Home » Articles » உறுதியா? பிடிவாதமா?

 
உறுதியா? பிடிவாதமா?


கந்தசாமி இல.செ
Author:

மனிதனின் தன்மைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவன் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் இல்லை. ஆனால் அடிப்படையான நிலைகளில் அவன் எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் உண்மையான மனிதனாகக் கருதப்படுவான். இல்லாவிட்டால் தன் பெண்டு பிள்ளைகளிடத்திலேயே மதிப்பிழந்து போவான்; சந்தர்ப்பவாதி என்று இகழப்படுவான்.

உறுதி

மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான முதன்மையான குணங்களில் மன உறுதியும் ஒன்று. ஒருவன் தான் வகுத்துக்கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும். நடு நிலைமையாக நடந்து கொள்வதில் , சொன்ன சொல் மாறாமல் இருப்பதில், பிறர்பொருளை மட்டுமல்ல, அரசாங்கப் பொருள்களையும் கவராமல் இருப்பதில், வரிகளை ஏமாற்றமல் இருப்பதில், வாய்ப்புக் கிடைத்தாலும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளாது இருப்பதில், எளியவர்கள் என்று எரிந்து விழுவதோ வலியவர்கள் என்று அஞ்சி நடப்பதோ இல்லாமல் எல்லாரிடமும் ஒரே மாதியான நிலையில் நடந்து கொள்வதில், துன்பத்தையே அனுபவிக்க நேந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது தன் உரிமையை நிலை நாட்டுவது மட்டுமல்ல மனிதகுல உரிமை வழி நடப்பதில், கடமையைச் செய்வதில் உறுதியாக இருப்பதாகும்.அவர் சொல்கிறாரே – இவர் சொல்கிறாரே என்று கொள்கைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. என்ன பாதிப்புகள் நேர்ந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவன்தான் மனிதன். அரிச்சந்திரன் உண்மை பேசுவதில் உறுதியாக நின்றது போல, காந்தியடிகள் அறப்போரில் உறுதியும் நம்பிக்கையும் கொண்டு வெற்றி பெற்றது போல!

பிடிவாதம்

உறுதி வேறு, பிடிவாதம் வேறு. உறுதி என்றது நல்ல செயல்களில் அழுத்தமாக நிற்பது. பிடிவாதம் என்பது தன் விருப்பத்தை, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள குழந்தைகள் போல அடம் பிடிப்பது. எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம். நாம் வாழக்கையில் அடிக்கடி சந்திப்பதும் கூட , ஒரு குறுகிய வழியில் இரண்டு பேருந்துகள் எதிர் எதிர் திசையில் வருகின்றன. யாரேனும் ஒருவர் பின் நோக்கிப் போனால்தான் அடுத்த நகரவே முடியும். ஆனால் இந்த ஓட்டுநர்கள் இருவரும் பிடிவாதமாக, நான் பின்நோக்கிப் போகமாட்டேன் என்று இருவரும் வண்டியைப்போட்டுவிட்டார்கள் என்றால் அது பிடிவாதம். இது நல்லது அல்ல. யாரேனும் ஒருவர் போனால் தான் காரியங்கள் நடைபறும். இங்கே உறுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கேதான் விட்டுக்கொடுக்க வேண்டும்.

அறிஞர் பெர்னாட்ஷா

அறிஞர் பெர்னாட்ஷாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுவார்கள். ஒரு குறுகிய பாலத்தில் அறிஞர் பெர்னாட்ஷா நடந்து செல்கிறார்கள். எதிர்த்திசையில் ஒரு மனிதர் வருகிறார். பாலம் மிகவும் குறுகியது. இரண்டு பேரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். யாரேனும் ஒருவன் கொஞ்சம் ஒதுங்கினால்தான் மற்றவர் அந்த இடத்தைக் கடந்து செல்ல முடியும். எதிரே வந்தவர் கேட்டார். வழிவிடுங்கள் நான் போகிறேன் என்று. பெர்னாட்ஷா பிடிவாத குணத்தோடு “முட்டாள்களுக்கெல்லாம் நான் வழிவிடுவதில்லை” என்ற தன் பிடிவாதக் குணத்தோடு. எதிரே வந்தவர் மிகவும் அமைதியாக “முட்டாள்களுக்கு நான் வழிவிடுவது உண்டு நீங்கள் போங்கள்” என்று சிரித்துக்கொண்டே ஒதுங்கி வழிவிட்டார். இந்த நிகழ்ச்சி. எத்தகைய அறிஞராக இருந்தாலும் பிடிவாதம் இருப்பின் அது அவமானத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதையே காட்டுகிறது.

பெண்ணினம்

இந்தப் பிடிவாதம் உள்ளவர்கள் சரியோ தவறோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் நடந்து கொள்வதிலேயே பெரும்பாலும் வாழ்க்கையில் தோல்வியைக் காணுகின்றார்கள். இராவணன் சீதையைச் சிறை எடுத்தது தவறு என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தபோதும் தவறான மான உணர்ச்சி காரணமாக எழுந்த பிடிவாதமே அழிவுக்குக் காரணமாக இருந்தது. பொதுவாக பெண்ணினம் சின்னச் சின்ன காரியங்களில் பிடிவாதம் காட்டுவது காரணமாகவே அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முடியாமல் போகிறது. மாறாக நல்ல செயல்களுக்காக மன உறுதியோடு நின்றால் மாபெரும் வெற்றிபெறலாம். பெண்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

முரட்டுத்தனம்

இது பிடிவாதத்தின் அடுத்த கட்டம். பிடிவாதம் உள்ளவர்கள் வாயால் பேசுவார்கள். முரட்டுத்தனம் உள்ளவர்கள் கையால் பேசுவார்கள். பிடிவாதமான பெண்களுக்கு முரட்டுத்தனமான கணவர்கள் வாய்ப்பார்கள். என்று பொது மொழி. முரட்டுத்தனத்தை நாகரிகம் இல்லாத , பண்பாடு வளராத இடங்களில் மிகச் சுலபமாகக் காணலாம். பேசிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று கைகளைக் கலக்க விட்டுவிடுவார்கள். நடுத்தெருக்களில், தண்ணீர்க் குழாய் அடிகளில் இதை நாள்தோறும் காணலாம். சிலசமயங்களில் மக்கள் மன்றங்களில் இத்தகைய கைகலப்புகளும் “வீச்சுகளும்” நடக்கிறது என்றால் அங்கே பிடிவாதத்திற்கும் மேற்பட்ட நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள். முடியாத போதெல்லாம் அவர்கள் இருந்த நெருப்பு வைப்பது போன்ற முரட்டுத்தனமான செயல்களையே செய்வார்கள். முடிவு என்ன ஆயிற்று?

இவ்வாறு அடிப்படையான கொள்கைகளில் மனிதன் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறாமல் உறுதியாக இருந்தால் இன்னல்களை அனுபிக்க நேர்ந்தாலும் இறுதியில் அவன் வெற்றி பெறுகிறான். பிடிவாதம் பிடித்தால் அப்போது வெற்றி போலத் தோன்றினாலும் முடிவு தோல்வியாக அமைந்து விடுகின்றது. முரட்டுத் தனமோ தோல்வியை மட்டும் இல்லாமல் அழிவையும் உண்டாக்கி விடுகிறது. தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களையும் அம் முரட்டுத்தனம் அழித்துவிடுகிறது.

அதனால்தான் பாரதி உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று அழைத்தார். குறைந்தது நமக்கு நாம், உண்மையாக நடந்து கொள்வதில் உறுதியாக நிற்போம். உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்.

டாக்டர். இல.செ. கந்தசாமியின் சலனங்கள், சபலங்கள், மனிதர்கள் என்ற நூலிலிருந்து


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1996

தொடர்ந்து முயற்சி
உங்கள் நெஞ்சம்
வேண்டுகோள்
மூன்றாவது…. கை!
திருவள்ளுவர் எச்சரிக்கிறார்
தன்னம்பிக்கை? இறுமாப்பா?
கோபத்தால் ஏற்படும் தீமைகள்
எண்ணங்களும் வாழ்க்கையும்
உறுதியா? பிடிவாதமா?
எண்ணம்
குழந்தைகள் நடை பயில்வதைப் பாருங்கள்