட்டால் ஏப்பம் வருகிறது, வாந்தி வருவது போன்ற வயிறு புரட்டுதல் ஏற்படுகிறது. இடுப்புலி, மூச்சிறைத்தல், அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வுகள் உண்டாகின்றன.

அலுவலகத்தில் நுழையும் போது, ஏதோ சிறைசாலைக்குள் செல்வது போன்ற உணர்வு; நண்பர்களுடன் பழகவே பிடிப்பதில்லை; தமாஷான விஷயங்களுக்கு கூட சிரிக்க முடிவதில்லை யாராவது என்னைப் பற்றிப் பேசினால் தாங்க முடிவதில்லை. வேலைகளைச் செய்துமுடிந்த பிறகு ஏதாவது தவறு செய்திருப்பேனோ என்ற குற்ற உணர்வு; கூட்டமான இடத்திற்குச் செல்வதென்றால் தயக்கம்; மேலதிகாரியைப் பார்த்தாலே உடல் வியர்க்கிறது. வார்த்தை குழறுகிறது. புதியதாக ஒரு செயலைத் தொடங்கினால் எப்படிச் செய்வது என்ற குழப்பங்கள்; அதனால் பிறரை அடிக்கடி கேட்டுச் செய்ய வேண்டிய நிலை. எனக்கு கீழுள்ள பணியாளர்கள் என்னை மீறி அடிக்கடி செயல்படுகிறார்கள்.

இவரை பரிசோதித்ததில் மனப்பதட்டம் (ANXIETY) இருப்பது தெரிந்தது. (மனப்பதட்டத்தைப் பற்றி தனியாக எழுதியுள்ளேன்). இவருக்கு உள்ள முக்கிய குறை உறுதியும் தெளிவும் இல்லாமைதான். இதுபோன்றவர்கள் தமக்குள்ளேயே போராடிக் கொண்டிருப்பவர்கள். தமக்கு தாமே சுதந்திரம் இல்லாதவர்கள். ஒருகோணத்தில் பார்த்தால் அடிமைகளாக வாழ்பவர்கள் எனலாம்.

இதிலிருந்து விடுபட இவர்களுக்கு மனதில் உறுதியும், செயலில் தெளிவும் வேண்டும். ஆங்கிலத்தில் “ASSERTIVENESS” என்று இக்குணத்தை குறிப்பிடுகிறார்கள். இதன் முக்கிய அம்சம்

1. சரியான முடிவைத் தேர்ந்தெடுத்தல்

2. அந்த முடிவை எக் காரணத்தைக் கொண்டும், எந்த் சூழ்நிலைக்காகவும் எந்த மனிதருக்காகவும், எந்த ஆசைக்காகவும் மாற்றிக் கொள்ளாதிருத்தல் (இது வீண்பிடிவாதம் அல்ல)

3. அந்த முடிவைச் செயல்படுத்தும் போது, வரும் எதிர்ப்புகளை உணர்ச்சி வயப்படாமல், எதிர் கொண்டு சமாளித்தல். இதில் வன்முறையோ, எதிரி மனப்பான்மைய (ASSRESSION AND ENEMITY) இருக்கக்கூடாது.

இதை யார் செய்ய முடியுமோ அவர்களே மன உறுதி – செயல் தெளிவு பெற்றவர்கள்.

இக்குணம் இல்லாததன் விளைவுகள் என்னென்ன?

சிலர் நல்லவர்களாக இருப்பார்கள்; கடினமாகவும் உழைப்பார்கள். ஆனால் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். சிலர் உயர்ந்த பொருளாதார நிலையில் இருந்தாலும் அதை நிர்வகிக்க இயலாமல் தடுமாறுவார்கள்.

சிலர், உயர் பதவியிலிருந்தாலும் கீழுள்ளவர்களிடம், மரியாதையிழந்து நிற்பார்கள்.

ஆகவே இது போன்றவர்களுக்கு எல்லா வசதிகள் (பணம், பதவி, தொழில்) இருந்தாலும் மனதிற்குள் குழப்பமாகி, அதிப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

இவர்களை மேலும் ஆராய்ந்தால்

ஒரு தனிமனிதனாக – குற்றவுணர்வு, கவலை, பயம், பதட்டம் அதிகம் கொண்டவர்கள். இவர்களை மற்றவர்கள் அவரவர் தேவைக் கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். தான் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் மற்றவர்களிடம் தன் நிலையை பற்றி தேவையில்லாத விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிறு பிரச்சினையானாலும் முடிவெடுக்க, மற்றவர்களிடம் ஓடுவார்கள். எங்காது தவறு நடந்தால் மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிடுவார்கள்.

இவர்கள் குடும்பத் தலைவராக இருந்தால், குடும்பத்திலுள்ள மற்றவரிடம் கணவன்/ மனைவி, மகன்/ மகள், சகோதரர்/ சகோதரி இப்படி யாரோ ஒருவரிடம் பயந்து கொண்டே செயல்படுவார்கள்.முடிவு எடுக்கும் திறன் இல்லாமையாலும், பிரச்சினைகளை கண்டு பயந்து ஒதுங்குவதாலும் மற்றவர்கள் இவரை ஒதுக்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் தவறு நடந்துவிட்டல் அதை தைரியமாக கேட்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தால் நிர்வாகம் திறமையாக இருக்காது. பலரிடம் ஏமாறுவார்கள் கீழே இருப்பவர்கள் ஒற்றுமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது உத்தரவை மதிக்கமாட்டார்கள். பிரச்சினைகள் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து பெரியதாக்கி விடுவார்கள். வாடிக்கையாளர்களை கவர முடியாமல், இழந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்துவிட்டால் தொண்டர்களின் நம்பிக்கை, ஒத்துழைப்பு போய்விடும். எதிரிகளிடம் பயப்பட்டு, அவ்வப்போது முடிவுகளை மாற்றி கொண்டே இருப்பார். இறுதியில் தலைமை பதவியை இழப்பார்.

இவர்கள் படும் தொல்லைகள்:

பயம், பதட்டம், இரத்தக் கொதிப்பு, தீராத தலைவலி போன்றவைகள் இவர்களுக்கு அதிகம். தூக்கமின்மை உண்டாகும் தற்கொலைக்கும் முயல்வார்கள்.

அன்றாடம், குழப்பமடைவார்கள், தோல்வியடைவார்கள். பயப்படுவார்கள். புதுமையை ஏற்கமாட்டார்கள்; குற்றவுணர்வினால் எதிலும் பின்னோக்கி செல்வார்கள். தனக்குத்தானே தோல்வியாளன் என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பார்கள். யாரை நம்புவது – யாரைவிடுவது என்று தெரியாமல் எல்லோரிடமும் ஒதுங்கி வாழ்வார்கள்.

இவர்கள் தன்னையே வருத்திக் கொண்டு தனக்கும் சிரமத்தை கொடுப்பார்கள். இவரால் பிறரும் சிரமப்படுவார்கள்.

சிலர், பிறரின் வற்புறுத்தலாலும், இவர்களின் பலவீனத்தாலும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடுவர்.

மன உறுதி என்பது, சரியான முடிவை தெளிந்து, அதை செயல்படுத்துவதில் உறுதியாக நின்று, வரும் எதிர்ப்புகளை சமாளிப்பது எனப் பார்த்தோம்.

இனி நம்மை – மன உறுதியை – குழப்பும் அம்சங்கள் என்னென்ன? மன உறுதியின் அவசியம் என்ன? சரியான முடிவை தீர்மானப்பது எப்படி? அதை எப்படி செயல்படுத்துவு? என்பதை ஆராய்வோம்.

மனக் குழப்பங்கள் பிறரால் எப்படி உண்டாகின்றன?

பெரும்பாலும் நாம் உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுகிறோம்.அன்பு, பாசம், நட்பு, பணிவு, இரக்கம், மனிதாபிமானம் போன்ற உயர்ந்த பண்புகளை மதிக்கிறோம். ஆனால் இந்தப் பண்புகளின் அடிப்படையில், சிலர் அதை தவறாகப் பயன்படுத்தி நம்மை சில நேரங்களில் நிராயுதபாணியாக்கி விடுகிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்த செயல்களை – அதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை ‘வலை வீசும் வார்த்தைகள்’ எனலாம்.பண்பான வார்த்தைகளையும், வலை வீசுபவரின் மன நிலையையும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நீ இதைச் செய்தால் ஊர் உலகம் என்ன சொல்லும்? (ஆகையால் நான் சொல்வது தவறானாலும் மற்றவர்களிடம் நல்ல பெயரை எடுக்க அதை ஏற்றுக்கொள்)

நீ ஒரு அப்பாவி. உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்! புத்திசாலித்தனமாக எதையும் சிந்திக்காதே; செயல்படாதே!

நீதான் பொறுமைசாலி! ( யார் ஏமாற்றினாலும் பொறுத்துக்கொள்)

உங்களைப்போன்ற நல்லவரை நான் பார்த்ததே இல்லை! (உன்னைப் போன்ற ஏமாளி வேறுயாரும் இல்லை)

நீ இதைச் செய்தால்/ செய்யாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்! (அதனால் என் விருப்பப்படி நடந்து கொள்)

என் உயிரைக் கொடுத்து உன்னைக் காப்பாற்றினேன்! ( என்னை மீறி எதையும் செய்துவிடாதே!)

உங்களைப் போன்றர்களால்தான் நாடே நன்றாக இருக்கிறது! (நான் அடுத்த கேட்கும் உதவியை நீங்கள் செய்ய வேண்டும்)
உங்களை நம்பித்தான், இந்த வேலையை தொடங்குகிறோம்! (சிரமப்பட்டாவது என் தேவையை நிறைவேற்றுங்கள்)

மேற்கண்ட வார்த்தைகளை பிறர் நல்லெண்ணத்தில் செல்லும்போது அதை சந்தேகத்தால், நல்ல உறவுகளை இழக்க நேரிடும். இது போன்ற வார்த்தைகளை நாமும் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள், சமுதாயத்தினரும் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தைகளை தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதில், போதைக்கு அடிமையானவர்கள், லஞ்சப் பேர்வழிகள், வஞ்ச நெஞ்சினர் போன்றவர்கள் மிகவும் வல்லவர்கள். இந்த வார்த்தைகளை ஒரு கோணத்தில் பார்க்கும் போது பாசம், பரிவு, நட்பு, இரக்கம், நேர்மைபோன்ற வற்றின் பிரதிபலிப்பாகத்தோன்றும்; மறுகோணத்தில் பார்த்தால், மற்றவர்களை கட்டுப்படுத்த – தன் சுயநலத்தை நிறைவேற்ற பயன்படும். வலை வீசும் வார்த்தைகளாகத் தோன்றும் இவ் விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகவும் சூட்சும்மானது.

இதை அடையாளம் காண்பது எப்படி?

பிறர் எந்தப் பலனையும் எதிர்பாராமல், உங்கள் நன்மையை மட்டும் கருதி இந்த வார்த்தைகளை பயன்படுத்தும்போது, உயர்ந்த பண்பின் அடையாளங்களாகின்ன. அதுவே தன்னுடைய சுயநலத்திற்காக உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக – தங்களின் தவறை மறைப்பதற்காக பயன்படுத்தும்போது அது வலை வீசும் வார்த்தைகளாகின்றன. இதை அடையாளம் கண்டு தெளிவு பெற்றாலே நமதுத குழப்பங்களில் பெருமளவு போய்விடும்.

மன உறுதியின் அவசியம்:

சிலர் குனியக் குனியக் குட்டுவார்கள். கடைசிவரைக்கும் குட்டிக் கொண்டே இருப்பார்ரகள். இதை நிறுத்த ஒரே வழி, நீங்கள் நிமிர்ந்து நிற்பது தான் – அது தான் மன உறுதியின் ஆரம்பம். இதைத் தான் சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறுகிறார்கள்.

விவேகானந்தர் காசிக்குச் சென்றார்; அங்கு ஒரு காட்டுப் பகுதியில் செல்லும்போது பல குரங்குகள் அவரை துரத்தின. அவரும் கடித்துவிடுமோ என்ற பயத்தில் ஓடிக்கொண்டே இருந்தார். குரங்குகள் மேன்மேலும் துரத்தின; கடித்தன; எதிரில் வந்த ஒருவர் சொன்னார். “நீங்கள் திரும்பி அந்த குரங்குகளை எதிர்த்து நில்லுங்கள்; அப்போது தான் நீங்கள் தப்பிக்க முடியும். என்றார். இவர் எதிர்த்து நின்றவுடன் எல்லா குரங்குகளும் ஓடி விட்டன. அதைப்போல நாம் எங்கு நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணம் கூறினார்: “ஒரு பாம்பு, வழியில் போவோரையெல்லாம் கடித்து துன்புறுத்தியது; அந்த வழியில் வந்த யோகி அதனிடம், “பாம்பே நீ நல்லவனாய் இரு. இனி யாரையும் கடிக்காதே!” என்று அறிவுரை கூறினார். பாம்பும் சம்மதித்து யாரையும் கடிக்கவில்லை. ஆனால் வழி போக்கர்களெல்லாம் அதை அடித்துக் கொண்டே வந்தார்கள். சில மாதங்களில் அப்பாம்பு வலியிழந்து மண்புழு போன்று சுருங்கிவிட்டது. அதே யோகி, ஒரு முறை அந்த வழியில் சென்றபோது, அவரை அப்பாம்பு கேட்டது. “பெரியவரே! என்னை அடையாளம் தெரிகிறதா?” என்றது. அவர், “இல்லையே!” என்றார். சில மாதங்களுகு முன்பு யாரையும் கடிக்காதே என்றீர்கள். நானும் அப்படியே செய்தேன். இப்போது என்மீது யாரும் பயமில்லாமல் அடித்து, இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள். என் பரிதாபத்தைப் பார்த்தீர்களா?” என்று கலங்கியது. அப்போது யோகி சொன்னார், “கடிக்காதே” என்றுதான் சொன்னேனே தவிர சீறாதே என்று சொல்ல வில்லையே” என்றாராம். பிறரை கடிப்பது கொடுமையான செயல். சீறுவது ஒரு தற்காப்பு ஆயுதம். அதை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த பயன்படுத்துவதுதான் மன உறுதியின் அடுத்த படியாகும்.

சிலர், எல்லாவற்றுக்கும் “சரி, சரி” என தலையாட்டுவார்கள். அவர்கள், மற்றவர்களால் ஆட்டடுவிக்கப்படுவர். இதற்கு அவர்கள் சொல்லும் வாதம், ‘தான்மிகுந்த பொறுமைசாலி’ என்பது தான். இப்படி அநியாயத்திற்கும் பொறுமையாக இருப்பவர்களை பிறர் மதிப்பதில்லை.

இன்னும் சிலர் எல்லாவற்றுக்கும் “இல்லை, இல்லை” என்று வீண்பிடிவாதம் செய்து மறுப்பார்கள். அவர்களை அனைவரும் வெறுப்பார்கள்.

இந்த நிலைகளுக்குக் காரணம் எது சரி எது தவறு என்ற தெளிவிண்மை. அப்படியே சரி / தவறு எனத் தெரிந்தாலும், அதை செயல்படுத்துவதில் உறுதியின்மை.

முடிவெடுக்கும் திறன் இல்லாதவர்களின் நிலை இதுதான் தவறான முடிவெடுப்பவர்களைக் கூட சரி செய்யலாம்; ஆனால் முடிவே எடுக்காதவர்களை சரி செய்யவே முடியாது. இவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். இவர்களுக்கு தன்மீதே நம்பிக்கை இருக்காது.

– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment