Home » Cover Story » முயற்சி – முடிவு – விளைவு

 
முயற்சி – முடிவு – விளைவு


கந்தசாமி இல.செ
Author:

வாழ்க்கையில் சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைந்துவிடுகிறார்கள். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். இதேபோல் ஒரு செயலில் இறங்குகிறோம்; சில சமயங்களில் வெற்றி கிடைக்கின்றது; பல சமயங்களில் தோல்வியே முடிவாகின்றது.

காரணம் என்ன?

நாம் அடைந்த வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்ன என்று சிந்தித்துப் புதிய செயலில் இறங்கும்போது இந்தக்குறைபாடுகளை நீங்கிச் செயல்பட்டால் வெற்றிகிட்டும். இதேபோல் இதைவிட, நம் கண் முன்னால் வெற்றி நடைபோடுகின்றவர்களை – அவர்களுடைய செயல்முறைகளை – அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எண்ணிப்பார்த்தால் காரணம் விளங்கும். இதில் ஒரு கூடுதல் நன்மையும் உண்டு. நம்மைப்பற்றி நாமே சிந்தித்து அறிவதைவிட மற்றவர்களின் செயல்முறைகளைக் கண்டு அறிந்து குறை நிறைகளைக் காணுவது எளிது; அடுத்தவர் செயல்களை விருப்பு வெறுப்பற்ற நிலையில் ஆய்வதால் உண்மை தெளிவாகப் புலப்படும்.

வெற்றிக்குரியவர்கள்

வெற்றிக்குரியவர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய முயற்சியே அவர்களுக்கு மூலதனமாக இருக்கும். எந்தச் செயலை எடுத்தாலும் முயன்று பார்ப்போம் என்று எழுந்து நிற்பார்கள். முடியும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் மேற்கொள்ளும் செயலைப்பற்றிய முழு விவரங்களையும் சிந்திப்பார்கள். தன்னுடைய திறமை எவ்வளவு? அதற்குத் தடையாக இருக்கின்றவை எவை எவை என்று கணக்கிட்டுப் பார்ப்பார்கள். செயலைத் தொடங்குவார்கள்.

ஒன்றிலேயே குறி

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நோக்கம் எல்லாம் அதிலேயே இருக்க வேண்டும். 24 மணி நேரமும் அந்தச் செயலைப் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபோன்ற காரியங்களில் முன்னரே வெற்றி கொண்டவர்களின் முயற்சியைக் கணக்கிட்டுப்பார்த்தால் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் எத்தகைய கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியும். நாம் செய்யும் முயற்சியின் அளவு எத்தகையது என்பதையும் கணக்கிட்டு நமது முயற்சியை அவ்வப்போது அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்த முயற்சி

பலரின் தோல்விக்கு தொடர்ந்த முயற்சியின்மை முதன்மையான காரணம் என்பதை எண்ணிப்பார்த்து அறிந்து கொள்ளலாம். தொடக்கத்தில் மட்டும் முயற்சி எடுத்துக்கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்யாமலேயே தோல்வி கண்டவர்களே பலராவர். வேட்டை நாய் முதலில் அங்கும் இங்கும் ஓடித்தன் திறமையை வீணடித்துவிட்டு வேட்டை கிடைக்கும்போது பிடிக்க முடியாமல் வெறுமனே திரும்பிவிடுவது போல் பலர் தொடக்கத்திலேயே முயற்சியை வீணடித்தும் விடுகிறார்கள். ஆதலின் வேட்டை நாய்கள் போல் நாம் ஆகிவிடக்கூடாது. புலியைப் போல காலமும் இடமும் பார்த்து முடிக்கும்வரை முயற்சியை வீணாக்காமல் காத்திருந்து செயல்பட வேண்டும்.

குழந்தையைப் போல

குழந்தை வளர வளர எழுந்து நடப்பதற்கு முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் போது பாருங்கள். அருகில் எது கிடைத்தாலும் அதை ஆதாரமாகக் கொண்டு எழ முயற்சிக்கிறது. கீழே விழுகிறது. மீண்டும் எழுகிறது. நிற்கிறது. விழுகிறது… இப்படியே முடிவில் பீடு நடைபோடுகிறது. ஒரு பாட்டை மனப்பாடம் செய்யும் சிறுவனைப் பாருங்கள். முதலில் பிழையோடு படிப்பதற்கே திணறுகிறான். ஒருநாள் இரண்டு நாள் – பிறகு நன்றாகப் படிக்கின்றான். மனப்பாடம் செய்து முதலில் சொல்லும்போது நிறுத்தி நிறுத்திச் சொல்கிறான். அடிக்கடி தொடர்ந்து படித்தவுடன் விரைவாகச் சொல்கிறான். எந்தச் செயலும் இப்படித்தான் தொடர்ந்த முயற்சி, இறுதியாக உறுதியாக வெற்றியை நல்கும். இதே சிறுவன் மனப்பாடம் செய்த பிறகு மீண்டும் படிக்காமல் நீண்ட இடைவெளிவிட்டு விடுவானாயின் மறந்து போய்விடுவான். அதேபோல் தான் செயலும். தொடர்ந்து முயற்சி இல்லாவிடின் செயல் இடையில் நின்றுவிடும்; பின்னர் தோல்விதான்.

சளைக்கக்கூடாது

வெற்றிகள் எல்லாம் எடுத்தவுடன் கிடைத்துவிடுவதில்லை. இடை இடையே தடைகள், மனச்சோர்வை உண்டாக்கக்கூடிய நிகழ்ச்சிகள், இன்னபிற தொல்லைகள் எல்லாம் ஏற்படும். அதனால் தளர்ச்சி கொள்ளக்கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள் தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன. அடுத்த அடியை எப்படி எவ்வளவு அழுத்தத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள் கூட நமக்குத்தேவை தான். வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். அப்பப்பா, என்னுடைய முன்னேற்றத்துக்குத்தான் எத்தனை தடைகள்? இருந்தாலும் நான் மனந்தளரவில்லை. சளைக்காமல் முயன்றேன். அதனால்தான் இன்று இந்தநிலையில் வாழ்கின்றேன் என்பார்கள். பயணம் செய்யும்போது வழியில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும். பார்த்து நடக்க வேண்டும். தவறிப்போய் முள் குத்தினாலும் அதைப்பிடுங்கி எறிந்து விட்டுப் பயணத்தைத் தொடர வேண்டியதுதான். அதற்காக அங்கேயே உட்கார்ந்து விடுகிறோமா? என்ன?

நேரடிப்பார்வை வேண்டும்

ஆள் செய்வது அத்துவானம்; மகன் செய்வது மத்திமம், தான் செய்வது உத்தமம் என்று ஒரு பழமொழி உண்டு. இது சாதாரண பழமொழி அல்ல. அனுபவ மொழி. எல்லாச் செயல்களையும் ஒருவர் தானே செய்ய முடியாது என்றாலும் கட்டாயம் கவனிப்பு இருக்க வேண்டும். அவரவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து இருந்தாலும் இதுவரை என்ன நடந்து இருக்கிறது என்று அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தால் ஒழிய எந்தக் காரியமும் விரைவில் நடைபெறாது. தாமதம் தோல்வியின் ஆரம்பக் கட்டம் என்பதை வெற்றி பெற எண்ணுவோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலும் உள்ளமும்

வெற்றிபெற பல்வேறு காரணங்களுடன் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் பல்வேறு கவலைகளுக்கு இடம் அளித்துவிட்டு, அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் மட்டும் போதாது; செயல் நடைபெறாது. அதனால் வேண்டாதவைகளை மனதிலிருந்து நீக்கிவிட வேண்டும். வேண்டிய, இன்றியமையாத செயல்களை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல்தான் உடலையும் செம்மையான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் செயலுக்கு அடிப்படைக் கருவியைப் போல விளங்கக்கூடியது உடம்பு. நமது உடம்பே நம் செயலுக்குத் தடையாக இருக்கக்கூடாது. பால் சோம்பலினாலேயே தங்களின் வளமான வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள்.

நினைவு கூறுங்கள்

சிறிதும் தளர்ச்சி இல்லாமல், தொடர்ந்து முயற்சியோடு செய்தால் செய்பவனுக்கு எல்லா நலன்களும் தானாக வந்து சேரும் என்பது அறிஞர்கள் நமக்குக் கூறும் அனுபவ உரையாகும். இதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி தேவையா? தொடர்ந்து முயற்சியோடு உழையுங்கள். இதைத்தவிர வேறொன்றும் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட கால முயற்சி மட்டும் போதாது. அது செயல் முடியும்வரை தொடர்ந்து இருக்க வேண்டும். வாழ்க்கை செழிப்புற அம்முயற்சி வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1994

“உயர்ந்த மனோபாவங்கள்”
முயற்சி – முடிவு – விளைவு
மறதி ஏன் ஏற்படுகிறது?