Home » Cover Story » உயர்ந்த மனோபாவத்தின் அடித்தளம்

 
உயர்ந்த மனோபாவத்தின் அடித்தளம்


இராமநாதன் கோ
Author:

உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றைச் சொன்னால் அது மனிதனின் மனம் தான். இதன் திறமைகள் எல்லையற்றவை. மனதைப்பற்றி, இருபதாம் நூற்றாண்டில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தன; மேலும் நடக்கின்றன. உடலமைப்பியல் பேராசிரியரும் மனஇயலின் தந்தை என போற்றப்படுபவருமான வில்லியம் ஜேம்ஸ், மனிதனுடைய எல்லாக் கண்டுபிடிப்புகளையும் விட உயர்ந்தது என்னவென்றால், மனிதன் தன் மனோபாவங்களை மாற்றுவதன் மூலம், தன் வாழ்க்கையையே மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் என்கிறார்.

உயர்ந்த மனோபாவங்கள் உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறுகிறார்கள். அதை உருவாக்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

1. உயர்ந்த எண்ணங்கள்

எந்த ஒரு செயலுக்கும் முன்னோடி, எண்ணங்கள் தான். நல்ல உயர்ந்த எண்ணங்கள் மனதில் உருவாகுமானால், அந்த செயல் உன்னதமாகிறது. தாழ்ந்த எண்ணங்கள் உருவாகுமானால் அதன் விளைவு தீயதாக அமைகிறது.

இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் பலரை, எப்படி இந்த அளவிற்கு முன்னேறினீர்கள்? என்று கேட்டால் பல ஆண்டுகளுக்கு முன்னரே இதுபோன்ற நிலையை மனதில் எண்ணிவந்தேன் என்பார்கள். இப்படி உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்களுக்கு, அவரவர் திறமைக்கேற்ப, செயலாற்றும் தேவைக்கேற்ப நாளடைவில் முன்னேற்றம் உருவாகிறது. அதேபோல கோவையில் பெரிய கொள்ளை ஒன்றை செய்து சிறை சென்ற ஒருவரை ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டபோது, ஐந்தாண்டுகளுக்கு முன் ஒருநாள் பணக்கட்டுக்களையும் நகைகளையும் அடுக்கி வைக்கும்போது, அந்த வீட்டில் இதைத் திருடினால் என்ன? என்ற சபலம் தோன்றியது. நாளுக்கு நாள் அது மனதிற்குள் வளர்ந்து கொண்டே வந்தது. வீட்டில் அனைவரும் வெளியூர் செல்லும் செய்தியைக் கேள்விப்பட்டேன். இந்த சமயத்தில் என்னுடைய ஆசை விசுவரூபம் எடுத்தது. திருடிவிட்டேன் என்றான்.

செயல் எதுவானாலும், அதற்கு முன் மனதில் உண்டாகும் எண்ணங்கள் தான் காரணம். அந்த எண்ணங்களை சீரமைப்பதில் தான் வெற்றியே அமைகிறது.

நமது மனதில் தோன்றும் சிறு சிறு கசப்புகள், கவலை, கோபம், குற்றவுணர்வு போன்றவைகள் சிறு காலமே இருந்தாலும், அதனாலும் மனப்பாதிப்பு உண்டாகவே செய்கிறது. ஆகவே எல்லா நேரங்களிலும் மனதை உயர்வான எண்ணங்களால் – சிந்தனைகளால் நிரப்பி வைப்பதுதான் முக்கியம். உயர்ந்த எண்ணங்கள் இல்லாது மனம் காலியிடமாக இருந்தால் அதில் தீய எண்ணங்கள் எளிதில் புகுந்துவிடும்.

காப்மேயர் ஒரு உதாரணம் கூறுகிறார். ஒரு பைத்தியகாரன் குப்பை வண்டியை தலைகீழாக கவிழ்த்து ஓட்டிச்சென்றான். அவனை ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்ட போது, நேற்று இதை நேராகத்தான் ஓட்டிச் சென்றான். வழியல் சென்றவர்கள் எல்லாம் அவரவர் குப்பைகளை இதில் போட்டு அசுத்தமாக்கிவிட்டார்கள். அதனால் தான் இன்று கவிழ்த்து ஓட்டுகிறேன் என்றான். அதுபோல நமது மனதை சரிவர பார்த்துக் கொள்ளாவிடில் பலருடைய தீய எண்ணங்களையும் கொட்டி அசுத்தமாக்கி விடுவார்கள்.

மேலும் மனதில் எப்போதும் உயர்வான மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்க நினைவு வங்கியை தயார் செய்யுங்கள் என்கிறார் காப்மேயர். அதில் வாழ்க்கையில் நடக்கும் நல்ல சம்பவங்களைத் தொகுத்து எழுதிச் சேர்த்துக் கொண்டே வந்தால், தேவைப்படும்போது அதில் உயர்வான எண்ணங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக (Positive Thinking) என்ற செயலுக்கு புதிய வடிவம் தந்த நார்மன் வின்சென்ட் பேல் சொல்கிறார். “உங்கள் மனதில் வாழ்க்கையே வெறுமையாக தோன்றினால் உங்களிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பட்டியலிட்டு அதை திரும்பத்திரும்ப நினைவு கூறுங்கள்” என்கிறார். நல்ல ஆரோக்கியமான உடல், உணவு, உடை, வீடு, உறவுகளாக அமைந்துள்ள பெற்றோர், கணவன்-மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்ற உறவினர்கள், படித்த படிப்பு, தொழில், வருமானம், சேமிப்பு, சொத்து, பதவிகள் இப்படிச் சிறு விஷயங்கள் முதல் எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லாதவர் போல தோன்றுவோருக்குக் கூட சுமார் பத்து வகை சொத்துக்களுக்கு மேல் (Assets) தெரியவரும். அப்போது தாமாக மன நிம்மதி உண்டாகும். மேலும் நம்பிக்கை பெருகும்.

மேலும் உங்களுக்குள்ள எதிர்காலக் குறிக்கோள்களை அடைந்துவிட்டால் என்ன மனநிலையிலிருப்பீர்களோ, அதேபோல இப்போதிருந்தே செயல்படுங்கள் என்கிறார். நிச்சயம் அது நிறைவேறிவிடும். சில பண்புகள் நம்மிடம் இருந்தால்தான் உயர்வான நிலை வந்துசேரும். உயர்வான நிலைவரும்போது மேலும் நல்ல பண்புகள் கூடி விடும்.

ஆகவே உயர்ந்த எண்ணங்கள் எப்போதும் மனதில் தோன்றும் வண்ணம் பக்குவப்படுத்துவதே முதல் அம்சம் ஆகும்.

2. கோபத்தைக் கட்டுப்படுத்துதல்

பலருடைய முன்னேற்றத்தின் முக்கியத் தடையே உணர்ச்சிவசப்பட்டு எண்ணுதல், செயல்படுதல் தான். அதுவும் கோபமான மனநிலையில் முக்கிய முடிவுகளைச் செய்தலாகும். மனம் கொந்தளிப்பில் இருக்கும்போது, உணர்ச்சிகள் நம்மை ஆட்டுவிக்கின்றன. அதனால் முற்றிலும் தீய விளைவுகள் உருவாகின்றன.

நொடிப்பொழுது ஆவேசத்தினால், பொருளை இழந்தவர்கள், பதவியை இழந்தவர்கள், உறவுகளை பிரிந்தவர்கள் இப்படிப் பலரைப் பார்க்கத்தான் செய்கிறோம்.

சிலர் என்றோ நடந்து முடிந்த சம்பவங்களை, மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து கொந்தளிப்படைவார்கள். வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மேன்மேலும் விரோதங்களைப் பெருக்குவார்கள்.

சிலர், உணர்ச்சிவயப்பட்டு மற்றவர்களுடன் விவாதம் செய்து, அதனால் சிரமப்படுவார்கள். விவாதமான பேச்சுக்கள் எந்த நிலையிலும் ஒருவருக்கு உண்மையான வெற்றியைத் தருவதில்லை (பட்டிமன்றத்தைத் தவிர). ஏனெனில் ஒருவருடன் விவாதம் செய்தால் இரண்டே விளைவுகள் தான் உண்டாகும். ஒன்று, விவாதத்தின் மூலம் தான் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்கலாம். அதனால் மற்றவருடைய பொறாமைக்கு ஆளாகிறார்கள். இரண்டாவது, தன்னுடைய வாதம் சரியில்லை என்று மற்றவரால் நிரூபிக்கப்பட்டு, தான் ஒரு குற்றவாளியை போன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். இதனால் மற்றவர்களுடன் உள்ள சுமூகமான உறவு குறைந்து, ஒத்துழைப்பை இழக்க நேரிடும். விவாதத்தில் வெல்ல வேண்டுமானால், அதை தவிர்ப்பதே, சிறந்த வழியாகும்.

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

நாம் உணர்ச்சி வயப்பட்டு கொந்தளிப்படையும்போது நம்முடைய உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன. பிறருடைய எதிர்ப்புக்கும் ஆளாகிறோம். ஆகவே அதைக் கட்டுப்படுத்த சில வழிகளைக் கையாளலாம்.

1. மனம் கொந்தளிப்படையும் போது படுத்துக்கொள்ளலாம். படுத்த நிலையில் உடலும் மனமும் சற்று தளர்வடைகிறது.
2. நீண்ட மூச்சு இழுத்து, அடக்கி வைத்து, மெதுவாக வெளிவிடும் பயிற்சியை செய்யலாம். இதை சுமார் ஐந்து நிமிடங்களுக்கோ அல்லது கோபம் தணியும் வரையிலோ செய்யலாம்.
3. கோபமூட்டியவரை என்னவெல்லாம் சொல்லித் திட்டுவதற்கு எண்ணுகிறீர்களோ, அத்தனையையும் ஒரு தாளில் எழுதுங்கள். பிறகு அதை சுக்கு நூறாக கிழித்து எறியுங்கள். இது ஒருவகையில் ஆவேசத்தைக் குறைக்கும்
4. கிறிஸ்துவ மதத்தில் “Confession” என்ற முறை உண்டு. நமது மனதில் வெளியில் சொல்ல முடியாத தாங்க முடியாத குறை அல்லது குற்றவுணர்வு இருந்தால், அதை பாதிரியாரிடம், தனிமையில் எல்லாவற்றையும் சொல்லி மனபாரத்தை இறக்கி விடுதல், இதனால் அமைதியான மனம் உண்டாகிறது.
5. நம்மை கோபப்படுத்திய சம்பவங்கள், மனிதர்கள் எதுவானாலும், அவற்றை அறவே மறந்து விடுதல் சிறந்த வழியாகும். இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களை மன்னித்துவிடுதல் உயர்ந்த செயலாகும். அதற்கு மனோதிடம் மிக அவசியம். மேலேயுள்ளவற்றில் அவரவர் மனநிலை ஏற்கும் வழியை பின்பற்றலாம்.

ஆகவே உணர்ச்சி வயப்பட்டு செயல்படாதிருத்தல் இரண்டாவது முக்கிய அம்சமாகும்.

3. சகிப்புத்தன்மை (Tolerance)

ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ளும்போது அதைப் பலர் குறைகூறி விமர்சனம் (Criticism) செய்வார்கள்.

இதில் குறிப்பாக நம்முடன் இருப்பவர்கள், நம்மை சார்ந்தவர்களின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் மூன்றாவது மனிதர்களும் இதில் சேர்ந்து கொள்வார்கள்.

இதையெல்லாம் பொறுத்து, தொடர்ந்து செயல்படுபவர்கள் முன்னேறுகிறார்கள். தாங்கிக் கொள்ள இயலாதவர்கள், சோர்ந்து பின்வாங்கிவிடுவர்.

சாக்ரடீஸ், எந்த விஷயமானாலும் என்ன? ஏன்? எப்படி? என்ற கேள்வி கேளுங்கள். அதுதான் உண்மையான அறிவு என்றார். அதற்காக அவரை விஷம் கொடுத்துக் கொன்றனர்.

போர்டு, புதியவகை காரை அறிமுகப்படுத்தியபோது அமெரிக்காவில் அவரை குறைகூறி விமர்சிக்காத பத்திரிக்கைகளே இல்லை.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரகத்தை நமது நாட்டுத் தீவிரவாதிகளே ஏற்றுக்கொள்ள மறந்துவிட்டனர்; கடுமையாகவும் எதிர்த்தனர். உயர்ந்த பதவியில் இருப்பவர்களைப் பார்க்கிறோம்; அவர்கள்தான் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் அதிகப்படியான சகிப்புத்தன்மை உண்டு. இல்லையேல் அந்த உயர்வுக்கு தகுதியில்லாதவர்களாகிவிடுவர்.

மேலும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் எந்தச் செயலிலும் சாதனையை உருவாக்க முடியாது.

மற்றவர்கள் கூறும் வார்த்தைகள், நம் மனதை பாதிக்குமேயானால், நமக்கு மனோதிடம் குறைந்த அளவே என்பது பொருள்.

சில சமயங்களில் திட்டமிட்டு புண்படுத்துவதே தொழிலாக செய்யும் சிலரை பார்க்க நேரிடும். அவர்களையும் தந்திரமாக கையாள்வதே விவேகமான செயலாகும்.

ஆகவே சகிப்புத் தன்மைதான் மிகவும் முக்கியமான மூன்றாவது அம்சம் ஆகும்.
உயர்ந்த மனோபாவங்களை உருவாக்க வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் உயர்ந்த எண்ணங்களால் மனதை நிரப்ப வேண்டும்; உணர்ச்சி வயப்பட்டு செயல்படாமல், கோபத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். பொறுமைமிகுந்த சகிப்புத் தன்மையுடன் மனஉறுதியை காக்க வேண்டும். இவையே உயர்ந்த மனநிலையின் அடித்தளம் (Foundation) எனலாம்.

இந்த மனோபாவங்கள் இல்லாத மனிதர்கள், வாழ்க்கையில் தொல்லைகளை சந்திக்கிறார்கள். தாமே உருவாக்குகிறார்கள். நம் மனநிலை தான் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது (Mind is Everything).

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1994

சந்திப்பில் நமது நேரம்
வெற்றிப்படிகள்
உயர்ந்த மனோபாவத்தின் அடித்தளம்