Home » Cover Story » மனோபாவங்கள்

 
மனோபாவங்கள்


இராமநாதன் கோ
Author:

அந்த இளைஞருக்கு சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம். ஆடைகளை உடுத்துவதில் கவனமில்லை. பேச்சில் உற்சாகமில்லை. முகத்தை சரிவர சேவ் செய்யவில்லை. நடையில் தளர்வு. எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்று வெறுமையான பார்வை. யாரிடமும் பழக விரும்பாமல் தனித்து ஒதுங்குகிறார்.

‘நலமாக இருக்கிறீர்களா?’ என்றால், ‘ஏதோ இருக்கேன்’ என்ற பிடிப்பில்லாத வார்த்தைகள்.

‘என்ன செய்வதாக இருக்கிறீர்களா?’ என்றால், ‘எதைச் செய்து பெரியதாக சாதிக்கப் போகிறேன்’ என்ற விரக்தியான பதில்கள்.

‘சற்று கலகலப்பாக சிரியுங்களேன்’ என்றபோது ‘மனதில் அழுத்தும் பாரங்களை மீறி எப்படி சிரிப்பு வெளிவரும்?’ என்ற கேள்வி.

‘இந்த கடவுள் சோதிப்பதற்காகவே ஒரு உயிரை படைத்தார் என்றால், அது நான்தான்’ என்று சொல்ல ஆரம்பித்ததும் கண்களில் நீர் ததும்ப தன் அனுபவத்தைச் சொன்னார்.

‘நான் பள்ளிக்கு சேர்ந்ததிலிருந்தே என்னுடைய கஷ்டங்களும் சேரத் தொடங்கின. எனக்கு நண்பர்களே கிடையாது. எடுப்பான தோற்றமும் எனக்கில்லை. என்னுடைய தாய் மிகவும் கோபமானவர். அதனால் யாரும் வீட்டிற்கு வரமாட்டார்கள். குடும்பத்தில் வறுமை மேலும் என்னை வாட்டியது. எனக்குள் எண்ணற்ற ஏக்கங்கள் என் உணர்வுகளை வெறிப்படுத்த ஒரு மனதிற்காக ஏங்குகிறேன். கதைகளைப் படித்தாலும் என்னுடைய காம உணர்வுகள் அதிகமாகின்றன. அதைக்கட்டுப்படுத்த சுயஇன்பம் செய்கிறேன். இதனால் ஆண்மை குறைந்துவிட்டது போன்ற பயம், மனதில் அடிக்கடி வருகிறது’ என்றார்.

தொடர்ந்து அவர், “இந்தப் போட்டியான உலகத்தில், ஒரு நல்ல வேலை கிடைத்தால், தொழில் செய்யலாம் அதற்கு துளியும் வாய்ப்பில்லை. சொந்த தொழில் செய்ய மூன்று முறை முயற்சித்தேன். எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் நான் எப்படி ஒரு மனிதனாக நடமாட முடியும்?” என்றார்.

நம்பிக்கையிழந்து, பயந்து விரக்தியடைந்த மனநிலையில் இருக்கும் இவர் என்ன செய்யலாம்?

அமெரிக்காவின் மேதையான காப்மேயர் சொல்வதைப் பார்ப்போம்.

“உங்களுக்கு நேர்ந்துவிட்ட உங்களுக்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டே வாழ்க்கையை நடத்திவிடாதீர்கள். இன்று முதல் தொடங்குங்கள். சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் இவற்றை நீங்கள் உருவாக்குங்கள்.

எல்லாம் உங்களுக்கு எதிராகப் போய்விட்டது. இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் கூட விட்டுக்கொடுத்து விடாதீர்கள். காலம் உங்களுக்கு சாதகமாக மாறும் நேரம் அதுதான். இது இயற்கை நியதி. கால ஓட்டம் என்பது எப்போதும் உள்ளது. அது ஒருநாள் மாறியே தீரும்” என்கிறார் டாக்டர் காப்மேயர்.

நம்பிக்கை குறைந்தால் எல்லா வகை எதிர்மறை எண்ணங்களும் கூடிவிடும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் சில குறைபாடுகள் இருக்கலாம். நம்மைவிட மேலும் சிக்கலில் உள்ளவர்கள் பலரைப் பார்க்கிறோம். அதை நினைத்த திருப்தி கொள்வதே விவேகமாகும்.

வாழ்க்கையில் முன்னேற தொழிலில் வெற்றிபெற மற்றவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். மற்றவர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களுக்கு மேலும் உபயோகமானவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மேன்மேலும் திறமைகளை வளர்க்க வேண்டும்.

எப்போதும் புன்முறுவலுடன் தோன்றுவது, செலவில்லாமல் அழகு சேர்க்கும் சிறந்த சாதனம். புன்முறுவல் செய்ய எந்த காரணத்தையும் தேடி வேண்டியதில்லை. தாமாக வலிய முயன்று புன்னகைப்பதுதான் முதல்படி. அதைத தொடர்ந்து செய்யும்போது புன்னகைமுகம் வந்துவிடும். தோற்றம் பொலிவாகும்.

ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் உள்ளதுதான். அதை தீர்க்கும்போதுதான் நல்ல அனுபவங்கள் உருவாகின்றன. அந்த சிரமங்கள் இல்லாவிட்டால் அந்த அனுபவங்கள் தெரிய வாய்ப்பில்லை.

சுயஇன்பம் காண்பதினால் உண்டாகும் குற்ற உணர்வு, பயம், மனப்பதட்டம் இவைகளே மனப்பாதிப்பை ஏற்படுத்தி, ஆண்மைக் குறைவை பலருக்கு உண்டாக்குகிறது. இதைச் சரியான ஆலோசனை மூலம் சரி செய்யலாம். இதை உணராமல் எண்ணற்ற இளைஞர்கள் ஆண்மையிழந்து விட்டதாக நினைத்து, மோசமாகி, காலத்தை விரயம் செய்கிறார்கள். ஆக்கபூர்வமான சிந்தனையை இழக்கிறார்கள். சிகிச்சைக்காக பணத்தை செலவிடுகிறார்கள். மேலும் பார்ப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?