Home » Cover Story » உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? (Goal Setting)

 
உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? (Goal Setting)


கந்தசாமி இல.செ
Author:

உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? (Goal Setting)

-இல. செ. க.

 

வட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள்

இவ்வாறு ஒவ்வொரு நாளும் செயல்படும்போது உங்களுக்கு நீங்களே போட்டுக் கொண்ட வட்டம், கருத்துத் தடை, எதிர்மறையான எண்ணம் குறுக்கே நிற்கும். நம்மால் இது ஆகாது நாம் எங்கே இதைச் செய்து முடிக்கம் போகிறோம். நம்முடைய திறமை போதாது இந்தத் தடைகளைத் தகர்த்துச் செல்லும். வலிமை நமக்கு இல்லை என்பன போன்ற தாழ்வு மனப்பான்மை தடையாக நிற்பது உண்டு. எல்லாத் தடைகளை விடவும் நாம் நம் மனத்தளவில் விதித்துக் கொண்ட தடைகளே மிகப் பெருந்தடைகளாகும். சிறைக்கதவு பூட்டாமல் இருந்தபோதும் சிறைக்குள் இருக்கின்ற கைதி என்ன நினைக்கிறான். சிறை என்றால் அது பூட்டி தான் இருக்கும் என்ற பல ஆண்டுகள் சிறையிலே இருந்து விடுகிறான். ஒருநாள் கதவின் அருகில் வந்து பார்த்தபோதுதான் சிறைக்கதவு பூட்டாமல் இருப்பதை அறிந்தான் என்று ஒரு கதை உண்டு. இது கதையே என்றாலும் நாமே முன்கூட்டியே இது இப்படித்தான் இருக்கும் என்று ஒரு முடிவு கட்டி விடுகிறோம்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒரு இளம் நண்பர் ஒரு குளியல் அறைக்குச் சென்றார். அங்கு பக்கெட் இல்லை. தண்ணீர் படித்துக் கொள்ள ஒரு குவளை (Mug) மட்டும் இருக்கிறது. மேலே “ஷவர்” இருக்கிறது என்ன நினைத்தாரோ என்ன சிந்தனையில் இருந்தாரோ இவர் அண்ணாந்து பார்க்கவில்லை. இந்த மக்கிலேயே தண்ணீரைப் பிடித்துக் குளித்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதால் வெளியில் இருந்த நண்பர் சந்தேகப்பட்டு கதவைத்தட்ட, குளித்துக் கொண்டிருந்த நண்பர் மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு “குளியல் அறையில் ஒரு பக்கெட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தார். இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி. எண்ணிப்பாருங்கள் இந்த நண்பர் போட்டுக் கொண்ட வட்டம். இப்படிப் பலர் இருக்கிறார்கள். ஹெலன் ஹெலர் சொல்வது போல நீங்கள் மூடிய கதவுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சற்றே முன்னோக்கிப் பாருங்கள் உங்களுக்காக ஒரு கதவு திறந்து கிடப்பதை உணர்வீர்கள் என்றார். ஆக நம்மைப் பற்றியே நாம் கிழித்துக் கொண்டிருக்கிற வேண்டாத கோட்டை வட்டத்தை விட்டு வெளியில் வாருங்கள் மனமே நமக்குப் பெருந்தடை என்பதை உணருங்கள்.

ஒரு செயலைத் தொடங்கி முடியுங்கள்

குறிக்கோளை அடைய விரும்பும் நண்பர்கள்; அந்தக் குறிக்கோளை நாட்கணக்கில் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய அளவைச் செய்து முடித்தால் அந்தச் சிறு வெற்றியே நமக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தச் சிறு வெற்றியே அடுத்த நாள் செயலைச் செய்யத் தூண்டும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மலை ஏறுவது கடினமாகத்தான் தோன்றும். பத்தடி பத்தடியாக ஏறும்போது களைப்புத் தெரியவில்லை. ஒவ்வொரு பத்தடியாக நாம் முன்னேறும்போது நம்முன் ஒரு சக்தி பிறக்கிறது. வெற்றி பெற்று விடுகிறோம்.

குழந்தைக்குத் தாம் சோறு ஊட்டும்போது வட்டலில் உள்ள எல்லா சோற்றையும் காட்டுவதில்லை. ஒரு கவளத்தை எடுத்து இவ்வளவுதான் இவ்வளவுதான் என்று கதை சொல்லியும் வேடிக்கை காட்டியுமே முழுமையையும் ஊட்டிவிடுகிறார். எந்த ஒரு செயலையும் இப்படித்தான் செய்ய வேண்டும், நாம் நம் குறிக்கோளை நோக்கிச் செல்வது கண்ணுக்கு முன்னால் நன்றாகவே தெரியும்.

எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் முழு ஈடுபாடு கொள்ளுங்கள்

நாம் எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். அதுவே நமது உயிர்மூச்சு என்ற வகையில் செயல்பட வேண்டும். அதேபோல் நாம் எதுவாக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்தாலும், அதில் நாம் உயர்ந்து விளங்கும் வண்ணம் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

ஒரு பாடல் உண்டு

‘நீ ஒரு நெடுஞ்சாலையாக இருக்க முடியவில்லையானாலும் பரவாயில்லை; ஒரு ஒற்றையடிப் பாதையாகவேனும் இரு. நீ ஒரு சூரியனாக இருக்க முடியவில்லையாயினும் பரவாயில்லை; ஒரு நட்சத்திரமாகவேனும் இரு’.

உன் வெற்றியும் தோல்வியும் அதன் அளவைப் பொறுத்துக் கணக்கிடப்படுவதில்லை. ஆதலால் நண்பனேÐ நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை எடுத்துக் கொண்ட செயலில் உன்னால் இயன்ற மட்டும் சிறப்பாகச் செய்ய முனைந்திரு என்ற பாடலை நினைவு கூறுங்கள். இருக்கின்ற நிலையில் இருக்கின்ற சூழ்நிலையில் நீங்கள் வகிக்கின்ற பதவியை தொழிலை உன்னதமாக்குங்கள்.

செயல்படுங்கள்

எல்லாவற்றிற்கும் தாரக மந்திரமாக இருப்பது செயல்படுவதுதான். ஆயிரம் சிந்தனைகள் செய்தாலும் செயல்படாவிட்டால் என்ன பயன்? ஆயிரம் திட்டங்கள் தீட்டினாலும் அதை நிறைவேற்றாவிட்டால் என்ன பயன்? செயல்வீரர்களால் மட்டுமே இந்த உலகம் செழுமையடைந்து இருக்கிறது.

நம்முடைய இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் இன்றே இப்பொழுதே நாம் செயலில் இயங்கி விடவேண்டும். முன்னேற இலட்சியத்தை அடைய உழைப்பு அறிவார்ந்த உழைப்பு ஒன்றுதான் சரியான வழி. நாம் நம் இலட்சியத்தை அடைந்துவிட முடியும் என்ற தளராத எண்ணம், ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் வருவதற்கு முன்னரே சுதந்திரத்தை அடைந்துவிட்டதுபோல் உணர்ந்து பாடிய பாரதியைப் போல் நமது இலட்சியத்தை அடைந்து விடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு கூடிய இலட்சிய தரிசனமும் நமக்குத்தேவை. செயல்படும் இலட்சிய தரிசனம் இந்த உலகில் எதையும் கூட்டுவிக்கும். உங்கள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள். முன்னோக்கிச் செல்லுங்கள்.

(முற்றும்)

வெற்றியின் திறவுகோல்

  • எதுவும் எப்பொழுதும் நம்மால் செய்ய முடியும் என்றே நினையுங்கள்
  • மனதை ஒருநிலைப்படுத்தப் பழகுங்கள்
  • செயலுக்கு ஏற்ப நேரத்தை ஒதுக்குங்கள்
  • எதற்கும் தயாராக இருங்கள்
  • எப்பொழுதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்
  • முக்கியமல்லாதவற்றுக்காக சக்தியை வீணடிக்காதீர்கள்
  • நீங்கள் கடினமானவராக இருக்காதீர்கள்
  • பணம் வாழ்க்கையில் ஒரு அம்சமே என்று உணருங்கள்
  • ஒரு விசயத்தை எப்படித் தெரிந்து கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
  • மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்

‘விற்பனைக் கலை’ என்ற நூலிலிருந்து
(தன்னம்பிக்கை)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1992

உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? (Goal Setting)
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்