Home » Articles » வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்

 
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்


admin
Author:

‘இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சில தனித் தன்மை வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு. அவ்வாறாயின் அந்த பண்புகள் என்னென்ன? அந்தப் பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இத்தகைய படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பினையாகும்.

அமெரிக்காவிலுள்ள ‘காலப்’ என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் “முக்கியமான இவர்கள் யார்”? என்ற நூலிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் (இவர்கள் யார் நூல் அமெரிக்காவில் முக்கியமானவர்களின் பட்டியல் நூலாகும்.) பொருளாதாரம், சமூக அந்தஸ்து என்ற அடிப்படையில் மட்டும தேர்வு செய்யப்படவில்லை. இவர்களது துறையில் இவர்கள் செய்துள்ள அண்மைக் காலச் சாதனைகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யபட்டார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களைத் துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவற்றுள் முதன்மையான ஐந்து பண்புகள் வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. நடைமுறை அறிவு:

சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். அதில் 62 விழுக்காட்டினர் இந்த நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதையும் குறித்து இருந்தார்கள்.

நடைமுறை அறிவு என்பது அன்றாட நடவடிக்கையில் நடைமுறைக்கு ஒத்த தீர்வுகளை வழங்குவதாகும். குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தொடர்பில்லாத மற்ற கருதுக்களை ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியான தீர்வு காண்பதாகும்.

ஒரு எண்ணெய் நிறுவனத் தலைவர், இந்த நடைமுறை அறிவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘எளிய அணுகுமுறைதான்’ வெற்றிக்கு முக்கியமாக வேண்டப்படும் திறமையாகும் என்று கருத்துத்தெரிவித்துள்ளார். நிறுவனதிற்கான கூட்டங்களை நடத்துவது, வாடிக்கையாளர்களைச் சந்திப்பது போன்ற அன்றாட நிறுவனச் செயல்முறைகளில் சிக்கலான அல்லது ஆடம்பரமான நடைமுறைகளைத் தவிர்த்து, எளிய முறையில் அணுகுவது தான் மிகவும் முக்கியம் என்பது அவரது அனுபவமாகும்.

நடைமுறை அறிவு என்பது பிறவியிலிருந்தே வருவதா அல்லது நாமாக வளர்த்துக் கொள்ள முடிவதா என்றால் – நாமாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இதற்குரிய பதில்.

இளமையில் கல்விக் கூடங்களில் விவாதங்கள் நடத்துவதன் மூலமும் வாழ்க்கையில் மற்றவர்களின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் நமது சொந்தத் தவறுகளிலிருந்தும் நாம் பெற்ற அனுபவங்கள் மூலமும் வளர்த்துக் கொள்ள இயலும் என்பதுதான் பல்வேறு சாதனையாளர்களின் கருத்தாக இருந்தன.

2. தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்

நடைமுறை அறிவுக்கு அடுத்த திட்டத்தைப் பெறுவது ஒருவர் தான் எடுத்துக்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.

எண்ணெய் வயல்களில் வேலை செய்ததும் எண்ணெய்க் கிணறுகளின் மீது உட்கார்ந்து கொண்டு கூர்ந்து கவனித்து நேரடி அனுபவம் பெற்றதுமே தனது வெற்றிக்குக் காரணம் என்று ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வள நிறுவனத் தலைவர் கூறுகிறார். குறிப்பாக மேளாளராக பணிபுரியச் செல்கின்றவர்கள் அவர்கள் தொழில் பற்றிய பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும். புகைப்படக் கருவி எப்படி இயங்குகிது என்பதை அறிந்து செயல்படுவதே எனது வெற்றியின் இரகசியம் என்கிறார். புகழ்வாய்ந்த ஒரு புகைப்படக்காரர். எல்லாவற்றிற்கும் மேலாக நாமாகக் கற்கும் அனுபவக் கல்விதான் நமது வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய மிகத் தெளிவான அறிவும் முடியாத நமது பணிகளை வீட்டில் செய்து கொள்வதும் வெற்றிக்குப் பெரிதும் உதவியான செயலாகவும் இருக்கும். ஒருமுறை ஒரு துறையில் பெற்ற உயர்தரமான அறிவு போதுமானது என்று சிலர் கருதுகிறார்கள். அறிவும் ஆராய்ச்சியும் நாளும் வளர்ந்து வருகிறது. ஆகையால் கல்வி அறிவு என்பது தொடர்ந்து கற்றுத் தெளிய வேண்டிய ஒன்றாகும். வெற்றி பெற விரும்புவோர் அவர்கள் துறையில் தொடர்ந்து அறிவைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும்.

3. தன்னம்பிக்கை

மிகச்சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னம்பிக்கை என்பது நாம் எப்படி உணர்கிறோம். அல்லது எவ்வளவ நல்லவர்களாக இருக்கிறோம் என்தைப் பொறுத்து ஏற்படுவதல்ல. தீர்மானமான முடிவுடன், ஒரு செயலை எப்படித் துணிவுடன் முனைந்து செய்கிறோம் என்பதைப்பொறுத்தே தன்னம்பிக்கை அமைகிறது. மன உறுதியும் குறிக்கோளை உருவாக்கிக் கொள்வதும் தன்னம்பிக்கையின் உள்ளார்ந்த இரு கூறுகளாகும்.

மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வாழ்வில் தெளிவான குறிக்கோள் உடையவர்கள் என்பதைத் தெரிவித்தனர். இவர்களில் பாதிப்பேருக்கு மேல் நேரில் சந்தித்தபொழுது மன உறுதிக்கு முதலிடம் அளித்தனர். மற்ற திறமைகளைக்காட்டிலும் மன உறுதியானது தானியங்கி போலச் செயல்பட வைக்கிறது என்று குறிப்பிட்டனர்.

வெற்றி பெறுவதற்கு நான் என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் தைரியமும் தேவையான அளவு நேரம் உழைப்பதற்குரிய உடல் வலிமையும் தேவை என்பது சாதனையாளர்களின் கருத்தாக அமைந்தன.

4. புத்திசாலித்தனம்

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் கடினமான கருத்துக்களைக் கூட சுலபமாப் புரிந்து கொண்டு தெளிவாக அலசி ஆராய்ந்து விரைவான முடிவு எடுப்பதற்கும் புத்திசாலித்தனம் பெரிதும் பயன்படுகிறது. 43 விழுக்காட்டினர் புத்திசலித்தனம் முக்கியமான காரணம் என்றும் 52 விழுக்காட்டினர் இது மிகவும் தேவை என்றும் குறிப்பிட்டனர். புத்திசாலித்தனத்திற்கும் மேலாக விரிவான சொல்வளம், நிறையப்படிக்கும் பழக்கம். அதே போல் எழுதும் பழக்கம் ஆகியவையும் இன்றிமையாதது என்ற கருத்தும் கணிப்பில் தெரிய வந்தது. இந்தச் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 19 புத்தகங்கள் படிக்கிறார்கள். மேலும் எதற்கு ஏன் என்ற ஆராய்ச்சி மனமும் பரந்துபட்ட ஆர்வமும் வெற்றிக்கு அடிப்படையான செய்திகளாகும் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களாகும்.

5. எடுத்த செயலை முடிக்கும் திறன்

நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித் திறனே காரணம் என்று குறிப்பிட்டனர். தங்கள் தனித் திறமைக்கு அனைவரையும் அனைத்துச் செல்லும் பண்பு, தானே வேலை செய்யும் மனப்பாணன்மை, தொழிலில் கவனத்தோடு கூடிய ஈடுபாடும் ஆகிய மூன்றுமே வெற்றிக்குக் காரணமாகும் என்பதையும் குறிப்பட்டுள்ளனர்.

வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்து விடாப்பிடியாவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாய் இருந்தது என்பதை ஓர் இயற்பியல் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

நடைமுறை அறிவு, துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்துபண்புகள் மட்டுமன்றி தலைமைத் தன்மை, ஆக்கபூர்வமான சிந்தனைத்திறன், மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமான உறவு சில வேளைகளில் சிறிதளவு அதிர்ஷ்டமும் தேவையானவையாகும்.

இருப்பினும் மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகளும் சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டோமானால் நாம் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவது உறுதி.

நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்டு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1991

உலகம் ஒரு குடும்பம் ஆகவேண்டும்
காவிரி வீணாகாமல் தடுக்க அமெரிக்க இந்தியர்கள் யோசனை
திருமணமும் மருத்துவ சோதிடமும்
அமெரிக்காவில் ஒரு தன்னம்பிக்கை
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழி..
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்