Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

சொற்பொழிவு நிகழ்த்துவது எப்படி?

எவ்வகையான சொற்பொழிவாக இருந்தாலும், பேச்சின் ஆரம்பம் கவர்ச்சியாக இருக்க வேண்டும். சொற்பொழிவை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என பகுத்துக் கொண்டால், முதிலில் எடுப்பு (தொடக்கம்) அனைவரின் கவனத்தைக் கவரும்படி அமைத்துக் கொண்டால்தான் கேட்போரின் கவனம் முழுவதும் பேச்சின் மீது திரும்பும். இந்த வித்தையைச் சரியாகக் கையாள்பவர்கள் வெற்றியடைவார்கள். சிறந்த பேச்சாளர்கள் அனைவரும் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள்.

எடுப்பு

மேடையில் இருப்போரையும் அவையோரையும் விளித்து வணக்கம் சொல்லும் பாணியில் கூட சிலர் அவையைக் கவர்ந்துவிடுவதுண்டு. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒரு கூட்டத்தில் பேசும்போது முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி, க.செல்லப்பன் அவர்கள் பேச்சைத் தொடங்கும் போது தலைவர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக பின்வறுமாறு தொடங்கினார்.

இரவு மணி பன்னிரண்டு இப்போதல்ல நான் சொல்லுகின்ற காட்சி தொடங்குகின்ற நேரத்தில். ஒரு வீடு, அந்த வீட்டிலே ஒரு தாய் படுத்திருக்கிறாள். அண்மையிலே, பத்து நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை தாயின் அருகிலே படுத்திருக்கிறது. தாய் எப்படி படுத்திருக்கிறாள் என்றால், ஒரு கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் பிடுத்திருக்கிறாள். குழந்தை தாயின் மார்போடு ஒட்டிப் படுத்திருக்கிறது.

இந்த நிலையிலே அந்தப் பெண்ணுடைய கணவன் உறக்கம் களைந்து எழுந்தான். எழுந்தவன் தன் மனைவியையும் பார்த்தான், குழந்தையையும் பார்த்தான். நினைக்க வேண்டாததை நினைத்தான். நம்முடைய மனைவி இப்படிப் படுத்துத் தூங்குகிறாளே, குழந்தை ஒட்டிப் படுத்திருக்கிறதே. இவள் ஒரு புரண்டு புரண்டால் நம் குழந்தை என்னாகும்? என்று எண்ணினான். ஒருவேளை அந்த அம்மா சற்று தடிப்பாக இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.

பலவன் அந்தப் பாட்டிலேயே சொல்லுகிறான் ஒரு புரண்டு புரண்டால், இந்த்ச் சாலையைச் சீராக்கும் உருளை இருக்கிறதே (Road Roller) அதற்குக் கீழே சிக்கிய பூப்போல அல்லவா நம்முடைய குழந்தை நசுங்கிப்போய்விடும் என்று எண்ணிய அந்தக் குழந்தையின் தந்தை தன்னுடைய மனைவியை எழுப்பலாம் என்ற எண்ணத்தில், அவள் தலையிலேச் சூடிக் கீழே எறிந்திருந்தாளே பூங்கொத்து, அந்த பூங்கொத்தினை எடுத்து அதிலே ஒரு செவ்வந்திப் பூவை எடுத்து அதைத் தன் மனைவியின் கன்னத்திலே போட்டான்.

பகல்பூராவும் வீட்டிற்கு உழைத்தவள், குழந்தைக்கு பால் ஈந்தவள், அயர்ந்துபோய் தூங்கிக்கொண்டிருக்கிறாள். கன்னத்திலே பூ விழுந்ததுகூட அவளுக்குத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டே இருக்கிறாள். மனைவியைத்தான் எழுப்ப முடியவில்லை. குழந்தையையாவது விழிக்கச் செய்யலாம் எனக்க கருதி குழந்தையின் கன்னத்தில் பெரிய செவ்வந்திப் பூவைப் போட்டால் உறுத்துமே என்பதற்காக, ஒரு ரோஜாப் பூவை எடுத்து, அதிலும் ஒரு இதழைக் கிள்ளி குழந்தையின் கன்னத்திலே போட்டான்.

தாய் படுத்திருக்கின்ற நிலை – ஒரு கை தலைக்கு வைத்து ஒருக்களித்து படுத்திருக்கிறாள். இன்னொரு கை குழந்தையைத் தாண்டி கூடாரமாக ஊன்றி இருக்கிறது கை குழந்தை மீடு பட்டால் குழந்தைக்கு உறுத்தும் என்பதால் கையை வளைத்து ஊன்றி இருக்கிறாள்.

இந்த நிலையிலே குழந்தையின் கன்னத்திலே அந்த ரோஜா இதழைப் போட்டான். தாய் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் பக்கத்தில் வளைத்து கூடாரமாக ஊன்றிய கையிருக்கிறதே அது தானாக வந்து குழந்தையின் கன்னத்திலே போட்ட அந்த பூவைத் துடைத்து விட்டு மறுபடியும் போய் தானாக ஊன்றிக்கொண்டது. இதுதான் தாய்மை என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடுவானே. அந்தத் தாய்மை உணர்வோடு உங்களைக்காத்து வருகின்ற கல்லூரியின் முதல்வர் அவர்களே என்றார். கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று. பிறகு மாணவர்கள் அவர் பேச்சோடு ஒன்றிவிட்டார்கள். இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே புதுமையாக பேச்சைத் தொடங்கி அவையைக் கவர்ந்து கொண்டார்.

பாடித் தொடங்குதல்

சிலர் பாடித்தொடங்குவது உண்டு. கிருபானந்த வாரியார் போன்றி சில பேச்சாளர்கள் பாடித் தொடங்கிக் கூட்டத்தை கவர்வார்கள். சிலர் அவைவணக்கம் கூறியதும் கூட்டத்தினரின் சிந்தனையைக் கிளரக் கூடியதாகவும் உணர்வைத் தட்டி எழுப்பக் கூடியதாகவும் வினா எழுப்பி தன்பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். சிலர் சிறுகதை அல்லது சுவையான நிகழ்ச்சியைக் கூறி கவனத்தை கவர்வார்கள்.

புரட்சித்துறைகள்!

சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரிநாள் விழா அதில் வரவேற்புரை ஆற்றும் பணி என்னுடையது. அந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவர் வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் அமைச்சர். எனவே அவரை விளிக்கிற போது மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக மாண்புமிகு புரட்சித்துறைகளின் அமைச்சர் அவர்களே! என்றேன் கூட்டம் சட்டென வியப்பாக பார்த்தது.

பசுமைப்புரட்சி (வேளாண்மை)
வெண்மைப்புரட்சி (பால்வளம்)
நீலப்புரட்சி (மீன்வளம்)

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி ஆகிய புரட்சித்துறை அமைச்சர் அவர்களே! என்றேன் மாணவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர். இதனால் சட்டென அவையை கவர்ந்துகொள்ள முடிந்தது. அந்த வரவேற்பு உரையில் வரம்புக்கு உட்பட்டு அங்கு இருந்த சூழ்நிலைக்கு ஏற்பவும், மாணவர்களின் உணர்வுகளை தொடுகிற வகையிலும் வரவேற்புரை ஆற்றியதால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. அன்று பேச்சு வெற்றி பெற்றது. விழா முடிந்ததும் அமைச்சர் என் கரங்களைப்பற்றிக் கொண்டு ‘டாக்டர். உங்களுக்கு இருக்கிற Presence of Mind எங்களுக்கு இல்லை’ என்று வாழ்த்தினார். பேச்சாளர் வெற்றிபெற சமயோசித அறிவு வேண்டும். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில், விடுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்காக அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (அன்றைய எதிர்கட்சி) வந்திருந்தார் (இன்றைய மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமு) நான் பேசுகிற போது பூங்காநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களே என்று சொல்லுவதற்குப் பதிலாக கவனக்குறைவாக பூங்காநகர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அவர்களே என்றேன் உடனே எதிரிலே அமர்ந்திருந்த மாணவ நண்பர்கள் வேட்பாளர் அல்ல சட்டமன்ற உறுப்பினர் என்று எனக்கு உணர்த்தினார்கள். நான் உடனே சமாளிப்பதற்காக இன்றைய ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலையில் இருக்கிறது. பொதுத்தேர்தல் விரைவில் வரப்போகிறது அப்போதும் இந்தத் தொகுதியின் வேட்பாளர் இவர்தான் அதுமட்டுமல்ல இனிமேன்ல எந்தத் தேர்தலிலும் இந்தத் தொகுதியின் வேட்பாளர் இவர்தான் எனவேதான் சட்டமன்ற வேட்பாளர் அவர்களே என்றேன் இவ்வாறு கூறியதும் மாணவர்கள் கைத்தட்டி மகிழ்வுடன் என் கருத்தை ஏற்றனர் எடுப்பிலேயே கூட்டத்தினரை என்பக்கம் கவர்ந்துகொள்ள முடிந்தது.

எனவே மேடைப் பேச்சில் மேண்மைபெற விரும்புகிறவர்கள் எடுப்பாக பேச்சைத் தொடங்க வேண்டும்.

(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1996

கங்கை காவிரி குமரி இணைப்பு
வெற்றியின் வித்து
மனமென்னும் மகாசக்தி
உங்கள் நெஞ்சம்
உறவுகள் மேம்பட
ஆளுமைத்திறன் மேம்பாடு
செய்க பொருளை
உள்ளத்தோடு உள்ளம்
இதுதான் தன்னம்பிக்கை
இல.செ.க.வின் சிந்தனைகள்
இதுதான் தன்னம்பிக்கை