Home » Articles » எண்ணங்களும் வாழ்க்கையும்

 
எண்ணங்களும் வாழ்க்கையும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

– டாக்டர். கே.கே. கிருட்டிணமூர்த்தி


3. எண்ணமும் வாழ்க்கையும்

இவ்வுலகின் கண் வாழ்கின்ற மனிதர்கள் இனத்தில், மொழியில், மரபில், உடையில், உணவில் வேறுபட்டாலும், ஓரிரண்டு கருத்துக்களில் மட்டும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள். அஃதாது, முதலில் தாம் நீண்ட நாள் நோய்நொடியின்றி இன்புற வாழவேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது தாம் எடுத்த குறிக்கோள்கள், காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெற்றிடல் வேண்டும்’ என்கிற எண்ணம்.

‘மனமே’ – நிலைக்களன்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்,
மற்றைய எல்லாம் பிற’

என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பலவிதமான செயல்களில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் ஈடேறுவதற்கு வேண்டிய வழிவகைகள் யாவை என்பதைச் சிறிது சிந்திப்போம். நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கெல்லாம் ‘மனமே’ நிலைக்களனாக இருக்கின்றது. எண்ணத்திலே உறுதி ஏற்பட்டபோது தான் காரியங்கள் யாவும் சித்தி அடைய முடியும். எண்ணத்திலே உறுதி ஏற்பட மூலாதாரமாக இருப்பது நம்பிக்கை ஆகும்.

மூன்று வகை நம்பிக்கை

நம்பிக்கையில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன, தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை, அவநம்பிக்கை.

‘நம்பினோர் கெடுவதில்லை. இது நான்குமறைத்தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாமே’ இது அமுத மொழி. அவநம்பிக்கை உள்ளவர்கள் எப்பொழுதும் மனத்தளர்ச்சியுடையவரகளாக இருக்கின்றார்கள். ஆதலால் அவர்களுடைய எண்ணத்தில் திட்பம் ஏற்படுவதில்லை. தன்னால் செயல்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையும், எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நன்னம்பிக்கையும் மனத்தில் தோன்றி அந்த எண்ணம் வலுப்பெறும்போது திட்பம் ஏற்படுகின்றது.

வினைதிட்பம் என்பதற்கு ‘செயலில் உறுதி’ என்பது பொருள். செயலில் உறுதி ஏற்படுவதற்கு மனத்தில் உறுதி ஏற்பட்டாக வேண்டும். மனத்தில் உறுதி ஏற்படாதபோது செயலிலும் உறுதி ஏற்படமாட்டாது’ . ஒரு தொழிலில் அல்லது செயலில் வெற்றி பெறுவதற்கு ஒருவனுக்கு மனவுறுதி இன்றியமையாதது என்பது இதனால் பெறப்படும்.

மனமே எதற்கும் உறைவிடம்

இன்பமோ – துன்பமோ, நன்மையோ – தீமையோ, வெற்றியோ – தோல்வியோ, இவற்றி நாம் எதையும் அமைந்து அனுபவிபதற்கு நமது ‘மனநிலை’ தான் காரணமாக இருக்கின்றது. புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞராகிய மில்டன் கூறியதாவது.

‘மனம்தான் அதன் உறைவிடம். அந்த மனத்தினால் சொர்க்கத்தை நரகமாக்கலாம். நரகத்தையும் சொர்க்கமாக்கலாம்.’

இன்பம் நிறைந்ததாகச் சொல்லப்படும் சொர்க்கத்தை துன்பம் மிகுந்ததாக்க் கூறப்படும் நரகமாகவும் மனம்மாற்றி விடக்கூடும்! அதேபோன்று துன்பம் நிறைந்தது எனப்படும் நரகத்தையும், இன்பம் செறிந்ததெனக் கூறப்படும் சொர்க்கமாகவும் மனம் மாற்றியமைத்துவிடக் கூடும். இரண்டுக்கும் மனத்தின் நிலைமைதான் காரணமாக இருக்கின்றது. அதனால் தான் மனமே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

ஆதலால் மனநிலையிலே அவசியமான ஓர் உறுதி ஏற்பட்ட பொழுதுதான், ஒருவரது குறிக்கோளிலே வெற்றி ஏற்பட்டு, நல்வாழ்வு உண்டாகிறது. அந்த மன உறுதியை அடையப் பெறாதவர்களுக்கு அவை கிட்டுவதில்லை. இவற்றால், வெற்றியடையவேண்டும் என்ற பெருவிருப்பம் உள்ளவர்களுக்கு மனவுறுதி இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பது புலனாகும்.

இடையூறுகளுக்கு இன்னல்களும்

இன்று வாழ்க்கையிலே வெற்றியடைந்து ஒளிச்சுடர் விட்டு விளங்குபவர்களுடைய வாழ்க்கைச் சரித்த்தை உற்று நோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம். அவர்கள் அனைவருமே பலப்பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அடந்து துன்பத்தில் துவண்டு, அனுபவம் பற்றும் தேறிய பிறகுதான் இன்றடைந்துள்ள வெற்றிலக்கு ஆளாகி இருக்கின்றார்கள். மகத்தான பல அரிய பெரிய செயல்களெல்லாம்மலைபோன்ற பல இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர்த்துப் போராடிக்கடந்த பின்புதான் செய்து முடிக்கப் பெற்றுள்ளன.

இதுபற்றித்தான்,

‘வைரமுடைய நெஞ்சு வேண்டும் – இது
வாழும் முறைமையடிப் பாப்பா’

என்று பாரதியார் பாடினார்.

வெற்றிக்கு வழி

வெற்றி பெற்று வாழ விரும்பும் மக்களுக்கு எதனாலும் கலக்கமடையாத எதையும் தாங்கவல்ல – ஒரு திடமனம் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையம் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்த பேரறிஞர் பலரும் இதனையேதான் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

நமது மனத்தின் உறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ அதற்குத் தக்கபடிதான் நமக்கு ஏற்படக் கூடிய வெற்றியின் அளவும் இருக்கும். தினை விதைத்தவன் தினையறுப்பான். வினை விதைத்தவன் வினையறுப்பான். விதையொன்று போட வேறொன்று முளைக்குமா? “நாம் விதைத்த பொருளில் தானே அறுவடை செய்ய முடியும்” என்பன அறிவுடைய பெரியோரின் மூதுரைகள். இவற்றால், ‘நன்மை விதைத்தால் நன்மை விளையும். மாறாக தீமை விதைத்தால் தீமைதான் விளையும்’ என்பது தெளிவாக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலத்தில் நாம் எண்ணிய எண்ணங்கள் தன்மைக்கும், வலிமைக்கும் தக்கபடிதான் இந்தக்காலத்தில் நமக்கு வாழ்க்கைநிலை அமைந்துள்ளது. இந்தக் காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய எண்ணங்களின் போக்கையொட்டித்தான், இனி வருங்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய வாழ்க்கை நிலை அமையும். இவையெல்லாம் அறிஞர்களின் ஆராய்ச்சி அனுபவங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையான உண்மைகளாகும். இப் பேருண்மகளை நாம் சரிவர உணர்ந்து கொண்டு, இவற்றின் தன்மைகளுக்கு ஒப்ப நமது மனநிலைகளின் போக்கை நமது தேவைகளுக்கேற்ப உறுதிபெற அமைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து கொண்டால், துன்பத்தை இன்பமாகவும், தீமையை நன்மையாகவும், தோல்வியை வெற்றியாகவும் நாம்மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

(இன்னும் வரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1996

உங்கள் நெஞ்சம்
பெண்கள் நிலை உயரவேண்டுமானால்….
நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய குறிக்கோள்
நாவடக்கம்
எண்ணங்களும் வாழ்க்கையும்
நாட்டுக்கேற்ற விதி
ஆலோசனைப் பகுதி
சிந்தனைத்துளி
ஆலவிழுதுகள்
சிந்தனைத்துளி
எண்ணம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
பெண்களே!
நியாயம்
உங்களது ஒரு நாள் எப்படிக் கழிகிறது?