Home » Articles » வெற்றிதரும் இலட்சியங்கள்

 
வெற்றிதரும் இலட்சியங்கள்


கந்தசாமி இல.செ
Author:

இலட்சியம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்க வேண்டும்.

ஒரு இலட்சியத்தைத் தேர்ந்து, கால அளவு கொடுத்து அதனை அடையத் தொடங்குவது என்பது சரியான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம் என்பதற்கு அடையாளமாகும். ஆனால் அதுவே போதாது. ஒரு படி முன்னேற்றம். அவ்வளவுதான்.

வளமான வாழ்க்கை வாழ்வதே என் இலட்சியம், பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறுவதே என் இலட்சியம், அரசியலில் உயர் பதவி அடைவதே என் இலட்சியம் என்று வளமாக, சுகமாக, உயர்ந்த நிலை, என்று பொதுவாகச் சொல்லிக் கொள்வதில் அந்தத் திசையை நோக்கிப் போகலாமே ஒழிய, அந்தக் குறிப்பிட்ட இடத்தை அடைய முடியாது என்று உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டறிந்துள்ளார்கள். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒரு மாநிலத்தின் தலைமைப் பதவியாகிய தலைமைச் செயலர் ஆக வேண்டும் என்று வாழ்க்கையை தொடங்கினால் மட்டுமே அதனை அடையமுடியும்.

ஒரு வியாபாரி ஆண்டுக்கு பத்து இலட்சம் எனது வருமானமாக இருக்க வேண்டும் என்று எல்லையைக் குறிப்பிட்டால்தான் மாதம் எவ்வளவு வியாபாரம் செய்ய வேண்டும் எப்படி விரிவுபடுத்த வேண்டும் என்பெதல்லாம் விளங்கும். அதற்கேற்பச் செயல்படத் தோன்றும்.

எனது நண்பர் ஒருவர் அடிக்கடிச் சொல்லுவார். இந்த மாதிரி வெள்ளை நிற அம்பாஷிடர் கார்தான் நான் வாங்கப் போவது என்பார். எப்போது என்று கேட்டாள் 1990 மார்ச் மாதம் முடிவதற்குள் என்பார். எத்தனை ஆண்டாக இந்தத் தேதியை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் 1980 – ல் இருந்து என்பார். இறுதியாக அவர் தான் குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே கார் வாங்கி தன் காருக்கு வெள்ளை நிறப் பெயிண்ட்டும் அடித்து விட்டார். அவரது இலட்சியத்தில் தெளிவு இருந்தது. தன் வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய இலட்சியம் இருந்தது. எண்ணிச் செயல்பட்டார். வென்றார்; அவரது வெற்றிக்குப் பின்னால் ஆராய்ந்து பார்த்தால் அவரது உழைப்பின் அடிச் சுவடுகளைக் காணலாம்.

இரண்டு இளைஞர்கள் ஒருவர் வேளாண்மைப்பட்டம் பெற்றவர். மற்றொருவர் பொறியியல் பட்டமும் பெற்றவர். இரண்டு நண்பர்களும் இணைந்து வியாபாரம் செய்வது என்று இறங்கினார்கள். அவர்கள் இலட்சியம் ஆண்டுக்கு ஒரு கோடி வணிகம் செய்வது என்பதாகும் – நீங்கள் இளைஞர்களை ஊக்குவிப்பவர்கள் – எங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துங்கள் என்று வந்தார்கள். தொழில் தொடங்கினார்கள். சில பொருட்களுக்கு இரண்டு மூன்று மாவட்டத்திற்கு விற்பனை உரிமை பெற்றார்கள். இன்று மூன்று ஆண்டுகள் கூட முடியவில்லை. அவர்கள் இலட்சியத்தை நெருங்கிவிட்டார்கள். ஆனால் அல்லும் பகலும் அவர்கள் உழைத்த உழைப்போ அளவு கடந்தது. இப்போது அவர்களோடு படித்த நண்பர்களையே வேலைக்கு அமர்த்திச் செயல்படுகிறார்கள். இப்போது அவர்கள் தங்கள் இலட்சியத்தையும் செயல்பாடுகளையும் விரிவுபடுத்திக் கொண்டார்கள்.

அண்மையில் ஒரு ஆயுள் காப்பிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு முகவர் சொன்னார். எனது இலட்சியம் ஆண்டுக்கு 100 கோடி வணிகம் செய்வது (பாலிசி சேர்ப்பது) என்றார். அவரது வணிக மேலாளர் கேட்டார், ‘அது எப்படி முடியும்?’ என்று, அந்த முகவர் பதில் சொன்னார், ஒரு கோடி வணிகம் செய்யும் 100 முகவர்களை நியமிக்கப் போகிறேன். ஆளுக்கு ஒரு கோடி – 100 பேர் – இது நடக்கக் கூடியது தான், நடத்திக் காட்டுகிறேன் என்று தன்னம்பிக்கையோடு சொன்னார். சிந்தித்துப் பாருங்கள். அவரது திட்டம், இலட்சியமாக இருக்கிறது. அவரால் தமது இலட்சியத்தை அடைந்து விட முடியும் என்று அவர் மட்டுமல்ல, நாமும் நம்புகிறோம்.

அதே கூட்டத்தில் 87 வயதைக் கடந்த மற்றொரு ஆயுள் காப்பீட்டு முகவர் சொன்னார். நான் இரண்டு கோடி செலவில் ஊனமுற்றோர், ஏழைகளுக்கான கல்விக் கழகம் ஒன்றைத் தொடங்க உள்ளேன். அதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்றார். அவர் பேச்சில் பொது நலம் மணந்து கமழ்ந்தது. அவர் வெறும் வாய்ப்பேச்சாளர் அல்ல. ஏற்கனவே ஒரு கல்லூரியை சில உயர் நிலைப் பள்ளிகளை நிறுவிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. 87 ஆண்டுகளாக உண்மையாக நடந்து கொண்ட சமுதாயத் தகுதி அவருக்கு இருக்கிறது இவர்கள் மேற்கொண்டுள்ள இலட்சியம் பெரிது என்றாலும் இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வரையறையை மனதில் தெளிவாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் வெற்றி பெறுபவர்கள். வெற்றி பெற்றவரை இந்த சமுதாயம் நன்மை அடைகிறது. இந்தக் கருத்துக்கள் எல்லாம் நம் வாழ்கைக்கு உந்து சக்திகளாக அமைகின்றன.

நீங்கள் வீடுகட்ட வேண்டுமானாலும், தொழிற்சாலை நிறுவ வேண்டுமானாலும் – அல்லது புதிய ஒரு எந்திரத்தை வடிமைக்க வேண்டுமானாலும் உங்கள் மனத் திரையில் அதை வடிவமைத்தக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய தொழிற்சாலைக்குக் கட்டடம் அமைக்க வேண்டுமென்றால் சுற்றுச்சுவர், நுழைவாயில் – அலுவலகம் – தொழிற்கூடம் – எது எது தேவையோ அது அது எந்தெந்த இடத்தில் அமையவேண்டுமோ அவை எல்லாம் மிகத் தெளிவாக மனக் கண்முன் நிற்க வேண்டும்.

ஓய்வுள்ள போதெல்லாம் மனத்திரையில் எழுதி எழுதி உருவகப்படுத்தி – அந்தந்த பொருள்கள் கிரகிக்கும் போது அவற்றை வாங்கிச்சேர்ப்பதில் தான் வெற்றியே அடங்கி இருக்கின்றது. வெற்றி பெற்ற, இலட்சியத்தை அடைந்த பலருடைய நடைமுறைகளை அலசிப்பாருங்கள். உண்மை விளங்கும்.

விவேகானந்தர் உலகம் முழுதும் இராமகிருஷ்ணா மடம் நிறுவியதும், கவி தாகூர் விசுவபாரதி பல்கலைக்கழகம் நிறுவியதும் எப்படி என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று 176 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய – சிந்தனையை செயல்வடிவம் ஆக்கிய அறிஞர்களை எண்ணிப்பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘யாதும் ஊரே யாரும் கேளிர்’ என்று, ஒரு தமிழ் அறிஞரின் சிந்தனையில் உலகம் ஒன்று. எல்லோரும் சகோதரர்கள் என்ற உணர்வு தோன்றியதை எண்ணிப்பாருங்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்குப் பிறகு அது உலக சபையாக – வடிவம் பெற்றது. உலகம் ஒன்று – தெய்வம் – ஒன்று – உலக அமைதியே நமது இலட்சியம் என்ற உயர் கொள்கையை நோக்கி நம் பயணம் அமைந்துள்ளது. ஆகவே தங்கள் இலட்சியம் இது என்று குறித்துக்கொண்டார்கள். அதைத் துல்லியமாக மனக் கண்முன் கண்டார்கள் – அதற்காக உழைத்தார்கள். வேறு திசைகளில் தங்கள் உழைப்பைத் திசை திருப்பவில்லை வெற்றி கண்டார்கள். இது ஒவ்வொருவருக்கும் பொதுவானது ஏற்றது. உங்கள் இலட்சியத்தின் எல்லைகளை வரையறை செய்யுங்கள். அதை நோக்கி நடை போடுங்கள். வெற்றி நிச்சயம்.

இலட்சியத்தை நாள்தோறும் நினைவு கூர வேண்டும்.

நாம் அடைய வேண்டிய மகத்தான இலட்சியத்தை வரையறுத்துவிட்டால் மட்டும் போதாது. அதைத் தினமும் எண்ணி பார்க்க வேண்டும். அந்த இலட்சியத்தை அடைய நாம் இன்னும் சேர்க்க வேண்டியது. நீக்க வேண்டியது, என்னென்ன என போன்றனவைகளை அவ்வப்போது எண்ணிப் பார்க்க வேண்டும்.

உடல் உறுப்புகள் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டு இருந்தாலும் இதயத்துடிப்பு ஒருபோதும் நிறுத்தப்படுவதில்லை. அதுபோல் நாம் அன்றாடம் பல் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் நமது வாழ்வின் இலட்சியத்தை நாள்தோறும் எண்ணிப் பார்ப்பதானது, இதயம் துடிப்பது போல் எப்போதும் நிகழ வேண்டிய ஒன்று.

நாம் அன்றாடம் செய்கின்ற இயல்பான வேலைகளின் போது அதாவது பல்தேய்க்கும்போது, குளிக்கும்போது, உணவு உண்ணும் போது – மாலையில் உலாவும் போது – இப்படி எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் எண்ணிப் பார்க்கலாம்.

அப்போதுதான் நாம் நம் வாழ்வின் முடிவான இலட்சியத்தை நோக்கி எந்த அளவு முன்னேறி இருக்கின்றோம் என்பது தெரியும். ஒவ்வொரு நாளும் நமது வாழ்வின் முடிவான இலட்சியத்திற்காக நாம் என்ன செய்தோம் என்று கணித்துப் பார்க்க முடியும். ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டும். என்பதே நமது இலட்சியம் என்றால் இன்று எவ்வளவு கடந்துள்ளோம் என்று எண்ணிப் பார்த்துச் செயல்பட்டால் தானே முடியும். ஒவ்வொரு அடியாகத் தானே தூரத்தைக் கடக்க முடியும். ஒவ்வொரு வரியாகத் தானே ஒரு பெரும் நூல் எழுதி முடிக்கப்படுகிறது. வரலாறு என்பது என்ன? ஒவ்வொரு நாள் நிழ்ச்சியின் தொகுப்புத் தானே உலக வரலாறு.

இவ்வாறு நமது இலட்சியத்தை ஒவ்வொரு நாளும் நினைத்து அதை நோக்கிச் செல்லாவிட்டால் இலட்சியங்கள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். வெறும் கனவு காண்பவர்கள் இலட்சியவாதிகள் ஆவதில்லை. செயல் வீரர்கள்களே இலட்சியவாதிகள் ஆகிறார்கள்.


Share
 

1 Comment

  1. Baburaj Annamalai says:

    Nice..

Post a Comment


 

 


May 1992

தன்னம்பிக்கையின் தாய்
உங்களைப் பற்றிய விமர்சனங்களைச் சமாளிக்க எட்டு வழிகள்
கருத்தும் வாழ்வும்
வெற்றிதரும் இலட்சியங்கள்
இளைஞர்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பெறவும்