Home » Cover Story » “உயர்ந்த மனோபாவங்கள்”

 
“உயர்ந்த மனோபாவங்கள்”


இராமநாதன் கோ
Author:

கோவையில் ஒரு தொழிலதிபர், தன்னுடைய தொழிற்சாலையை இருபத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதன்பின் சில மாதங்கள், பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவர் ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில் திடீரென ஒரு பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டார். அந்த முடிவு சரிதானா? இனி எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? என்ற எண்ணங்கள் அடிக்கடி அவரை வாட்டின. மனநிலை பாதிக்கப்பட்டார்.

அவருடைய கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் அவருடைய மனோபாவங்கள் நன்கு விளங்கும். அவர் பிடிவாத எண்ணம் கொண்டவர். மற்றவர்கள் நியாயமானவை, சரியானவை என்று ஒரு விவரத்தைச் சொன்னால்கூட அவர் ஏற்கமாட்டார். சரியோ, தவறோ தான் சொல்வதுதான் நியாயமானவை என வாதம் செய்வார். மற்றவர்கள் இவருடைய சொல்லுக்கு மதிப்பு தரவில்லையேல், அவர்களை தரக்குறைவாகப் பேசுவார். தன்னிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அவரிடம் ஏதாவது ஒரு அபிப்ராயத்தைச் சொன்னால், உடனே அதற்கு எதிர்மறையான செயலைச் செய்வார். எல்லாம் தமக்குத் தெரியும்; மற்றவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என எண்ணுபவர். தம்மைச் சுற்றியுள்ள உறவுகளான மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தன்னுடைய சொல் படிதான் செயல்பட வேண்டும் என்பதில் கண்டிப்பானவர். யாராவது அவரிடம் சொல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால், உடனே அது தவறு என கொந்தளிப்பார். வீட்டில் அவர் மனைவி கீரையில் பொறியல் செய்தால் உனக்கு மனித ரசனையே இல்லை. ஏன் அந்த காய்களில் நல்ல பொறியல் செய்யக்கூடாதா? என்பார். அந்த அம்மையார் காய் வகை பொறியல் செய்தால் இந்த மண்ணை யார் சாப்பிடுவது? எடுத்து குப்பையில் கொட்டு என்று குமறுவார்.

அவர் மனைவி எதுவும் புரியாமல் ஒன்றும் செய்யாவிட்டால், நீயெல்லாம் ஒரு பெண், வீட்டின் பொறுப்புடன் செய்யத்தெரியவில்லை என்று கோபிப்பார்.

இப்படி அவரைச் சுற்றியுள்ளவர்களை, எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் கடிந்து கொண்டே இருப்பார். இவருடை இந்த சுபாவங்களில் மற்றவர்களிடம் உள்ள தொடர்பு, நாள்பட இடைவெளியானது. அவருடைய குறுகிய கண்ணோட்டம் அவருடைய வளர்ச்சியை மட்டுமின்றி, அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதித்தது.

மேலும் ஒரு உதாரணம். ஒரு வங்கியின் மேனேஜரின் மனைவி. அதிகாலை படுக்கையை விட்டுஎழும்போது தன் கணவரை அல்லது குழந்தைகளை கடிந்து கொண்டே எழுவார். கணவர் தினமும் வங்கிக்கு வருமுன்னர் அவருடைய மனம் குழம்பி போய்விடுவார். மற்ற மேனேஜர்கள் எல்லாம் காரில் செல்லும்போது இவரிடம் அந்த அளவிற்கு திறமை இல்லையே என குறைப்படுவார். அவர் வங்கியிலிருந்து திரும்பிவர தாமதமானால் அம்மையார் அடைமழை பொழிவார். அதேபோல குழந்தைகளையும் எதற்கெடுத்தாலும் கடிந்து கொண்டே இருப்பார். இதனால் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் செயலிழந்து தவிப்பார்கள்.

இதுபோன்ற மனநிலை உள்ளவர்கள் பலரை ஆங்காங்கு பார்க்கத்தான் செய்கிறோம். சிறுகுழந்தையைப் பார்த்து நான் என்ன உடையைப் போடட்டும்? எதைச் சாப்பிடட்டும்? என்று கேட்டோமானால், அந்த சிவப்பு சட்டையைப் போடு; அந்த இட்லியைச் சாப்பிடு; என்று உடனே சொல்லும். மற்றவர்களுடைய விருப்பு வெறுப்புகளை உணரும் மனவளர்ச்சி அதனிடம் இல்லை. அதனால் சிறுபிள்ளையின் மனோபாவம் இதே மனநிலை சிலரிடம் பெரியவர்களான பின்னும் இருப்பதுதான் மிகவும் பரிதாபம்.

எல்லாம்தன் கைப்பிடிக்குள் இருக்க வேண்டும்; தன் விருப்பப்படி நடக்க வேண்டும். அதுவே கௌரவம் என்ற கோணத்தில் செயல்படுவார்கள்.

இந்த மனநிலையின் விளைவுகள் என்ன?

எல்லாவற்றையும் தாமே முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தால், இவர்களால் எதையும் முழுமையாக செய்ய முடிவதில்லை. அதனால் மனப்பதட்டம், விரக்தி, ஏமாற்றங்கள் பெருகுகின்றன.

மற்றவர்களை அதிகம் கட்டுப்படுத்த நினைப்பதாலும், அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதாலும், காலப்போக்கில் இவர்களை வெறுக்கிறார்கள். யாரையும் நம்பாமல் யாரிடம் ஒத்துப்போக முடியாமல், இவர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். மற்றவர்களின் விரோதங்கள் வளருகின்றன.

இவர்களால் மற்றவர்களும் மனபாதிப்புக்குள்ளாகிறார்கள்; சுயமாக செயல்பட இயலாமல் தனித்தன்மை இல்லாதவர்களாக உருவாகிறார்கள்.

இவர்களின் மனைவி கணவன், குழந்தைகள் எல்லாவற்றிற்கும் இவர்களையே சார்ந்து இருக்கச் செய்வதால், முக்கிய கட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அதனால் பல நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். பிற மனிதர்களிடம் பழகுவதைத் தடைசெய்வதால் உலக நடப்புகளை உணர முடிவதில்லை. எதிர்ப்புகளை பார்த்து, பயந்து கொண்டு சமாளிக்க முடியாமல் ஒதுங்குகிறார்கள். இவர்கள் எந்த செயலிலும் தெளிவான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மற்றவர்களையும் முடிவெடுக்க அனுமதிப்பதில்லை. தன்னுடைய தோல்விக்கெல்லாம் மற்றவர்களை – சூழ்நிலையை குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள். சிறுசிறு பிரச்சனைகளையே பூதகரமாக்கி – அதிலேயே சுழன்று மனநிலை கூட பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

மனநிலையில் மாற்றங்களை உருவாக்குவதே சிறந்த வழி, திறந்த மனநிலை பல வாய்ப்புகளைத் தேடித்தரும். தனித்தன்மையை வளர்க்கவேண்டும்; மற்றவர்களிடம் தனித்தன்மை வளரவிட வேண்டும். அப்போது புதிய புதிய திறமைகள் வெளிப்படும்; முன்னேற்றங்கள் வளரும். உயர்ந்த மனோபாவங்கள் உருவாகும். தனித்தன்மையை வளருங்கள்; வளர விடுங்கள்.

வாழ்த்துக்கள்!!


Share
 

1 Comment

  1. This article is very nice. It is very much required in these days. There is a lot of confusions among family members due to attitude of the head of the family. This is an eye opener for these behaviourial problems. Solution is also given to face the problem in Attitude.

Post a Comment


 

 


January 1994

“உயர்ந்த மனோபாவங்கள்”
முயற்சி – முடிவு – விளைவு
மறதி ஏன் ஏற்படுகிறது?