Home » Articles » இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.

 
இளைஞர்கள் – நேற்று, இன்று, நாளை.


விஜயராகவன்
Author:

– பேராசிரியர், டாக்டர் ஆர். விஜயராகவன்.

மனித இனம், இன்றுவரை எத்தனையோ வியத்தகு பரிணாம வளர்ச்சிகளைப் பெருமையோடு கண்டிருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சிக்கும் உண்டான சாதக பாதகங்கள், நம் இனிய இளைஞர்களின் நேற்றைய, இன்றைய வாழ்க்கையிலும் இருந்து கொண்டிருந்து வருவது இயல்பே.

நேற்றைய இளைஞர்கள் – கல்வியா, செல்வமா, வீரமா என்ற கேள்விக்கு வீரமென முழக்கமிட்டார்கள். இன்றைய இளைஞர்களிடம் இக்கேள்வியைக் கேட்டால், கல்வியே உயர்ந்ததென்று கட்டாயம் கூறிவிடுவர். கல்வியின் விளைபொருளாய் செல்வமும், செல்வத்தின் மறுபெயராய் சமூக மரியாதையும் கிடைத்து விடுகின்றன.

இன்றைய இளைஞர்களிடத்தில் பறந்து கொண்டிருக்கிற வேகம் எனக்குப் பிடித்திருக்கின்றது. உயர்ந்து கொண்டே வருகின்ற தனிமனித அறிவுத்திறன் அவர்களுடைய வேகத்திற்கு கிரியா ஊக்கி. அந்த வேகத்தோடு சரியான அளவில் விவேகத்தையும் இணைத்துக் கொள்பவர்கள் வெற்றியின் படிக்கட்டுக்களை விரைவில் எட்டி விடுகிறார்கள். மற்றவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் எதிர்திசையில் ஓடுகிறார்கள்.

இன்றைக்கு மனித மதிப்பீடுகள் மாறிவிட்டன. நடைமுறை வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது. வெற்றியின் அளவுகோல்கள் வேகமாகப் பதிவு செய்யப்படுகின்றன. கம்ப்யூட்டரை போலவே மனித மனங்களும் தேவையானவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கப் பழகிவிட்டன.

இலக்கியங்களில், திரைப்படங்களில், செய்தித்தாள்களில் பதிந்துள்ள அறவியல்பூர்வமான பசிந்தனைகளை நடைமுறை வாழ்க்கையில் நன்றாகப் பதியம் போட்டுக் கொள்ள வேண்டும். தனிமனித வெற்றியைக் காட்டிலும் கூட்டுக்குழு வெற்றிக்கே எதிர்காலம் அதிகமாக வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். குழுவோடு உன்னை இணைத்துக்கொள். சில தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றுகிற உத்தியைப் புரிந்து கொள்.

நாளைய இளைஞர்களைப்பற்றிய எண்ணங்கள் சிலருக்குப் பயமளிக்கின்றன. வண்ணக் கனவுகளாய் சில எண்ணங்கள் இல்லாமல் இல்லை. ஆர்ப்பரிக்கின்ற அறிவுத் திறனும், புதியன புகுத்தும் எண்ணங்களின் திண்ணமும் – போட்டியால் வரும் டார்வின் விளைவாம், தன்னைத்தானே தகுதியுடையவனாக்கும் தனி மனித முயற்சிகளையும் போற்றாமல் விடுவதற்கில்லை. காலச்சக்கரம் சுழன்றுதான் ஆகவேண்டும்.

நாளைய இளைஞனோடு நான் சற்று நெருக்கமாகப் பேச வேண்டும். ஒரு பட்டியல் கொடுக்கிறேன். படித்துப் பார்க்கிறாயா? இன்றைய வெள்ளியாளர்களின் சில சிறப்புக் கூறுகள் இவை. நம்மைப் பக்குவப்படுத்தும் படிக்கட்டுக்கள் என்றுகூட ஏற்றுக்கொள்ளலாம்.

சீரிய குறிக்கோளில் நிலைத்து நிற்கும் தகுதி.

பல கோணங்களில் ஆராய்ந்து முடிவெடுத்தபின், துணிந்து செயல்படுதல்.

சின்னச் சின்ன தோல்விகளைக் கண்டு மனம் சோர்வடையாமை.

தேனீயைப் போன்று சுறுசுறுப்புடன் கடினமாக உழைப்பது.

எதிர்கால நோக்குடன் இருத்தல்.

பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்காமல் தானே எடுத்துசெயலாற்றி வெற்றி காண்பது.

அமைத்துக்கொண்ட உயர்ந்த குறிக்கோளை படிப்படியாக அடைய முயற்சி செய்தல்.

தனித்துச் செயல்படுவதோடன்றி, தகுந்த நேரத்தில் மற்றவர்களோடு ஒத்துழைத்து முன்னேறுதல்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்திக் கொள்ளும் அரிய திறமை.

அடர்த்தியான தன்னம்பிக்கை.

மற்றவர்களை ஈர்க்கும் தன்மை.

ஆரோக்கியமான போட்டு மனப்பான்மை.

சவால்களை எதிர்நோக்கும் திடம்.

முன் உதாரணமாகச்செயல்படுதல்.

மாறுதலை விரும்பும் மனப்பான்மை.

எதையும் இன்னும் சிறப்பாகச் செய்யமுடியும் என்கிற மனோபாவம்.

தெளிவான பக்குவமான உள்ளுணர்வு.

குழப்பங்களைச் சமாளிக்கும் திறமை.

தலைமை ஏற்கும் தகுதி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment