Home » Articles » இளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல!

 
இளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல!


தியாகராசன் தூசி
Author:

தூசி தியாகராசன்

ஆமாம் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய், என் இளம் நண்பனே? இந்த உலகத்தில் நீ நினைத்ததெல்லாம், நினைத்த மாத்திரத்தில் நடக்கும் என்று நினைக்கிறாயா? அப்படியானால், நிஐ வாழ்க்கையை உலக யதார்த்தத்தைப்புரிந்து கொள்ளாம்மல் கனவுகளில் சஞ்சரிக்கிறாய் என்றே கருதுகிறேன்.

கனவுக்காட்சிகள்;

உனக்கு பிடித்த இன்றைய திரைப்படக் காட்சி ஒன்றையே உதாரணமாய்க் காட்டுகிறேன். நாயகி, கடைவீதியில் போகும் போது தன்கைக்குட்டையைத் தவறவிடுவாள். உட்னே, எதிரில் வந்த நாயகன் அதை எடுத்துக் கொண்டு, காடுமேடெல்லாம் அலைந்து, கடைசில் அவளிடம் தருவான். அதை வாங்கிக்கொண்டவன், அவனை அன்போடு பார்பாள். அவனும் பதிலுக்குஆசையேடு பார்ப்பான். உடனே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஒரு கனவுக்காட்சி ஆரம்பமாகும்.

அக்காட்சியில் ஆயிரக்கணக்கான கைக்குட்டைகள் வானில் மிதக்கும். அரைமுழக் கைக்குட்டையை அணிந்து கொண்டு, நடுவே நாயகி நடனமாடுவாள். தோழியர்கள் பலர், நாயகனைக் கைக்குட்டையிலேயே கட்டி இழுத்து வருவார்கள். பூக்களுக்கும், புகைமண்டலத்திற்கும் இடையே ஆட்டம்- காட்டம் அமர்களமாய் நடந்து முடியும்.

இதையெல்லாம் மரத்தடியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் நாயகியின் அப்பா, இருவரையும் அழைத்து மகளே, நீ சமர்த்து மாப்பிள்ளை தேடும் வேலை எனக்கு மிச்சமானது. இன்று முதல், மாப்பிள்ளை தான் நம் கம்பெனி மேனேஐர். நாளைக்காலையில் உங்கள் கல்யாணம். என்ன சந்தோசம் தானே? என்று தோளில் தட்டிச் சொல்லுவார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் நாயகன்- நாயகி, அடுத்த கனவுக்காட்சியிலே, ஆகாயத்தில் பறந்தபடி, தங்கள் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான், உன் வாழ்க்கையைப் பற்றியும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா, என் அருமை நண்பனே? அப்படியானால், தயவு செய்து, அந்தக்கனவுக் காட்சியைக் கலைந்து விட்டு உலகத்திற்குவா.

யதார்த்தமே முதல்படி

ஆற்றில் இறங்குவதற்கு முன்னர், எங்கே மேடு, எங்கே ஆழம், எங்கே சுழல், எங்கே வேகம், என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு இறங்குவதே, பாதுகாப்பான நீச்சலுக்கு வழிவகுக்கும் அதைப்போல வாழ்க்கையைத் தொடங்கு முன்னரும், அதன் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதுதான், வாழ்வாங்கு வாழ விரும்புவோரின் முதல்படியாகும்.

வாழ்க்கை ஒரு வசந்தம்; இந்த உலக வாழ்வு ஒரு உல்லாசப்பயணம். இளமை அது இனிமை; என்றெல்லாம் எவராவது சொன்னால், தங்களுக்கு ஒரு தவறான வழியைக்காட்டுகிறார்கள் என்றே பொருள்.

உண்மை வாழ்க்கை

வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் என்ற இரண்டு பக்கங்களையும் கொண்ட நாணயம். அதில் இன்பத்தை மட்டுமே தேடுபவர்கள் இடறி விழுவார்கள். துன்பத்தையும் எதிர்நோக்குபவர்களே, வெற்றி பெறுகிறார்கள் என்பது சாதனையாளர்கள் வாழ்வு காட்டும் சத்தியம்.

நிஐவாழ்விலே நீங்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன? அவற்றைச் சமாளிப்பது எப்படி? அதற்குத் தேவையான ஆற்றலின் அளவென்ன? மாற்று வழிகள் என்ன? என்றெல்லாம் முன் கூட்டியே யோசிக்க வேண்டும்.

சிறந்த நிர்வாகிகளைப் பாருங்கள். வெற்றியை மட்டுமன்றி, தோல்விகள் வராமலும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நமது நிறுவனத்தில் நனைத்த அளவு உற்பத்தி ஆகிவிட்டால் நல்லது தான். அப்படி ஆகாவிட்டால் என்ன செய்வது? திடிரென வேலை நிறுத்தம் வந்தால்? மூலப்பொருட்களின் விலையேற்றம் வந்தால்? உற்பத்தி செய்த பொருளின் விலை சரிந்து விட்டால்? மின்சாரத் தட்டுப்பாடு வந்தால்? வாங்கிக் கொள்ள உறுதியளித்தவர் திடிரென மறுத்து விட்டால்? அந்த கால கட்டத்திலே என்ன செய்வது.என்று முன் கூட்டியே மாற்று விழிகளை ஆராய்ந்து வைத்துக் கொண்டே, ஒவ்வொரு அடியையும் வைப்பார்கள் . இதைத்தான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று சொல்லுகிறேன். என் அன்பு நண்பனே.

உலகம் இது தான்

இது ஒன்றும் உதோப்பியா உலகமல்ல; கம்பன் பாடும் கற்பனை உலகமல்ல; ஆதாம் ஏவான் உழைக்காமல் சுற்றித்திறிந்த ஏடன் தோட்டமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு வாசலிலும், நீங்கள் போட்டியைச் சந்தித்தே ஆகவேண்டும். போராட்டம் இல்லாமல், உங்கள் பயணமில்லை.

வாழ்க்கை காட்டாற்று வெள்ளம் தான். அதனால் நீச்சல் கற்றுக் கொள்வாயாக, என் நண்பனே. உலகம் இருட்டறை தான். உன் கையிலுள்ள விளக்கை ஏன் மூடிக் கொள்கிறாய்?

துடுப்பிருந்தால் போதும் என்று மகிழ்ந்துவிடாதே படகிலிருக்கும் ஓட்டைகளை அடைக்க மறந்து விடாதே.

காலையில் எழும்போதே, கனவுக் காட்சிகளையும், கலைத்து விட்டு எழுந்திருவாயாக, பவுர்ணமி நாளாக இருந்தாலும், பகலிலே வெயிலடிக்கும் என்பதை உணர்வாயாக.

நிஐத்தை படிக்க ஆரம்பித்தால், நீ வாழத் தாராகிவிட்டாய் என்று பொருள் .

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment