Home » Cover Story » மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?

 
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?


மதியழகன்
Author:

மிகுதியாகத் தூங்குவதும் ஒரு நோய் தான். சோம்பல் தூக்கத்தின் நெருங்கிய தோழிதான். எனவே இந்த சோம்பலையும் தூக்கத்தையும் விரட்ட வழிதான் என்ன?

மனித வாழ்வுக்குத் தூக்கம் மிக அவசியம். ஆனால் மிகையான தூக்கம் தான் கூடாது. ஓய்வு தேவை. ஆனால் ஓய்வாகவே இருக்கத் தூண்டும் சோம்பல்தான் கூடாது.

மிகையான சோம்பலுக்கும் – தூக்கத்திற்கும் காரணம் உடலும் மனமும் தான். ஆர்வமுள்ளவர்களுக்கும் அச்சமுள்ளவர்களுக்கும் தூக்கம் வராது என்பார்கள்.

எமது நண்பர் ஒருவரை நேற்றுச் சந்தித்தேன். கடந்த ஒரு வாரமாக இரவில் தூங்குவதே இல்லை என்றார். ஏனென்று கேட்டேன். அவர் ஊரைவிட்டுச் சற்றுத்தள்ளி தோட்டத்தில் குடியிருக்கிறார். அதைச்சுற்றிப் பல குடியிருப்புகளும் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவில் திருடர்கள் பக்கத்து குடியிருப்புகளில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி அடித்து விரட்டி கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த நண்பர் வீட்டிற்கும் இரண்டொரு நாட்கள் முயற்சித்திருக்கிறார்கள். இவர்கள் விழிப்பாக இருந்ததால் திருடர்கள் ஓடி விட்டார்கள்.

நண்பர்களேÐ மேற்கண்ட நிகழ்ச்சியில் ஒருவாரம் எப்படி அவர்களால் தூங்காமல் இருக்க முடிந்தது? அச்சமுள்ளவர்களுக்கு படுத்தாலும் தூக்கம் வராது என்பதையே இது காட்டுகிறது.

பெற்றோர்கள் திட்டும்போது சொல்வார்களே, “கொஞ்சமாவது மனதில் பயமிருந்தால் இப்படி பூனை பாலைக் குடித்துவிட்டுப் போவது கூடத் தெரியாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பாயா?”

நினைவில் வையுங்கள் தூங்கினால் திருடர்கள் உங்கள் உடைமைகளைக் களவாடிச் செல்வது போல் உங்களுக்குரிய சிறப்பான எதிர்காலத்தை மற்றவர்கள் அபகரித்துக் கொள்வார்கள். நீங்கள் தூக்கிவிட்டால் உங்கள் வாய்ப்புகள் என்னும் பாலை பூனைகள் குடித்துவிட நேரிடும்.

‘அய்யோÐ படிக்காமல் உறங்கினால் நாளை நமக்குரியதே வேறு யாரேனும் ஆக்கிரமித்துக் கொள்வார்களே என்கிற அச்சம் மனதில் இருந்தால் மிகையான தூக்கம் வராது.

அதேபோல், ஆர்வமுள்ளவர்களுக்கும் உறக்கம் வராது. இரவு இரண்டாவது காட்சி திரைப்படத்திற்கு போவதாக வைத்துக்கொள்வோம். உறக்கம் வருமா? வராது. காரணம் ஆர்வம் கல்வியிலோ, தொழிலோ முதன்மை பெற்று நாளை வெகுமதி பெறப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உறக்கம் வருமா? வரவே வராது. இதற்கெல்லாம் காரணம் ஆர்வம்.

இவையெல்லாம் மனம் தொடர்பானவை. நமது உடல் ஆரோக்கியமாக இல்லை என்றாலும் சோம்பலும் தூக்கமும் மிகுதியாக இருக்கும். எனவே, உடலைச் செம்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

உடற்பயிற்சி மிக அவசியம். உடற்பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்கத்தேவையில்லை. வீட்டு வேலைகளை செய்வது, குறைந்தது உங்களுடைய வேலைகளை நீங்களே செய்வதும் உடற்பயிற்சிதான்.

மேலும் உடலில் உள்ள கழிவுகள் சுத்தமாக வெளியேறிவிட்டால் உடல் கலகலவென்று இருக்கும். இதற்குத் தோல், கண், வாய், சிறுநீர்ப்பை, குடல் ஆகியவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • தினமும் குளிப்பது தோலைத் தூய்மையாக்கும்.
  • கைகளில் தண்ணீரை அள்ளிக்கொண்டு கண்களை அலசுவது கண்களைத் தூய்மையாக்கும்.
  • காலையிலும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும் பல்துலக்குவது வாயைத் தூய்மையாக்கும்.
  • இரவு படுக்கும்போது இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள். காலையில் எழுந்தவுடன் இரண்டு தம்ளர் வெந்நீர் குடியுங்கள். சிறுநீர்ப்பையைத் தூய்மையாக்கும்.
  • காலை எழுந்தவுடன் துயிலெழுந்து 10 நிமிடத்தில் கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகிவிட வேண்டும். தினமும் காலையில் குடல் சுத்தமாகிவிட்டாலே சோம்பல் பறந்துவிடும். இல்லையென்றால் மனம் உற்சாகமாக இருக்க முயற்சித்தாலும் உடல் உற்சாகமாக இருக்காது.

உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. எனவே, இரண்டையும் சரியாக ஓம்புவது மிகமிக அவசியம். அதேபோல மனத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நல்லதையே நினைப்பதும், நல்லவர்களையே நண்பர்களாகப் பெறுவதும், மனத்தைக் கெடுக்கும் திரைப்படங்கள், வார இதழ்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், நல்ல நூல்களைப் படிப்பதும் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவும்.

உடலையும், உள்ளத்தையும் சரியாகப் பராமரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். வெற்றிகரமாக சோம்பல் அகன்றுவிடும். வெற்றியாளராக வேண்டும். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுகிற உங்களுக்கு இன்றுதான் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கிற நாள் என்று ஒவ்வொரு நாளும் மனதில் நிறுத்துங்கள்.

மீண்டும் ஒருமுறை இந்தநாள் திரும்பி வராது. எனவே, இப்போதே செயல்படுங்கள் நாளை வருந்திப் பயனில்லை.

“வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்”

என்கிறார் கவிஞர் மு. மேத்தா. எனவே, இன்று என்பது ஒரு வரங்கொடுக்கும் தேவதை. வரத்தைப் பெறுவதும், தவற விடுவதும் உங்கள் முயற்சியில் இருக்கிறது.

“இளமை உன்தோளில் இருக்கும்போதே
எதுநிஜம் என்பதை எட்டிவிடு
எழுதியபடிதான் எல்லாம் நடக்கும்
விதிவசம் என்பதை விட்டுவிடு”

என்கிறார் கவிஞர் வைரமுத்து. எனவே இப்போதே வெற்றியை எட்டிப்பிடிக்க முந்துங்கள். தலைவிதிப்படி தான் நடக்கும் என்று தளர்ந்து விடாதீர்கள்.

“முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார் வள்ளுவர். தெய்வமே உங்களுக்கு இவ்வளவுதான் என்று நிர்ணயித்து இருந்தாலும் கூட உங்கள் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்ற பயன் கிடைத்தே தீரும் என்கிறார் திருவள்ளுவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை வாரஇதழ் ஒன்றில் படித்தேன். ஒரு 55 வயது பாட்டி எப்படியாவது எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட வேண்டும் என்று தனியாகப் (Private) படித்துத் தேர்வு எழுதுவதாக அறிந்தேன். எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பி.எச்.டி. படித்து டாக்டரேட் பட்டம் பெற்றார். அவர்களெல்லாம் முதுமையிலும் முயன்று கற்கும்போது உங்களால் முடியாதா என்ன? முடியும்.

மேலும், இரவில் உணவை மிகையாக உண்டாலும் உறக்கம் விரைந்து வரும். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து இரைப்பைப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், தூக்கம் விரைந்து வரும்.

இதற்கு மாற்றுவழி இரவில் பழங்களை மிகுதியாக சேர்த்துக்கொண்டு மற்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். விரைவில் பசியெடுக்குமே என்கிறீர்களா? தேன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பசித்தால் உடனே ஒரு தம்ளர் தண்ணீரில் சிறிது தேன் கலந்து குடியுங்கள். உடனே பசியடங்கும். உடனே உடலுக்கு சக்தியும் (Immediate Energy) கிடைக்கும். அல்லது கடலை மிட்டாய் சாப்பிட்டுத் தண்ணீர் குடியுங்கள்.

இரவு உணவு முடித்தவுடன் படித்தால் மூளை சுறுசுறுப்பாக இல்லையா? அரைமணிநேரம், வேறு உடல் உழைப்பைச் செலவிடும் பணிகளைச் (Physical Work) செய்யுங்கள்.

தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் அய்யா டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள் அவர்தம் மேசை மீது ‘காலமே உயிர்’ என்று எழுதி வைத்திருப்பார்கள். காலத்தை உயிராகப் போற்றியவர்கள் எல்லாம் வாழ்வில் உயர்ந்து உன்னத நிலையை அடைந்தார்கள் என்பதற்கு அவரே சாட்சி. நீங்களும் காலத்தை வீணாக்காது முயன்று செயல்படுங்கள் வெற்றி உங்களுடையது தான்.


Share
 

4 Comments

  1. alagianambi says:

    sir very very super.very use full words.

  2. DEVARAJ P says:

    Very very good article.

  3. Rajasekar says:

    பயனுள்ள பகுதி

Leave a Reply to alagianambi


 

 


September 1993

தொலைபேசியில் நாம்…
சிந்தனையைத் தெளிவாக்கு
நெஞ்சோடு நெஞ்சம்
மனோபாவங்கள்
ஆசிரியரின் டைரி குறிப்பு
மிகையான தூக்கம் சோம்பல் – வகையாகத் தவிர்ப்பது எப்பது?