Home » Cover Story » இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்

 
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்


கந்தசாமி இல.செ
Author:

அறிவாளர்களைத் துணைகொள்ளுதல்

வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள நல்ல அறிவாளர்களின் நூல்கள் – கருத்துக்கள், அனுபவம் நிறைந்தவர்களின் வெற்றி தோல்விகள் – அவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்து போயிருந்தாலும் அவர்களது கருத்துக்கள் ஆகியவற்றைத் துணையாகக் கொள்வது மிகவும் நல்லதாகும். இந்த உயர்ந்த மக்களின் ஆற்றலை (Power of Master Mind) நாம் அவர்தம் கருத்துக்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்குச் சிக்கல்கள் வரும்போது அவர்களது கருத்துக்களை அணுகித்தீர்வுகளைப் பெறலாம். நம்முடைய துறைக்கு ஏற்ற பத்து அறிஞர்களைத் தேர்ந்து அவர்களை மனதால் ஒன்றுகூட்டி நம் வளர்ச்சிக்கு வழி பெறலாம்.

வறுமையோடு வாழ எத்திட்டங்களும் தேவையில்லை, வளமாக வாழ ஒவ்வொரு கட்டத்திலும் இத்தகைய திட்டங்கள், சிந்தனைகள், அறிவுரைகள் தேவை. மிகப்பெரிய சாதனையாளர்களை அணுகிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் இந்த வழிமுறையை அல்லது சில அடிப்படையான கருத்துக்களை வழிகாட்டியாகக் கொண்டு அதைப் பின்பற்றி வெற்றி பெற்ற உண்மை புலப்படும்.

பால் உணர்வைக் கட்டுப்படுத்துதல்

வாழ்வில் வளம்பெற பால் உணர்வைக் கட்டுப்படுத்துதல் மிகமிக அவசியமாகும். மனம்போன போக்கெல்லாம் போகின்றவர்கள் வாழ்க்கை தோல்வியிலேயே முடியும். பால் உணர்வைக் கட்டுப்படுத்துதல் என்பது முறைப்படுத்தி அனுபவித்தலாகும்; முற்றும் துறந்துவிடுதல் அல்லது அழித்து விடுதல் அல்ல. காலம் வரும் வரைக் காத்து இருந்துதான் ஆக வேண்டும்.

பால் உணர்வு மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. அந்த உணர்வு தோன்றும்போதெல்லாம், அதை இயற்கையாகவோ செயற்கையாகவோ அனுபவித்து ஆற்றலை இழந்தபிறகு, நாம் அடையும் சோர்வை எண்ணி, நம் இலட்சியத்திற்கு அதை மடைமாற்றம் செய்ய வேண்டும். இந்த இலட்சியத்தை அடைந்த பிறகு முறையாக அனுபவிப்போம். அதுவரை கட்டுப்பாடாக இருந்து இலட்சியத்தை நோக்கிச் செயல்படுவோம் என்று செயல்பட வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற பால் உணர்வு சுகம் மிகவும் இன்றியமையாதது. அது இலட்சியத்தை அடைவதற்கு மிகச் சிறந்த தூண்டுகோலாக அமைந்ததுள்ளது என்பதை யாரும் மறுத்தற்கு இயலாது. அதை நினைத்தபோதெல்லாம் செலவிடும்போது மனிதன் தன் ஆற்றலை இழந்து விடுகிறான்; தேக்கிவைத்து முறையாகச் செயல்படும்போது ஆற்றல் பெருகி உரிய பயனை – உரிய இன்பத்தை நல்குகிறது. இலட்சியத்தில் ஆர்வம் உள்ளவன் கட்டுப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.

பால் உணர்வு – காதல் உணர்வாக மடைமாற்றம் பெறும்பொழுது, இரண்டு உள்ளங்களும் உண்மையை உணரும்போது ஆற்றல் பெருகுகிறது. பெண்களின் மீது ஆண்களும், ஆண்களின் மீது பெண்களும் கொண்ட இக்காதல் உணர்வே – உலக சாதனைகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன. இந்தக் காதல் உணர்வு மட்டும் அவர்களுக்குள் இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கை பயனற்றதாயிருக்கும்.

ஆழ்மனம்

ஆழ்மனம் தூங்கிக் கொண்டிருக்கும் பலசாலியைப் போன்றது. ஆழ்மனத்தில் நமது நல் விருப்பங்களைப் பதிய வைத்துவிடுவோமானால் அது உரிய காலத்தில் செயல்படத் தொடங்கி வெற்றியை ஈட்டித்தரும். தீயதை ஆழ்மனதில் பதிய வைத்தாலும் தீய பலன்களையே கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் நாம் பதிய வைக்கும் எண்ணங்கள் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.

விருப்பம், தன்னம்பிக்கை, அன்பு, பால் உணர்வு, ஆர்வம், காதல், நம்பிக்கை ஆகிய ஏழும் நலமான எண்ணங்கள். பயம், பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், பேராசை, மூடநம்பிக்கை, கோபம் ஆகிய ஏழும் தீமையைப் பயக்கும் எண்ணங்கள். இவ்வாறு உளவியல் அறிஞர்கள் பாகுபடுத்தி உள்ளனர். இதில் அடிப்படையாக உள்ள உண்மை என்னவென்றால் மனிதன் என் எண்ணத்தின் அளவு உயர்கிறான் என்பது தான்.

மனித மூளை

வானொலிப்பெட்டி எப்படித் தேவையான ஒலி அலைகளை ஈர்த்துப் பாடுகிறதோ அதேபோல் மனித மூளை பிறர் வெளியிடும் கருத்துக்களில் நமக்குத் தேவையானதை ஈர்த்துச் செயல்படும் தன்மை வாய்ந்தது.

இதற்கு நேர்மாறானது ஆழ்மனம். அது எண்ண அலைகளை வெளி உலகிற்கு அனுப்பி வைக்கின்ற பணியைச் செய்கிறது. பல பேர் மூளைக்கும் மூளைக்கும் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் காரணம், அவர்களின் எண்ண அலைகள் இரண்டும் ஒரே தன்மை உடையவையாய் உள்ளன. ஒருவர் நினைக்கின்ற படி நாம் செய்யக் காரணம், நம் எண்ண அலைகள் அவரைச் சென்று தாக்கி ஒரு பணியினைச் செய்யத் தூண்டுகிறது. மன ஒருமைப்பாடு உள்ளவர்களால் இதனைச் செய்ய முடியும். மன ஆற்றல் உள்ளவர்கள் ஆழமாக நினைக்கும்போது அதனோடு தொடர்புடையவர்கள் அதைச் செய்கிறார்கள்.

ஆறாவது அறிவு

அனுபவம் உள்ளவர்களைத் துணைகொள்வதைப் போலவே நம் கண்ணுக்குப் புலனாகாத பல நூறு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த அறிவுரையாளர்களை நாம் துணையாக வைத்துக் கொள்ளலாம். சில சமயங்களில் நம்மீது அன்புடைய – தற்போது இறந்துவிட்ட பெற்றோர்கள் – நண்பர்கள், நம் வளர்ச்சியை விரும்புகின்றவர்கள் ஆகியோரைக் கொண்டும் செயல்படலாம். இவைகள் எல்லாம் நம்மைத் தவறான வழியில் செல்லாமல் பாதுகாப்பவை. இதனையே ஆறாவது அறிவு என்று மனநூலார் கருதுகின்றனர்.

ஆறு அச்சங்கள்

வறுமை, தன்னைப் பற்றிய விமர்சனம், உடல் நலக்குறைவு, அன்பை இழந்துவிடுதல், முதுமை, இறப்பைப் பற்றிய எண்ணம் ஆகிய ஆறும் பெரிதும் அச்சம் தரும் எண்ணங்களாகும். இவைகளை அறிவார்ந்த முறையில் பகுத்தாய்வு செய்து விலக்கவும் ஏற்கவும் வேண்டுமே ஒழிய – அவற்றைக் கண்டு அஞ்சுவதால் பயனில்லை.

நொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்

என்னை நன்றாகப் படிக்க வைத்திருந்தால், எனக்கு நேரம் வாய்த்திருந்தால், எனக்கு நல்ல வேலை கிடைத்திருந்தால், நான் பெரிய நகரத்தில் வாழ்ந்திருந்தால் என்று இப்படி வேறு ஒருவர் மீது பழியைப் போடுகின்ற யாரும் ஒருக்காலும் முன்னேற முடியாது. இருப்பதை வைத்துக்கொண்டு எப்படி முன்னேறுவது என்று ஆராய்ந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் புத்திசாலிகளாகச் செயல்படுங்கள்.

குறிப்ப: மே 90 இதழை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மூலம்: நெப்போலியன் ஹில் தமிழில் சுருக்கம் – இல.செ.க.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1991

தென்னக நதிகள் இணைப்பு இயக்கம்
அமெரிக்காவில் கங்கை காவிரி இணைப்பு இயக்கம்
சட்ட மன்றத்தில் உரை
யாரோ செய்யும்பொழுது நம்மால் மட்டும் ஏன் முடியாது?
நீங்கள் மனவலிமை பெற வேண்டுமா?
இதோ… உங்கள் வாழ்வை வளமாக்க ஒரு நூல்
ஓடை அல்ல நீ… ஊற்று நீர்!!
மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்து
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை