Home » Articles » வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்

 
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்


இராமநாதன் கோ
Author:

நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள், குழப்பங்கள், கவலைகள் உண்டாகி, நம்மைத் தடுமாறச் செய்கின்றன. இவைகளை நமது உடலில் உள்ள பாதுகாப்பு இயந்திரம் (Defence Mechanism) சமாளித்து நம்மைப் பாதுகாக்கிறது. இது ஒரு விந்தையான செயல்; நம்முள் அவ்வப்போது உண்டாகும் ஒரு இரசாயன மாற்றம்.

ஒரு தீ விபத்து; உள்ளே சிக்கிய ஒருவர் தப்பிக்க முயல்கிறார். இங்கும் அங்கும் ஓடித் தவிக்கிறார். உடனே அவருக்கு இதயத்துடிப்பு வேகமாகின்றது. இரத்த அழுத்தம் ஏறுகின்றது. உடல் வியர்த்து ரோமங்கள் சிலிர்க்கின்றன. சுவாசம் அதிகமாகின்றது; கை கால்களை வேகமாக இயங்குகின்றன. இத்தனைச் செயல்களும் ஒரு சில மணித்துளிக்குள் நடந்து நம்மை அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறது. இவைகளை நம்முடலிலுள்ள பிட்யூட்டரி, அட்ரீனல் சுரப்பிகள்தான் செய்கின்றன. இக்கட்டான சூழ்நிலை வரும்போது இவை அதிக அளவில் ஹார்மோன்களை இரத்தத்திற்குள் வெளியிட்டு பல இரசாயன மாற்றங்களை உண்டாக்கி, இரத்தக் குழாயை இயக்கி, குளுக்கோஸ் மற்றும் சக்தியைத் தேவையான பாகங்களுக்கு அளித்து, துரிதமாகச் செயல்படுத்துகிறது.

வாழ்வில் குழப்பம், பயம், கவலை கோபம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், இதேபோல பாதுகாப்பு இயந்திரம் செயல்படுகிறது. இதனால் சக்தி வீணாவதோடு, உடலுறுப்புகளில் பல சேதங்கள் உண்டாகின்றன. ஒரு எல்லை வரை, பாதுகாப்பு இயந்திரம் செயல்பட்டு, உடலை சமநிலையில் வைக்கிறது. அதுவே அளவிற்கு அதிகமாகும்போது, செயலிழந்துவிடுகின்றன. இதன் விளைவாக இரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு, இதயம் மற்ற உறுப்புகள் பழுதடைகின்றன.

மூளையில் அடிப்பகுதியில் 1 செ.மீ. குறுக்களவும், 1 கிராம் எடையுமுள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்பகுதியில் சுமார் 4 முதல் 7 கிராம் வரை எடையுள்ள அட்ரீனல் சுரப்பி உள்ளது. இம்மூன்று சிறிய சுரப்பிகளும் ஹார்மோன்கள் என்ற ரசாயன பொருளைச் சுமந்து, இரத்தத்தில் கலந்து உடலுக்கு வேண்டிய சக்தியை அளித்து, பாதுகாப்புப் பணியை செய்யும் ஆற்றல் கொண்டவை.

எல்லாச் சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல், மனதை வருத்தாமல் பார்த்துக்கொண்டால் இந்தப் பாதுகாப்பு இயந்திரம் தொடர்ந்து சீராகச் செயல்பட்டு, உடலைச் செம்மையாக வைத்திருக்கும்.

பிரச்சினைகள், கவலைகள் வருகிறதே என்ன செய்வது? உண்மை தான். இந்தச் சூழ்நிலைகளில் நம்மில் இயன்ற அளவு என்ன செய்ய முடிகிறதோ (Do your best) அதைச் செய்துவிட்டு மன நிறைவோடு வாழ்க்கையைத் தொடரவேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் நல்லதாக, நேர்மையாக இருந்தால் முடிவு நன்மையாகத்தான் அமையும். இடையில் தோல்வியே வந்தாலும் இது தற்காலிகமானதுதான். இதுதான் தர்மத்தின் நியதி.

ஆகவே, கடந்த காலத் தவறுகளையே திரும்ப எண்ணி குற்ற உணர்வு கொண்டில்லாமல், நாளை என்ன இகழுமோ என பயவுணர்வும் இல்லாமல், மன உறுதியுடன் தொடர்ந்து செயல்பட்டால் நம்முடைய பாதுகாப்பு இயந்திரம் (Defence mechanism) நம்மை நன்கு பாதுக்காக்கும். திடமான உடலுடன் வளமான வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள்.

-ஜி. ஆர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை