Home » Cover Story » மனித பலவீனங்கள்

 
மனித பலவீனங்கள்


கந்தசாமி இல.செ
Author:

– டாக்டர். இல.செ. கந்தசாமி

உலகத்து உயிர்களில் மிகவும் பலமான்னும் மனிதன்தான். மிகவும் பலவீனமானவனும் மனிதன் தான். காலத்துக்குக் காலம் அவனது பலத்தைவிட அவனது பலவீனம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒன்றும் இல்லாதபோது வலிமையோடு வாழ்ந்தவன், ஒவ்வொன்றாக வந்து சேரும்போது பலவீனம் நிறைந்தவனாக இயலாதவனாக ஆகிவிடுகிறான்.

இளமைக்காலத்தில்

இளமைக்காலத்தில் தைரியமாக இருந்தவன் முதுமைக் காலத்தில் பலவீனப் பட்டுப் போகிறான். தன்னை இழந்தே விடுகிறான். பல்வேறு பந்தங்களும் பாச உணர்வுகளும் அவனை வீழ்த்தி விடுகின்றன. தான் ஆசைப்பட்டதை அடைவதற்காக, தான் உயிராகப் போற்றி வந்த கொள்கைகளையே விட்டுக் கொடுக்கிறான். நாளடைவில் விட்டும் விடுகிறான். மனிதனாக இருந்தவன் நாளடைவில் மனித உருவத்தோடு மட்டும் இருக்கின்றான்.

ஆசையே முதல் காரணம்

பலவீனங்களுக்கு ஆசையே காரணமாக அமைகின்றது. ஆசைகள் மிக மிக, பலவீனங்களும் மிகுதி ஆகின்றன. தொண்டனாக இருந்தவரை குறைபாடுகளை எடுத்துச் சொன்னவன், அவனே தலைவனாக ஆனவுடன் குற்றங்களைப் பேச மறுக்கின்றான். குற்றங்களை எடுத்துச் சொல்கின்றவர்களை வெறுக்கின்றான். தலைமைப் பதவியின் சுக போகங்களை அனுபவித்தபின் அந்தப் பதவியையும் விட மனம் வருவதில்லை. மாறாக குற்றங்களையே நியாயப்படுத்திப் பேசுகின்றான். மிகப் பெரிய நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்யும் – ஒரு வீட்டில் இருப்பதில்லையா? என்று தன் குறைகளை நிறை போலக் காட்டிச் சமாதானம் தேடுகின்றான்.

சமுதாயம் அடுத்து நிற்கிறது

மனித பலவீனத்திற்குச் சமுதாயம் ஒரு காரணமாக இருக்கிறது. தனிமனிதன் தன் வாழ்க்கையைச் சமுதாயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றான்.தன்னை ஒத்தவர்களின் வாழ்க்கை வசதிகளைப் பார்த்ததும் தனக்கும் அப்படி இல்லையே என்று எண்ணுகின்றான். அவற்றை அடைய ஏதேனும் வழி உண்டா என்று கருதுகிறான். கவசம் போன்று இருந்தமனம் இந்த ஆசைகளால் துளைப்பட்டு, அவன் மனம் ஓட்டையாய் சல்லடைபோல் ஆகிவிடுகிறது. எத்தனை நல்ல கருத்துக்களைக் கொண்டு அந்த ஓட்டைகளை அடைத்தாலும் அடைக்க முடிவதில்லை. பலவீனம் மிகுதியாகிக் கொண்டே போகிறது. இன்னும் சில இடங்களில் மனைவி மக்கள் உற்றார் உறவினர் – இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, “இப்படியே பிடிவாதமாக இருந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்? உங்கள் ஒருவரால் மட்டும் இந்த பலவீனத்தைத்திருத்தி விட முடியும்என்று நம்புகிறீர்களா?” என்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள். சமுதாயம் அவனது சபலங்களுக்குப் பக்கத்துணையாக வருவதுபோல உணர்கிறான்.

சூழ்நிலைகள்

ஏற்கெனவே அரை குறை மனதோடு இருந்தவனுக்கு இந்தக் கேள்வில் எல்லாம் ஆதாரவாகின்றன. அவனைத் தயார் நிலைக்கு வர துணை செய்கின்றன. அவனுடைய பல்வேறு சூழ்நிலைகள் அவனைத் தடுமாற வைக்கின்றன. அவன் தனக்குள்ளே ஒரு சமாதானத்தைத வர வழைத்துக் கொள்கிறான். தன் பலவீனதிற்கு, தான் கற்ற கல்வியை, அறைவைப் பயன்படுத்த முனைகிறான். யாருக்கும் தெரியாமல் செய்தால் என்ன என்று தொடங்கி, எல்லோருக்கும் தெரிந்தால்தான் என்ன என்று துணிந்து செய்கிறான். தவறுகளைச் செய்வதையே வீரமாக்க் கருதுகிறான். விதிகளை மீறுவதையே தன் திறைமாயகப் போற்றிக்கொள்கிறான்.

யார் சொன்னது?

இத்தகைய பலவீனத்திற்கு யார் ஆளாகிறார்கள்? இல்லாதவர்களா? என்றால் இல்லை. இருக்கிறவர்கள் தான் அதிகம் ஆளாகின்றார்கள். ஒழுக்கம் இல்லாதவன் தான் ஆளாகிறான் என்றால் ஒழுக்கமாக இருந்தவர்களும் ஒருகால கட்டத்தில் தவறிப் போகிறார்கள். அதனால் பலவீனம் என்பது எல்லோருக்குமே இருக்கின்ற பொதுவான ஒன்றாக இருக்கிறது. அதற்குக் கோழைத்தனம், தவறான ஆசை, மனப்போக்கு இவைகள் தான் அடிப்படைக் காரணங்கள். இடம் கிடைத்தால் போதும் பலவீனம் அத்தகைய உள்ளங்களை அரியணையாக்கி ஏறி அமர்ந்து கொள்ளும். அதனால்தான் மனத்தை எப்போதும் வெற்றிடமாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது.

எதில் பலவீனம்

சிலர் நாச்சுவைக்கு அடிமைப்பட்டு குடிப்பது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகித் தங்கள் குடும்பத்தையே துன்பத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இன்னும் சிலர் உடல் சுவைக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் இன்பம் அனுபவிக்க விரும்பித் தங்கள் தகுதியை இழக்கவும் தயாராகிவிடுகிறார்கள். வேறு சிலர் பழைய காலத்தில் மண்ணாசை என்பார்களே அது போல் பொருளாசைக்கு, தான் சுகமாக வாழவிரும்பி தவறான வழியில் பணம் சேர்க முற்பட்டுப் பலவீனத்திற்கு ஆளாகிறார்கள். இப்போதெல்லாம் பதவி அல்லது பெயர், விளம்பரம் இவற்றிற்கு ஆசைபட்டு மிகப் பெரிய மனிதர்கள் கூடத் தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவும் தயாராகிவிடுகிறார்கள். இப்படி இன்னும் சில அடிப்படைகளில் பலவீனங்கள் தலை காட்டுகின்றன.

பலவீனம் இயல்பானதா?

பலவீனம் மனித மனத்தின் இயல்பான ஒன்றா என்றால் இல்லை. அறத்திலும் ஆழ்ந்த உணர்விலும் உண்மையிலும் நேர்மையிலும் நம்பிக்கை குறையைக் குறைய மனிதனுக்குப் பலவீனம் தோன்றுகிறது. வழிகாட்டிகளே, தலைவர்களே பலவீனப்படும்போது அது தொண்டர்களையும் பாதிக்கின்றது. பெற்றோர்களே பலவீனப்படும்போது அது குழந்தைகளுயும் பாதிகின்றது. ஒரு குடும்பம் பலவீனப்படும்போது அது அந்த தெருவையே பாதிக்கின்றது. இது ஒரு தொற்று நோய் போன்றது.

இந்த நோயைப் போக்க வழி:

மனிதன் நியாயத்திலும் நேர்மையிலும் ஆழ்ந்த பற்றுக்கொள்ள வேண்டும். தவறான வழியில் வருகின்ற பொருள்களும் சுகமும் வெளிப்படையில் மகிழ்ச்சி தருவதுபோல் இருந்தாலும் தன் மனசாட்சியின் முன் அவை என்ன பாடுபடுகின்றன என்பதை எண்ணிப் பார்த்துத் திருந்த வேண்டும். பலவீனப்பட்டுத்தவறான வழியில் சென்றவர்கள் இறுதியில் அடைந்த தோல்வியை, அவர்கள் குடும்பம் சின்னா பின்னப்பட்டுப் போனதை அந்தந்த பலவீன மனிதர்கள் முன்னாலேயே அவரது மனைவி மக்கள் நடந்து கொள்கின்ற முறையை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். தீயவழியில் செல்லும் என்ற உலக நியதியை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.

பெரியோர்களை நினைவு கூர்க:

நம்முடைய முன்னோர்களில் எத்தனையோ பேர் எளிமையாக, அதே நேரத்தில் நேர்மையாக, பலவீனப்படாமல் மன உறுதியோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வாழ்ந்ததற்குக் காரணம் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவற்றைப்பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், நேர்மையாக வாழ்ந்ததால் வாழ்த்தது என்பதை இந்தப் பலவீன மனிதர்கள் உணர வேண்டும். அரிச்சந்திரனும் காந்தியும் மட்டும் தான் மன உறுதியாக இருந்தவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கறோம். பெயர் தெரியாத எத்தனையோ அரிச்சந்தர்களும் காந்திகளும் இந்த நாட்டில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் போதும் என்ற மனத்தோடும், எதையும் தாங்கும் இதயத்தோடும் இருக்கிறார்கள். அவர்களை வழி காட்டிகளாகக் கொண்டு பலவீனமான மனதை வலிமையுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

உதறி எறிக

நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தவறான, முறைகேடான ஆசைகளை, உதறி எறிந்துவிட வேண்டும். சிறிய அளவே ஆனாலும் உழைத்துப் பெறுவதைப் பெருமையாகக் கொள்ள வேண்டும். உண்மையுள்ள இடத்தில்தான் வலிமையும் இருக்கும். பலவீனம் ஒழிய வேண்டுமானால் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்