Home » Articles » நல்ல எண்ணங்கள்

 
நல்ல எண்ணங்கள்


சூரியன்
Author:

நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் மட்டுமே என்றென்றும் நலமாக வாழ்கின்றார்கள். அவர்களின் முகத்தில் புன்னகையும் பொலிவும், கலையும், கலகலப்பும் மின்னும் மிளிரும். நல்ல எண்ணமுடையவர்கள் வாழ்க்கையில் ஒளி மயமாகப் பவனி வருவார்கள். ஏனெனில் தூய எண்ணங்கள் நிறைந்த இதயத்தில் தீய சிந்தனைகள் உதயமாவதில்லை.

“எண்ணம்போல் வாழ்வு” இதுதான் உலக நியதி. நல்லன எண்ணுபவர்கள் நல்லன அடைவார்கள். தீயன எண்ணுபவர்கள் தீமையைத் தழுவுவார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் அதையே அறுவடை செய்வான்.

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது வள்ளுவம் நல்ல எண்ணம் இருந்தால் நானிலத்தையே வென்று வாகை சூட முடியும். உயர்ந்த எண்ணமுடையவர்களுக்கு அழிவில்லை உணர்வு எப்போதும் உண்டு.

நல்ல எண்ணமுடையவர்கள் சொல்வது பலிக்கும். நல்ல எண்ணங்கள் வாழ்வில் நலிவைத் தராது. நாடே போற்றும் நற்புகழ் எய்த அது வகை செய்யும்.

எண்ணங்கள் தான் உலகை ஆளுகின்றன. மனம்போல் வாழ்வு என்பத எண்ணம் போல் வாழ்வு என்பதின் மாற்று வடிவம். உயர்ந்த எண்ணங்கொண்டவர்கள் உயர்வடைவார்கள். அது அல்லாதோர் அதன் எதிர்விளைவையே ஆட்கொள்வர்.

“நல்லன எண்ண வேண்டும்” என்பான் பாரதி. “நல்லன எடுத்து அல்லன விடுத்தல் வேண்டும்” என்பார் அறிஞர் அண்ணா.

தினசரி காலை எழுந்தவுடன் இரண்டு கைகளையும் கூப்பி இறைவா, “இன்று நான் சந்தோசமாக இருப்பேன்” என்று மூன்று முறை உங்கள் எண்ணத்தை வெளியிட்டால் அந்த நாள் முழுவதும் நீஙகள் சந்தோசமாக இருப்பீர்கள். இது நடைமுறையில் கண்ட உண்மை.

எந்த லட்சியத்தை நாம் அடைய விரும்புகின்றோமோ அதையே மீண்டும் மீண்டும் எண்ணினால் நிச்சயமாக அக்காரியம் கைகூடும்.

நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் சரி நம் எண்ணத்தில் அது பதிந்திருந்தால் அதை நாம் அடைய முடியும்.

நாம் தான் நமது எண்ணம். நமது எண்ணம் தான் நாம். தீதும் நன்றும் பிறர் தர வராது. நம் உயர்வுக்கும், நம் தாழ்விற்கும் நாம் தான் காரணம். ஆம், நம் எண்ணந்தான் காரணம்.

ஆசை, விருப்பம், நினைவு, எண்ணம், எதிர்பார்ப்பு, நோக்கம், லட்சியம் இவைகள் ஒரே மாதிரி தோன்றினாலும் வெவ்வேறு சூழலில் பயன்படுத்த வேண்டியன. இவைகளுக்கு எதிர்ப்பொருளும் உண்டு. பேராசை பெரு நட்டம்: கெட்ட விருப்பம் சங்கடம் தரும். கெடுவான் கேடு நினைப்பான். தீய எண்ணம் அழிவைத் தழுவும்.

நல்ல எண்ணம் மரணத்தைக் கூட மண்டியிட வைக்கும். அதன் வரவைக் கூட தள்ளிப்போட வைக்கும்.

ஆசை, களவு, கோபம், வெறுப்பு, விருப்பு, மகிழ்ச்சி கவ செயல்களுக்கு நம் எண்ணம், நம்பிக்கை தான் காரணம்.

நம் எதிர்பார்ப்பு, ஆசைகள் நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது. எண்ணம் ஈடேறாவிட்டால் களவு செய்யவும் பொய் சொல்லவும் மனது துணிகிறது.

நினைத்ததைச் சாதிப்பதற்காக விதிகளை மீறி முறை தவறி குறுக்கு வழியில் ஆதாயம் தேட ஆசைப்படுகிறது மனம்.

அருள்மிகு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரையை நினைவு கூறுவோம்.

“தீபத்துக்கு நல்லெண்ணெய் போன்றது, உலக வாழ்வுக்கு நல்லெண்ணம்.

நல்லெண்ணெய் இல்லாவிட்டால் திரி எரிந்துவிடும். நல்லெண்ணம் இல்லாவிட்டால் மனிதர்களுக்கும் எண்ணெய் இல்லாத் திரியின் கதிதான் நேரும்.

நல்லெண்ணெய் வற்றும் நல்லெண்ணமோ வற்றாத அமுத ஊற்று”.

தவத்திரு சீதாராம சுவாமிகள் கூறுகிறார், உங்களது ஒழுக்கமே உங்களது விதியை உருவாக்குகிறது. எனவே விதி என்பது உங்களது சிருஷ்டியேயாகும்.

நீங்களே தான் விதியை உண்டாக்கியிருக்கிறீர்கள். அந்த விதியை உயரிய எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும், நல்ல சிந்தனைகளாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.

“நான் சர்வ வியாபியான பிரமன்” என்று எண்ணுங்கள்.

அங்ஙனமே நீங்கள் ஆகிவிட முடியும் இதுவே ஒப்பற்ற தர்ம நியதி.

எந்த செயலும் மூன்று விதமான விளைவை ஏற்படுத்துகின்றன.

அ. அது உங்களுக்கு அதற்குரிய பலனை அளிக்கிறது.
ஆ. அது உங்களது சுபாவத்தையும் தாங்கி நிற்கிறது.
இ. உங்கள் மனதில் அது ஒரு பதிவை ஏற்படுத்திச் செல்கிறது.

இந்த மனப்பதிவு திரும்பத்திரும்ப அந்தச் செயலைச் செய்ய உங்களைத் தூண்டி நிற்கும்.

அந்த மனப்பதிவு ஒரு எண்ண அலையாக உருக்கொண்டு வேலை செய்யும். ஒரு செயல் வெளியுலகிலும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது.

எண்ணங்களே உங்களது தோற்றத்தை உருவாக்குகின்றது. எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு சிறந்ததோர் தோற்றத்தை உருவாக்க முடியும்.

மனம் சதா உயரிய எண்ணங்களில் விளங்கினால் உங்களது செயல் பிறரால் மெச்சக்கூடிய அளவுக்கு அமையும்.

எனவே நல்ல எண்ணம் உடையோர் தோல்வி கண்டு துவளுவதில்லை. வெற்றிகண்டு குதிப்பதில்லை. இன்றில்லையேல் நாளை நடக்கும் என்ற அபார நம்பிக்கையில் செயல்களில் ஈடுபடுவர். வாகை சூடுவர்.

நல்ல எண்ணமே நல்வாழ்வின் திறவுகோல். நல்ல எண்ணமுடையோரின் முகம் முதுமைக்காலத்திலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். முதுமைக் கோடுகள் தலைகாட்டாது.

“நல்லன எண்ணுவோம்Ð நலமாக வாழ்வோம்!”


Share
 

3 Comments

 1. 7e645 says:

  veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

 2. Baskar says:

  En Manathil ulla karumai ippotuh illa super thank u sir

 3. ramesh says:

  தீபத்துக்கு நல்லெண்ணெய் போன்றது, உலக வாழ்வுக்கு நல்லெண்ணம்.

  நல்லெண்ணெய் இல்லாவிட்டால் திரி எரிந்துவிடும். நல்லெண்ணம் இல்லாவிட்டால் மனிதர்களுக்கும் எண்ணெய் இல்லாத் திரியின் கதிதான் நேரும்.

Post a Comment


 

 


July 1994

நல்ல எண்ணங்கள்
தணியாத ஆர்வத்தை உருவாக்குங்கள்
இதோ… உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
ஆளுமைத்திறன் மேம்பாடு