Home » Cover Story » ஒரு சாதனையாளரின் சந்திப்பு

 
ஒரு சாதனையாளரின் சந்திப்பு


ஜெகதீசன் கே
Author:

பொறியாளர் திரு.கே. ஜெகதீசன்

திரு.கே. ஜெகதீசன் ஒரு தொழில் முனைப்பாளர்; சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டதாரி. தாம் பயின்ற பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியிலேயே பத்தாண்டுகள் (1969-79) விரிவுரையாளராகப் பணியாற்றிய பின், கடந்த பதினாறு ஆண்டுகளாக கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் கே.ஜே. இண்டஸ்ட்ரீஸ் என்னும் தமது சொந்த நிறுவனத்தை நடத்தி வருபவர்.

தூண்டில், சிறுதொழில் சிந்தனைகள், தலைமைப் பண்புகள், நிகழ்ச்சிகள் சில நினைவுகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கட்டுரைகளில் செய்திகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

அரிமா சங்கத்தில் மாவட்ட அளவில் பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளார். திரு. ஜெகதீசன். இவரு ஆசிரியராக பொறுப்பேற்று நடத்திய அரிமா செய்தி இதழ் 1980-81ல் சர்வதேச விருது பெற்றது. மாணவப் பருவத்தில் இவர் எழுதிய உற்பத்தித் திறன் கட்டுரைக்கு தங்கமெடல் பரிசாக கிடைத்தது. கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திலும், பி.எஸ்.ஜி டெக் முன்னாள் மாணவர்கள் சங்கத்திலும் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

‘கே.ஜே’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் திரு. ஜெகதீசன் நிகழ்ச்சிகளை சுவைபடத் தொகுத்து வழங்குவதில் வல்லவர். பேராசிரியர் சாலமன் பாப்பையா, கவிஞர் வைரமுத்து, திரைப்பட இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா, நடிகர் சிவக்குமார் ஆகியோர் இவரது திறமையை மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள்.

இவர் அதிகமாக ஆர்வம் காட்டும் துறை இளைஞர்கள் முன்னேற்றம்.

அவரை நாம் பேட்டியில் சந்தித்த போது…

படித்தவர்கள் நிறையப்பேர் அரசாங்க வேலை தேடுகிறார்கள், மற்றமு சிலர் பெரிய கம்பெனிகளை நாடுகிறார்கள், ஆனால் அறிஞர்கள் சுயதொழில் செய்வதன் மூலம் வேலையின்மையை ஒழிக்க முடியும் என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வேலை வாய்ப்பு என்று வரும்போது முழுக்க முழுக்க அரசாங்கத்தையே நம்பிப் பயன் இல்லை. நமது நாட்டைப் பொறுத்தவரையில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இலட்சக்கணக்கில் இருப்பார்கள். அரசாங்கம் ஓரளவுக்குத்தான் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரமுடியுமே ஒழிய முற்றாக ஒன்றும் செய்ய முடியாது. அதனால் சுயதொழில் முயற்சி என்பது வேலையின்மையை ஒழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். கூடுதல் பொறுப்பு, குறைவான விடுமுறை நாட்கள், குறைவான ஊதியம், வேலைப் பாதுகாப்பு… போன்ற காரணங்களினால், தனியார் நிறுவனங்களின் வேலைகளை விட அரசாங்க் வேலைகளுக்கே அதிகம் ஈர்ப்பு இருக்கிறது.

நீங்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பத்தாண்டுகள் பணியாற்றி இருக்கிறீர்கள். தற்போது தொழில் அதிபராகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தை அறிந்து கொள்ளலாமா?

கல்லூரி வாழ்க்கை என்பது நிர்ணயிக்கப்பட்ட மாதிரி போய்க்கொண்டிருக்கும். தொழிலில் அதுமாதிரி இருக்காது. பாதை கரடு முரடாக, சோதனைகள் நிரம்பியதாக இருக்கும். சவால்களையும், சோதனைகளையும் சந்திக்கக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே தொழிலில் நிலைத்து நிற்க முடியும். அங்கே பொதுவாக விடுமுறைகள் அதிகம் கிடைக்கும். இங்கே அது மாதிரி கிடையாது. தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கல்லூரி வாழ்வில் முன்னேற்றம் என்பது ஒரு வரையறைக்குட்பட்டதாக இருக்கலாம். ஆனால் தொழிலில் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் முன்னேறலாம். அவரவர் ஈடுபாட்டிற்கும், திறமைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஆசிரியப் பணியில் மனநிறைவு அதிகம். தொழிலில் எந்தச் சூழலையையும் சந்திக்கும் மனோதிடம் அதிகரிக்கிறது… இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.!

வேலை செய்வோரில் ஒரு வகையினர் அனுபவம் பெற்று வந்தவர்கள்; மற்றொரு வகையினர் படித்து விட்டு வந்தவர்கள். இந்த வேறுபாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

வேலை செய்வோரில் என்பதைத் தொழில் செய்வோரில் என்று கூறலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் தொழில் நுட்பக்கல்வி பெறவோ, பயிற்சி பெறவோ பரவலான வாய்புகள் கிடையாது. அனுபவக் கல்வி அல்லது பயிற்சிதான் தொழில் தொடங்கவும் ஈடுபடவும் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. கோயமுத்தூரை எடுத்துக்கொண்டாலே வளர்ந்துள்ள தொழில் நிறுவனங்களைப் பாருங்கள். இவைகளை ஆரம்பித்தவர்கள் – இப்போது இருப்பவர்களின் அப்பாக்கள் அனுபவ அறிவை வைத்துக்கொண்டுதான் தொழிற்சாலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். தமது வாரிசுகளுக்கு நல்ல கல்வியும் பயிற்சி அளித்ததன் காரணமாக, தொழில் தொய்ந்து போகாமல் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தொழில்நுட்பமும், பயிற்சியும் வளர்ச்சிக்கு கை கொடுக்கிறது.

அரசாங்கம் தொழில் முனைவோருக்கென சட்ட திட்டங்கள் வகுத்துள்ளது. நிறைய பேப்பர் ஒர்க்ஸ் செய்ய வேண்டியுள்ளது என்கிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பொது நன்மை, தொழிலாளர் நலன், அரசு வருவாய், தொழில் பாதுகாப்பு… என்று பல அடிப்படைகளில் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. சட்ட திட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு நல்ல சூழலை உருவாக்க உறுதுணையாக இருப்பதற்கு பதிலாக, தொழில் செய்பவர்களை அச்சுறுத்துவதற்கும் தொந்தரவு கொடுக்கவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. ‘பேப்பர் ஒர்க்’ என்று சொன்னீர்கள் சென்டரல் எக்சைஸ் சம்பந்தப்பட்ட கணக்குகளை சரிவர பராமரிப்பது என்பது சிறிய தொழில் நடத்துபவர்களுக்கு மிகவும் சிரமமான காரியம். சட்டதிட்டங்களைப் படித்து, விளக்கமும், வியாக்கியானமும் பெறுவதற்கு தனிப் பண்டிதர்களை வைத்துக் கொள்ளவேண்டும். பெரிய கம்பெனிகள் ஓய்வு பெற்ற எக்சைஸ் அதிகாரிகளையே ஆலோசகர்களாக வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

தொழிலில் நிரந்தர இடம் பிடிப்பது எவ்வாறு?

ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் Quality needs no recomendation but only an introduction என்று உங்களுடைய கேளவிக்கு பதில் இதிலே இருக்கிறது. உற்பத்தி சம்பந்தமான (manufacturing) தொழிலாக இருந்தாலும், சேவை சம்பந்தப்பட்ட (service) தொழிலாக இருந்தாலும் தரம்தான் முன்னணியில் நிற்கிறது. ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலாக இருந்தாலும் ஷார்ப் பம்ப்பாக இருந்தாலும் தரத்திற்கு முதன்மை கொடுத்திருப்பதால்தான் பெரிய வெற்றியை ஈட்ட முடிந்திருக்கிறது.

தொழிற்சாலைக்குள் நுழையும்போதே அங்கே பணி புரிபவர்கள் எல்லோருக்கும் தர உணர்வு வரவேண்டும் என்பதற்காக, ஒரு தொழிலகத்தின் நுழைவாயிலில் quality is the leader என்று மிகப்பெரிய பலகையில் எழுதிவைத்திருந்தார்கள். நாம் இந்தியாவில் இருக்கிறோமா ஜப்பானில் இருக்கிறோமா என்கிற சந்தேகம் கூட வந்துவிட்டது.

தொழிலில் இறங்கும் இன்றைய இளைஞர்களுக்கு பொறுமை அதாவது சகிப்புத் தன்மை அவ்வளவாக இல்லை என்று கருதப்படுகிறது. என்ன நினைக்கிறீர்கள்?

‘சிறுதொழில் சிந்தனைகள்’ நூலில் ஒரு கட்டுரையில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறேன். பொறுமை அல்லது சகிப்புத் தன்மை இவைகளுக்கெல்லாம் எதுவும் வரை முறை அல்லது அளவுகோல் கிடையாது. அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தே அமைகின்றன. இன்றைய இளைஞர்கள் தொழில் தொடங்குவதில் வேகம் காட்டுகிறார்கள் என்பது உண்மை, அவசரப்படு, யோசனை இல்லாமல் இறங்கி விட்டால் எதிர்பாராத சில சிரமங்கள் வந்து சேரும். தொழிலில் இறங்கிவிட்டவர்களுக்கு சகிப்புத் தன்மை என்பது தானாகவே வந்துவிடும்.

சிறுதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?

நீங்கள் ஈடுபட விரும்பும் துறையில் அல்லது பிரிவில் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். கல்வியும், பயிற்சியும் மிக முக்கியமான விஷயங்கள் பயிற்சி என்பது டெக்னிகலான விஷயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; நிர்வாகம் சம்பந்தப்பட்டதாக, மனித உறவுகள் சம்பந்தப்பட்டதாகவும் இருப்பது அவசியம். சிறுதொழில் சம்பந்தப்பட்ட தகவல்கள், அரசாங்கம், நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கும் உதவிகள் இவைகளைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டு, உரிய நேரத்தில் தொழிலில் இறங்கலாம்.

தொழிற் சூழலில் நாள் முழுவதும் கழிக்கின்ற உங்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஏது? நூல்கள் எப்படி எழுத முடிந்தது?

இலக்கிய ஆர்வம் என்பது மாணவப் பருவத்திலிருந்தே இருக்கிறது எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாது. நேரப்பிரச்சனை, அதனால் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது.

நூல்களை ஒரே மூச்சில் எழுதவில்லை. ‘கொடிசியா’ எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் செய்தி இதழில் பதினைந்து நாட்களுக்கு ஒரு கட்டுரையாக எழுதப்பட்டவைதான் நூல் வடிவம் பெற்றுள்ளன.

தாங்கள் படித்த கல்லூரி பற்றி….?

நான் பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவன் தரமான தொழிற் கல்வியும், பயிற்சியும் வழங்குவதில் பி.எஸ்.ஜி. டெக் முன்னணியில் நிற்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளி நாட்டினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு படிப்பு முடித்தவர்களுக்கு, கடைசிப் பரிட்சை எழுதுவதற்கு முன்பாகவே 335 பேருக்கு Campus Interview மூலம் வேலை கிடைத்திருக்கிறது. இது எவ்வளவு பெருமையான விஷயம்!

எதிர்கால இந்தியா பற்றி….?

நம்மிடம் மிகப்பெரிய மனித சக்தி இருக்கிறது. விஞ்ஞான, தொழில் நுட்ப வல்லுனர்கள் எண்ணிக்கையும் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அரசியல் ரீதியாக எல்லா மாவட்டத்திலும் நல்ல தலைமையும் சிறந்த நிர்வாகமும் அமையுமானால், இந்தியா மற்றவர்கள் வியக்கும் விதத்தில் வலிமை மிக்க நாடாக விரைவில் திகழும்.

*நன்றி வணக்கம்.*

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1996

பதவி
உயர்ந்து விளங்க வேண்டுமா?
உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள்
முன்னோடிகளைப் பின்பற்றுவது
ஒரு சாதனையாளரின் சந்திப்பு
அந்தக் குழந்தை
எண்ணங்களும் வாழ்க்கையும்
நற்பண்புகள் என்னும் நீரோடையில்…
முன்னேறு….! முன்னேறு….! முன்னேறு….!!!
இல.செ.க.வின் சிந்தனைகள்