Home » Articles » இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்

 
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்


கந்தசாமி இல.செ
Author:

அண்மையில் தமிழ் நாட்டில் சில மாவட்டங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி முதல் சென்னைவரை இடையிடையே பல மாவட்டங்களைத் தொட்டுச்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அதேபோல் டில்லி, பம்பாய், கலகத்தா போன்ற பெரு நகரங்களுக்குப் புகை வண்டியில் பயணச்சீட்டு பதிவு செய்து கொண்டும் பதிவு செய்யாமலும் சென்று வரும் வாய்ப்பும் நேர்ந்தது. நம்நாடு எப்படி இருக்கிறது என்பதை ஒரு மேலோட்டப் பார்வையாகப் பார்த்தால் சில உண்மைகள் விளங்கும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

கிராமங்களில் வளர்ச்சி குறைவு

கோவையிலிருந்து திருச்சி கும்பகோணம் மாயவரம் தஞ்சாவூர் வரை 30 ஆண்டுகளுக்கு முன் 1960-ல் நான் பார்த்த கிராமத்துக் குடிசைகளில் பெரிதும் மாற்றமில்லை. மாயவரத்தில் 1957 முதல் 61 வரை நான்கு ஆண்டுகள் நான் படித்த போது இருந்த ஓலைக் குடிசைகள், தட்டிகள், படல்கள், காரை பூசாத செங்கல் குடிசைகள், சாணம் மெழுகிய தரைகள் – இவகள்தாம் நான் அன்று பார்த்தவை; இன்றும் அவை அப்படியே இருக்கின்றன.

உயர்வுக்கு வழியில்லை

உழைப்புக்குப் பஞ்சமிலை. ஆனால் உயர்வுக்குத்தான் அவர்களால் வழிகாண முடியவில்லை. கூலிவேலை செய்பவர்கள் எல்லாம் கிராமத்திலேயே நிலைத்து இருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள், வசதிவந்தவர்கள் வசதியை நாடுபவர்கள் நகரத்தில் குடியேறி விட்டார்கள். கிராமங்களில் சிறுசிறு தொழில்களைத் தொடங்கி உழவுவேலைகள் போக எஞ்சிய காலங்களில் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை உருவாக்கினாலன்றி கிராமத்து மக்களை மேலுக்குக் கொண்டுவர முடியாது என்பதையே இந்தப் பயணம் எனக்கு அறிவுறுத்தியது.

நகரங்கள் பெருத்துவிட்டன

தமிழகத்து நகரங்களோ மக்கள் பெருக்கத்தாலும் நெருக்கத்தாலும் நிலை தடுமாறி கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான பெரு நகரங்களில் குப்பைகள் பறக்கின்றன; சுகாதாரமும் இல்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த அடிப்படைப் பண்புகளை ஊட்டி வளர்க்காமல் இருந்தால் அசுத்தம் செய்பவர்களைத் தண்டிக்காமல் இருந்தால் நாடு இன்னும் இழிநிலையை அடைந்துவிடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நமது கோயில்கள்

தஞ்சைப் பெரிய கோயில் திருச்சி அரங்கநாதர் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெரும் கோயில்கள், தவிர பெரும்பான்மையான கோயில்கள் பராமரிப்பு இன்றி வெளிச்சமின்றியே கிடக்கின்றன.

நாட்டில் சமுதாயக்கூடங்களாகத் திகழ்ந்த இக்கோயில்கள் இடிந்தும் பாழ்பட்டும் நலிவடைந்து வருகின்றன. நமது பண்பாட்டுச் சின்னங்களாக விளங்குகின்ற இக்கோயில்கள் பெரிதும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ராமேசுவரத்தின் வாயில் முகப்புகளில் ஒன்றிரண்டு இன்றும் முற்று பெறாமலும் இருக்கின்றன. மற்ற முகப்புகளைப்போல அந்த முகப்பின்னை இந்த மண்ணின் மைந்தர்கள் முழுமையுறச் செய்வார்களா என்பது ஐயமே. தமிழக அரசே முயன்றாலும் அந்தப் பழைய அழகோடு செய்ய முடியுமா என்று ஐயப்படவே தோன்றுகிறது.

நாம் திட்டம் தீட்டுவதிலும் அதற்கான தொகையை வசூல் செய்வதிலும் நாம் வல்லவர்கள் தாம். ஆனால் செயல் – நிறைவேற்றம் என்று வரும்போது நாம் இயலாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

முன்னுத்தாரணமாக நடக்கின்ற தலைவர்களே இன்று நாட்டுக்குத் தேவை. உபதேசிகள் – அறிவுரை செய்பவர்களை மக்கள் விரும்பவில்லை.

நமது கோயில்களுக்கு உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இருபுறமும் வழியை அடைத்துக்கொண்டு கடைகள், கோயில்கள் அங்காடிகள் போல் தான் காட்சியளிக்கின்றன. உள்ளேயும் அதே நிலைதான்.

60, 70 ஆண்டுகட்கு முன்பே காசியிலுள்ள விசுவநாதர் கோயிலைப்பற்றி – அதன் சுகாதாரக் கேடுகள் பற்றி காந்தியடிகள் சத்தியசோதனையில் வருந்தி எழுதி உள்ளார்.

அந்த நிலையிலிருந்து நாம் இன்னும் மாறவில்லை. பொது இடங்களில் சுகாதாரம் பேண வேண்டும் என்ற உயர்வே அற்று போய்விட்டது. சிங்கப்பூர் போல பொது இடங்களில் அசுத்தம் செய்தால் – தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நிலை வந்தால் ஒழிய நாம் சுகாதாரமாக இருக்கப் போவதில்லை.

நமது கடற்கரைகள்

சுற்றாலாத் தலங்களாகத் திகழ வேண்டிய நமது கடற்கரைகள் கழிப்பிடங்களாக – கால் வைக்க முடியாத நிலையில் இருக்கின்றன. எருமைகளின் இருப்பிடங்களாக மாறி வருகின்றன. வரலாற்றுப் புகழ் வாய்ந்த காவிரிப்பட்டினக் கடற்கரையைக் கண்டு கண்ணீர் வடிக்க வேண்டும்.

அதேபோல் காலைக் கதிரவனின் எழுச்சியைப்பார்க்க கன்னியாகுமரி கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அங்கோ கால்வைக்ககூட முடியாத நிலை. கடற்கரை அசுத்தமாகிக் கிடக்கின்றது. மிஞ்சிப்போனால் நிற்பதற்கும் வழியில்லாதபடி கட்டுமரங்கள் – தாம் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

உலகில் புகழ்மிக்க கடற்ரைகளில் ஒன்றாகிய அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சில்ஸ் கடற்கரையைப் பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. எவ்வளவு சுத்தமாக வைத்துள்ளார்கள். அதோடு நம் மெரினா கடற்கரையை ஒப்பிட்டுப் பார்த்தேன். நமது இயற்கைச் செல்வங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாமல் வாழ்கின்றோமே என்ற உணர்வுதான் தோன்றியது. இப்படியே போனால் நாம் எந்தக் காலத்தில் முன்னேறப் போகிறோம்? என்ற ஏக்கம்தான் உண்டாகிறது.

நம்முடைய கோயில்களையும் கடற்ரைகளையும் வரலாற்றுச்சிறப்பு இடங்களையும் தூய்மையாகப்பாதுகாத்து வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகள் வருமாறு செய்தால் நாட்டில் பொருளாதாரம் மட்டுமல்ல, நாட்டின் மதிப்பும் உயரும்.

பெருநகரங்களில்

சென்னை, பம்பாய், டில்லி கல்கத்தா போன்ற பெருநகரங்களில் ரயில் நிலையத்தில் நின்று பார்த்தால் புற்றீசல்கள் போல மனிதர்கள் வருவதும் போவதும் நம்மை நிலைகுலையச் செய்து விடும் புற்றீசல் போல மக்கள் கூட்டம். ஒதுங்கிப் போக இடமில்லை. தேர்கூட்டம்போல நகர்ந்து ஊர்ந்து செல்லும் காட்சி நாகரிகம் – பண்பாடு – ஒழுக்கம் எல்லாம் இந்த விரைவான போக்குகளின் முன்னே தவிடுபொடி ஆகிவிடுகின்றன.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாவிடில் நாம் எத்தனைத் திட்டங்கள் தீட்டியும் பயனில்லை; எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விடும். எல்லாப் பணிகளுக்கு முதற்பணியாக நாம் மக்கட்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

சங்கிலி நாகரிகம்

கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் நாம் எடுத்துச் செல்லும் பெட்டியை ஒரு சங்கிலிபோட்டு உட்காரும் பெஞ்சில் மாட்டிக் கட்ட மாட்டோம். இன்று திருட்டுக்கள் பெருகிவிட்ட காரணத்தால் பெரும்பாலும் சங்கிலி போட்டு பூட்டுகின்ற நாகரிகம் ரயிலில வளர்ந்துவிட்டது. சிலர் பேருந்துகளிலும் பூட்டி வைக்கிறார்கள். டில்லி ரயில் நிலையத்தில் பார்த்தேன். தன்பெட்டியையும் தன் கையையும் சங்கிலியால் கட்டி படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். ஒரு “இந்நாடு மன்னர்”.

அதேபோல் தமிழ் நாட்டைக் கடந்து விட்டால் பதிவு செய்து கொண்டு செல்வதெல்லாம் வீண் என்றே எண்ணத்தோன்றும். யார் வேண்டுமானாலும் ஏறி அமர்ந்து விடுவார்கள். ரயில் அதிகாரிகள் யாரும் கவனிப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

பதிவில்லாமல் பயணம் செய்யும் பெட்டிகளை அதிகப்படுத்தினால் கூட இந்த அவல நிலையை ஓரளவு மாற்றி அமைக்கலாம்.

உண்மையான இந்தியா

நகரத்தை ஒட்டியுள்ள புகைவண்டித் தடங்கள் இருமருங்கிலும் தகரத்தால் ஆன குடிசைகள், சாக்குப் பைகளால் செய்யப்பட்ட மறைப்புகள், அங்கேயே குட்டைபோல் தேங்கியுள்ள சாக்கடைகள், எருமைகள், பன்றிகள், கொசுகள் இவைகளே காணப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படையான பிரச்சனைகள் – முளைக்கின்ற இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். இதற்குத் தீர்வு காணாதவரை தனி மனித உழைப்புகும் தனி மனித வருவாய்க்கும் வழிகோலாதவரை இந்த நிலை நீடிக்கும். இந்த அடிப்படைச்சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்வு காணாமல் வெறும் கற்பனைத் திட்டங்களால் நாட்டிற்கு எவ்வித பயனும் விளையாது.

இந்திய நதிகள்

இந்தியாவின் தெற்கும் வடக்கும் கிழக்கும் மேற்கும் போகும் பொழுது நாம் பெரும்பான்மையான இந்திய நதிகளைச் சந்திக்கின்றோம். நதிக்கரைகளில்கூட சரியான வேளாண்மை இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மானாவாரியாகவே கிடக்கின்றன. இந்திய நதிகளை இணைத்து நீர் வளங்களை முறைப்படுத்தி வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தால் வேலைவாய்ப்பு பெருகும். உற்பத்தி உயரும். தொழில் வாய்ப்புகள் பெருகும். இவற்றையெல்லாம் நம் தலைவர்கள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது கடமையாகும்.

படித்தவர்கள்

இப்படி வறுமையின் கோரப்பிடியில் அறியாமையில் மூழ்கிக்கிடக்கின்ற மக்கள் கூட்டம் ஒருபுறம். மற்றொருபுறம் படித்தவர்கள் – படித்தவர்களில் மிகவும் திறமையாகப் படித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மிகத் தகுதி வாய்ந்த வேளாண்மை ஆராய்ச்சிக் கழக மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தேன்.

மின் வசிறிகள் – மின் விளக்குகளை அவர்கள் பெரும்பாலும் நிறுத்துவதே இல்லை. விடுதியில் பல இடங்களில் ஆள் இல்லாத போதும் மின்விசிறிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. அறையைப் பூட்டும்போது கூட அவர்கள் விளக்கை அணைப்பதில்லை.

மாணவர்களைக் கேட்டதற்கு இதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை. பொருட்படுத்துவதுமில்லை. இவர்கள் இந்த நாட்டின் மிக உயர்ந்த அலுவலர்களாக – ஆராய்ச்சி அறிஞர்களாக பெரும் பேராசிரியர்களாக வரப்போகிறவர்கள். தொடக்க காலத்திலேயே தம் பொறுப்பினை தம் நாட்டின் அவல நிலைகளை உணராத இவர்களால் – இந்த நாட்டுக்கு என்ன நன்மை விளையப் போகிறது என்று என்னால் சிந்திக்கவும் முடியவில்லை.


வழிகாட்டிகளே வழிதவறினால்?

இவர்கள் எல்லாம் இந்த மனித சமுதாயத்தில் பொறுக்கி எடுத்த உயர்ந்த மணிகள் போன்றவர்கள். அதனால்தான் இவர்களிடம் பெரிதாக எதிர் பார்க்கின்றோம். ஒருவர்கூட சோடை இல்லாதர்களாக இருக்கவேண்டும். என்று நினைக்கின்றோம். வழிப்போகர்கள் வழிதவறலாம்.ஆனால் வழி காட்டிகளே வழி தவறினா? இந்தச்சமுதாயத்திலுள்ள குப்பனும் சுபனும் வரியாகச் செலுத்துகின்ற பணத்தில்தான் இத்தகையவர்கள் படிப்பிற்கு நிதி உதவி பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தச் சமுதாயத்திற்கு இவர்கள் கடமைப்பட்டு உள்ளார்கள். உதாரணத்திற்கு இது ஒரு சிறு நிகழ்ச்சி – இந்திய நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் பொறுப்புணர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே இது எழுதப்படுகிறது.

நம் இந்திய நாடு விடுதலை பெற்றபின் பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ளது. உண்மைதான். இந்திய நாட்டு மக்களில் 52 சதவீதம் படித்தவர்கள் என்பதில் பெருமைதான். நம் வாழ்நாள் 58 ஆண்டு ஆக உயர்ந்துள்ளது என்பதும் உண்மைதான். நம் தேசிய வருமானம்கூட ரூ. 7000 ஆக உயர்ந்து உள்ளது என்பதில் மகிழ்ச்சிதான்.

இருந்தும் நாம் அடைய வேண்டிய இடத்தைச் சென்று இன்னும் அடையவில்லை. நமக்குள்ளேயே நாம் தடைச்சுவர் தடை ஏற்படுத்திக்கொண்டு யார் மீதோ பழியைப்போடுகிறோம்.

அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்யாதவரை நாம் எங்கே முன்னேறப் போகிறோம். உலக அரங்கில் உயரப் போகிறோம்? சிந்திப்போமாக…

(இல.செ.க.)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 1992

காத்திரு தோழா….
இன்று உனது நிகழை விரும்பு
இன்றைய தமிழகமும் இந்தியாவும் ஒரு கண்ணோட்டம்
உயர்வின் ஊர்வலம்
வெற்றி தரும் இலட்சியங்கள்
நடை பழகும் ஒரு குழந்தை
சிந்தனைத்துளி
காத்திரு தோழா….