Home » Articles » முன்னேற்றச் சிந்தனைகள்

 
முன்னேற்றச் சிந்தனைகள்


கவிதாசன்
Author:

– கவிஞர். கவிதாசன்

வாழ்க்கையெனும் சோலையிலே வசந்த மலர்பறிக்கணும். நாம் வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் புதிக்கணும் என்றுதான் எல்லோரும்நினைக்கிறார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி வாழ முடிவதில்லை. ஏனென்றால் அவர்களுடைய சிந்தனை வலுப்பெற்றதாக அமையாததே அதற்குக் காரணம் ஆகும். எந்தச் செயலுக்கும் அடிப்படை சிந்தனையே! அதைப்பற்றிச் சொல்லுகிறபோது “உங்களுடைய சிந்தனையை கவனியுங்கள், ஏனென்றால் அது செயலாக மாறுகிறது. உங்களுடைய செயலைக் கவனியுங்கள். ஏனென்றால் அது பழக்கமாக மாறுகிறது. உங்களுடைய பக்கத்தைக் கவனியுங்கள், ஏனென்றால் அது உங்கள் வழக்கமாக மாறுகிறது. உங்கள் வழக்கத்தைக் கவனியுங்கள். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.” என்றான் ஒரு மேதை. ஆகவே எல்லாவற்றிற்கும் மூலாதாரம் சிந்தனையே என்பது தெளிவு.

வாழ்க்கையின் வடிவம்

சிந்தனையே மனிதனின் வாழ்க்கையை வடிவமைக்கிறது. எழுகின்ற சிந்தனைப் பெருக்கத்தை அளவிட்டு, வரையறை செய்து கூற முடியாது. நல்ல சிந்தனைகள், தீய சிந்தனைகள், மலட்டுச் சிந்தனைகள் என்பன ஒவ்வொருவருக்கும் உதயமாகிக்கொண்டே இருக்கும் என மனோத்த்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏற்படுகின்றன சிந்தனைகளை வடிவமைத்து சீர்செய்து செம்மைப்படுத்துவதற்கு உதவுவது இலட்சியம் என்று சொல்லப்படுகிற வாழ்க்கையின் இலக்கு. வாழ்க்கையின் இலட்சியம் அல்லது வாழ்நாளில் எதைச் சாதிக்க விரும்புகிறோம்என்பதை தீர்மானமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலட்சியம் இல்லாத வாழ்க்கை, சேரும் இடம் தெரியாத கப்பலைப் போலத் தத்தளித்து மூழ்கிப்போகும். இலட்சியம் என்ன எனபதை முடிவு செய்த பின், ஏற்படுகிற சிந்தனைகளை இலட்சியத்தை நோக்கி திருப்பி விடல் எளிது. உயர்ந்த சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதாக இலட்சியம் இருக்க வேண்டும். மறந்தும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதாக சிந்தனை இருக்கக் கூடாது. சிந்தனைப்பயிர்களில் ஆரோக்கியமானவைகளை காழ்ப்புணர்ச்சி, தீங்கு போன்ற நோய்கள் தாக்காமல் வளர்க்க வேண்டும்.

பாரதியின் எண்ணம்

எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை திட்ட வட்டமாக கூறுகிறார் புரட்சிக் கவி.

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”

நல்லதையே நாம் எண்ண வேண்டும். அப்படிச் செய்தால் எண்ணியது முடியும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத உறுதியான மனம் அமையப் பெறும். குழப்பம் இல்லாத தெளிந்த நல்லறிவு வாய்க்கப் பெறும் என்று, எண்ணம் அனைருக்கும் நன்மை விளைவிக்கும் படியாகவே இருக்க வேண்டும் என்கிறார்.

வள்ளுவரின் உள்ளல்:

மனத்தளவில் கூட தீயவற்றை நினைக்கக்கூடாது என்றும், அவ்வாறு தீய சிந்தனைகளை ஏற்பட்டாலே ஒருவன் அழிந்து விடுவான்என்றும் செப்புகிறார்.

“உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்ற வரிகளின் ஆழம் அளவிட முடியாது.

ஆகவே, சிந்தனை சிறப்பானதாக இருந்தால்தான் மனம் ஆற்றல் மிக்கதாக அமைந்து வெற்றியின் படிகளை ஒருவர் அடைய முடியும். இதைதான் ‘மனம் போல் வாழ்வு’, ‘மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’ என்பவை குறிக்கும்.

சிந்தனைத் தொழிற்சாலை

மூளையையும் மனதையும் நல்ல சிந்தனைகளால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தீய சிந்தனை தாமாகவே மூளையில் ஏறி அமர்ந்துகொண்டு நம்மை தீய வழியில் நடத்திச் செல்லும்.

நிலத்தில் நெல்லை விளைவிக்கலாம். கரும்பை விளைவிக்கலாம். தென்னையை விளைவிக்கலாம்.

பெரும் பசிபோக்கும் தானியங்கள தரமாகப் பயரிடலாம். அவ்வாறு செய்யாமல் காலியாக விட்டோமானால், அதில் களைகளும், முட்புதர்களும் பெருகி அங்கு விஷ ஜந்துக்கள் வசிக்கும்படியாக ஆகிவிடும். அதுபோலவேதான் நற்சிந்தனைகளால் மூளையையும் மனதையும் நிரப்பாவிட்டால் அது பேயின் தொழிற்சாலை ஆகிவிடும். அது வாழ்க்கையையும் கெடுத்து சமுதாயத்தையும் நாசமாக்கிவிடும்.

சிந்தனைக் சுவடுகள்:

எதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற சந்தேகம் ஒருவருக்கு ஏற்படுவது இயல்பே. ஆகவே.

1. எந்நேரமும் இலட்சியத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

2 திறமைகளை வளர்த்துக் கொள்வதைப் பற்றிச்சிந்திக்கலாம்.

3. குறைகளைக் குறைக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்கலாம்.

4. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்து பற்றி சிந்திக்கலாம்.

5. இலட்சியத்தை அடைவதற்கு உதவுபவர்கள் பற்றி சிந்திக்கலாம்.

6. புதியன படைத்தல் பற்றி சிந்திக்கலாம்.

7. மனித குலமேம்பாடு பற்றி சிந்திக்கலாம்.

8. வாய்ப்புகளைப் பற்றியும் அவற்றை முழுமையாகக் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கலாம்.

9. சாதனையாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் சோதனைகளைப் பற்றியும், அவற்றை எவ்வாறு அவர்கள் முறியடித்தார்கள் என்பது பற்றியும் சிந்திக்கலாம்.

10. முன்னேற்றம் பற்றி முழுமயாக சிந்திக்கலாம்.

மனிதனுக்கு உதவும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் சிந்தனையில் விளைந்த விலைமதிப்பிட முடியாத முத்துமணிகள். மனிதன் சிந்திக்காமல் இருந்திருந்தால் நவநாகரிக உலகம் கிடைத்திருக்காது. உலகம் முழுவதையும் ஒளி, ஒலி கற்றைக்குள் அடைத்து வைக்கும் விஞ்ஞானம் பிறந்திருக்காது. சிந்தனையே வெற்றியின் விதை. அதிலும் முன்னேறச் சிந்திப்பவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். மற்றவர்களை இவ்வுலகம் உமிழ்ந்து விடுகிறது.

நல்ல சிந்தனை – நல்ல செயல் – நல்ல வாழ்க்கை – நல்ல வரலாறு.


Share
 

6 Comments

 1. Iyappan.M says:

  Hai sir My name is Iyappan.I am from vallioor(Tirunelveli district).I want a book name என்னை sethukiya சிந்தனைகள் by
  சிந்தனை கவிஞர் கவிதாசன்.I want 65 copies.If you have this then contact me sir

 2. Rajaram says:

  திரு கவிதாசன் அவர்களுடைய கருத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சில நிகழ்சிகளில் கேட்டு பயன் பெற்று இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளேன். அவரது சேவை தொடர வாழ்த்துக்கள்

 3. P.Gopi says:

  தங்களது வார்தைகள் நமது நல்வாழ்விற்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன். நல்ல வழிகாட்டிகள் உள்ளவரை இந்த வையம் நன்றாகவே இயங்கும்.

 4. arun says:

  முன்பு நான் நல்ல தனம்பிகை யுடன் இருந்தேன் இப்பொழுது நான் மிகவும் சோம்பரி தான மகா மாறிவிட்டான் …நான் எப்படி முந்தைய நிலைக்கு மாறுவது..

 5. Ananthi says:

  நல்ல வழி காட்டுதல்

 6. piratheepa says:

  thank to this publish.please continue.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….