Home » Articles » கண்ணாடியில் தெரிபவன்

 
கண்ணாடியில் தெரிபவன்


ஸ்ரீதரன் என்
Author:

– டாக்டர் என். ஸ்ரீதரன்

தினமும் காலயில் எழுந்ததும் கண்ணாடியில் நமது அழகு முகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு முற்பட்ட தலைமுறையினர் சொல்வது வழக்கம். அது ஏன் என்று எனக்குப் புரியாதிருந்தது. “இன்று ஷேவ் செய்து கொள்ள வேண்டுமா?” என்று முடிவு செய்வதற்காக இருக்குமோ என்று நினைத்தது உண்டு. ஆனால் அதற்காக விழித்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டியதில்லையே. முதலில் தொண்டைக்குள் காபி இறங்கட்டுமே.

டேல் விம்ப்ரோ (Dale Wimbrow) என்பவர் ஒரு கவிதையில் கண்ணாடியில் தெரிவது நமது பிரதிபிம்பமல்ல, நமது அசலான உருவம் அதுதான் என்கிறார். கண்ணாடியில் தெரிபவன் நிஜமான மனிதன். அவனைக் காண்பதே சுயதரிசனம். ஆத்ம தரிசனம் என்று விளக்குகிறார். கண்ணாடியில் தெரியும் நமது திருவுருவத்துடன் நாம் சில சமயம் பேசுவதால் அவ்வுருவம் நிஜத்தில் ஒரு வகை என்பது நிரூபணமாகிறது.

கண்ணாடியில் தெரிபவன் நமது உடலைப் பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், அவன் உண்மையில் நமது மனச்சாட்சியைப் பிரதிபலிக்கிறான். நாம் யாரிடம் வேண்டுமானாலும் பாராட்டுச் சான்றிதழ் வாங்கி, பிரேம் போட்டு, அறையில் அலங்காரமாக மாட்டலாம். ஆனால் இந்தக் கண்ணாடியில் தெரிபவன் இருக்கிறானே, இவன் கொடுக்கும் சான்றிதழ்தான் உண்மையானது. இறுதியானது.

நாம் வாழ்க்கையில் போராடி விரும்பிய லட்சியத்தை ஒரு நாள் அடைந்துவிடலாம். பத்திரிகைகளில் சில சமயம் சொல்கிறார்களே அதுபோல் ஒருநாள் முழுவதும் பிரதமராக இருக்கும் வாய்ப்புக்கூட நமக்குக் கிடைக்கலாம். இவ்வாறு உலகம் நம்மைக் கொண்டாடும் சமயம் நான் கண்ணாடியில் நம்மை ஒருமுறை நன்கு பார்த்துக் கொள்வது நல்லது. நமது முன்னேற்றம் பற்றிக் கண்ணாடியில் தெரிபவனது கருத்தென்ன என்று கேட்டறிவோம்.

நமத தந்தையோ, தாயோ, தாரமோ நம்மைப் பாராட்டினாலும் குறைகூறினாலும் அது மிகையாக இருக்கும். ஏனெனில் அவர்களது கண்ணோட்டம் நடுநிலைமை ஆனதாக இருக்காது. எனவே அவர்களது மதிப்பீடு துல்லியமகா அமையாது. நாம் நம்மைக் கண்ணாடியில் பார்க்கும்போது நம்மைத் திருப்பிப் பார்த்து முறைக்கிறானே ஒருவன், அந்த ஆசாமியின் முடிவுதான், மதிப்பீடுதான், தீர்ப்புதான், உண்மையானதும் முக்கியமானதும் ஆகும். ஏனெனில் அவனுக்கு நமது அந்தரங்கம் எல்லாம் அப்பட்டமாகத் தெரியும்.

சிலர் நம்மை நேர்மையானவர், அரிச்சந்திரனின் வம்சம் என்று புகழலாம். வேறு சிலர் நம்மை அதிசய மனிதர், அற்புதப் படைப்பு என்று துதிக்கலாம். ஆனால் நாம் நிஜமாகவே நல்லவரா என்பது கண்ணாடியில் தென்படும் மனிதனுக்குத் தெரியும். அவனுடைய கண்களை நாம் சந்திக்க கூசினால், உலகம் எவளுதான் நம்மைப் புகழ்ந்தாலும், நாம் உண்மையில் பசுத்தோல் போர்த்திய புலி என்றுதான் அர்த்தம்.

நாம் வாழ்நாள் முழுவதும் சாமார்த்தியமாக உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கூடும். எல்லோரும் நம்மை நல்லவர், வல்லவர் என முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் கண்ணாடியில் உள்ள மனிதனை, நமது மனச்சாட்சியின் மறுவடிவை, ஏமாற்றியிருந்தோமானால் நமது வாழ்வில் கிடைக்கும் இறுதிப் பரிசு சாபமாக அமையும்; வாழ்க்கை கவலையும் கண்ணீருமாக முடியும்.

மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதில் நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக்கொண்டிருக்கும் நாம் இவனைத்தான் முதலில் திருப்திப்படுத்த வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் நடுவில் வந்து, நடுவில் விலகி விடுபவர்கள். இவன் ஒருவன்தான் மூச்சிருக்கும்வரை நம்முடன் முரண்பாடோ, கருத்து வேற்றுமையோ இல்லாமல், நட்பு ஏற்பட்டுவிட்டால், சமரசமாகிவிட்டால், வாழ்க்கையில் நாம் மிகப் பயங்கரமான, மிகவும் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று பொருள்.

வாருங்கள், இன்று இவனுடன் கை குலுக்குவோம். நம் நெஞ்சில் கள்ளம் இல்லையெனில் இவன் நம்மைப் பாசத்துடன் தட்டிக்கொடுப்பான். பிறகு நமது வாழ்க்கை இன்னிசைபோல் அமைதியாக முன்னேறிச் செல்லும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….