Home » Cover Story » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


மதியழகன்
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான ‘டிராலி முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ‘நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச் செல்ல அஞ்சியதில்லை. ஆனால் முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச முற்படும்போது பெரிதும் நடுங்கினேன்” என்று கூறினாராம். அவரே பின்னர் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மேடை நடுக்கத்தை விரட்டி பெரும் பேச்சாளராகிப் புகழ் பெற்றார்.

பேரறிஞர்களுக்கும் மேடைக் கூச்சம் உண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் நாவலாசிரியர் ‘ரெய்னால்ட்ஸ்’ அத்தகைய பெரிய எழுத்தாளருக்கும் பேசுவதென்றால்தான் சிம்ம சொப்பனம்.

ஒரு நாள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை மேடை மீதேற்றி விட்டுவிட்டார்கள். ‘ரெய்னால்ட்ஸ் தவியாய்த் தவித்தார். பேசாது போனாலோ பெரிய கேவலம். என்ன செய்வார் பாவம்? துணிந்து எழுந்துவிட்டார். எழுந்தவரால் நிற்கக்கூட இயலவில்லை. கால்கள் நடுங்கின. கை தாளமிட்டது. உடம்போ வியர்வைக்குளமாகியது.

ஒருவாறு சமாளித்துக்கொண்டு ‘ஐ கன்சீவ்’ என்றார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட வரமாட்டேன் என்றது. ஆயிரக்கணக்கான பக்கங்களில் பெரும் பெரும் நாவல்களை எளிதாக எழுதிய அவருக்கா வார்த்தைத் தட்டுப்பாடு வந்து விட்டது?

மறுபடியும் ரெய்னால்ட்ஸ் ” ஜ கன்சீவ்” என்றார். “ஐ கன்சீவ்” தான். அதற்கு மேல் எதுவும் ஓடவில்லை. அவருக்கு எதிரே இருந்தவர்கள் இதழ்களிலெல்லாம் இளநகை.

எழுதுவதென்றால் பிச்சு வாங்கிட மாட்டாரா? இப்படியா திகைத்துக் திண்டாடிக் கொண்டிருப்பர். வார்த்தைகள் வந்து கொட்டிக் கொண்டிராதோ? மீண்டும் பரிதாபகரமாய் “ஐ கன்சீவ்” என்று சொன்னவர் தாம். அதற்கு மேல் ஒரு வார்த்தை வர வேண்டுமே. உட் கார்ந்து கொண்டுவிட்டார். ரெய்னால்ட்ஸ்.

உடனே ஒரு பெண் எழுத்தாளர் “மிஸ்டர் ரெய்னால்ட்ஸூக்கு மூன்று முறை கருத்தரித்தது.ஆனால் குழந்தைதான் பிறக்கவில்லை” என்று கூறிவிட்டமர்ந்தாள். கூட்டமெல்லாம் “கொல்” என்று ஒரே சிரிப்பு.

“கன்சீவ்” என்னும் ஆங்கில சொல்லிற்கு, கருதுகிறேன் என்னும் பொருளுடன் “கருத்தரிக்கிறேன்” என்னும் பொருளும் உண்டு.

சொல்லாட்சி:

உள்ளத்தில் இருக்கிறது, வாயில் வரமாட்டேன்கிறதே என்று ஏங்குகிறோம். பிறருக்கு எடுத்துச் சொல்ல நமக்குப் பழக்கம் வேண்டும். கருத்து வேண்டும். இத்துடன் சொல்லச் சொல் வேண்டும். அந்த சொல்லைச் சொல்லும் முறையும் அவற்றை பயன்படுத்தும் இலாவகமும் கைவர வேண்டும்.

எண்ணங்களை கேட்போர் நெஞ்சில் நறுக்கெனப் பதியும் வண்ணம் கூறிட சொற்பொழிவாளர்க்கு சொல்லாட்சி தெரிந்திருக்க வேண்டும். தன் கருத்துக்கு எதிரானவர்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் கூட கேட்போர் உணர்ச்சியை தூண்டாவண்ணம் அவர்களே நம் கருத்தை ஆமோதித்து ஏற்கும் வண்ணம் நயமாகச் சொல்ல வளமான சொறகள். இடத்திற்கேற்ற கணைகள் வெளிப்படும்போது சொல்ல நினைத்ததை நாம் விரும்பும் விளைவை, கேட்போர் மத்தியில் உண்டாக்கும் வண்ணம் சொல்ல சொல்லாட்சியை பேச்சாளர் கற்றிருக்க வேண்டும். பேச்சுக் கலையில் வெற்றிபெறச் சொல்லின் பொருள்நயம், ஒலிநயம், இசைநயம் எல்லாவற்றையும் கவனித்தாக வேண்டும். ஒரு சொல் பிசகினாலும் அதனால் விரும்பத்தகா விளைவுகள் ஏற்படக்கூடும்.

பொருத்தமான சொல்லைக் கையாண்டால் சிறந்த வெற்றிகளை பெற முடியும். நாம் பயன்படுத்தும் சொல்லே வெல்லும் சொல்லாக இருக்க வேண்டும்.

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து”

அதாவது சொல்லுக்குப் பதில் வேறொரு சொல்லை அங்கே பயன்படுத்துவது சாத்தியமில்லை என்கிற நிலையில் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

சொல்லாட்சியை சரியாக பயன்படுத்தும் இலாவகம் மட்டும் ஒருவருக்கு கைவந்து விடுமானால் அவருடைய பேச்சு. ஆற்றல் மக்கதாக அமைந்துவிடும்.

ரோமானிய சரித்திரத்தில் எவரும் மறக்க முடியாத மாவீரன் “சூலிய சீசர்”. சீசரைக் கொன்ற பூரட்டஸ், சீசரின் பிணத்தை மேடை மீது கிடத்திவிட்டு, சீசரை “தநான் ரோமின் நலத்திற்காக்க் கொலை செய்தேன்” என்று தான் கொன்றதற்கான காரணங்களை மக்கள் ஒப்புக்கொள்ளும்படி நயமாக எடுத்துச் சொல்கிறான். மேலும் சொல்லுகிறான். ‘இக்காரியத்திற்காக இந்த நாடு என் சாவை விரும்பினால் இதோ இந்த வாளால் சாவேன்’ என்கிறான். புரரூட்டசின் பேச்சு மக்களின் இதயத்தைத் தொட்டுவிடுகிறது. அதுவரை சிசரை மனமார நேசித்து வந்த மக்கள் கூட்டம் புரீட்டசின் பேச்சால் மனம் மாறி சிசரை புரூட்டஸ் கொன்றது நியாயம்தான் என்று முழக்கமிடுகிறார்கள்.

ஆன்ட்டனி வருகிறான். சீசரை சதிகாரர்கள் ஒழித்து விட்டார்கள் என்று எண்ணுகிறான். மடிந்து போன மாவீரன் சீசரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேச புரூட்டசிடம் அனுமதி கேட்கிறான். புரூட்டசும் அவனுக்கு அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து செல்கிறான்.

ஆன்ட்டனி பேசத் தொடங்குகிறான். மிகவும் நயமாக பேசுகிறான். பரூட்டசும், சதிகாரர்களும் சீசரைக் கொன்றது குற்றம் என்று நினைக்கும்படி கூட்டத்தினரின் மனைதை மாற்றி விடுகிறான். சற்று முன் புரூட்டசின் கொலைச் செயலைச் சரி என்று கூறிய அதே கூட்டம் ஆன்ட்டனியின் சொல்வன்மையால் மனம் மாறி எங்கே பூரூட்டஸ்? ஓடிப்பிடியுங்கள். கொல்லுங்கள். வெட்டுங்கள் என்று ஆர்த்தெழுந்தார்கள். இது சொல் வன்மைக்கு ஒரு சிறந்த சான்று.

அவையடக்கம் கூறும் வழிக்கில் ஆன்ட்டனி பேசுவது சொல்வன்மைக்கு ஒரு சான்றாகும். ‘மக்கள் மனம் கொதித்தெழச் செய்யும் சாதுரியமோ, மதிப்போ, நடிப்போ, உச்சரிப்போ எனக்கில்லை” (It have neither wit, nor words, nor worth, nor action, nor utterance nor the power of speech to stir men’s blood).

கம்பராமாயணம் குறித்த வாதத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லின் செல்வர், ஆர். பி. சேதுப்பிள்ளையும் பேரறிஞர் அண்ணாவை வெற்றி கொள்ள முடியவில்லையே. காரணம் அண்ணாவின் சொல்லாட்சி.

அமெரிக்க நாட்டின் மிகச்சிற்ந்த பேச்சாளர் எதுகை மோனையோடு பேசி எதிரிகளையும் கவர்ந்தவர் இங்கர்சால். Climax, Antictimax பாணிகளை சொற்பொழிவாளர்களிலே இவர்தான் முதன்முதலாக வசன நடையிலே அழகாகவும் அமைப்பாகவும் பேசியவர். இவர் சொற்பொழிவிலே ஆங்கிலம் ஆனந்த நடனம் செய்யும். அற்புதமான கருத்துக்கள் துள்ளிக் குதிக்கும். பத்தொன்பதான் நூற்றாண்டில் பேச்சுக்கலையின் ஏகச் சக்கரவர்த்தியாக அவர் விளங்கினார்.

தமிழகத்தின் இங்கர்சால் அண்ணா என்றால் மிகவும் பொருந்தும். “அரசியல் குடிலர்கள்” “இப்படை தொற்கின் எப்படை வெல்லும்?” மேடைப்பேச்சில் அண்ணா தேர்ந்தெடுத்து கையாண்டார். இன்றைக்கும் அவை வென்ற சொற்களாக நிலைத்து உலவுகின்றன. அதேபோல ‘நாம் மிகப்பலர், அவர்கள் சிலர்” , “எதையும் தாங்கும் இதயம்”, “சாய்வு நாற்காலி அரசியல் வாதிகள்” போன்ற சொற்றொடர்களை அண்ணா ஆங்கில மொழியில் இருந்து அழகாக தமிழில் அவரது சொற்பொழிவின் போது கையாண்டு வெற்றி கண்டார்.

மேடைப் பேச்சின் போது, சொற்களைத் தேடித்தடுமாறுகிறவர்கள் ஒரு போதும் சிறந்த பேச்சாளராக முடியாது. சொற்கள் நான்முந்தி நீ முந்தியென முந்திக்கொண்டு வந்து பேச்சில் ஒட்டிக்கொண்டு உயிர் பெற வேண்டும். சிறந்த பேச்சுக்குச் சொல்லாட்சியும், வளமான சொல்லாட்சிக்கு நிறையப்படிக்கும் பழக்கமும் வேண்டும்.

-தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1996

"உதவி வாழ வேண்டும்"
ஆளுமைத்திறன் மேம்பாடு
நமது வீட்டிலிருந்து…!
வள்ளுவர் வாக்கு
சிந்தனைத் துளி
சிந்தனைத்துளி
முதலில் நமது வீட்டில்..
சிந்தனைத்துளி