Home » Articles » எண்ணங்களும் வாழ்க்கையும்

 
எண்ணங்களும் வாழ்க்கையும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

5. மனமும் மாண்பும்

மனம் என்பது ஓர் இருளடைந்த பாழ்பட்ட குகையாக, இருட்டறையாக இருக்கும் வரை அதிலிருந்து மார்க்கம் எதுவும் தெரியாது. “கருவறையென்ற இருட்டறையில் கண்ணில்லாக் குழவி படுந்துன்பத்தை யொத்த துன்பத்தை அத்தகைய மனமுடையோர் அடைவர்” இதைத்தான் ‘அகத்திருள்’ என்று சான்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருள் அகல வேண்டுமானால் அவ்விடத்தில் ஒளி ஏற்பட வேண்டும். அவ்வொளி எங்குள்ளது? அதுதான் அறிவு என்னும் சுடர். ஆணவ இருளை போக்கும் விளக்கு.

அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச் சொல் இவற்றிக்குப் பாசறையாக மனம் இருக்கும் வரை அவ்விடத்தில் ஒளிதோன்ற வழியில்லை. இவற்றுடன் கூடச் சேர்ந்த அகந்தையென்ற ஆணவமும் இருக்கும் வரை மனம் மாசுடையதாகி, தீய எண்ணங்கள், தோற்றுவிக்கப்படும் இடமாக அமைந்து விடுகிற அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுபதற்கும், அழுக்காறு முதலிய தீக் குணங்களைப் போக்குவதற்கும் உரிய வழி அறத்தினைக் கடைப்பிடித்தலாகும். அறமெனப்படுவது ‘வாய்மை என்ற தூய்மை’ மனத்தின் கண் வாய்மையென்ற தூய்மை நிரம்பப்பெறுகின்ற பொழுது மற்ற அழுக்குக்கள் தானாக அவ்விடத்திலிருந்து அகற்றப்படுகின்றன.

நம்முடைய உடம்பின் புறத்தே ஏற்படுகின்ற வேர்வை, அழுக்கு, சளி, பீளை போன்றவற்றை அவ்வப்பொழுது நன்னீர் கொண்டு கழுவினால் தான் உடம்பு சுத்தமாகின்றது. சுகம் பெறுகின்றது. நன்கு அழுக்கு போக்க் குளித்த பிறகு சுகம் அதிகமாகக் கிடைக்கிறது. மலம் அல்லது சிறுநீர் நன்றாகக் கழித பிறகு உடலில் ஒரு தனிவித சுகத்தை உணர முடிகின்றது. இது எப்போதும் நிரந்தரமாக உள்ள சுகமா? இல்லை. எவ்வெப்பொழுது அழுக்கு சேர்கின்றதோ அவ்வப்பொழுது அதை நீக்கினால்தான் சுகம் ஏற்படுகிறது.

இதைப்போலவேதான் மனத்தின் கண் வந்து அண்டுகின்ற அழுக்காறு, அவா, வெகுளி போன்ற அழுக்கினை வாய்மை என்ற நீரால் கழுவி வெளியேற்றுகின்ற பொழுது மனத்திற்கு ஒரு சுகம் ஏற்படுகின்றது. இச் சுகம் ஒரு தடவை ஏற்பட்டால் தொடர்ந்து இருக்குமா? இருக்காது. மீண்டும் அழுக்குச் சேர்கின்ற பொழுது சுகம் குறைந்து துன்பம் உண்டாகும். எனவே எவ்வளவுக்கெவ்வளவு இவ்வழுக்குகள் சேராம்ம் வாய்மை நிறைந்திருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மனமும் சுகம் பெற்றிருக்கும். வாய்மையைப் பெறுவதற்கு வழி என்ன? தினம் தினம் இருவேளைகளில் குளித்தால் தான் உடம்பிற்கு சுகம் கிடைக்கின்றது. அதுபோன்றே, தினமும், குறைந்தது இருவேளையாவது மனத்தினைத் தூய்மைப் படுத்த வேண்டும். இதற்காகத்தான் நம்முடைய ஆன்றோர்கள் தியானத்தையும் வழிபாட்டினையும் நாம் காலையும் மாலையும் செய்ய வேண்டுமென்ற அன்புக் கட்டளையை அறக் கட்டளையாக இட்டிருக்கின்றார்கள்.

“வாய்மையெனப் படுவது யெதனில் யாதொன்றும் தீமை இலாத சொல்ல்” எனவே மனத்தினை ஒருமைப் படுத்தி “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி” “எல்லரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே” எங்களுக்குக்கிரங்கி மனித குலத்திற்கு நன்மை செய்”என்று துதி செய்கின்ற பொழுதும், அல்லது “எல்லோர்க்கும் நன்றாக வாழ வழி செய் அல்லவா” என்று இறைஞ்சுகின்ற பொழுதும், மனத்தில் தியானம் செய்கின்ற பொழுதும் மனம் தூய்மை அடைகின்றது. மனம் தூய்மை அடைகின்ற பொழுது அத்தூய்மை தொடர்கின்ற பொழுது அங்கு பயம் இல்லை. கவலை இல்லை. துன்பம் இல்லை, மாறாக நிம்மதியும் நிறைவும் இன்பமும் ஏற்படுகின்றது.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”என்ற வாக்கிற்கிணங்க மனம் தூய்மை பெறுகின்ற பொழுது அங்கே அன்பும் அமைதியும் அருளும் தோன்றுகின்றன. அதுவே மனிதன் மனதினால் பெறக்கூடிய மாண்பு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்