Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


admin
Author:

இல.செ.க. அவர்கள் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பணியேற்பதற்கு பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பங்கு மிக முக்கியமானதாகும்.

துணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்பட கல்லூரி விரிவுரையாளர் பலர் விண்ணப்பித்திருந்தினர். ஆனால் இல.செ.க. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வந்தவர். இல.செ.க. அவர்களின் ஆழ்ந்த தமிழறிவை எண்ணி வியப்படைந்த பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எப்படியாகிலும் இவரை தமிழ்த்துறையில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றைய பணி நியமனக் குழுத்தலைவர் (கமிட்டி சேர்மேன்) திரு. கோவை செழியன் அவர்களிடத்தில் அறிமுகம் செய்தார். இந்நிலையில் பி.எச்.டி செய்தவர்கள் எல்லாம் இருக்கும்போது இவரை பணி நியமனம் செய்வது எப்படி என தயங்கிய நேரத்தில், இல.செ.க.வின் ஆற்றலையும் ஆழந்த சிந்தனைகளையும், படைப்புத்திறன், நாவன்மை ஆகியவற்றை விளக்கமாக சொல்லி கட்டாயம் இவருக்குப் பணி நியமனம் வழங்க வேண்டுமென விடாப்பிடியாக வாதிட்டு வெற்றியும் கண்டார்.

பிறிதொருமுறை கோவை செழியன் அவர்களை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சந்தித்த போழ்து, இல.செ.க.வின் ஆற்றலை மெச்சி பராட்டிய கோவை செழியன் அவர்கள்,, மேலும் அன்றைக்கு இவரை தேர்வு செய்யாமல் இருந்தால் மிகச்சிறந்த ஆற்றலாளர், உழவர்களின் உற்ற நண்பர், வேளாண்மையில் ஒரு முற்போக்கு விஞ்ஞானியை இந்த பல்கலைக்கழகம் இழந்திருக்கும் என சொல்லி பெருமைபட்டதை கேட்டதும் கே.கே. அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார்.

பல்கலைக்ககத்தில் பணியேற்ற இல.செ.க. அவர்கள் தொடக்கத்தில் சிறு தயக்கத்திற்கு ஆட்பட்டார். சிறிய உயர்நிலைப்பள்ளியில் இருந்து வந்த அவர், பல்கலைக்கழகத்தில் பெரிய வளாகம் மெத்தவும் படித்த அனுபவம்மிக்க பேராசிரியர்கள் மத்தியில் நமது பணி மிளிர வேண்டுமே என்ற ஆதங்கம்.

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் அரவணைப்பால் தன்னம்பிக்கைக்கொண்ட இல.செ.க. அவர்கள் எதிர்பார்த்ததை விட தமது பணியை சிறப்பாக ஆற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தொடக்கத்திலேயே இயல்பாக தமிழ்ப்பற்று மிக்க கிருஷ்ணமூர்த்தி பல்கலைக் கழகத்திற்கு தமிழ்த்துறை வேண்டுமென்பதில் முன்னணியில் நின்றவர்.

தமிழார்வத்தால் திருக்குறளில் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தந்த குறிப்புரைகளின் பேரில் திருக்குறளில் வேணான்மை என்ற நூல் உருவாக்கபட்டது.

இல.செ.க. அவர்கள் எழுதிய முதல் வேளாண்மை நூல் இதுவே. இன்று வரை ஏற்றப் போற்றப்படும் நூலாக விளங்கி வருகிறது. ஆய்வாளர்களின் ஆய்விற்கு முதல் நூலாக மிளிர்கிறது.

தமிழ்த் தெரிந்தவர்களுக்கு வேளாண்மை தெரியாது…! தமிழ் அறிந்தவர்களுக்கு அறிவியல் வராது என்ற நிலைகளை எல்லாம் தகர்த்து விட்டு பல்கலை ஆய்வாளராக தம்மை உயர்த்திக் கொண்டார்.

தனிமனித முன்னேற்றம், சமூகவியல், உழவியல், உளவியல் வேளாண்மையில் அறிவியல் என பல்வேறு துறைகளையும் எட்டியதோடு, படைப்பாற்றல் மற்றும் ஆய்வுத்துறையில் ஒரு சிகரமாக திகழ்ந்தவர்.

இல.செ.க. அறிவியல் குறித்து எழுதினால் அதனுள் இருக்கிற உயிரியல், வேதியியல், மீன்வளம், கால்நடை வளம் போன்ற அனைத்து துறைப்பற்றியும் இவரால் அலசப்படும்.

“அன்றும் இன்றும் இனியும்” என்ற நூலில் பயிர்கள், கால்நடைகள், மீன்வளம், தோட்டக்கலை என எல்லாவிதமான அறிவியல் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளார். இதுவரை இப்படி ஒரு நூல் வெளிவந்ததாக வரலாறு இல்லை என பேராசிரியர்களும், ஆய்வுத்துறை மாணவர்களும் சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக “வேளாண்மை பழமொழிகள் என்ற நூலை தொகுத்து வழங்கினார்கள். வேளாண்மை பழமொழிகளில் இருக்கின்ற அறிவியல் வேறெங்கும் எதிலும் இல்லையென ஆய்வாளர்கள் சான்றளிக்கிறார்கள். பழமொழிகளில் அத்துணை அளவு அறிவியல் பொதிந்து கிடக்கிறது, மறைந்திருக்கும் அறவியல் கூறுகளுக்கு வெளிச்சம் போட்டு வெளியே கொண்டு வந்த பெருமை இலசெ.க. அவர்களை சேரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment