Home » Articles » அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்

 
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்


ஸ்ரீதரன் என்
Author:

– டாக்டர் என். ஸ்ரீதரன்

அறம் வெல்லும் என்பது எக்காலத்திலும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றிப்பாதையில் குறுக்கிடும் தடைகளைக் கண்டு பெரும்பான்மையானவர்கள் அஞ்சுகின்றனர். பின்வாங்கி விடுகின்றனர் நம்மிடம் அறவலிமை குறைந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

நாம் முழு நினைவுடன் முயற்சித்து அறவலிமையை வளர்த்துக் கொண்டே வந்தால் தடைக் கற்களைப் படிகற்களாக மாற்றிவிட முடியும். இந்த வலிமை நமது மனத்தில் ஊறிப்பெருக ந்து அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும்.

நம்பிக்கை:

நம்மிடம் சில குறைபாடுகள் இருக்கலாம். யாரிடம்தான் குறையில்லை? முழு நிலவிலும் முயல்கறை எனப்படும் கருப்பு மாசு உண்டல்லவா? நம்முடைய சில பலவீனங்களுக்காகத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், நாம் நல்லவர்கள்; அற வழியில் செல்வதில் வல்லவர்கள் என நாமே நம்ப வேண்டும். மனச்சாட்சியின் குரலுக்கு மதிப்பளிப்பதுதான் நம்மை நாமே நம்புவது என்று அறிய வேண்டும்.

நாம் மனச்சாட்சியை வழி காட்டியாகக் கொண்டால் தடம் புரளாமல் இருக்க முடியும். அட்சியெனில் கண். சாட்சி எனில் கண்ணுடையவன். மனச் சாட்சி எனில் மனத்தைக் கண்ணாகக் கொண்டிருத்தல் என்று பொருள்படும். முகத்திலுள்ள கண் மதி மயக்கும். ஏமாற்றி விடும். மனக்கண் ஆகிய மனச் சாட்சி சரியான பாதையையே காட்டும். மனக்கண் வழி நடந்தால் மனமெங்கும ஆரோக்கிய உணர்வு பரவும். என்னதான் நடந்தாலும் சரி, நாம் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் கூச்சப்படாமல், கண்களைத் தாழ்த்திக்கொள்ளாமல், நம்மையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியும்.

பெருமிதம்:

நாம் நல்லவர்கள்தான் என்று நமக்கு ஏற்படும் மனநிறைவு போதுமானது. இதுவே பெருமிதம் எனப்படுகிறது. மற்றவர்களும் நம்மை நல்லவர்கள் என்று கருதிச் சான்றிதழ் வழங்க வேண்டுமென நாம் எதிர்பார்க்க வேண்டியதில்ல. மற்றவர்களின் ஏற்பு நமக்குத் தேவை இல்லை. மனம்தான் ராஜா. ராஜா நம்மை நல்லவராக ஒப்புக்கொண்டு விட்டால், மந்திரி, சேனாதிபதி, போன்றோர் ஏற்பு தேவைப்படாதல்லவா?

ஆனால் நமது பெருமித உணர்வு மிகையாக இருந்தால்திமிர் என நிந்திக்கப்படும். பெருமித உணர்வு குறைவாக இருந்தாலோ தாழ்வு மனப்பான்மை என இகழப்படும். எனவே நாம் நல்லவர்கள் என்ற உணர்வு எல்லைகளுக்குட்பட்டு வெளிப்பட வேண்டும். பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு ஏற்படாதிருந்தால, நாம் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க முடியும்.

பொறுமை:

நமது நோக்கம் நல்லதாகவும், முயற்சி உண்மையான தாகவும் இருக்குமேயானால் நமது விருப்பம் சரியாக நிறைவேறும். நடுவில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் எத்தனையோ குறுக்கிடலாம். இதனால் நமது விருப்பம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படக்கூடிய பிரச்சினை உள்ளது. ஒவ்வொரு விஷயமும் கட்டாயமாக, உடனடியாக, நமக்கு சாதகமாகவே நிகழும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொரு விஷயத்திலம் அவ்வப்பொழுது என்னென்ன நடைபெறுகிறதோ அதை ஏற்றுக்கொள்வோம். எதிர்பான சூழ்நிலையில் நாம் கட்டுண்டால, பொறுமையாக இருந்து காலம் மாறும் எனக் காத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவன் முதலிடத்தில் தென்படுவான். ஆனால் ஒரே சீராக ஓடிக்கொண்டிருப்பவன் இறுதி வெற்றியடைவான். இந்த வெற்றி பொறுமையான முயற்சிக்குக் கிடைக்கும் பரிசாகும்.

உறுதிப்பாடு:

நாம் மலையிலோ, மரத்திலோ ஏறும்பொழுது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். வழுக்கும் தன்மையை அதிகமாக உணர்ந்தால், முன்பைவிட உறுதியாகப் பிடித்துக்கொள்வோம். இது போல் நமக்கென்று உள்ள கொள்கைகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளைப் பின்பற்றுவது எப்பொழுது சிரம்மாகத் தோன்றுகிறதோ அப்பொழுது தான் முன்பைவிட அதிகம் உறுதியாக இருப்பது அவசியமாகிறது. இருள் விலகப்போகும் நேரத்தில்தான் அதிக இருட்டாகத் தெரியும். துன்பம் முடிவடையப் போகும் நேரத்தில்தான் அதிக பட்ச வேதனை ஏற்டும். எனவே கூடுதான காலம் வரை உறுதியாக இருந்து விட்டால் நிலைமை சாதகமாக மாறத் தொடங்கும். இருளகன்று வெளுக்க தொடங்கும்.

கண்ணோட்டம்:

இன்றைய வாழ்க்கையில் நிதானம் இல்லை. எப்பொழுதும் ஓட்டமாக, எதிலும் பரபரப்பாக வாழ்க்கை அமைந்து இருக்கிறது. தலைக்கு மேலுள ஆகாயத்தை, சன்னலுக்கு அப்பாலுள்ள மரத்தைப் பார்க்கக்கூட நமக்கு நினைவுமில்லை. நேரமும் இல்லை. பணத்தத்துரத்தக் கொண்டு நாம் ஓடுகிற ஓட்டத்தில் சற்று இடைவெளி ஏற்பட்டாலும், பணம் நம்மை விட்டு வெகு தொலைவில் சென்றுவிடும் என அஞ்சுகிறோம். பணம் நம்முடைய மனத்தை மட்டுமல்ல, நம்முடைய உடல் அசைவுகளையும் கூட மாற்றிவிட்டது. நம் குரல்கூடத்தான் மாறிவிட்டது. பணக்கார்ரின் குரலும் வசதியற்றவரின் குரலும் வெவ்வேறு தொனியில் அல்லவா ஒலிக்கின்றன.

நாம் நமது கண்ணோட்டத்தைமாற்றிக் கொள்ள வேண்டும். பணம் நமக்குத் தேவை. நிறையவும் தேவைதான். ஆனால் ஒழுக்கத்தை விற்றுப் பணம் வேண்டாம். உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் வேண்டாம். கண்ணை விற்று யாராவது சித்திரம் வாங்குவார்களா? சூடாகிவிட்ட மோட்டார் என்ஜினில் தண்ணீர் கொட்டுவது போல், மனத்தை சமனப்படுத்த நாம் தினமும் , சில நிமடங்களுக்காவது அமைதியாக, தனித்திருந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய மௌன ஓய்வு நமது சிந்தனையைத் தெளிவுபடுத்தும். ஒருமுகப்படுத்தும். அந்த மௌனத்தில் ஆத்மாவின் இன்னொலியை நாம் கேட்க முடியும். இதனால் நமது மனம் சாந்தமாகிப் பக்குவமடைகிறது. இத்தகைய நிலையில் நாம் வெளியுலக நிகழ்ச்சிகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது. இன்றைய விளைவு எதுவாயினும் இறுதி விளைவாக அறமே வெல்லும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

விலாசம்

டாக்டர் என். ஸ்ரீதரன்
3061 கிழக்கு இரண்டாவது தெரு
புதுக்கோட்டை – 622 001

 

1 Comment

  1. //பணம் நமக்குத் தேவை. நிறையவும் தேவைதான். ஆனால் ஒழுக்கத்தை விற்றுப் பணம் வேண்டாம். உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் வேண்டாம். கண்ணை விற்று யாராவது சித்திரம் வாங்குவார்களா?// உண்மை தான்! மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்று சொல்கிறார் திருவள்ளுவர்

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்