Home » Articles » ஆளுமைத்திறன் மேம்பாடு

 
ஆளுமைத்திறன் மேம்பாடு


admin
Author:

உடலோம்பல்

ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடல்நலமும் உடல் வளமும் செழிப்பாக இருந்திட வேண்டும் என்றும், அதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவுநெறிகளையும் உண்ணும் முறைகளையும் முந்திய கட்டுரையில் கண்டீர்களல்லவா? எதற்கும் மீண்டும் ஒருமுறை தன்னம்பிக்கை பிப்ரவரி, மார்ச் இதழ்களை எடுத்துப் படியுங்கள். ஆம்Ð உணவை நன்கு மென்று விழுங்குவது எவ்வளவு இன்றியமையாதது என்பது தற்போது விளங்குகிறது. உணவிலுள்ள சத்துக்கள் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளவும், இரைப்பை போன்ற செரிமான அகவுறுப்புகளின் செயல்திறனை நெடுநாள் நீட்டிக்கவும் பல்லின் நலனை பாதுகாப்பு மிகமிக முக்கியமாகும்.

பல்லும் சொல்லும்

பல்போனால் சொல் போகும் என்பார்கள். போன பல்லுக்கு மாற்றுப்பல் பொறுத்தும் அற்புதங்களை மருத்துவம் செய்கிறது. ஆனால் இயற்கையான பல்லுக்கு இருக்கிற வலிவும் பொலிவும் செயற்கைப் பல்லுக்கு இருக்குமா? செயற்கைப் பல்லைக் கட்டிக்கொண்டாலும் கடினமான பொருள்களை கடித்து அரைக்க அந்த பற்கள் பயன்படாது, சொல் உச்சரிப்புகளும் கூட சிலருக்கு பொருந்தி வருவதில்லை.

பல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது

ஆரோக்கியமான பற்கள் உறுதி வாய்ந்தவை. நமது மேல்தாடை எலும்பிலும் கீழ்த்தாடை எலும்பிலும் அவை நன்றாக ஆழமான குழிகளில் பதிந்துள்ளன. இந்தக் குழிகளின் வழியாகப் பற்களுக்கு வேண்டிய இரத்தம், இரத்தக் குழாய்கள் மூலம் வருகிறது. பற்களை தூய்மையாக பராமரிக்காதபோது உணவுப்பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி அழுகி கிருமிகள் பெருகிவிடும். அந்தக் கிருமிகளும் நச்சுப் பொருள்களும் இரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு கேடுகளை விளைவிக்கும். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போல உடல் நலத்தைக் கெடுக்க நலமில்லாத பற்களே போதும்.

குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என் நண்பர் ஒருவருக்கு பற்கள் மிகவும் சிறுத்து அதிக இடைவெளியுடன் இருக்கும். எப்படி உங்களுக்கு இப்படி ஆனது என்று கேட்டேன். சிறு வயதில் மிகுதியாக மிட்டாய்களை உண்டதால் பல் இப்படி ஆகிவிட்டது என்றார். கண்ட நேரத்தில் கண்டதை வாங்கி உண்ணும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பெரியவர்களே பலர் இந்த பழக்கத்தில் குழந்தைகளைப் போலத்தான் இருக்கிறார்கள். பொதுவாக அப்படி உண்பவர்கள் உண்டு முடித்ததும் வாய்கொப்பளித்து பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. உண்டு முடித்து தண்ணீர் குடிப்பார்கள், வாய் கொப்பளித்து பற்களை சுத்தம் செய்யவில்லை என்றால் உணவுப்பொருட்கள் பல்லிடுக்கில் தங்கி அழுகி நஞ்சாகும். சிலரைப் பார்த்தால் நன்கு நவநாகரிக உடையணிந்து பொலிவோடு பவனிவருவார்கள். ஆனால் அவர்கள் வாய்திறந்தால் பக்கத்தில் எவரும் நிற்கமுடியாது.
வாய்நாற்றம்

அப்படி வாய் நாறுகிறவர்களிடம் சொல்லிப்பாருங்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி எதுவும் தெரியவில்லையே என்பார்கள். அவர்கள் நாற்றம் அவர்களுக்கு தெரிய நியாயமில்லைதான். வாய் நாற்றமுள்ளவர்கள் பலர் முன்னிலையில் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்கள் முன் மற்றவர்கள் நின்று பேசவே முகம் சுளிப்பார்கள். ஆளுமைத்திறன் மேம்பாட்டில் உடலோம்பலும் உடலோம்பலில் பற்பராமரிப்பும் மிகவும் இன்றியமையாதது. வாயிலிருந்து வருகிற நாற்றத்தில் இரண்டுவகை உண்டு. ஒன்று பற்கள் கெட்டிருப்பதால் வீசும் நாற்றம். மற்றொன்று உள்ளிருந்து வெளிப்படும் நாற்றம். இரண்டாம் வகை பற்றி பிறகு பார்ப்போம்.

முதல் வகையைச் சேர்ந்தவர்கள் வேப்பங்குச்சியைக் கொண்டு ஒருவாரம் பல்துலக்கினால் வாய்நாற்றம் மறைந்துவிடும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி. தினமும் குச்சியில் பல் துலக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது குச்சியைப் பயன்படுத்தி பல் துலக்கலாம். குச்சியில் பல் துலக்குவது வசதியில்லாதவர்கள் செய்யக்கூடியது என்ற போலித்தனத்தை விட்டொழிக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் தோட்டத் துரவுகளில் வாழ்பவர்கள் கூட ஆலும், வேலும் அருகில் இருக்க பாழும் பல்பொடிகளை வாங்கி பயன்படுத்தும் போலித்தனத்தையும் பார்க்கிறோம்.

பற்களை பாதுகாக்க வழி

காலையில் எழுந்தவுடனும் இரவில் படுக்கச் செல்லும் முன்பும் பல்துலக்க வேண்டும். எதை உண்டாலும், உண்டு பிடித்த பிறகு விரல்களால் பற்களை நன்கு தேய்த்து கொப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலமுறை தேநீர், காபி, கால் அருந்துகிறோம். அவற்றை அருந்தியபிறகு வாய் கொப்பளிக்கிறோமா? என்ன அநியாயம் இது தேநீர் (டீ) குடித்த பிறகு வாய் கொப்பளிப்பதா? குடித்து முடித்து அதன் சுவை நாக்கில் நெடுநேரம் இருந்து கொண்டே இருக்க அதை அனுபவிப்பதிலே ஒரு அலாதியான சுகம் இருக்கிறதே என்கிறீர்களா? சுகம் இருக்கிறது தான், ஆனால் பால் பொருட்கள் பல்லிடுக்கில் தங்கினால் அவற்றின் நுண்கிருமிகள் விரைவாக வளர்ந்து சுகம் சோகத்தில் முடிவடைகிறதே. எனவே, எதைக் குடித்தாலும் உண்டாலும் வாயைச் சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

பல் துலக்கிய பிறகு நாக்கை வழித்து அழுக்கை நீக்காவிட்டால் அந்த அழுக்குகள் குடலுக்குள் சென்று செரிப்பு கோளாறுகளை உண்டாக்கும். இவை எல்லாம் நீங்கள் அறியாததல்ல. ஆனால் அறிந்து கடைபிடிக்காமல் இருப்பதில் பயனில்லை.

கழிவுகள் வெளியேற்றம்

“ஒன்னுள்ளே ஒன்பது வாய் வைத்தாய்” என்று பாடியுள்ளார் திருநாவுக்கரசர். மனிதனின் ஒன்பது வாயில்களாவன: இரண்டு கண்கள், இரண்டு காதுகள், வாய், இரு மூக்குத் துவாரங்கள், சிறுநீர்த்துவாரம் மற்றும் மலவாய். இவை எல்லாமே ஒரு வகையில் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. கழிவுகளை வெளியேற்றுகின்ற இந்த உறுப்புகளை எல்லாம் மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

ஐந்து வகை மலங்கள்

உடலில் கழிவுகளை மலங்கள் என்பார்கள். மலம் என்றால் குற்றம் என்று பொருள். உயிர்களைப் பிடித்திருப்பவை மாய மலம், கன்ம மலம், ஆணவ மலம் என்று மூன்று வகையாக மலங்களைச் சைவசித்தாந்தம் கூறும். அதேபோல் வியர்வை, அபாணவாய், சளி, சிறுநீர், மலம் என ஐந்து விதமான மலங்கள் உடலில் உள்ளன. இவை அந்தந்த உறுப்புகள் மூலம் உரிய நேரத்தில் வெளியேற்றப்பட்டால் உடல் நலமாக இருக்கும்.
பல்வேறு காரணங்களால் சிறுநீர் கழிப்பதையோ மலம் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறோம். சோப்பு, பவுடர் முதலியவை தோலின் வியர்வை துவாரங்களை அடைத்துவிடுவதாலும், இறுக்கமான ஆடைகளை அணிவதாலும், தோல் மூலம் கழிவு வெளியேற்றப்படுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. இவற்றில் முதன்மையானது மலச்சிக்கல்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் தான் பல்வேறு நோய்களுக்கு மூலகாரணம் என்கிறது தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவம். “அனைத்து நோய்களுக்கும் முதன்மையான காரணம் மலச்சிக்கலே” என்கிறார் காந்தியடிகள்.
சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கும் முன்பு முதலில் பேதி மருந்து கொடுத்து குடலைச் சுத்தம் செய்வார்கள். இயற்கை மருத்துவத்திலும் இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்.
மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் மூன்று. 1. உணவுடன் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, 2. மலங்கழிக்கும் உணர்வு ஏற்படும்போது மலங்கழிக்கச் செல்லாமல் இருந்து விடுவது, 3. அளவுக்கு அதிகமாக மாவுச்சத்துள்ள உணவை உண்பது ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

அமெரிக்க ஆராய்ச்சி முடிவு

அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நோயுற்று இறந்தவர்கள் 284 பேரில் 259 பேரின் குடலில் (கோலன்) மலம் இறுக்கக் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

நமது நாட்டிலும் ஆராவாரமான இந்தக் காலத்தில் பரவலாகப் பலருக்கும் மலச்சிக்கல் இருப்பதைப் பார்க்கிறோம். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். கண்களைச் சுற்றி தோல் கருமையாய் இருக்கும். வாய் துர்நாற்றம் அடிக்கும்.
அதாவது, மலச்சிக்கல் இருப்பவர்களின் குடலில் கழிவுகள் மிகுந்து, நச்சுத்தன்மை உடலில் மிகுந்துவிட்டால் அவர்கள் வெளியிடும் காற்றே துர்நாற்றம் உடையதாக இருக்கும்.

மலச்சிக்கலை அறிவது எப்படி?
மலச்சிக்கல் நமக்கு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? காலையில் விழித்தெழுந்து பத்து நிமிடத்தில் மலம் வெளியேறிவிட வேண்டும். கழிப்பறையில் அமர்ந்து இரண்டு நிமிடங்களில் கழிவு முழுவதும் வெளியேறிவிட வேண்டும். மலவாயிலில் மலம் ஒட்டக்கூடாது. இதற்கு மாறுபட்டு இருந்தால் மலச்சிக்கல் இருக்கிறது என்று பொருள்.

பல இருதய நோயாளிகள், கழிப்பறைக்குள் சென்றவர்கள் இதயத் தாக்குதலுக்கு உட்பட்டு இறப்பதைப் பார்க்கிறோம். மலச்சிக்கலினால் கழிவறையில் சிரமப்படும்போது இதயத்தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

உடலில் இருந்து கழிவு வெளியேறியவுடனே உடல் ஆனந்தம் அடைகிறது. பலருக்குத் தன்னை மறந்து அப்போது பாட்டு வரும். ஏனென்றால் உடலில் உள்ள குற்றங்கள் (மலம்) வெளியேறியவுடன் பெறுகின்ற சுகம் அலாதியானது.
மேலும், இன்றைக்கு எங்கு பார்த்தாலும் நீர்கோள் (Sinus) நோயால் துன்பப்படுகிறவர்கள் எண்ணிக்கை மிகுந்து கொண்டே வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் மலச்சிக்கல்தான். அண்டத்தில் மலச்சிக்கல் இருக்குமானால் கண்டத்தில் கபக்குற்றம் வரும் என்பது அகத்தியர் கூற்று. இது உண்மையும் கூட. எனவே, குடலைத் தூய்மையாகப் போற்றுவது இன்றியமையாதது.
தோலும் சிறுநீரகமும்
கோடைக்காலத்தில் தோலும், குளிர் காலத்தில் சிறுநீரகமும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடித்தெடுத்து வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவு நீர் அருந்தாமல் பலர் அய்யோ சூடுபிடித்துக் கொண்டதே என்று கோடையில் துன்புறுகிறவர்களைப் பார்க்கிறோம். தண்ணீர் தேவையான அளவு குடிக்காத போது சிறுநீர்ப் பையில் யூரிக் அமிலத்தில் அடர்த்தி அதிகரிப்பதால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து முந்தைய கட்டுரையிலேயே விரிவாக எழுதி இருக்கிறேன். தண்ணீர் மிகுதியாக குடிக்கவில்லை என்றால் சிறுநீர்ப் பையில் ‘கல்’ உருவாக வாய்ப்பு ஏற்படும்.

குளியல்

தினமும் குளித்து அழுக்கு போகவும் அதை நீக்கப் பூசிய சோப்புப் போகவும் குளிக்க வேண்டும். ‘அழுக்குத் தீர குளிக்கவும் முடியாது; ஆசைதீர வாழவும் முடியாது’ என்பார்கள். நன்கு குளிப்பது கூட சில நோய்களை தீர்க்கும் மருந்தாகிறது. இயற்கை மருத்துவத்தில் இடுப்புக் குளியல், அமர்ந்த குளியல், முதுகுத்தண்டுக் குளியல், உப்புக் குளியல், தலைக் குளியல், உடம்புக் குளியல், அங்ககக் குளியல், வயிற்றுக் குளியல், பாதக் குளியல் என்று பல்வேறு குளியல் வகைகள் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளாகவே பயன்படுகின்றன. வாழையிலைக் குளியல் என்ற ஒருவகையும் உண்டு. உடம்பிலிருந்து அரை லிட்டர் வியர்வையை வெளிக்கொணரும் ஆற்றல் இந்த வாழையிலைக் குளியலுக்கு உண்டு.

எவ்வாறு குளிக்க வேண்டும்

பொதுவாக, தினமும் எவ்வாறு குளிக்க வேண்டும் என்றால், முதலில் உடலை நீரால் நனைத்துப் பிறகு, கீழிலிருந்து மேல்நோக்கித் தேய்க்க வேண்டும். அடுத்து, நீரால் உடலைக் கழுவ வேண்டும். அதன் பிறகு சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். மேலும், குளித்ததும் உடலைத் துடைப்பதில் கவனம் தேவை. உடலில் உள்ள வியர்வைத் துளைகள் கீழ் நோக்கித் திறப்பதால் துடைக்கும்போது கீழிலிருந்து மேல் நோக்கித்தான் துடைக்க வேண்டும். பலவேர் குளிக்கும்போது பாதங்களையும், கால்விரல்களையும் விரலிடுக்குகளையும் தேய்த்துக் குளிப்பதே இல்லை. உடலில் உள்ள தோலில் அதிகம் கழிவு வெளியேற்றப்படுவது பாதத்தில்தான். நம்மில் எத்தனை பேர் கால் விரல் இடுக்குகளில் அழுக்குத் தேய்த்துக் குளிக்கிறோம் எண்ணிப் பாருங்கள். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் கைகால் கழுவி விட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவார்கள். இதில் எவ்வளவோ சுகாதாரத் தத்துவம் அடங்கி இருக்கிறது. மேலும் நாம் அணியும் செருப்புகளைக் கூடத் தினம் துடைத்துச் சுத்தம் செய்தே அணிய வேண்டும்.

எனது பள்ளிப் பருவத்து நண்பர் தற்போது நெய்வேலியில் பொறியாளராக பணியாற்றுகிறார். அன்று பள்ளிச் சிறுவனாக இருந்தபோதும் சரி, இன்றும் சரி உடைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவு முக்கியத்துவம் காலணிக்கும் கொடுப்பார். அவரின் காலணி எப்போதும் அழுக்கின்றி தூய்மையாக இருக்கும். இன்னொரு நண்பர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசியராக இருக்கிறார். தினமும் காலையில் குளிக்கச் செல்லும் முன் அன்று அலுவலகத்திற்கு அணிந்து செல்ல இருக்கும் காலணிகளை உட்புறம் நன்கு துடைத்துச் சுத்தம் செய்வார். காலணியின் வெளிப்புறத்தை எல்லோரும் பாலிஸ்போட்டு பொலிவு செய்கிறார்கள். ஆனால் உட்புறத்தை தூய்மையாக்கி அணிவது மிகவும் நல்லது.

தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க:

அதேபோல் நகங்களை நறுக்கி விரல்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதாவது வாரம் ஒருமுறை தலைக்கு குளிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தலையில் பார்த்தால் பொடுகு விழுந்து முடிஉதிரும். தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். நம்மவர்கள் முடி உதிராமல் இருக்க டானிக் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் தலையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அழுக்கோடு சீவி முடித்து சிங்காரித்து பயனில்லை. முடி உதிர்ந்து போனால் தோற்றப்பொலிவு குறைந்துவிடுமே என்று வருந்திப் பயனில்லை. தூய்மையைப் போற்ற வேண்டும்.

இங்கே நமது நோக்கம் உடலோம்பலை விரிவாக விவாதிப்பதல்ல. ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடலும் உள்ளமும் மிகவும் அடிப்படையானவை என்பதால் அவைபற்றிய கருத்துக்களை சுருக்கமாக இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். அன்றியும் இவற்றை விரித்து எழுதினால் ஒவ்வொரு கூறும் தனித்தனிக் கட்டுரயைôக வடிவெடுக்கும்.

சுவாசமும்

காதுகள், மூக்கு ஆகியவற்றையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். இசுலாமியர்கள் தொழுகைக்கு முன் மூக்கையும் வாயையும் மூன்று முறை சுத்தம் செய்வார்கள். நன்கு சுவாசம் நடைபெற மூச்சுப்பாதை அடைப்பின்றி தூய்மையாக இருப்பது அவசியம். அதேபோல் அவர்கள் தொழுகைக்கு அமரும்போது பாதங்களைப் பின் நோக்கி கடித்து அமர்வார்கள். இதை யோகாவில் வஜ்ஜிராசனம் என்பர்.

இம்முறையில் சுவாசம் தூண்டப்படுகிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் எப்போதும் இரு மூக்குத் துவாரங்கள் வழியாகவும் நிகழாது. சிறிதுநேரம் வலதுபுற நாசியிலும், சிறிதுநேரம் இடதுபுற நாசியிலும் நிகழும். இதன் இயக்கத்திற்கும் மனித மூளையில் சிந்தனையாற்றலும் தொடர்பு உண்டு.

மனிதனுக்கு உணவு, தண்ணீர் இவை எல்லாவற்றையும் விடக் காற்று மிக அவசியம். ஆனால் நாம் இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. உறங்கும்போது கூடச் சன்னல்களை எல்லாம் இறுக மூடிவிட்டு உறங்குபவர்கள்தான் மிகுதி. உணவு இல்லாமல் கூடச் சிலநாள் உயிர் வாழலாம். ஆனால், சுவாசிக்காமல் 3-4 நிமிடங்களுக்கு மேல் உயிர்வாழ்வது சிரமம்.

ஆழ்ந்த சுவாசம்

காற்றில் ஐந்தில் ஒரு பாகம் பிராண வாயுவும் ஏனைய நான்கு பாகத்தில் மிகப்பெருமளவு நைட்ரஜனும், சிறு அளவு வேறு பல அபூர்வ வாயுக்களும் இருக்கின்றன. வயது வந்த ஒரு மனிதன் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 17-20 முறைகளும், குழந்தைகள் 29-30 முறைகளும் சுவாசிப்பர். ஆனால் உடற்பயிற்சிக் காலத்திலும் வேறு உடல் உழைப்பின் போதும் சுவாச எண்ணிக்கை மிகுதியாகும்.

ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும் ஒரு நாழி (பின்ட்) காற்றை உள்ளிழுக்கின்றோம். ஓய்விலிருக்கும் நுரையீரல்களின் கொள்ளளவு ஆறுபின்ட் காற்று. எனவே ஒரு சுவாசத்தில் ஒரு பங்கு காற்றே மாற்றமடைகின்றது. ஆனால் ஒரு ஆழ்ந்த சுவாசத்தில் (Deep Breath) ஒரே முறையில் பத்து மடங்கிற்கு மேல் காற்றை உட்கொள்ளலாம். எனவே, ஆழ்ந்த சுவாசம் அவசியம்.

நம்மில் பலர் குறுகிப்போன மார்பபோடு குறைந்த சுவாசம் மேற்கொள்வர். சராசரியாக மனிதன் தன் வாழ்நாளில் ஐம்பது கோடி முறை மூச்சுவிடுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மூச்சு என்று நிர்ணயிக்கப்படுகிறது என்பர் மெய்ஞ்ஞானிகள். மெதுவாக மூச்சு வாங்கிவிட்டால், அந்த அளவுக்கு அவர் வாழ்நாளும் நீளும் என்பர்.

நச்சுக்காற்று வெளியேற்றமும் இரத்தத் தூய்மையும்

நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை உடலெங்கும் எடுத்துச் செல்வது இரத்த சிவப்பு அணுக்களே. ஒரு துளி இரத்தத்தில் 25 கோடி சிவப்பணுக்கள் இருக்கின்றன. இவற்றின் ஆயுள் முப்பது நாள் தான். இவற்றைப் புதுப்பிக்க ஒவ்வொரு விநாடியும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இரத்தம் ஒருமுறை உடலைச் சுற்றிவர 12 நிமிடங்களாகின்றன. சுவாசித்தலால் இரத்தமும் சுத்தமடைகிறது. உடலுக்குப் போதுமான உயிரியம் இரத்தத்துடன் கலந்து உடலெங்கும் சென்று உயிரணுக்களுக்கு உயிரூட்டவும் பயன்படுகிறது. மூச்சுவிடும்போது கரியமிலவாயு வெளியேறுகிறது. இரத்தம் தூய்மை அடைகிறது.

மூச்சுப்பயிற்சி

முறையான மூச்சுப்பயிற்சி மூலம் மேலோட்டமான நமது சுவாச முறைகளை ஆழ்ந்த முழு சுவாசமாக மாற்றிச் சுவாசிக்கப் பழகிக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சியில் உடல் மன அம்சங்களைத் தவிர வேறு ஓர் அம்சமும் இருக்கிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். காற்றில் பல வாயுக்கள் உள்ளன. இவற்றின் மூலக்கூறுகள் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

யோகாவில், பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது உடல் நலனுக்கு மிகவும் ஏற்றதாகும். உடலும் மூளையும் சோர்வுற்றுக் களைத்திருக்கிற சமயத்தில் மூச்சுப் பயிற்சியின் பயனை உடனடியாகப் பெற முடியுமென்பது எனது அனுபவம்.

குறிப்பாக, தேர்வு நேரங்களில், தேர்வுக்கு முன்பு பலநாள் இரவு பகலாகப் படித்திருப்போம். தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் தேர்வு நடக்கும் போது, தினமும் தேர்வு எழுதி முடித்து வந்ததும் சோர்வாக இருக்கும். படுத்துத் தூங்கி விடவும் முடியாது. அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க வேண்டுமே. இச்சமயங்களில் மூச்சுப்பயிற்சி செய்து புத்துணர்ச்சியையும் சக்தியையும் நான் பெற்றதுண்டு. எனவே முறையான மூச்சுப் பயிற்சிகள் மிகுந்த பயனளிக்கும். இது நம் சிந்தனைக்கு விருந்தாகவே இருக்கின்றது. எனவே ஆளுமைத்திறன் மேம்படுத்த விரும்புகிறவர்கள் உடலோம்புவதும், உடலோம்பலில் காற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நல்லது

-தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1994

நல்ல எண்ணங்கள்
தணியாத ஆர்வத்தை உருவாக்குங்கள்
இதோ… உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
ஆளுமைத்திறன் மேம்பாடு