Home » Articles » எண்ணங்களும் வாழ்க்கையும்

 
எண்ணங்களும் வாழ்க்கையும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

– டாக்டர் கே.கே. கிருட்டிணமூர்த்தி

2. எண்ணங்கள் என்ன செய்யும்?

எண்ணங்கள் செயல்படும் விதத்தையும் அவற்றால் நாம் பெறக்கூடிய நன்மை தீமைகளையும் எண்ணிப் பார்க்கும் பொழுது சீரிய உண்மைகள் சில வெளிப்படுகின்றன. அவை வியப்புகுரியவையும் உள்ளன.

எண்ணங்கள் உடல், மன நலத்தைத் தருகின்றன.

உடலுக்கும் மனதிற்கும் உட்புறத் தொடர்பு உள்ளது. காணவியலாத மனத்தினுடைய உட்புறத்தின் புற இலக்கணமாக உடல் அமைந்துள்ளது. பல், வயிறு அல்லது காதில் வலி இருக்குமானால் அது மனத்தைப் பாதிக்கின்றது. மனத்தில் பதட்ட நிலையும் கலவரமும் தொந்தரவும் ஏற்படுகின்றன.

மனத்தில் சோர்வு ஏற்படுகின்றபொழுது உடல் சரிவர வேலை செய்வதில்லை. உடம்பில் ஏற்படுகின்ற துன்பத்திற்கு நோய் என்று பெயர். மனத்தினைச் சாருகின்ற ஆசை பாவம் ஆகியவை முதற்காரணமான நோய்கள். அவற்றிற்கு ஆதி என்று பெயர். மனநலம் உடல் நலத்தை விட இன்றியமையாதது. மனம் நலமாக இருந்தால் உடலும் அவசியம் நலமாக இருக்கும். மனம் தூய்மையுடையதாக இருந்தால் உடலில் எந்த விதமான நோயும் வந்து சேரா. எனவே திடமான மனமிருந்தால் திடமான உடலுக்கு அது உத்தரவாதமளிக்கிறது.

எண்ணங்கள் ஆளூமையைத் தோற்றுவிக்கின்றன
:

நல்ல எண்ணம் மனத்தினை உயர்வடையச் செய்து இதயத்திற்கு இதமளிக்கின்றது. கீழ்த்தரமான கெட்ட எண்ணம் மனத்தினைப் பரபரப்படையச் செய்து, உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒளியை நீக்கி இதயத்தை இருட்டடையச் செய்து விடுகின்றது.எண்ணங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் வாக்கினை மட்டுப்படுத்த முடியும். அவர்களுடைய முகம் பார்ப்பதற்கு அமைதியாகவும், வசீகரமாகவும், பண்புடனும் விளங்கும். அவர்களுடைய கண்கள் ஒளியுடன் காணப்படுவதோடு குரலிலும் நல்ல இனிமை இருக்கும்.


எண்ணங்கள் உடலைப் பாதிக்கின்றன:

ஒவ்வொரு எண்ணமும் அல்லது வார்த்தையும் உடம்பிலுள்ள ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு விதமான சுழற்சியை உண்டு பண்ணிவிடுகின்றது. வெறுப்பான எண்ணம் தோன்றுகின்ற பொழுது அதை நீக்குவதற்கு வழி. அன்பு எண்ணத்தை தோற்றுவிப்பதுதான். பயம், விதி போன்ற எண்ணங்களை, துணிவு எண்ணங்களைக் கொண்டு முறியடித்து விடலாம்.

எண்ணங்கள் விதியையும் மாற்றக் கூடியது

மனிதன் எண்ணத்தை விதைத்துச் செயலை அறுவடை செய்கிறான். ஒழுக்கத்தை விதைத்து விதியை அறுவடை செய்கிறான்.

மனிதன் தன்னுடைய எண்ணத்தாலும் செயல்களாலும் தன்னுடைய விதியை நிர்ணயித்துக் கொள்கிறான். அவன் தன்னுடைய விதியை மாற்ற இயலும் தன்னுடைய விதிக்குத் தானே எஜமானன். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நல்ல முறையில் எண்ணுவதாலும் செயல்படுவதாலும் அவன் விதியை அடக்கியாள இயலும்.

சிலர் கர்ம விதிப்படித் தான் எல்லாம் நடக்கும் என்று எண்ணியவர்களாக இருந்து விடுகிறார்கள். இது ஒரு மூடநம்பிக்கை என்று கூடக் கொள்ளலாம். இப்படி நினைப்பவர்கள் ஊக்கம், உற்சாகம் ஏதுமின்றி வாழ்கையில் தேக்கம் ஏறபட்டுத் துன்பத்திற்குள்ளாவர். நாம் சுதந்திரமாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு நமக்குள்ளது.

ரௌடியாக இருப்பவன் எப்பொழுதும் அப்படியே இருப்பதில்லை. அவனை, அறிஞர்கள் தவப் பெரியார்கள் இவர்களிடையே பழகச் செய்தால் அவன் மாறி விடுவான். இரத்னாகர் என்ற கொள்ளைகாரன்தான் இராம காவியத்தை அற்புதமாகப் படைத்த வால்மீகி முனிவராக மாறினான். நல்லெண்ணம் நல்ல ஆசை, நற்செயல் ஆகியவற்றின் மூலம் ஒருவர் யோகியாகலாம். ஞானியாகலாம்.

எண்ணங்கள் உடற்கூறுகளைப் பாதிக்கின்றன

ஒவ்வொரு எண்ணமும் ஏற்படுத்துகின்ற மனச் சுழற்சி, உடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தைச் செயல்படச் செய்கிறது. இது நரம்புத் திசுக்களில் சில மின்சார மற்றும் இராசயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

தீராத பகை, கோபம், வெறுப்பு, பொறாமை, கசப்பு, கவலை ஆகியவை உடலிலுள்ள திசுக்களைச் சிதைவுறச் செய்கின்றன. அதனால் இருதயம். ஈரல், சிறுநீரகம் கல்லீரல் இரைப்பை ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்பட ஏதுவாகின்றது. எண்ணுகின்ற எண்ணத்தைப் பொறுத்து, ஒவ்வொரு எண்ணமும் உடலுள்ள ஒவ்வொரு திசுவிலும் வளர்ச்சிக்குரிய செயல் மாற்றத்தையோ அல்லது, வளர்ச்சி குன்றி இறப்பதற்குரிய செயல்மாற்றத்தையோ ஏற்படுத்துகின்றது.

எண்ணத்தின் வலிமை, சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்குகின்றது

சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மனிதனை உருவாக்குகின்றன என்ற கருத்து பரவலாக உள்ளது. இது சரியான கருதல்ல. ஏனெனில் உலகில் மிகச் சிறந்த தலையாய மனிதர்கள் எனக் கருதப்படுபவர்களில் பலர் வறுமை நிலையிலிருந்தும் துன்பச் சூழ்நிலையிலிருந்தும் தோன்றியவர்கள். சேரிகளிலும் சுகாதாரமற்ற சுற்றுப்புறங்களிலும் தோன்றியவர்கள் கூட உலகில் மிகப் பெரிய மனிதர்களாகியிருக்கிறார்கள். அவர்களில் பலர் அரசியல், பொருளாதாரம் இலக்கியம் கவிதை போன்ற துறைகளில் புகழின் உச்சியை அடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் இந்தியனாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட திரு. முத்துச்சாமி ஐயர் அவர்கள் முற்றிலும் வறுமை நிலையிலிருந்து தோன்றியவர். இரவு நேரங்களில் நகரவைத் தெரு விளக்குக் கம்பங்களுக்கு அடியில் அமர்ந்து அதன் வெளிச்சத்தில் தனது பிடிப்பினைத் தொடர்ந்தும், சரியான உணவின்றியும் கந்தல் உடை உடுத்தும் அவதியுற்றவர். தன்னுடைய வலிவான எண்ணத்தினாலும் எஃகு போன்ற மன உறுதியினாலும் தானே முயன்று முன்னேற்றமடைந்தவர்.

மேலை நாடுகளில் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் புதல்வர் மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவர். தெருக்களில் பூட்சு, பாலிஷ் செய்து பிழைத்தவர் மது விற்றுக் கொண்டிருந்தவர். உணவு விடுதியில் உணவு சமைத்தவர். ஆகியோர் எல்லாம் புகழ் பெற்ற கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் நாட்டின் அதிபர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். தேநீர் கூட வாங்கிக் குடிக்க முடியாம் வெறும் பச்சைத் தண்ணீரை அருந்தி வாழ்ந்த நிலையிலிருந்தவர் ஜேம்ஸ் மேக்டோனால்டு அவர் தன்னுடைய சீரிய எண்ணங்களினாலும் அதன் வாயிலாகப் பிறந்த பெரும் முயற்சிகளிலும் உழைப்பினாலும் பிரிட்டனின் பிரதமராக உயர்ந்தார். அத்வைத த்துவத்தை உலகிற்கு எடுத்தியம்பிய சங்கராச்சாரியார் அவர்கள் கூட வறுமையின் பிடிப்பிற்குட்பட்ட சூழ்நிலையில் தோன்றியவர்தான்.

எண்ணங்களால் தான் உடல் ஆக்கப்பட்டு செயல்படுகிறது:

பல உறுப்புக்களைக் கொண்ட உடல் எண்ணங்களால் ஆக்கப்பட்ட ஒன்றாகும். நம்முடைய உட்புற மனத்தில் தோன்றுகின்ற எண்ணங்கள் உணர்ச்சிகள் உறுதிப்பாடுகள் ஆகியவை தான் புறத்தில் உடலாகத் தோற்றமளிக்கின்றன. தவறான எண்ணத்தால் நாம் நம்மை நம் உடல் மட்டும்ந்தான் என எடை போடுகின்றோம். அதை விடுத்து மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும்தான் எல்லாவறிற்கும் மூலமும் வித்தும் என்பதைத் தெளிவாக நாம் அறிந்து, நல்ல எண்ணங்கள், நல்ல வாக்கு, நல்ல செயல்கள் ஆகியவற்றின் மூலம் பெற்றகரிய எதனையும் பெறலாம். நல்ல அறிநெறிகளில் வாழலாம்.

தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1996

உங்கள் நெஞ்சம்
தொழில் வளம் பெருக வேண்டுமானால்…
அறிவும் உணர்ச்சியும்
உற்சாகமுடன் வாழ வேண்டும்
செயல் வீரர்கள்!
எண்ணங்களும் வாழ்க்கையும்
கவிதை
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள்?
எண்ணம் (உள்ளத்தோடு உள்ளம்)
இல.செ.க. வின் சிந்தனைகள்