Home » Cover Story » மனச்சுமைகளை இறக்கி வைப்போம்

 
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்


இராமநாதன் கோ
Author:

மனச்சுமைகளை இறக்கி வைப்போம்

– டாக்டர் G. இராமநாதன் எம்.டி.

உங்கள் மன உலைச்சலை எடைபோட்டு விட்டீர்களா? நம்மால் நமக்கு உண்டாகும் சிக்கல்தான் மன உலைச்சல் என்பது.

நம் கவனத்தை திசை திருப்பி வேறு வழியில் ஈடுபட வேண்டும். நம் கவனத்தை திசை திருப்பி வேறு வழியில் செலுத்த வேண்டும். மனச்சுமைகள் தொடர்ந்து நீடித்தால் உடலில் பல்வேறு நலக்குறைவுகள் உண்டாகிவிடும்.

கவனத்தை திசை திருப்புவது எப்படி?

1. விளையாட்டில் ஈடுபடலாம். அரை மணிநேரம் விளையாடினால் உடலும் மணமும் புத்துணர்வு பெறும்.

2. வீட்டில் தோட்ட வேலை செய்யலாம். உங்களால் வளர்க்கப்படும் செடி துளிர்விட்டு செழுமையாக வளரும்போது உங்கள் மனதில் பசுமையான எண்ணங்கள் உருவாகும்.

3. மனதிற்கு புத்துணர்வு ஊட்டும் பாடல்களை பாடுவது நல்லது. அதை ஈடுபாட்டுடன் பாடும்போது துயரம் நீங்கும். குதூகலம் பிறக்கும். சோகமான பாடல்களைத் தவிர்க்கவும்.

4. இனிமையான பாடல்களை, சங்கீதங்களை ஒலிப்பதிவு செய்து கேட்கலாம்.

5. நல்ல நண்பரை அழைத்து அவருக்கு நம் வீட்டில் விருந்து பரிமாறலாம். நம் கவலைகளை மனம்விட்டு பேசலாம்.

6. அறிவில், அனுபவத்தில் சிறந்தவருக்கு பிடித்த பொருளை வாங்கி சென்று அவருடன் சிறிது நேரம் பயனுள்ளவற்றை உரையாடி வரலாம்.

7. நல்ல புத்தகம், நம்பிக்கையான எழுத்துக்கள் இருந்தால் அதை படிக்கலாம்.

8. மனதிற்கு அமைதி தரும் சுற்றுலா இடத்திற்கோ, மிருகக்காட்சி சாலைக்கோ குழந்தைகளுடன் சென்று வரலாம்.

9. சுவாசப்பயிற்சி பிரணயாமம் செய்யலாம். தனி இடத்தில் அமர்ந்து நீண்ட ஆழமான மூச்சை உள்ளிழுத்து இயன்றவரை அடக்கி வைத்து, மெதுவாக வெளிவிடவும். இவ்வாறு 15 நிமிடம் செய்தால் உடல் தளர்வு (Relaxation) பெறும். பிரணாயமத்தின் அடிப்படை தத்துவமே இதுதான். இதனால் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் பிராணவாயு பரவி அவைகள் சீராக இயங்கச் செய்யும்.

பிரச்சனைகளை எப்படி அணுகுவது

மேற்கூறிய வகைகளை கையாளுவதால் கவனத்தை திசை திருப்புவதோடு மன அமைதியும் பெறலாம். பின்பு அமைதியான மனதை கொண்டு சிக்கல்களை ஆராய வேண்டும்.

1. மனச்சுமையை உண்டாக்கும் காரணங்கள் என்ன? என்று ஆராய வேண்டும். செய்யும் தொழிலிலா? வீட்டிலா? உறவினர் அல்லது நண்பர்களா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2. நமக்கிருக்கும் சிக்கல்களை பட்டியல் போட்டு எழுத வேண்டும். அதில் முக்கியமான ஒன்றை மட்டும் எடுத்து அதை முடிக்க வழி தேடி செயல்பட வேண்டும். மற்ற சிக்கல்களை தற்காலிகமாக தள்ளிப்போடலாம்.

3. எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்ற முழு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நன்கு உறங்கி பிறகு ஆராய்ந்தால் தெளிவான முடிவுகள் பிறக்கும்.

4. தாங்க முடியாத மனச்சுமைகள் (நோய் வாய்ப்படுதல், வேலையிழத்தல், வியாபாரம் தோல்வி அடைதல், மிகவும் நெருங்கியவர் இறந்து விடுதல்) வந்தால் ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது நமக்கு மட்டும் தான் இந்த சிக்கல்கள் என்று எண்ணிவிடக் கூடாது. அன்றாடம் பலர் இதுபோன்ற சிரமங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவைகள் காலம் செல்ல செல்ல மெதுவாக குறைந்து, மறைந்துவிடும்.

5. மற்றவர்கள் துன்பங்களில் நாமும் பங்குகொண்டு செயலாற்றினால் நம்முடைய துன்பங்கள் குறைவதுபோல் இருக்கும். அல்லது நம்முடைய சிக்கல்கள் தீர்வதற்கான வழிகள் பிறக்கும். நமக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் மற்றவர்கள் பிரச்சனைகளிலும் பங்கு கொள்வோம்.

6. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் நம்பிக்கை இழக்காமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கோபம் கொண்டு மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்தால் மேலும் கருத்து வேற்றுமை ஏற்படும். மனக்கசப்பு ஏற்படும். மனச்சுமைகள் பெருகி விடும். இறுதி சண்டையில் முடியும். பின் நம் செயலுக்கு நம்மை நாமே நொந்து கொள்வோம்.

7. நாம் இயன்ற அளவு முயன்றும் நிறைவேறாத காரியங்களை, தோல்விகளை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. அதை உணர வேண்டும். இதற்காக நம்மீது பரிதாபப்பட வேண்டியதில்லை. நம்மை நொந்து கொள்ளவும் வேண்டியதில்லை. இதனால் நாம் தோல்வியாளன் என்று நமக்கு நாமே முத்திரை குத்தி மூலையில் சுருண்டுவிட வேண்டியதில்லை. நாம் பயணத்தை பல்வேறு வழியில் தொடர்ந்தால் வெற்றிப்படியில் ஒரு நாள் நிற்போம்.

இளம்வயதில் ஒவ்வொருவரும் தம் எதிர்காலத்தில், தான் தமது துறையில் உயர்ந்த பதவியில் அமர வேண்டும்; வசதியான வாழ்க்கைக்கு ஏற்ப பொருளாதார நிலையை அடைய வேண்டும்; சமுதாயத்தில் நல்ல உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்; தம் குடும்பம் ஒரு உயர்நிலையை அடையப் போவதாக எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன் வாழ்கிறார்கள்.

நடைமுறையில் சுமார் 40 முதல் 50 வயதை நெருங்கும்போது இதுவரை என்ன செய்தோம்? என்ன சாதித்தோம்? என்ற கேள்வி முக்கியமான மனதிற்குள் எழ ஆரம்பிக்கிறது. அத்துடன் வயதும் அதிகமாகிவிட்ட நிûல் உடல் தளர்ந்தது போன்ற ஒரு உணர்வு; சில மாற்றங்கள் தம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறி நடந்து விடுகின்றன.

இந்த சூழ்நிலையில் பெரும்பாலும் மூன்று நிலைகளுக்கு ஆளாகிறார்கள்.

1. சிலர் தம்முடைய தோல்விகளில் துவண்டு விடாமல், ஏமாற்றத்திலும் மனம் தளராமல், விடா முயற்சியுடன் தம் குறிக்கோளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனையாளர்களாக மாறுகிறார்கள். அவர்களுக்கு தம் வாழ்வில் நடந்த இழப்புகள் பெரிதாக இல்லாமல் – மனம் பாதிப்பு இல்லாமல் போய்விடுகிறது.

2. இன்னும் சிலர், தம்முடைய ஏமாற்றங்களை மறைக்க குறுக்கு வழியில் செயல்பட தொடங்கிவிடுகிறார்கள். பதுக்கல், லஞ்சம் வாங்குதல் போன்றவற்றின் மூலம் தம்முடைய பொருளாதாரத்தை உயர்த்த நினைக்கிறார்கள். வெளி உலகத்திற்கு தாம் மிகுந்த திறமைசாலி போலவும் ஒரு ‘இமேஜ்’ஜை கை காட்ட போலித்தனமான செயல்களை செய்கிறார்கள்.

3. பலர் தம்முடைய ‘தகுதி அவ்வளவுதான்Ð இனி தம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என தமக்கு தாமே ஒரு எல்லையை வரையறுத்து, தமக்கிருப்பதே போதும் என தம்முடைய வேலை, தம் குடும்பம் என்ற இரண்டுக்குள் மட்டும் தம்மை சுருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஆனால் இரண்டாவது வகை மூன்றாவது வகை மனிதர்களில் சிலர் தம்முடைய இழப்புகளையும், ஏமாற்றங்களையும், இயலாமைகளையும் எண்ணி எண்ணி மனதிற்குள் குமுறுகிறார்கள். மன உளைச்சல் அடைகிறார்கள். பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

மூன்றாம் வகை மனிதர்களில் ஒருவர் தான் சுந்தரம். பெயரை மட்டும் மாற்றியுள்ளேன் என்ற ஒரு அரசு அலுவலர் பெரிய அலுவலகத்தில் பணிபுரிகிறார். மாதம் ரூ.3000 சம்பளம் பெறுகிறார். 45 வயதை தாண்டிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார்.

“எனக்கு எப்போதும் படப்படப்பாக இருக்கிறது. ஏதோ கெட்டது நடந்துவிடும். எல்லா நேரமும் மனதில் பயமாகி கொண்டேயிருக்கிறது. கதவை யாராவது தட்டினால் கூட நெஞ்சுப் படபடக்கிறது. எப்போதும் ஒரு பாரத்தை சுமப்பது போன்ற உணர்வு மனதில்.

எங்காவது பிரயாணம் செய்தால், இந்த பஸ் எந்த இடத்தில் விபத்தாகுமோ என்ற பயம்; மகன் வெளியில் சென்றால் ஏதாவது ஆகிவிடுமோ? என்று அவன் திரும்பும்வரை பெரிய கலக்கம்; என் மனைவி வேறு ஆண்களிடம் பேசினால் என்னைவிட அவர்களை அதிகம் விரும்புகிறாளோ என்ற சந்தேகம்.

வீட்டிற்கு யாராவது புதியவர் வந்தால் எதற்கு வந்தாரோ? என்ன கெட்ட நிகழ்ச்சி நடந்ததோ என்ற பயம்; நண்பர்களோ உறவினர்களோ வந்தால் அவர்களிடம் மனம் விட்டு பேச பிடிப்பதில்லை. பேச நினைத்தாலும் கலகலப்பாக பேசி, சிரிக்க முடிவதில்லை. அதற்கு யாரிடமும் பேசாமல் தனித்திருக்கலாம் போலிருக்கிறது. யாராவது என்னிடம் பேசும்போது மாறுபட்ட கருத்தைச் சொன்னால் அவர்கள் மீது மிகவும் வெறுப்பு வருகிறது. சில நேரங்களில் என்னையும் மீறி அவர்களிடம் கோபித்துக் கொள்கிறேன். பிறகு தவறு செய்துவிட்டதாக உணர்ந்து என்னையே நொந்து கொள்கிறேன். நண்பர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டால், என்னைப்பற்றித்தான் தரக்குறைவாகப் பேசுகிறார்கள் போல எண்ணுகிறேன். மற்றவர்கள் கூடியிருக்கும் இடங்களுக்கு போக மிகவும் தயக்கம். சில நேரங்களில் யாரைப் பார்த்தாலும் வெறுப்பு வருகிறது. இந்த உலகத்தில் எல்லாருமே எனக்கு எதிராக செயல்படுகிறார்களோ என்ற பிரமை.

படுக்கைக்குப் போனால் தூக்கம் வருவதில்லை. ஏதேதோ சிந்தனைகள். அதனால் புரண்டு கொண்டே இருப்பேன். தூக்கம் வந்தாலும் அதில் பல கெட்ட கனவுகள் தோன்றி இடையிடையே விழிப்பு வருகிறது. சில நாட்களில் அதிகாலையில் விழிப்பு வந்தபிறகு தூங்கமுடிவதில்லை. ஒவ்வொரு பொழுது விடியும்போதும் ஏன் தான் இந்த பொழுது புலர்கிறதோ? என்ற சலிப்பு.
நடந்தால் சக்தியில்லாதது போன்ற உணர்வு; உடல் வியர்க்கிறது; தலைவலி அடிக்கடி உண்டாகிறது; தலைசுற்றுகிறது; கைகால்கள் நடுங்குகின்றன.

சாப்பிட பிடிப்பதில்லை; எந்த உணவும் அவ்வளவாக ருசிப்பதில்லை; சாப்பிட்டவுடன் வயிற்றை கலக்கிறது. அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போலுள்ளது.

அவரைப் பார்த்தால், எல்லாவற்றையும் பறிகொடுத்தாற் போன்ற தோற்றம்; கண்களில் உயிரோட்டம் இல்லை; வயதை அதிகமாக காட்டும் எண்ணற்ற கோடுகள் முகத்தில் மிகவும் புளிப்பான ஒரு பொருளை வாயில் போட்டால் அளிப்பது போன்ற முகபாவனை எப்போதும்.

உடலை பரிசோதித்து மற்ற பரிசோதனைகளையும் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இத்தனை தொல்லைகளும் எதனால்? இவருக்கு இருப்பது பதட்டநோய் (Anxiety). சில சமயங்களில் மனசோர்வும் (Depression) வந்துவிடுகிறது.

எந்த நிகழ்ச்சிகளையும், எதிர்மறையான எண்ணங்களோடு (Negative Thinking) பார்க்கத் தொடங்கிய இவர், படிப்படியாக தன்னம்பிக்கை இழந்து உடலும் மனமும் துன்புறும் பரிதாப நிலையில் இருக்கிறார்.

இவரை என்ன செய்யலாம்?

(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1992

உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? (Goal Setting)
மனச்சுமைகளை இறக்கி வைப்போம்