Home » Articles » வெற்றிதரும் இலட்சியங்கள்

 
வெற்றிதரும் இலட்சியங்கள்


admin
Author:

சிலபேர் சொல்வதுண்டு. இலட்சியம் அது இது என்று திட்டமிட்டு செய்வதெல்லாம் நடைபெறவதில்லை எல்லாம் தலைவதிப்படி தான் நடக்கும் அதனால் ‘அவன்’ விட்டதே வழி என்று செயலாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். இது பழமைவாதிகளின் விரக்தி மனப்பான்மையில் எழுந்த சொற்கள்.

முன்னேறத்துடிக்கும் இளைஞர் இந்தச் சொற்களைத் தூக்கி எறிந்துவிட்டு உங்கள் ஆசைகள், விருப்பங்களின் எல்லைகளைக் கணக்கிடுங்கள். குழந்தையின் கண்முன் ஒரு பொருளை வைத்து அதை எடுத்து வரச்செய்வதுபோல உங்கள் கண்முன் உங்கள் இலட்சியத்தை வையுங்கள். அதை அடைய திட்டங்கள் தீட்டுங்கள். வழி முறைகள் காணுங்கள். இலட்சியம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வே அல்ல. நீங்கள் வாழுங்கள்.

இலட்சியங்களை நான்கு தூண்களின் மேல் நிற்கும் ஒரு கோபுரம் எனலாம். ஒன்று இலட்சியம் பெரிதாக இருக்க வேண்டும். இரண்டு இலட்சியம் நீண்ட காலத்தில் அடைவதாக இருக்க வேண்டும். மூன்று இலட்சியம் தெளிவான பரிமாணங்களை உடையதாக இருக்க வேண்டும். நான்கு இலட்சியம் எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதுவே இலட்சியத்தின் நான்கு கூறுகள் ஆகும்.

மனிதன் தன் இலட்சியத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பெரிதாகத் தேர்ந்து கொண்டு மற்றவைகளை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு அதை நோக்கி உழைக்க வேண்டும் ஒருவன் எந்தத்துறையில் இருந்தாலும் அதில் உச்ச நிலையை அடைகின்ற வகையில் தன் இலட்சியத்தை வரையறுத்துக்கொண்டால் அதை நோக்கி தன் இலட்சியத்தை வரையறுத்துக் கொண்டால் அதை நோக்கி உழைக்கின்ற மனம், ஆர்வம் எல்லாம் பிறக்கும். ஒரு எடுத்துக்காட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் மூன்றாம் வகுப்பில்தான் எம்.ஏ., தேர்ச்சி பெற்றார். அவரது பாடம் ஆங்கில இலக்கியம். அவருக்கு அரசு கல்லூரியில் ஒரு விரிவுரையாளர் பதவி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகட்கு முன்பு நடந்தது அவர் கல்லூரியில் வந்து சேர்ந்ததும் அந்தத் துறையின் தலைவர் அவரை ஏளனமாகப் பார்த்ததோடு அல்லாமல். இவர் வேறு எம்.ஏ., எழுதி இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் துணைப்பேராசிரியர் ஆவதே கடினம் என்று சொன்னனார்.

இந்த நண்பர் தமது பேராசிரியரின் பேச்சால் மனம் வருந்தினாலும் அதுவே தூண்டு கோலாகி தன் இலட்சியத்தை உயர்த்தி கொண்டார். நான் ஒரு நாளைக்கு அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேனா இல்லையா பாருங்கள் என்று சபதம் எடுத்துக்கொண்டார். அதற்கான திட்டங்கள் தீட்டினார் மிகக்கடுமையான உழைப்பை மேற்கொண்டார்.

இலண்டன், அமெரிக்கா பல்கலைக்கழகங்களுக்கு மீண்டும் எம்.ஏ. படிக்க விண்ணப்பித்தார். அதற்கான ஆங்கிலத் தேர்வெல்லாம் (TOFEL) எழுதினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்து. அதுவே அவருக்குக் கிடைத்த முதல் வெற்றிதான். ஆனால் படிக்க நிதி உதவி கிடைக்கவில்லை. ஆறு மாதம் ஒரு பருவத்திற்கு (Semester) சமாளித்து விட்டால் இவரது உழைப்பையும் ஆர்வத்தையும் பார்த்து நிதி உதவி கிடைத்துவிடும் என்றார்கள். முன் அனுபவம் உள்ளவர்கள்.. இந்த நண்பரோ வசதியானவர் அல்ல. வேலை ஒன்றுதான் வருமானம். பெற்றோர்களால் உதவ முடியாத நிலை. நண்பர்கள் சிலரது உதவியை நாடினார். எப்படியோ அல்லும் பகலும் உழைத்து சிக்கனமாக இருந்து இலண்டன் போய்ச் சேர்ந்தார். புகழ்வாய்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இரண்டாண்டுகள் பயின்று எம்.ஏ., தேர்ச்சி பெற்றார்.

மீண்டும் இந்தியா வந்தார். இரண்டு ஆண்டுகள் விட்ட பணியைத் தொடர்ந்தார். இப்போது அவர் தன்னம்பிக்கை மிகுந்தவராகக் காணப்பட்டார். மீண்டும் டாக்டர் பட்டத்திற்குப் பல்வேறு நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குத் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் (அலபாமா) இடம் கிடைத்தது. இந்த முறையும் நிதி உதவி கிடைக்கவில்லை. இப்போது அவருக்குத் தைரியம் இருந்தது. காரணம் வெளி நாட்டில் ஏற்கனவே இருந்த அனுபவம் அவருக்குக் கைக்கொடுத்தது. பகுதி நேர வேலை செய்தேனும் படித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. மீண்டும் பொருளாதாரச் சிக்கல்தான். ஆனாலும் மனிதர் விடவில்லை. அமெரிக்கா சென்றார் படித்தார். மூன்றாண்டுகளில் பி.எச்டி., யை முடித்தார். மீண்டும் அவர் இந்தியாவுக்கு வரவில்லை.

அமெரிக்காவிலேயே வேலை தேடிக்கொண்டார். இப்போது கலிபோர்னியா பல்கலைக்க்ழகத்தில் ஆங்கில இணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நம் நாட்டில் துணைப் பேராசிரியர் கூட ஆக முடியாது என்று பிறரால் மதிப்பிடப் பட்டவர். உலகின் புகழ் பூத்த பல்கலைக்கழகம் இருக்கும் இலண்டன் மாநகரில் படித்து உலகின் வளம் கொழிக்கும் நாடான அமெரிக்காவில் ஆசிரியராகப் பணியாற்றுது என்பது சாதாரண காரியம் அல்ல. பிறருடைய சுடு சொற்கள் அவருக்கு மிக உயர்ந்ததொரு இலட்சியத்தை உருவாக்கியது. அவரை நான் அருகிலிருந்து அறிவேன் (அவர் பெயர் வெளியிடுவதை அவர் விரும்பாததால் முகவரி கொடுக்கவில்லை). படிப்பு, படிப்பு, படிப்புதான். தன் இலட்சியத்தை அடைந்தே தீருவது என்று கருத்தில் பதித்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில் இத்தகைய உணர்வு அவருக்குப் பிறக்கவில்லை. ஆனால் வேலைக்கு வந்த பிறகு, சமுதாயத்தில் காலடி எடுத்து வைத்தபோது இந்த உணர்வு அவருக்கு வந்தது.

இன்னொன்றையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். இளைமைப் பருவத்தில் பள்ளி, கல்லூரிகளில் கெட்டிக்காரத்தனமாகப் படித்தவர்கள் தாம் முன்னேறுகிறார்கள் என்பது இல்லை. பள்ளியில் இளமைப் பருவத்தில் மிகச் சாதாரணமாக இருந்தவர்கள் எல்லாம் கூட வளர வளர அறிவு வளர்ந்து அனுபவம் பெற்று முன்னேறி விடுகிறார்கள். பள்ளியில் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்து வாழ்வில் தோற்றுப் போனவர்களும் உண்டு.

பொதுவாகவே வெற்றியும் தோல்வியும் தொடர்ந்து கடினமாக உழைப்பதில்தான் உள்ளது என்பதை நான் அனுபவத்தில் காண்கிறோம். உலகின் சாதனையாளரைப் பாருங்கள், வறுமையால் வாடியவர்கள், ஊனமுற்றவர்கள், சாண் ஏற முழம் சறுக்கியவர்கள் – எல்லோருமே உயர்ந்த இலட்சியத்தை மேற்கொண்டு கடினமாக உழைத்ததுதான் காரணம்.

நீங்கள் இப்போது எந்தப்பணியில் எந்தத்துறையில் இருந்தாலும் அதில் உயர்ந்த நிலையை அடையவதுதான் உங்களது மிக உயர்ந்த இலட்சியமாக இருக்க முடியும். ஒரு போலீஸ்காரராகப் பணியைத் தொடங்கியவர் ஒரு டி ஐ ஜி ஆக உயர வேண்டும் என்று இலட்சியம் கொள்வதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒரு மாவட்டக்கல்வி அதிகாரி ஆகலாம். கம்பங்களில் ஏறிக் கம்பி இழுக்கும் ஒரு மின்சாரத்துறை ஊழியர் மின் வாரியத்தில் ஓர் உயர்ந்த பதவியை அடையலாம். ஒரு நூல் நிலையத்தில் கடை நிலையில் பணியைத் தொடங்கிய ஒருவர் நூலகத்தை துறையின் இயக்குநர் ஆனமைக்கு உதாரணம் உண்டு. ஒரு லாரிகூட இல்லாமல் டிரைவராக இருந்தவர் இன்று 100 லாரிகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் உண்மையை நாம் நாளும் சந்ததிக்குக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த நண்பர்கள் எல்லாம் கற்பனையில் மிதப்பவர்கள் அல்ல. தங்கள் இலட்சியத்தை முன்வைத்துக் கொண்டார்கள். அதற்காக அல்லும் பகலுமாக உழைத்தார்கள். காலத்திற்கு ஏற்ப தங்களை வளர்த்துக் கொண்டார்கள். படிப்பே இல்லாத என் நண்பர் ஒருவர் ஒரு ஆசிரியரை வைத்து முதலில் அரையும் குறையுமாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டார். இன்று சரளமாகப் பேசுகிறார். இன்றைக்கும் அவருக்கு எழுத வராது. படிக்கத்தெரியும். பேசத்தெரியும். அதுவும் தொழில் சம்பந்தமான வார்த்தைகள்தாம் அவருக்குத் தெரியும். பிறசொற்களைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. இப்படிக் காலத்திற்கு ஏற்பத் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தாம் இலட்சியத்தை எட்டிப் பிடிக்கின்றார்கள்.

சினிமா நடிக நடிகைகளுக்கு என மூலதனம்! அழகான உடம்பு ஒன்றுதான் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். இன்று அப்படி இல்லை. அவர்கள் ஓய்வு நேரத்தில் மொழி ஆசிரியர்களை வைத்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். நாட்டிய ஆசிரியர்களை வைத்து நாட்டியம், இசை, சண்டை, பிற கலைகளைக் கற்றுக்கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள போது வாய்ப்பு அவர்களைத் தானாகத் தேடி வந்து சேர்கிறது.

ஆதலின் இன்றே ஒரு மகத்தான இலட்சியத்தைத்த தேர்ந்தெடுங்கள். அதை அடைவதற்கான தகுதியை, அதை அடைவதற்கான உழைப்பை இன்றே மேற்கொள்ளுங்கள்.

இலட்சியத்தை நோக்கிக்கடினமாக உழைப்பவனுக்கு உலகம் தானாக முன்வந்து உதவத் தாயாராக இருக்கிறது என்ற உண்மையை இன்றைக்கேனும் அறிந்து கொள்ளுங்கள்.

இலட்சியம் நீண்ட காலத்தில் அடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

இலட்சியம் என்பது மகத்தானது உடனடியாக அடைந்து விடுவதும் அல்ல. நம் நாடு விடுதலை பெறவேண்டும் என்பது நம் முன்னோர்களின் இட்சியமாக இருந்தது. விடுதலை ஒரே நாளில் வந்து விடுவது மல்ல. இருநூறு ஆண்டுகள் போராடிப் பெற்றோம். அதனால்தான் அதனை அறிந்தவர்கள் விடுதலையின் பெருமையை உணர்கிறார்கள். அதனை அறியாதவர்கள் சுதந்திரத்தைப் பேணிக்காக்க தெரியாதவர்களாக இருக்கிறார்கள். நாடு சீர்கெட்டு வருகிறது.

திடீரென்று ஒரே நாளில் ‘லாட்டரிச் சீட்டில்’ பரிசு பெற்று இலட்சாதிபதி ஆனவர்களைப் பாருங்கள். அந்தப்பணம் வந்த வேகத்தில் தீர்ந்து, அவர்கள் மீண்டும் பழைய நிலையை விட மோசமான நிலையை அடைந்தவர்கள் தாம் அதிகமாக இருக்கிறார்கள் புள்ளி விவரங்கள் இந்த உண்மையைக் கூறுகின்றன. உழைக்காமல் வந்த பணம் மட்டுமல்ல, உழைக்காமல் வந்த எதுவுமே நிற்பதில்லை.

மிகப் பெரிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணுபவர்கள் 5 ஆண்டு, 10 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு என்று நீண்ட காலத்திட்டங்களை மேற் கொள்ள வேண்டும், நீண்ட கால உழைப்பே நிரந்தர வெற்றி நல்கும்.

அவசரப்பட்டு 35, 40 வயதிற்குள் குறுக்கு வழியா, நேர்வழியா? இது சரியான முன்னேற்றம் தானா? இதில் தார்மீக உணர்வு இருக்கிறதா என்று கூடப்பார்காமல் வாழ்வில் உயர்ந்தவர்கள், மேல் – நிலையை எட்டிப் பிடித்தவர்கள் அதற்குப் பின் வாழ்க்கையில் படு – தோல்வி அடைந்து வாழ்வே கசந்து போய் – திறமை இழந்து – வாழ்வே தோல்வியாக முடிந்தவர்கள் நிறைய பேர் இருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் மிகப் பெரிய புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். அவருக்குத் திறமையோடு அரசியல் செல்வாக்கும் கொஞ்சம் இருந்தது. அதைப் பயன்படுத்தி மிக வேகமாகத் தலைமைப் பதவியைப் பிடித்தார். தனக்கும் மூத்த அலுவலர்கள் இருக்கிறார்களே என்று கூடப் பார்க்காமல் செயல்பட்டார். அவரது இலட்சியம் மிக விரைவில் நிறைவேறியது. ஆனால் நாளடைவில் நிறுவனத்தில் எதிர்ப்பு வளர்ந்தது அவரது திறமையைப் பாராட்டியவர் கூட அவர் வழி சரி இல்லை என்று விலகிக் கொண்டார்கள். நாளடைவில் அவர் அக் கம்பெனியில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நிர்வாகத்தை விட்டு வெளியேறப்பட்டார். இப்பொழுது 45 வயதிலேயே என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு நிற்கிறார். விதைத்து முளைக்குமுன் அவசரப்பட்டால் எப்படி விளையும்?

எதையும் படிப்படியாக அடைகின்ற போது அதில் ஒரு சுகமும் சமுதாய அங்கீகாரமும் கிடைக்கின்றது. முறை மாறி அவசரப் பட்டுக் குறுக்கு வழியில் முன்னேறிச் செல்கின்ற போது சுகமே துக்கமாகவும் சமுதாயமே எதிர்ப்பாகவும் மாறி விடுகின்றது. பின்னர் உலகமே நம்மை வெறுப்பது போன்ற உணர்வுக்கு ஆளாகி விடுகின்றோம்.

இதனால் எல்லோரும் 60ல், 70ல், தான் தங்கள் இலட்சியத்தை அடைய வேண்டும் என்பது பொருள் அல்ல. நாம் எடுத்துக் கொள்கின்ற லட்சியத்திற்கு ஏற்ப சரியான கால அளவு கொடுக்க வேண்டும். அத்தகைய அறிவு இல்லாதவர்கள் இலட்சியத்தை அடைய முடியாது.

நீங்கள் முருங்கை மரம் வளர்க்க விரும்பினால் 1 ஆண்டு போதுமானது. நீங்கள் தேக்கு மரமும் சந்தன மரமும் வளர்க்க விரும்பினால் 20 ஆண்டுகளும் 30 ஆண்டுகளும் ஏன் 50 ஆண்டுகளும் காத்து இருக்கத்தான் வேண்டும். காத்திருக்கும் வரை அது தரும் பலனும் அதிகமாகவே இருகும். அதனால் இலட்சியத்தின் கால அளவை நிர்ணயுங்கள்.

கால அளவு கொடுத்துச் செயல்படாத பலர் எந்த இலட்சியத்தையும் அடைந்ததில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அறிஞர் பெர்னாட்ஷா – கவி தாகூர் – டாக்டர் முவ போன்றவர்கள் நீண்டகால இலட்சியத்தை மேற்கொண்டு ஒவ்வொரு நூலாக எழுதி முடித்து 30, 40 ஆண்டுகள் இடைவிடாது உழைத்து நோபல் பரிசு பெற்றார்கள். அறிஞர் என்றும் கவிஞர் உலகம் போறும் பேறு பெற்றார்கள்.

நீண்டகால இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள குறுகிய காலத்திட்டங்கள் – செயல்பாடுகள் தேவைதான். அதுபற்றி முன்னேற்றதிற்கு மூன்றே படிகள்’ என்ற நூலில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளதை இளம் நண்பர்கள் அறிவார்களாக.

(வளரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1992

குட்டிக்குரங்கின் வேண்டுகோள்
உனக்குள் ஒரு இன்பம்
வெற்றிதரும் இலட்சியங்கள்
விடுதலை
உங்கள் பிறந்த ஊருக்கு என்ன செய்துள்ளீர்கள்
வியர்வையை நம்பு
வாரத்திற்கு எட்டு நாள்