Home » Articles » எண்ணங்களும் வாழ்க்கையும்

 
எண்ணங்களும் வாழ்க்கையும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

6. வள்ளுவர் காட்டும் மனம்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் நாயனார் அவர்கள் அருளிய அரிய தமிழ் மறையாம் திருக்குறள் ஓதற்கெளிதாகி, உணர்தற் கரிதாகி, வேதப் பொருளாய் மிக விளங்கித்தீதற்றோர் உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குகின்ற மாண்பினைப் பெற்றது. வள்ளுவருக்குப்பின் பல நூற்றாண்டுகளாக, மக்கள் மேன்மை அடைய மனித உள்ளத்தின் தன்மையையும், அது தொழிற்படும் பான்மையும் மேன்மேலும் உணர உணர, அப்பழங்காலத்துத் தமிழ்ப்பெருமகன் தன் ஆழ்ந்த உளத்தொளியில் ஐயமறக் கண்டறிந்த சிறந்த உளதத்துவ உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் பயன்பெற்று உய்யுமாறு குறளென்னும் குன்றாப்புகழ் படைத்த, கோதிலா நூலை ஆக்கினார் என்பது நன்கு புலனாகின்றது.

‘மனத்தைப்’ பற்றி வள்ளுவர் பெருமான் கொண்டிருந்த கருத்துக்கள் என்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் சிறிது ஆராய முற்படுவோம். திருக்குறளில் அமைந்துள்ள ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ‘மனம்’ என்ற சொல் நேரிடையாகவோ அல்லது வேறு பொருளுடன் சார்ந்தோ ஒன்பது அதிகாரங்களிலும் பதினெட்டு குறட்பாக்களிலும் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், புலால் மறுத்தல், வாய்மை, இன்னா செய்யாமை, வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் முறையே ஒரு பாவிலும், கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் இரண்டு பாக்களிலும், கூடா நட்பு என்ற அதிகாரத்தில் மூன்று பாக்களிலும், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் ஏழு பாக்களிலும் மனம் என்ற சொல் காணப்படுகிறது.

மனத்தூய்மையும் அறமும்

மனத்தின்கண் தோன்றுகின்ற, துன்பங்களை நீக்குவதற்கான எளிய வழி, ஒருவாற்றானும் தனக்கு நிகரில்லாத எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனின் திருவடிகளை இடையறாது இணக்கத்துடன் தொழுதல் ஒன்றே என்பதை வள்ளுவர் கடவுள் வாழத்தில் வலியுறுத்திக் கூறுகின்றார். அறம் என்று கருதப்படுவது மனத்தின் பால் உள்ள குற்றங்களை (மாசு) நீக்கி மனத் தூய்மையோடு இருப்பதுவும் செயல்படுவதுமின்றி வேறொன்றில்லை. அஃதொழிந்த மற்றவையெல்லாம் அறம் எனப்படா எனத் தெளிவாகக் கூறுகிறார்.
பாவச் செயலாகிய ஒன்றை மனத்தில் பற்ற விடுவோமானால் அதிலிருந்து மனம் எளிதில் விடுபட்டு அறநிலையை அடைவது கடினம் என்பதைக் குறிப்பிடும்போது, கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவது அல்லது அருளை நோக்காதவாறு போலப் பிறிதோர் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவதல்லது அருளை நோக்காது என்பதன் மூலம் விளக்குகிறார்.

வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த (களவு) ஒழுக்கத்தை உடம்பாய் அவளோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தமக்குள்ளே நகும். போலி ஒழுக்கங் கொண்டவரைப் பற்றிக் குறிப்பிடும்போது காம, வெகுளி, மயக்கங்களாகிய மாசு தம் மனத்தில் குடி கொண்டிருக்கும்பொழுது, அவற்றை மறைத்து நீரில் மூழ்கிக் காட்டி பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுடையவராய் இருப்பதாய்ச் சொல்லும் மாந்தர் இவ்வுலகத்தில் பலர் உள்ளனர் எனக் கூறுகின்றார்.

ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் (உண்மையை) சொல்வானாயின் அவன் தானமும், தவமும் ஒருங்கு செய்வாரினும் சிறந்தவனாவான். மனத்தோடு உளவாகின்ற பழி, பாவம் போன்ற இன்னாத செயல்களை எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமையே தலையாய அறம்.

மனமும் இனமும்

மாந்தர்க்கு ஏற்படுகின்ற பொதுவான உணர்வுகள் எல்லாம் மனம் காரணமாக உண்டாவனவாம். இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக (அதாவது அவன் எந்த இயல்புடைய மக்கள் இனத்தைச் சார்ந்தவன்) உண்டாவதாகும். அறிவு என்கின்ற விசேட உணர்வானது ஒருவற்கு மனத்தின் கண் உளதாவது போலத் தோன்றி உண்மையில் அது அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உளதாகும்.

மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் ஒருவன் தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை பொறுத்தே ஏற்படுவதாகும். மனம் தூயர் ஆயினர்க்கு அவர்களுக்குப்பின் எஞ்சி நிற்கும் மக்கட்பேறு, புகழ் முதலியவை நன்மை பயப்பனவாகும். ஆனால் இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. அதாவது அவர்கள் செய்யும் எச்செயலும் அவர்க்கு நன்மை பயப்பதாகும். மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கம் அளிப்பதாகும். இனத்தின் நன்மையோ அவ்வளவோடு நிற்காமல் எல்லாப் புகழையும் கொடுக்கும். மன நன்மையை முன்னைய நல்வினையால் தாமே உறுதியாக உடையவர் ஆயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல வலுவான காவலாக அமைவதாகும். மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும். இனத்தின் நன்மையால் அவ்வின்பம் மேலும் சிறப்புடையதாகும்.

மனமும் நட்பும்

தமக்கு உற்றவர் போன்று வெளிக்காட்டி உண்மையிலேயே உறாதவரோடு கொள்ளப்படுகின்ற நட்பானது பொது மகளிருடைய மனம் போன்று உள்ளொன்றும் புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். இதுபற்றியே உள்ளொன்று புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என இராமலிங்க அடிகளார் அருளிப் போந்தார். பல நல்ல நூல்களைக் கற்றுத்தேர்ந்த போதிலும் அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக, உள்ளன்போடு பழகுதல் என்பது உண்மையிலேயே மாட்சிமை அடையாதவர்க்கு இல்லையாகும். மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், சூதும் ஆகிய இம்மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரால் மேற்கொள்ளப்படுகின்ற உறவாகும்.

மனமும் வினையும்

“வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற”

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு”

ஒரு தொழில் செய்வதற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்கு உரியான் ஒருவனது மனத்தினது உறுதியேயாகும். மற்றவையெல்லாம் வேறானவை. உறுதியான மனத்தின் கண் ஊக்கம் பிறக்கும். இவ்விரண்டும் சேர்ந்த மனத்தின் கண் உயர்வுள்ளம் தோன்றும். இந்த உயர்வான உள்ளத்துடனே செய்யப்படுகின்ற வினை எதுவும் மாந்தர் உயர்வடைய உறுதுணைபுரியும்.

-வளரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1996

நன்றியோடு வாழ்வோம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
ஒரு தேர்த்திருவிழா…
வெற்றியின் வித்து…!