Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

தகவல் பறிமாற்றத்திறன்

பிறரிடம் தெரிவிக்க விரும்புகிற செய்தியைக் கேட்பவர்கள் அல்லது அதைப்படிப்பவர்கள்உடனே கடைப்பிடிக்கும் அளவுக்குத் திறம்படத் தகவலைத் தெரிவிக்கின்ற ஆற்றலை எவர் ஒருவர் பெற்றிருக்கின்றாரோ அவர் நாவசைத்தால் இந்த நாடே அசையும் ஆளுமைத்திறன் மிக்கவர்கள் இந்த ஆற்றலைப்பெற்றவர்களாக இருப்பர். ஆளுமைத்திறனை மேம்படுத்திக்க்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தகவல் பரிமாற்றத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பேச்சே முதன்மையானது

ஒருவர் மற்றொருவருக்கு ஒரு தகவலைத் தெரிவிக்க விரும்பினால் பல்வேறு முறைகளில் தொரிவிக்கலாம்.
எடுத்துக்காட்டாக சைகைகளின் மூலம், படங்களின் மூலம் தெரிவிக்கலாம். இவற்றை NON, Verbal communication
என்பர். ஆனால் சொற்கள் (verbal) மூலம் தான் நாம் மிகுதியாக தகவல்களை தெரிவிக்கின்றோம். சொற்களைப்
பயன்படுத்தித் தகவல் தெரிவிப்பதில் எழுத்து ( written) மற்றும பேச்சு ( spoken) என இருவகை இருந்தாலும்,
தகவல் பரிமாற்றத்தில் முக்கால் பகுதி பேச்சுமூலம் தான் நடைபெருகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக ஒருவர்
34020 சொற்களைப் பேசுகிறார். ஆகவே பேச்சே முதன்மையானது. அன்றாட வாழ்வில் குடும்பத்தில், அலுவலகத்தில், ஆட்சி மன்றத்தில், தொழிலகத்தில், வணிகத்தில் மற்றும் அக, புறவாழ்வின் அனைத்து நிலைகளிலும் பேச்சு மூலம்
தான் மிகுதியாக தகவல்களைப் பறிமாறிக்கொள்கிள்றோம்.;நமது நாட்டில் எந்தத்தொழிலில் ஈடுப்பட்டாலும் அவற்றில்
70விழுக்காடு துறைகளில் பணியாற்றப் பேச்சுத்திறன் மிக முக்கியம். (speech is essential to some seven out of ten jops in our
country).

சொல்லாண்மை

ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடல்வளமும் உள்ளவளமும் எத்தனை இன்றியமையாததோ அதே போன்று சொல்லாண்மையும் முக்கியம். ஆண்மை என்றாலே ஆளுமை பொருந்திய என்பது பொருள். சொல்லாண்மை என்றால் சொல்லை எடுத்தாளுகின்ற திறன்.

எந்த துறையில் இருப்பவராக இருந்தாலும் அந்தத் துறையில் ஆளுமைமிக்கவராக மிளிரச் சொல்லாண்மை தேவை. சொல்லாண்மை மிக்கவராக இருப்பவரின் சொல்லைக்கேட்டு உலகமே அவர் சொற்படி நடக்கும் என்கிறார் வள்ளுவர்.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லாற் பெறின்;

கேட்க விரும்பாதவர்கள் கூட விரும்பிக் கேட்கும்படியாக சொல்லுகின்ற ஆற்றல் பெற்றிருப்பதே சொல்லாண்மை.

இல்லறத்தில்

இல்லறத்தில் எப்போதும் இனிமை வலம்வர வேண்டுமானால் காயான சொற்களைப் பயன்படுத்தாது கனிந்த சொற்களையே பயன்படுத்திட வேண்டும். எப்போதும் மகிழ்ச்சி துள்ளும் குடும்பங்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அங்கே கோபப்படும் போது கூட சுடுசொற்களை வீசமாட்டார்கள்.

சில சமயங்களில் பல குடும்பங்களில் அமைதிக்குப் பங்கம் விளைவதே தகவல்களைப் பறிமாறிக் கொள்வதில் எப்படிப் பேசுகிறார்கள் என்பது தான்!

சொல்ல வந்த செய்தியைக் கடுமையாக சொல்லுவதும், தெளிவில்லாமல் சொல்லுவதும் அமைதிகுலையக் காரணமாக அமையும்.

இல்லறத்தில் மட்டுமல்ல அலுவலகத்திலும் அதேதான் தன்னிடம் பணியற்றும் ஊழியரிடத்தில் எவ்வாறு பேசுகிறோம் என்பதைப் பொருத்து அந்த அலுவலகத்தில் மட்டுமல்ல எந்த துறையில் இருந்தாலும் தன் பேச்சால் தன்னை சூழ்ந்துள்ளவர்களை ஆளுகின்ற ஆற்றல் உள்ளவர்கள் சாதனையாளர்களாக சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.

ஆட்சிமன்றத்தில் பணியாற்றவும், அரசுக்கட்டிலில் கோலோச்சவும் இந்த ஆற்றல் மிகமிகத் தேவையாகிறது. குறிப்பாக ஒரு ஐனநாயக நாட்டில் வாழ்வோர் இந்தத் திறமை இல்லாவிட்டால் ஒளிவிட முடியாது.

மேடைப்பேச்சு:-

மேடைப்பேச்சு தமிழகத்தில் காலங்காலமாக ஒரு கலையாகவே வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. அகில உலக அளவில் ஐ.நா.மன்றத்திலோ, நாட்டளவில் நாடாளுமன்றத்திலோ பணியாற்றுவதற்கு மட்டுமல்ல ஊரளவில் ஊராட்சியிலோ அல்லது உழவர் மன்றத்திலோ பணியாற்றுவதற்குக்கூட பேச்சுத்திறமை தேவை. தலைமை ஏற்பவர்களுக்கு மட்டுமல்ல
தரகு வேலை பார்ப்போர்க்கும், தங்கள் பொருளை விற்று பணமாக்கும் காய்கறி விற்பவர்கள் முதல் கார் விற்பவர்கள் வரை சொல்லாற்றல் மிக்கவர்கள் தங்கள் பொருளின் சிறப்பைச் சுவையாக எடுத்துச் சொல்லி விரைவாக விற்றுவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.

இதைவிட விற்பதற்கு உரிய பொருள் எதுவும் இன்றி வெறுங்கையோடு சென்று பாலிசிகளை விற்றுவருகிற எல்.ஐ.சி. முகவர்களின் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்.அந்த முகவர்களிலும் அபராமான சாதனை புரிகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் இயல்புகளைக் கூர்ந்து ஆய்ந்தால் ஒன்றை உறுதியாக அறியலாம். அவர்கள் நிச்சயம் சொல்லாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
ஊரில் உழவர் மன்றத்தலைவராக இருக்கிறவர் வேளான்மையில் கால்நடை வளர்ப்பில் வெளிவந்துள்ள புதியதொழில் நுட்பங்களை மன்ற உறுப்பினர்கள் ஏற்று கடைபிடிக்கும்படி எடுத்துச்சொல்ல பேச்சாற்றல் தேவை.

கிராம கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே விவாதப் எழும்போது உண்மைகளை அவையோர் கேட்டு ஆமோதிக்கும்படியாக எடுத்துச் சொல்லிடப்பேச்சாற்றல் தேவை.

நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில் வாதாடுகிற வழக்குரைஞர் எவ்வளவு பெரிய சட்ட மேதையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டப் பேச்சற்றல் தேவைப்படுகிறது. நீதிமன்றத்தில் மட்டுமல்ல சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பபு பெற்ற மக்கள், தலைவர்கள், தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை, சிக்கல்களை எடுத்துச் சொல்லி வாதாடி மக்களுக்கு வேண்டியதைப்பெற்றுத் தரப் பேச்சாற்றல் வேண்டும். எத்தனையோ சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் பேச்சாற்றல் மிக்கவர்களே சிறந்த பாராளுமன்ற வாதிகளாகி பேரும் புகளும் பெறுகிறார்கள்.

பேரறிவாளர்களாக , மிகச்சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கிற பலர் தங்கள் எண்ணங்களை கண்டுபிடிப்புகளை திறம்பட எடுத்துச் சொல்லும் ஆற்றல் அற்றவர்களாக இருப்பதால் உலகத்துக்குத் தெரியாமல் குடத்திலிட்ட விளக்காக இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள்.

உலகப்பெரும் பேச்சாளார்கள்;-

எந்தத் துறையில் இருந்தாலும் எவராக இருந்தாலும் சிறந்த ஆளுமை பெற. விரைந்து புகழ்பெற, வெற்றிபெறப் பேச்சாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். உலகப் புகழ் பெற்ற பேச்சாற்றல் படைத்தவர்கள் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்கள்.
கிரேக்க மக்களைக் கவர்ந்த டெமாதனிஸ், ரோமானிய மக்களைத் தனது பேச்சாற்றலால் வியப்பில் ஆழ்த்திய சிகரோ, எண்ணங்களை ஏற்றமிகு சொல் அலங்காரமாக்கிய பிரிட்ட்ஷ் சிந்தனையாளன் புருனோ, அனல் கக்கப் பேசி மக்களின் வாழ்விலும் வரலாற்றலும் புரட்சியை ஏற்படுத்திய மாவீரன் லெனின். மதத்துக்கு எதிரான கருத்துக்களையும் மயக்கு மொழியில் எடுத்துச் சொல்ல
மக்களைச் சிந்திக்கவைத்த சிங்காரப் பேச்சாளன் இங்கர்சால், நம்பிக்கையிழந்து கிடந்த இங்கிலாந்து மக்களின்
இதயத்தில் தன்னுடைய தீரமிக்கப் பேச்சால் நம்பிக்கை ஒளி ஏற்றிய வின்ஸ்டன் சர்ச்சில் கருப்பர்களுக்கு எதிரான அடிமை விலங்கை முறித்தெறிய முழங்கிய ஆப்ரகாம்லிங்கன், தமிழக கலை இலக்கிய அரசியல் வரலாற்றில் தனக்கு முன்னால் பின்னால் என போற்றத்தகும் அளவுக்கு மறுமலர்ச்சி தூதுவனாக விளங்கிய அண்ணா. இன்னும் பேச்சாற்றலால் வரலாறு படைத்தவர்கள் ஏராளம்.

கத்திமுனையை விடப்பேனாமுனை வலிமையானது. (pen is mightler then sword ) என்பார்கள். ஆனால் பேனா முனையை விட நாவின் நுனி கூர்மையானது. இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டு உலகை அழிவின் விளிம்பிற்கே இட்டுச் சொன்ற கொடுங்கோலன் ஹிட்லர் மகப்பெரிய பேச்சாளன். அவனை எதிர்க்க வேண்டுமென ஈட்டி ஏந்தி வந்தவர்கள் கூட அவனது பேச்சைக்கேட்டுப் பிரமித்துப்போய் பின்வாங்கிக் கொண்டார்கள்.

அந்த ஹிட்லர் சொல்லுகிறான் எழுதப்படும் சொல்லைவிட நாவினால் உச்சரிக்கப்படும் சொல்லுக்கு வலிமை
அதிகம் என்று.

ஆக, ஒருவரின் ஆளுமைத்திறனை அணி செய்வதில் பேச்சாற்றல் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் பேச்சாற்றலில் ஒரு டெமாஸ்தனிசாகவோ, இங்கர்சாலாகவோ அல்லது ஒரு அண்ணாவாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் ஆளுமைத்திறனை மேம்பட்டுத்திக் கொண்டுள்ள சிறிய் எல்லைக்குள்ளாக தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும். இத்துடன் அவசியமான இந்த பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment